Saturday, October 27, 2012

சின்மயி விவகாரம் என்னாச்சு..?



எல்லையற்ற சுதந்திரத்தை பாவனையாளருக்கு தந்திருக்கும் சமூகவலைத்தளங்கள் அதன் பாவனையாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில தெரிவுகளையும் வழங்குகிறன.அது தான் தங்களுடைய அதிமுக்கியமான தகவல்களை மற்றையோர் பார்வையிலிருந்து மறைப்பதுவும்,தங்களுக்கு பிடிக்காதோரை,தொல்லை தருவோரை தங்கள் பக்கம் வரமுடியாத வகையில் தடுத்துவைக்கும்(Block) செய்யும் வசதியுமாகும்.

என்னுடைய நண்பர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் என்னுடைய "அலப்பறை" தாங்கமுடியவில்லை என்று என்னிடமே நேரில் கூறியிருக்கின்றனர்.என்னுடைய பதிவுகள் பிடிக்காவிட்டால் என்னை உங்கள் பக்கத்திலிருந்து நீக்கிவிடுங்கள் என்று கூறினேன்.அதற்காக தானே அந்த வசதியை வழங்கியிருக்கிறார்கள்.பிடிக்காத நபர்களிடமிருந்தும் பிடிக்காத பதிவுகளிலிருந்தும் விலகி இருப்பது ஒவ்வொருவரினதும் சுதந்திரமே! 

அதே போல என்னுடைய நண்பர்கள் சிலர் அடிக்கடி என்னுடைய படங்களை "நானும் காமடி பண்ணுகிறேன்" என்று நகைச்சுவையாக சித்தரித்து வெளியிடுவார்கள்.சிலவற்றை அனுமதிக்கலாம்.நண்பர்களுக்குள் நகைச்சுவை,கலாய்த்தல் விடயங்கள் சாதாரணமே,ஆனால் வேறு சில எனக்கே எரிச்சலூட்டுபவையாக இருக்கும்.அவற்றை நீக்கிவிட கேட்பேன்.அவர்கள் மறுக்கும்பட்சத்தில் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கிவிடுவேன்.அத்துடன் பிரச்சனை முடிந்துவிடுகிறது.மாறாக நானும் அவர்களை போல பதிலுக்கு கலாய்த்தால் பிரச்சனை வளருமே தவிர அது தீர்வாகாது.என்னதான் நண்பர்களுக்கிடையே பதிலுக்கு பதில் கலாய்த்தலாக இருந்தாலும் கூட,ஒரு சமயத்தில் அது பழிக்கு பழி என்று தான் போய் முடியக்கூடிய வாய்ப்புகள் அதிகம். 

                                


சின்மயி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜன்(ராஜன் லீக்ஸ்)சாதாரண டுவீட்டர்களில் இருந்து சற்றே வேறுபட்டு பலரும் பொதுவில் பேச தயங்கும் விடயங்களை கூட பகிரும் ட்விட்டர்,பதிவர்.கெட்ட வார்த்தைகளும்,காமம் சார் கீச்சுக்கள்,பதிவுகளும் இவரின் கைகளில் சர்வசாதாரணம்.சிலர் முகம் சுளித்தாலும் கூட,பலரும் அவரின் பகிர்வுகளை ரசித்தவர்கள் தான் என்பதை மறுக்கமுடியாது;என்னையும் சேர்த்து.சாதாரணமாக ட்விட்டரில் இருக்கும் பெரும்பாலானோருக்கும் இவரை தெரிந்திருந்தது.இவரின் வார்த்தை பிரயோகம் இது தான் என்று சின்மயிக்கும் கூட தெரிந்தே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.அல்லது சின்மயி விடயத்தை கையிலெடுக்கும் போதாவது சின்மயிக்கு இவரை பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்,பலர் கூறியும் இருப்பார்கள்.

சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் என்றாலே தமிழர்களுக்கு கடவுள் மாதிரி என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையின் மேல் இருக்கும் வரலாற்று கடமையினை செய்வதில் கூட சின்மயி தவறியே இருக்கிறார்.தமிழர்கள் சார்ந்த முழு பதிவுகலகமே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றி தத்தமது வலைப்பதிவுகளில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்த சமயத்தில் அவ்விடயத்தை பற்றி சின்மயி கூறிய கருத்துக்கள் எந்தவொரு தமிழனின் இரத்தத்ததிலும் சூட்டை கிளப்பகூடியது தான்.நான் கூட அச்சமயத்தில் அவரின் கருத்தை பார்த்து கோபப்பட்டிருந்தேன்.இது மிகவும் இலகுவில் உணர்ச்சிவசப்படகூடிய விடயம்,அதனில் காமெடி பண்ணுவதோ அல்லது விளக்கெண்ணெய்தனமாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது என்பதோ மிகத்தவறானது.அதுவும் தமிழர்கள் மிகவும் மதிக்கும் "உயர்ந்த,புனிதமான" இடத்தில் பின்னணி பாடகியாக இருந்துகொண்டு சின்மயி இவ்வாறு செய்தமை அனைவரினதும் கடுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டிருந்தது. 

My Photo

சமூக வலைத்தளங்களில் பொதுவில் கருத்துக்களை பகிரும்போது அதற்க்கான எதிர்வினைகள் கட்டாயம் கிடைத்தே தீரும்.அவற்றை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் இந்த விடயங்களை தவிர்ப்பதோ அல்லது இப்படியான இடங்களில் இருந்து விலகி இருப்பதோ தான் சிறந்தது.புத்திசாலித்தனமும் கூட.அதைவிட்டுவிட்டு சற்றும் பொறுப்பேயில்லாமல் கோமாளித்தனமான கருத்துக்களை பொதுவில் பகிர்ந்துவிட்டு அதற்க்கு எதிர்வினை வரும்போது போய் போலீசில் கைய பிடிச்சு இழுத்திட்டான்னு முறைப்பாடு செய்வது போன்ற செயல்கள் இன்றைய சிறுவர்கள் மத்தியில் கூட இருக்குமா தெரியவில்லை. 

ராஜன் பற்றி தெரிந்து தான் சின்மயி கூட எதிர்வினையாற்றினார்.பொதுவாக இரண்டு நண்பர்களுக்கிடையே பேச்சு முடிந்து மோதல் முற்றுகையில் தானாக வெளியே வருவது கெட்டவார்த்தைகள் தான்..அதுவே சற்று அதிகமானால் வீட்டு வேலைக்காரி வரைக்கும் இழுத்து நடுவீதியில் விடுவதற்கு தயங்கமாட்டார்கள்.அப்படி இருக்கும்போது ராஜனை சீண்டி விட்டு,உசுப்பேற்றி விட்டு பிரச்னையை நன்றாக முற்ற விட்டு தன் வலையில் சிக்கும்வரை பொறுத்திருந்து தான் சிறந்த தந்திரவாதி என்கின்றதை நிரூபித்திருக்கிறார் சின்மயி.

ஆண்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம்,பெண்கள் இதை தான் பேசவேண்டும் என்று வரையறுத்து வைத்திருப்பது தானே சமூக விதி,அதைத்தானே நீங்களும் வழிமொழிகிறீர்கள் என்று இதைப்பற்றி பேசும்போது ஒரு நண்பி கூறினார்.கருத்து மோதல் உச்சத்தை அடையும்போது இத்தகைய சம்பவங்கள் நடப்பது இயல்புதானே.அது தானே ஆண்களின் சுபாவமும் கூட.ஆண் படைக்கப்பட்ட விதம் அப்படி.இதனுள் எந்த ஆணிய கருத்தையும் நான் உட்சேர்க்கவில்லை,என்னுடைய பொதுப்படையான அவதானிப்பின் வெளிப்பாடுதான் இது என்றேன். 

ராஜன் கெட்டவார்த்தைகளை பேசியிருக்க கூடாது என்று அவனை வம்புக்கு இழுத்துவிட்டு கூறமுடியாது தானே.பாடகியாக புகழ் பெற்ற சின்மயி தனக்கு பெரிதாக தெரியாத அரசியல் பற்றி கதைக்கவெளிக்கிட்டது ஏன்?இப்படி எதிர்வினை வரும் என்று தெரிந்து தானே வெளியிட்டார்?அது போல அதற்க்கு வரும் எதிரிவினைகளை மட்டும் "இப்படி பேசாதீர்கள்...இது கெட்ட பழக்கம்"என்று எப்படி கட்டுப்படுத்த முடியும்?

                   

தனது கருத்துக்களுக்கான எதிர்கருத்துக்களை தீரமாக எதிர்கொண்டார் சின்மயி,அதே சமயம் தனக்கேயான சில வினைகளையும் வைத்துக்கொண்டார்.இது வீதியில் சென்ற பாம்பை பிடித்து சட்டைக்குள் விட்ட கதை தான்.பாம்பு நாக்கு வெளித்தள்ளும்,கடிக்கும் என்று தெரிந்து தானே செய்தார்?இது சின்மயி தனக்கு தானே மூட்டிக்கொண்ட தீ.இது இவ்வளவு பெரிய பிரச்சனையானதற்க்கு ஒரு காரணம்,இது பெண்ணியம்-ஆண் அதிகார போக்கு-பெண் அடக்குமுறை என்று வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டது தான்.பெரும்பாலான பெண்கள் சின்மயி பெண் என்ற ஒரே காரணத்துக்காக,பிரச்சனை பற்றி எதுவும் தெரியாமலே சின்மயி பக்கம் நிக்கின்றார்கள்.இவர்களுக்குள்ளும் அடுத்த சின்மயி யார் என்கின்ற போட்டி வைக்கலாம்.

ராஜன் செய்தது ஒரு தப்பென்றால்,அதே தப்பை செய்ய தூண்டிய சின்மயியும் தப்பானவரே..!  

குறிப்பு:இப்பதிவில் நேற்று குறிப்பிட்ட நண்பியுடன் விவாதித்த கருத்துக்களும் உள்ளடக்கம்,இதனை எழுத தூண்டியமைக்கு நன்றிகள்.அத்துடன் தினசரி அழைப்பு செய்தும்,பேஸ்புக்கில் சாட்டில் வந்தும் இந்த சின்மயி மேட்டர் என்ன என்று முனைப்புடன் விசாரிக்கும் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்.கடைசியில நானும் இது பற்றி எழுதவேண்டியதை போய்விட்டது.

Post Comment

Sunday, October 21, 2012

மாற்றான்+ ஸ்டெப் அப் 4..!

அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகின்றாய் என்றாய் நீ நன்றாக சாதிக்கின்றாய் என்று எங்கோ படித்த ஞாபகம்.சாதிக்கிறாயோ இல்லையோ,எதோ ஒருவிதத்தில் நீ மற்றயவர்களால் கவனிக்கப்படுகிறாய் என்பதே உண்மை.அண்மையில் ஒரு நண்பர் சாட்டில் வந்து,பிரபலம் ஆவதற்கு என்ன வழி என்று கேட்டார்.இது வழமையாக பெரும்பாலானோர் பத்தி எழுதுகையில் தமது கருத்துக்களை வலுப்படுத்த "உருவாக்கப்படும்"உதாரணமாக அன்றி,உண்மையாக நடந்த சம்பவம்.எதோ ஒரு வழியில் மற்றையவர்கள் உன்னை கவனிக்க வைத்துவிட்டால் போதுமானது.சமூக வலைத்தளங்கள் தமது வளர்ச்சியின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் ஒரு தொடக்கத்துக்கான ஆரம்ப புள்ளியை மட்டும் திறமையாக எவனால் கண்டுபிடித்து நிலைநிறுத்திக்க முடிகின்றதோ,அவனால் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதல்ல என்றேன்.

சாரு அளவுக்கு ஜெமோ'வால் பிரபல்யம் பெற முடியாததற்கு காரணம் இது தான்.சாருவின் எழுத்துக்களை படித்து சாருவை பற்றி தெரிந்து கொண்டவர்களை விட சமூக வலைத்தளங்களில் "சாரு"வை வைத்து நடாத்தப்படுகின்ற அலப்பறைகள் தான் "யார் இவன்" என்ற கேள்வியை பலருக்கு உருவாக்கி தேடவும் வைத்திருக்கும்.சாரு அளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஜெமோ கண்டுகொள்ளப்படாததால் தான் பலருக்கு இன்று ஜெமோவை விட சாருவை அதிகப்படியாக  தெரிந்திருக்கிறது.தமிழ் பொண்ணுடனான அந்த "சாட் ஸ்காண்டால்" வெளிவந்ததற்கு பின்னர் தான் பலருக்கு சாருவை தெரியவந்தது.இதே போல தான் நித்தியானதாவை கூட!அதற்காக இது போன்ற "செக்ஸ் ச்கேண்டால்ஸ்" மட்டும் தான் பிரபலமாக ஒரே வழி என்று இப்போதே வேஷ்டியை முழங்காலுக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு கிளம்பிவிடாதீர்கள். வேண்டுமானால் நீங்களும் அவர்கள் போல் "பிரபலம்"ஆகியதன் பின்னாடி மேலும் உங்கள் புகழை பரப்ப இது போன்ற கைங்காரியங்களில் ஈடுபடுங்கள்.சொன்னது நான் தான் என்று கடைசி வரை கூறிவிடாதீர்கள்;முக்கியமாக உங்கள் மனைவியருக்கு.



இதைப்பற்றி பலர் ஏலவே கூறியிருந்தாலும் கூட,உண்மையானது என்னமோ நம்மவர்கள் மத்தியில் முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படாமை தான்.பொதுவாக சொல்வதானால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பது இதை தான்.இன்னமும் புரியவில்லையா?அரைத்த மாவை அரைப்பது தான்.
1 . Creativity
2 . Variety

ஒரு சினிமாவை எடுத்துக்கொண்டால் கூட,சாதாரண ரசிகன் எதிர்பார்ப்பது படத்தில் புதிதாக ஏதாவது முயர்ச்சித்திருக்கிறார்களா,படம் நல்ல கலவைகளுடன் வந்திருக்கிறதா என்று தான்.எந்த விடயத்திலும் மேல்கூறிய இரண்டு விடயங்களையும் தான் பொதுவாக அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த இரண்டு  விடயங்களையும் பூர்த்தி செய்பவர்கள் இலகுவாக மற்றையோரை கவர்ந்துவிடுகின்றனர்.

இவற்றுடன் முக்கியமான இன்னொரு,எதற்குமே முதல் கால் வைத்தவன் தான் அதிகமாக பேசப்படுவான்.அவன் பெயர் தான் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.சிலர் விமர்சனம் செய்வதற்கென்றே பிறந்திருப்பார்கள்.போன ஜென்மத்தில் விமர்சனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.ஒரு சினிமா படத்தில் ஆயிரம் குறை குற்றம் கண்டுபிடித்து எழுதி கிழிப்பார்கள்.கை நிறைய பணம் இருந்தால் ஸ்பான்சர் செய்து நீ தான் இப்படத்தின் இயக்குனர் என்று அந்த விமர்சகர்களை இயக்குனராக்கி வேடிக்கை பார்க்கவேண்டும் என்பது எனது கனவு.அப்போதாவது அவர்களால் எந்த பிழையும் இல்லாமல் ஒரு காவியத்தை எடுத்து முடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

சினிமா மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் கூட, அடுத்தவர் வாழ்க்கையை விமர்சனம் செய்வதிலிருந்து கண்ணில் தென்படும் அனைத்தையும் விமர்சனம் செய்பவர்களால்,அவர்களின் விமர்சனங்களை போல,அவர்களாலேயே வாழ்ந்துவிட முடிவதில்லை.விமர்சனம் செய்வது என்பது இலகு தான்.ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் சிறப்பான படைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்று கூறிக்கொண்டாலும் கூட,பெரும்பாலானோர் தங்களால் முடியாததை இன்னொருவன் தங்கள் கண்முன்னே சாதிக்கையில் அவனை விமர்சனம் என்கின்ற போர்வையில் குழிபறிக்க காத்திருக்கின்றனர்.

எதோ பெரிதாக சொல்கிறானே இவன் என்ன பெரிய **************(விரும்பியதை போட்டுக்கொள்ளுங்கள்)என்று நினைக்கலாம்.இவற்றை சொல்வதற்கு பிரபலமாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.உங்களை சூழ நடப்பவற்றை அவதானமாக பார்த்தாலே நடப்பவை புரியும்.எவற்றிலும் முதலில் பார்வையாளனாக இருந்து மாற்றங்களை அவதானிப்பவனே அடுத்த "மாற்றுபவன்" ஆகிறான்(சரி விடுங்க மாற்றான்'னு வைச்சுக்கோங்க).அது தாங்க ஆங்கிலத்தில் கூறுவதாய் இருந்தால் "Trend Setter"...!

--------------------

                            

அலுவலக நண்பர்களுடன் சென்று நேற்று "ஸ்டெப் அப் 4 " (Step up 4)படம் பார்த்தேன். நடனத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் பல படங்கள் தமிழில் பார்த்திருப்போம்.ஆனால் இவர்களின் தளமே வேறு.படம் முடிந்த பின்னர் கூட எங்கள் உடலில் ஆட்டம் விட்டுப்போகவில்லை.படத்தை பற்றி விபரிக்க தேவையில்லை..கட்டாயம் பாருங்கள்.நிச்சயமாய் பிடிக்கும். நான் 3 D 'யில் பார்த்தேன்.ஆங்கில படம் பார்ப்பது அலுவலக நண்பிகளுக்கு இது முதல் முறை போலும் . ரொமான்ஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.பேசாமல் முதலே தீர்மானித்திருந்தபடி மாற்றான் பார்க்கவே கூட்டி சென்றிருக்கலாம் என்று நொந்துகொண்டேன்.



நடனம் பிடிக்காவிடில்,படத்தில் வரும் மியாமி கடல்கரை காட்சிகளையாவது தியேட்டரில் சென்று பாருங்கள்,கொடுத்த பணத்துக்கான வெகுமதி நிச்சயம் உண்டு.படம் பார்க்க முடியாது,அதில் வரும் சிறப்பான நடனங்களை மட்டும் தான் பார்ப்போம் எனில்,இங்கே செல்லுங்கள்.

சரி இறுதியாக கொஞ்சம் முன்னதாக நான் பேஸ்புக்கில் படித்து சிரித்த பிட்டு நியூஸ்...படத்தை பெரிதாக்கி பாருங்கள் எழுத்து புரியாவிடில்.



Post Comment

Monday, October 15, 2012

இலங்கையின் தலைசிறந்த பதிவர்-எழுத்தாளன்..!


"ஜேகே" என்று பதிவுலகில் அறியப்பட்ட,"குமரன்" என்று அவரின் நண்பர்களாலும் அழைக்கப்படும் ஜெயகுமரன் சந்திரசேகரம் என்பவர் தான் எனது மனதை கவர்ந்த,இலங்கையின் பதிவர்களிலேயே எழுத்தாற்றலில் உயர்ந்து நிற்பவர் என கருதப்படும் பதிவர்.அண்மையில் கூட ஒரு பதிவரை சந்திக்கையில் இவரைப்பற்றி கிலாகித்திருந்தேன்.எப்போது இவர் பதிவுகளுக்குள் சிக்குப்பட்டேன் என்பது சரியாக ஞாபகம் இல்லாவிடினும் கடந்த வருடத்தின் நவம்பர்-டிசெம்பர் மாதங்களில் என்பது ஞாபகமிருக்கிறது.எனது நல்ல நேரம்,அவர் தமிழில் எழுத ஆரம்பித்து அடுத்தடுத்த மாதங்களிலேயே அவர் பதிவுகள் பக்கம் சென்றுவிட்டேன்.கடந்த வருடம் ஆக்டோபரில் தமிழில் எழுத ஆரம்பித்தவர் ஜேகே.


சாதாரணமாய் எழுதப்படும் பதிவுகளுக்கும் ஜேகேயின் பதிவுகளுக்கும் இடையிலே பாரிய வித்தியாசம் காணப்படுவதை முதல் பதிவு வாசிக்கையிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.அது ஒரு "வியாழ மாற்றம்" பதிவு. முதலிலேயே வியந்த விடயம் அவரின் பதிவுகளின் நீளம்.வேறு பதிவர்கள் பத்து பதிவுகளாக வெளியிடும் விடயங்களை ஒரே பதிவில் வெளுத்து வாங்கியிருப்பார்.பதிவு நீளம் என்றால் பலரும் நினைப்பது அதன் குவாலிட்டி குறைவாக இருக்கும் என்று.ஆனால் ஜெகேயை பொறுத்தவரை எவ்வளவு பெரிய பதிவுகள் எழுதினாலும் அவரின் எழுத்திலோ,சொல்ல வரும் விடயப்பரப்பிலோ எவ்வித தோய்வையோ,அலம்பல்களையோ காணமுடியாது.

யாழில் பிறந்து,யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் பயின்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மேல்ப்படிப்பை முடித்து அவுஸ்திரேலியாவில் "M.Tech in  Enterprise Architecture " படித்த கல்விமான்.இவர் படித்த பாடசாலையில் படித்தது எனக்கு பெருமை என்று இப்போதே சொல்லிக்கொள்ள முடியும்.சென் ஜோன்ஸ்'இல் படித்த இன்னும் சில மூத்த பதிவர்கள் இருக்கிறார்கள்.பாடசாலை காலத்திலேயே இத்தகைய படைப்புக்கள் மீதான ஆர்வம் ஜேகே'க்கு இருந்ததாக அவரின் பள்ளி தோழன் கூறியிருந்தார்.



ஜேகேயின் பதிவுகளுக்கு ஆரம்பகாலத்தில் செல்லும் போது எனக்கு ஏற்படும் ஒரே கவலை,இத்தனை திறமையான எழுத்தாற்றல் இருந்தும் கூட வெளியுலகுக்கு தெரியவரவில்லையே என்று.பதிவுகளுக்கு கருத்திடுவது கூட ஒன்று இரண்டு பேர் தான்.ஒரு சமயம் இத்தகைய தரமான பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் தாமாக முன்னிறுத்தி ஆதரவை தெரிவிக்கலாம் என்று கூட அவரின் பதிவுக்கு கருத்திட்ட ஞாபகம்.

அப்படி புகழ்வதற்கு என்ன இருக்கிறது அவரின் பதிவுகளில் என்று கேட்கலாம்.சாதாரணமாக நீங்கள் பார்க்கும் ப்ளாக் பதிவுகளை விட இவரின் பதிவுகள் முதல் வாசிப்பிலேயே வேறுபட்டு தெரிவதற்கு காரணம் பல..!இவரின் சரளமான இலக்கியத்தரமான எழுத்து நடை,எழுதும் விடயங்களில் இருக்கும் பரவலான-ஆழமான அறிவு.. எப்பேர்ப்பட்ட விடயங்களையும் வாசிப்போருக்கு புரிந்துவிட கூடியவகையில் எழுத்தில் கொண்டுவந்துவிடும் திறமை..பதிவுகள் ஒவ்வொன்றிலும் ஆழம்..நான் ஒன்றும் பெரிய "வாசகன்" இல்லாவிட்டாலும் கூட எதோ சில பல புஸ்தகங்கள்,நாவல்கள் வாசித்த எனக்கு ஜேகேயின் சில பதிவுகள் மறுவாசிப்புக்கு தூண்டியிருக்கின்றன..

பல பதிவுகளுக்கு கருத்திடவே தோன்றுவதில்லை.காரணம் அவ்வளவு "Perfect "ஆக எழுதியிருப்பார்.அத்துடன் எத்தனை தடவை தான் உங்கள் எழுத்து அபாரம் அற்புதம் என்று கூறிக்கொண்டே இருப்பது.அவருக்கும் சலித்துவிடக்கூடுமல்லவா.ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் அவரிடமே கூறிவிட்டேன் "சும்மா பதிவுகளை எழுதி தள்ளாம புஸ்தகங்கள் எழுத தொடங்குங்கள்..இலக்கியவாதிகளின் எழுத்துக்கு நிகரான எழுத்தாற்றல் உங்கள் கைகளில் இருக்கின்றது..இப்படியான எழுத்துக்கள் ஈழத்தில் இருந்து வருவதில்லை.அவசியம் உங்கள் கைகளால் வரவேண்டும்" என்று.சரி பார்க்கலாம் என்று கூறி இருந்தார்.முக்கிய தடை "நேரம்" தான்.

எத்தகைய பதிவுகள் என்றாலும் அநியாசமாய் விளையாடுகிறார்.அரசியலோ,விளையாட்டோ..சில தொழில்நுட்ப புனை கதைகளில் சுஜாதா அளவுக்கு ஜொலிக்கின்றன இவரது எழுத்துக்கள்.இவரது பெரும்பாலான பதிவுகள் "வியாழ மாற்றம்""என் கொல்லைப்புறத்து காதலிகள்""கந்தசாமியும் கலக்சியும்""படிச்சதென்ன பிடிச்சதென்ன" என்ற தலைப்புகளிலும் "உ..ஊ..ம ப தா ப மா " என்கின்ற தலைப்பில் பாடல்கள்,இசை மீதான ஆராச்சியே செய்திருப்பார்.ஏற்கனவே "சவால் சிறுகதை"போட்டியில் இவரது "சட்டென நனைந்தது இரத்தம்" பதிவு இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது.

2007 இல் இருந்து "Stay Tuned with JK "என்று ஒரு ஆங்கில வலைப்பூவில் எழுதிவரும் ஜேகே(அதில் எழுதப்படும் விடயங்கள் என்னை போன்ற சாமனியனுக்கு புரிவதே இல்லை.)தமிழுக்கு எழுதவந்ததை தனது அம்பதாவது பதிவில் இவ்வாறு விபரிக்கிறார்.
"எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது.  எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன்." 
மேலும் அந்த சுவாரசிய சம்பவத்தை அவரின் இந்த முதல் பதிவின் மூலம் காணலாம் : "அரங்கேற்ற வேளை"

அதற்குள் பதிவு இவ்வளவு நீளமாகிவிட்டதா??இன்னமும் எத்தனையோ விடயங்கள் சொல்லுவதற்கு மனதில் இருக்கின்றன.பதிவு பெரிதாக நீளமாக இருந்தால் கூட பரவாயில்லை வாசிப்போம் என்று வாசகர்களை கட்டிப்போட ஜேகே அளவுக்கு எழுத்தாற்றல் கிடையாது எனக்கு.ஆனால் தமிழகத்தில் இருக்கும் சில "காமத்துப்பால்"எழுத்தாளர்களை விடவும்,அதிஷா,லக்கிலூக் போன்ற வளர்ந்துவரும் எழுத்தாளர்களை விடவும் ஈழத்து எழுத்தாளர் "ஜேகே" பலபடிகள் உச்சமானவர் என்பது மட்டும் இப்போது எனக்கு தெரிந்த உண்மை.இன்னும் ஒரு பதினைந்து வருடங்களில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளராக கூட உருவாக கூடும்.அதற்கேற்ற நேரமும்,வாய்ப்புகளும் ஜேகே'க்கு கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

அவரின் வலைப்பூக்கு செல்ல: படலை
பேஸ்புக் இணைப்பு: "Jeyakuramaran Chandrasegaram"

குறிப்பு: இப்பதிவு வெறுமனே புகழ்ச்சிக்காகவோ,வால்பிடிப்பதற்க்காகவோ எழுதப்பட்டது என்று சிலர் நினைக்கக்கூடும்.காரணம் தமிழர்கள் வளர்ந்த,வளர்க்கப்பட்ட விதம் அப்படி.எப்படி நினைத்தாலும் பரவாயில்லை.நல்ல படைப்புகள்,நல்ல கலைஞர்கள்,படைப்பாளிகள் என்றுமே முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள்..அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள்.என்னால் முடிந்த பங்கை நான் செய்கிறேன்.
திருப்தியுடன்,

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...