Monday, October 29, 2012

சின்மயிக்கு ஒரு கடிதம்...!

உள்ளே போக முன்பதாக: இது ஒரு மிக மிக சீரியஸ் பதிவு.இக்கட்டில் இருக்கும் என் அருமை பாடகி சின்மயி அக்காக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கும் பதிவு.வாசித்து எவராவது சிரித்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பு கிடையாது.


     


அன்புள்ள சின்மயிக்கு,
(குறிப்பு:"அன்புள்ள" என்பது ஆபாசம் கிடையாது,என் ஸ்கூல் டீச்சருக்கு கூட அன்புள்ள'ன்னு தான் எழுதுவேன் மேடம்)

நான் எட்டாவது படிக்கிறப்போ,என்கூட படிக்கிற பையன் என் மேல தக்காளி வீசினான்..என்னோட வெள்ளை சேர்ட் அப்பிடியே சிவப்பாயிரிச்சு..வந்த கோபத்தில எழும்பி எட்டி ஒரு உதைவிட்டேன்..அதுவரைக்கும் கரும்பலகையில கிறுக்கிக்கொண்டிருந்த வாத்தியார் என்னோட கால் மேல போகும்போது மட்டும் கரெக்டா திரும்பி பாத்து என்னைய அடி பின்னிட்டார்.தக்காளி அடிச்சவன் தப்பிட்டான் தக்காளி...இதனால தான் இப்ப கூட நீங்க ஜெயிலுக்கு போகக்கூடாதின்னு நாஸ்திகனான நான் வேண்டாத சாமி கிடையாது..கால் முடி கூட மழிக்க ரெடின்னு உச்சி பிள்ளையாருக்கு வேண்டியிருக்கேன்..(தலை முடி மழிச்சா பர்சனாலிட்டி டேமேஜ் ஆகிடும் மேடம்...அப்புறம் "மயிர்" பத்தி எல்லாம் பேசினான்னு கேஸ் பைல் பண்ணிடக்கூடாது பாருங்க..)

இதிகாச காலத்தில கூட(உங்க ஆக்களுக்கு தான் இதுகன்னா ரொம்ப பிடிக்குமாமே..!) ராவணன் சீதைய கடத்தினா கடத்திட்டு போகட்டும்னு சும்மா இருக்காம ராவணன் மீது போர் தொடுத்த ராமன் மீது எனக்கு எப்போதுமே ஒரு கேவலமான பார்வை தான் இருக்கு..அவன் தான் சின்ன பையன் தெரியாத்தனமா சீதைய தூக்கிட்டு போனா இவரு பெரிய புடுங்கி மாதிரி கூட இருந்த வானரங்களை கூட்டிட்டு போயி போர் தொடுக்கிராராம்...சரி சீதைய கடத்தினதுக்கு தான் போர்னு வால்மீகி சொல்லியிருக்கலாம்..அவன் அடுத்தவன்,ராவணன் செய்த பழைய தப்புக்கள் எல்லாம்,அதாங்க அவனோட ஹிஸ்த்ரி பூரா தன்னோட சப்போர்ட்டுக்கு இழுத்து ராவணன் தப்புன்னு ப்ரூவ் பண்ணி இருக்கார்..

நம்ம ஊர்ல வழமையா சொறி நாய் எங்கயாச்சும் அசிங்கம் பண்ணிக்கிட்டே திரியும்.ஊரே திரண்டு அடிச்சு கலைக்கும்..ஆனா அதே சொறி நாய் இன்னொரு சொறி நாயை கண்டா அதுக ஒன்னு சேர்ந்து அடிக்க வர்றவன விரட்டி கடிக்க பாக்கும்..ஷோபா சக்தி,சாரு நிவேதிதா போன்ற இழவுவாதிக எல்லாம் உங்க பிரச்சனையில ராஜனுக்கு எதிரா பேசுறதுத பாத்தா இந்த சொறிநாய் ஸ்டோரி அடிக்கடி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது மேடம்..

இவன் ராஜன் பயலுக்கு சுத்தி போடணும் அம்மணி..நிச்சயமா கிறுக்கு தான் பிடிச்சு போச்சு..எந்த காத்து கருப்பு அடிச்சுதோ...ஆயிரங்களில் ட்விட்டர் போலோவேர்ஸ்,ரசிகர்கள் இருக்க உங்கள போயி பெருசா தூக்கி பிடிச்சு ஆடி இருக்கான் பயபுள்ள..அவனுக்கு இது தேவை தான்...சும்மா இருந்த பய ஜெயிலுக்கு போயி கழி தின்னா என்ன கக்கூஸ் கழுவினா நமக்கென்னங்க...ஆனா ஒன்னு மட்டும் புரியலைங்க..இந்த தருதல பயலுக்கு பின்னாடி எப்பிடிங்க இவ்ளோ பெரிய பட்டாளம் நிக்குது சப்போர்ட்டுக்கு?சொல்லமுடியாது பய நல்ல பணக்காரவீட்டு புள்ளையா இருக்கணும்..ஆளுக்கு அம்போது ரூவாயும் கோழிப்புரியாணியும் டெய்லி குடுக்கிறான் போல..வெளக்கெண்ண பய..நம்மள மாதிரி ஊர ஏமாத்தி கூட்டம் சேர்க்க தெரியுமா என்ன அவனுக்கு!

நாமெல்லாம் சினிமா பிரபல புள்ளிங்க,புள்ளி ராஜாக்கள் தானே...நாம கேனைத்தனமாவும் பேசுவோம்..பைத்தியக்காரத்தனமா கூட நடந்துப்போம்..ஆகா ஓஹோன்னு புகழுவீங்களா..தூக்கிவைச்சு கொண்டாடுவீங்களா அதவிட்டிட்டு குத்தம் கண்டுபிடிக்க இவன் யாரு மேடம் நமக்கு?நம்மள மாதிரி பெரிய பின்"அணி" பாடகியா?இல்ல பின் அணியில ஒரு அல்லக்கையா?நீங்க தான் ஒசாமா பின்லாடன சுட்டு கொன்னீங்கன்னு சொன்னா,அத கூட நம்பிறதுக்கு லட்ச்சக்கணக்கான பகுத்தறிவாதிக நம்ம பின்னாடி இருக்கிறாங்க மேடம்..யூ டோன்ட் வொர்ரி!!

ஆனாலும் இந்த உலக மகா இலக்கியவாதிக கூட மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திடுங்க மேடம்..இப்போ ராஜன் கேவலம்னு எழுதுவாணுக..அப்புறம் அவனுகளோட இலக்கிய படைப்புகள வெளியிடவோ,புகழ்ந்து பேசவோ மறந்திட்டீங்கன்னு வையுங்களேன்..ராஜனாச்சும் பரவாயில்ல..இவனுக உங்க அம்மா,அம்மம்மா,பூட்டம்மா,பூட்டியம்மா,ஊட்டு வேலைக்காரி தொடக்கம் வீட்டில் இருக்கிற கேரட்,கத்தரிக்காய் பயன்பாடு கூட சொல்லி பேசுவானுக... ஆனா நீங்க நெனைச்சாலும் அவனுக மேல கேஸ் போடமுடியாது பாருங்க..நீங்க எப்பிடி பிரபலமோ அப்பிடி அவனுகளும் பிரபலம் மேடம்...உங்களுக்கு இருக்கிறமாதிரியே அவனுகளுக்கும் என்ன சொன்னாலும் தலையாட்ட ஆயிரக்கணக்கில தலையாட்டி பொம்மைக இருக்குதுக!

நான் உங்க தீவிர விசிறி மேடம்..உங்க பாட்டுக்கு மட்டுமில்ல உங்க உங்க..... வேணாம்..பாருங்க இதகூட சொல்ல இணையவெளியில பயப்பிடுற அளவுக்கு பண்ணிட்டீங்க மேடம்..பின்னீட்டீங்க!இந்த சமந்தா காஜல் கூட உங்கள மாதிரிதானா மேடம்??இனி அவங்களையும் ஜொள்ள முடியாதா?அவிங்களும் உங்கள மாதிரி சின்ன புள்ள விளையாட்டு விளையாடுவாங்களா மேடம்??

இதொண்ணும் மேட்டரே கிடையாது சின்னுமயி,முந்தனாத்து கூட அம்மா பக்கம் ரெண்டு பேரு போயிட்டாங்கன்னு கடுப்பில அவசரமா போன நம்ம கேப்டன விமானநிலயத்தில மறிச்சு தொந்தரவு பண்ணி இம்சை பண்ணி பேட்டி எடுக்கிறன் பேர்வழின்னு பேய்த்தனமா நடந்துகிட்டாங்க ரிப்போர்ட்டர்ஸ்..ஆனா பாருங்க,விஜயகாந்த் அவங்கள நாயின்னு பேசினது தான் பெருசா பேசப்படுது..அவங்க பண்ணினது தப்பில்லையாம்..கேப்டன் பண்ணினது மட்டும் தப்பாம்..அதாவது மேடம்,நாம மத்தவங்கள எவ்வளவு வேணுமோ அவ்வளவுக்கு சூடாக்கலாம்...ஆனா அவிங்க சூடாகும்போது படார்னு பிடிச்சு போலீஸ்கிட்ட குடுத்திடனும்..இதனால நீங்க உள்ள போயிடுவீங்களோன்னு பயப்பிடுறதுக்கு ஒண்ணுமே இல்ல அம்மணி!

முதலில வைரமுத்து மேல ஐஸ் மேடத்த கேஸ் போட சொல்லுங்க "சினம்"யி"..அவரு தான் "பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்"ன்னு ஆபாசமா எழுதினவரு...ஆமா மேடம் அப்பிடி ஒரு பாட்டு உங்களுக்கு பாட சான்ஸ் வந்தா அந்த கணமே கவிஞர் மேல கேஸ் பைல் பண்ணிட்டுதான் மிச்ச வேலை பாப்பீங்களா??தொழிலு போயிருமே..செலிபிரெட்டி இமேஜ் டேமேஜ் ஆயிராது?அதனால அவிங்க மேல எல்லாம் உங்க ஆபாச கேஸ் பாயாதுன்னு தெரியும் மேடம்..இதுகூட தெரியாத பகுத்தறிவாதியா நானு! அடடே...கண்ணதாசன் வேற மேல போயிட்டாரே...ஆனா இந்த வாலிபக்கவிஞர் வாலி'ய புடிங்க மேடம் புடிச்சு ஜெயிலில போடுங்க..!

என்னைய உங்க "பர்சனல்"அட்வைசரா வைச்சுக்கிட்டீங்கன்னா..இத மாதிரி பல பல பலான அட்வைஸ் தரலாம் மேடம்..நீங்களும் புடிச்சு புடிச்சு ஜெயிலில போடலாம்..இலக்கியவாதிக ஆளுக்காள் அடிச்சுக்குவாங்க...சும்மா இருந்த பதிவுலகம் பரபரப்பாகும்..ட்விட்டர் சோர்ந்து போயி கிடக்கும்..பேஸ்புக் பிச்சிக்கும் மேடம்...உங்க சேவை நாட்டுக்கு தேவை...!!
நானெல்லாம் பெண்ணியத்துக்கு எதிரானவர்கள்னு அடிக்கடி திட்டுற என் நண்பி இன்று மாலை அழைப்பெடுத்து கூறினாள்,"ஆனந்தவிகடன் ஜூவி'ல எல்லாம் சின்மயிக்கு சப்போர்ட்டா தான் எழுதி இருக்கு..உங்களுக்கு தான் லூசுடா"..அவளும் கடந்த சில நாட்களாக சின்மயி பிரச்சனை என்ன என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள்;இன்னமும் விளக்கம் கொடுத்தபாடில்லை.இப்படியான பிரபலங்களுக்கு வரிந்துகட்டும் ஊடகங்களும்,ஒண்ணும்தெரியா பொண்ணுங்களும்,அவர்களின் பெண்ணியமும் இருக்கும்வரையில் ஒன்ன அசைச்சுக்கமுடியாது அம்மணி Dont Worry..!

குறிப்பு:என்னைய புடிச்சு ஜெயிலில போட போறீங்கன்னா முதல்லே ஒரு நோட்டீஸ் அனுப்புங்க மேடம்..இன்னும் கொஞ்சம் உங்க புகழ் பாடித்தான் ஜெயிலுக்கு போகணும்கிறது என்னோட கடைசி ஆசை கண்ணு..(அட என்னோட கண்ணை சொன்னேங்க)

இது சம்பந்தமாக என்னோட முதல் பதிவு:சின்மயி விவகாரம் என்னாச்சு..??

இப்படிக்கு 
உங்க ரசிகன்,அல்லக்கை,அடிப்பொடி,

Post Comment

Saturday, October 27, 2012

சின்மயி விவகாரம் என்னாச்சு..?



எல்லையற்ற சுதந்திரத்தை பாவனையாளருக்கு தந்திருக்கும் சமூகவலைத்தளங்கள் அதன் பாவனையாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில தெரிவுகளையும் வழங்குகிறன.அது தான் தங்களுடைய அதிமுக்கியமான தகவல்களை மற்றையோர் பார்வையிலிருந்து மறைப்பதுவும்,தங்களுக்கு பிடிக்காதோரை,தொல்லை தருவோரை தங்கள் பக்கம் வரமுடியாத வகையில் தடுத்துவைக்கும்(Block) செய்யும் வசதியுமாகும்.

என்னுடைய நண்பர்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் என்னுடைய "அலப்பறை" தாங்கமுடியவில்லை என்று என்னிடமே நேரில் கூறியிருக்கின்றனர்.என்னுடைய பதிவுகள் பிடிக்காவிட்டால் என்னை உங்கள் பக்கத்திலிருந்து நீக்கிவிடுங்கள் என்று கூறினேன்.அதற்காக தானே அந்த வசதியை வழங்கியிருக்கிறார்கள்.பிடிக்காத நபர்களிடமிருந்தும் பிடிக்காத பதிவுகளிலிருந்தும் விலகி இருப்பது ஒவ்வொருவரினதும் சுதந்திரமே! 

அதே போல என்னுடைய நண்பர்கள் சிலர் அடிக்கடி என்னுடைய படங்களை "நானும் காமடி பண்ணுகிறேன்" என்று நகைச்சுவையாக சித்தரித்து வெளியிடுவார்கள்.சிலவற்றை அனுமதிக்கலாம்.நண்பர்களுக்குள் நகைச்சுவை,கலாய்த்தல் விடயங்கள் சாதாரணமே,ஆனால் வேறு சில எனக்கே எரிச்சலூட்டுபவையாக இருக்கும்.அவற்றை நீக்கிவிட கேட்பேன்.அவர்கள் மறுக்கும்பட்சத்தில் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கிவிடுவேன்.அத்துடன் பிரச்சனை முடிந்துவிடுகிறது.மாறாக நானும் அவர்களை போல பதிலுக்கு கலாய்த்தால் பிரச்சனை வளருமே தவிர அது தீர்வாகாது.என்னதான் நண்பர்களுக்கிடையே பதிலுக்கு பதில் கலாய்த்தலாக இருந்தாலும் கூட,ஒரு சமயத்தில் அது பழிக்கு பழி என்று தான் போய் முடியக்கூடிய வாய்ப்புகள் அதிகம். 

                                


சின்மயி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜன்(ராஜன் லீக்ஸ்)சாதாரண டுவீட்டர்களில் இருந்து சற்றே வேறுபட்டு பலரும் பொதுவில் பேச தயங்கும் விடயங்களை கூட பகிரும் ட்விட்டர்,பதிவர்.கெட்ட வார்த்தைகளும்,காமம் சார் கீச்சுக்கள்,பதிவுகளும் இவரின் கைகளில் சர்வசாதாரணம்.சிலர் முகம் சுளித்தாலும் கூட,பலரும் அவரின் பகிர்வுகளை ரசித்தவர்கள் தான் என்பதை மறுக்கமுடியாது;என்னையும் சேர்த்து.சாதாரணமாக ட்விட்டரில் இருக்கும் பெரும்பாலானோருக்கும் இவரை தெரிந்திருந்தது.இவரின் வார்த்தை பிரயோகம் இது தான் என்று சின்மயிக்கும் கூட தெரிந்தே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.அல்லது சின்மயி விடயத்தை கையிலெடுக்கும் போதாவது சின்மயிக்கு இவரை பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும்,பலர் கூறியும் இருப்பார்கள்.

சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் என்றாலே தமிழர்களுக்கு கடவுள் மாதிரி என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையின் மேல் இருக்கும் வரலாற்று கடமையினை செய்வதில் கூட சின்மயி தவறியே இருக்கிறார்.தமிழர்கள் சார்ந்த முழு பதிவுகலகமே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றி தத்தமது வலைப்பதிவுகளில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்த அந்த சமயத்தில் அவ்விடயத்தை பற்றி சின்மயி கூறிய கருத்துக்கள் எந்தவொரு தமிழனின் இரத்தத்ததிலும் சூட்டை கிளப்பகூடியது தான்.நான் கூட அச்சமயத்தில் அவரின் கருத்தை பார்த்து கோபப்பட்டிருந்தேன்.இது மிகவும் இலகுவில் உணர்ச்சிவசப்படகூடிய விடயம்,அதனில் காமெடி பண்ணுவதோ அல்லது விளக்கெண்ணெய்தனமாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது என்பதோ மிகத்தவறானது.அதுவும் தமிழர்கள் மிகவும் மதிக்கும் "உயர்ந்த,புனிதமான" இடத்தில் பின்னணி பாடகியாக இருந்துகொண்டு சின்மயி இவ்வாறு செய்தமை அனைவரினதும் கடுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டிருந்தது. 

My Photo

சமூக வலைத்தளங்களில் பொதுவில் கருத்துக்களை பகிரும்போது அதற்க்கான எதிர்வினைகள் கட்டாயம் கிடைத்தே தீரும்.அவற்றை எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் இந்த விடயங்களை தவிர்ப்பதோ அல்லது இப்படியான இடங்களில் இருந்து விலகி இருப்பதோ தான் சிறந்தது.புத்திசாலித்தனமும் கூட.அதைவிட்டுவிட்டு சற்றும் பொறுப்பேயில்லாமல் கோமாளித்தனமான கருத்துக்களை பொதுவில் பகிர்ந்துவிட்டு அதற்க்கு எதிர்வினை வரும்போது போய் போலீசில் கைய பிடிச்சு இழுத்திட்டான்னு முறைப்பாடு செய்வது போன்ற செயல்கள் இன்றைய சிறுவர்கள் மத்தியில் கூட இருக்குமா தெரியவில்லை. 

ராஜன் பற்றி தெரிந்து தான் சின்மயி கூட எதிர்வினையாற்றினார்.பொதுவாக இரண்டு நண்பர்களுக்கிடையே பேச்சு முடிந்து மோதல் முற்றுகையில் தானாக வெளியே வருவது கெட்டவார்த்தைகள் தான்..அதுவே சற்று அதிகமானால் வீட்டு வேலைக்காரி வரைக்கும் இழுத்து நடுவீதியில் விடுவதற்கு தயங்கமாட்டார்கள்.அப்படி இருக்கும்போது ராஜனை சீண்டி விட்டு,உசுப்பேற்றி விட்டு பிரச்னையை நன்றாக முற்ற விட்டு தன் வலையில் சிக்கும்வரை பொறுத்திருந்து தான் சிறந்த தந்திரவாதி என்கின்றதை நிரூபித்திருக்கிறார் சின்மயி.

ஆண்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம்,பெண்கள் இதை தான் பேசவேண்டும் என்று வரையறுத்து வைத்திருப்பது தானே சமூக விதி,அதைத்தானே நீங்களும் வழிமொழிகிறீர்கள் என்று இதைப்பற்றி பேசும்போது ஒரு நண்பி கூறினார்.கருத்து மோதல் உச்சத்தை அடையும்போது இத்தகைய சம்பவங்கள் நடப்பது இயல்புதானே.அது தானே ஆண்களின் சுபாவமும் கூட.ஆண் படைக்கப்பட்ட விதம் அப்படி.இதனுள் எந்த ஆணிய கருத்தையும் நான் உட்சேர்க்கவில்லை,என்னுடைய பொதுப்படையான அவதானிப்பின் வெளிப்பாடுதான் இது என்றேன். 

ராஜன் கெட்டவார்த்தைகளை பேசியிருக்க கூடாது என்று அவனை வம்புக்கு இழுத்துவிட்டு கூறமுடியாது தானே.பாடகியாக புகழ் பெற்ற சின்மயி தனக்கு பெரிதாக தெரியாத அரசியல் பற்றி கதைக்கவெளிக்கிட்டது ஏன்?இப்படி எதிர்வினை வரும் என்று தெரிந்து தானே வெளியிட்டார்?அது போல அதற்க்கு வரும் எதிரிவினைகளை மட்டும் "இப்படி பேசாதீர்கள்...இது கெட்ட பழக்கம்"என்று எப்படி கட்டுப்படுத்த முடியும்?

                   

தனது கருத்துக்களுக்கான எதிர்கருத்துக்களை தீரமாக எதிர்கொண்டார் சின்மயி,அதே சமயம் தனக்கேயான சில வினைகளையும் வைத்துக்கொண்டார்.இது வீதியில் சென்ற பாம்பை பிடித்து சட்டைக்குள் விட்ட கதை தான்.பாம்பு நாக்கு வெளித்தள்ளும்,கடிக்கும் என்று தெரிந்து தானே செய்தார்?இது சின்மயி தனக்கு தானே மூட்டிக்கொண்ட தீ.இது இவ்வளவு பெரிய பிரச்சனையானதற்க்கு ஒரு காரணம்,இது பெண்ணியம்-ஆண் அதிகார போக்கு-பெண் அடக்குமுறை என்று வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டது தான்.பெரும்பாலான பெண்கள் சின்மயி பெண் என்ற ஒரே காரணத்துக்காக,பிரச்சனை பற்றி எதுவும் தெரியாமலே சின்மயி பக்கம் நிக்கின்றார்கள்.இவர்களுக்குள்ளும் அடுத்த சின்மயி யார் என்கின்ற போட்டி வைக்கலாம்.

ராஜன் செய்தது ஒரு தப்பென்றால்,அதே தப்பை செய்ய தூண்டிய சின்மயியும் தப்பானவரே..!  

குறிப்பு:இப்பதிவில் நேற்று குறிப்பிட்ட நண்பியுடன் விவாதித்த கருத்துக்களும் உள்ளடக்கம்,இதனை எழுத தூண்டியமைக்கு நன்றிகள்.அத்துடன் தினசரி அழைப்பு செய்தும்,பேஸ்புக்கில் சாட்டில் வந்தும் இந்த சின்மயி மேட்டர் என்ன என்று முனைப்புடன் விசாரிக்கும் நண்பர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்.கடைசியில நானும் இது பற்றி எழுதவேண்டியதை போய்விட்டது.

Post Comment

Sunday, October 21, 2012

மாற்றான்+ ஸ்டெப் அப் 4..!

அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகின்றாய் என்றாய் நீ நன்றாக சாதிக்கின்றாய் என்று எங்கோ படித்த ஞாபகம்.சாதிக்கிறாயோ இல்லையோ,எதோ ஒருவிதத்தில் நீ மற்றயவர்களால் கவனிக்கப்படுகிறாய் என்பதே உண்மை.அண்மையில் ஒரு நண்பர் சாட்டில் வந்து,பிரபலம் ஆவதற்கு என்ன வழி என்று கேட்டார்.இது வழமையாக பெரும்பாலானோர் பத்தி எழுதுகையில் தமது கருத்துக்களை வலுப்படுத்த "உருவாக்கப்படும்"உதாரணமாக அன்றி,உண்மையாக நடந்த சம்பவம்.எதோ ஒரு வழியில் மற்றையவர்கள் உன்னை கவனிக்க வைத்துவிட்டால் போதுமானது.சமூக வலைத்தளங்கள் தமது வளர்ச்சியின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் ஒரு தொடக்கத்துக்கான ஆரம்ப புள்ளியை மட்டும் திறமையாக எவனால் கண்டுபிடித்து நிலைநிறுத்திக்க முடிகின்றதோ,அவனால் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதல்ல என்றேன்.

சாரு அளவுக்கு ஜெமோ'வால் பிரபல்யம் பெற முடியாததற்கு காரணம் இது தான்.சாருவின் எழுத்துக்களை படித்து சாருவை பற்றி தெரிந்து கொண்டவர்களை விட சமூக வலைத்தளங்களில் "சாரு"வை வைத்து நடாத்தப்படுகின்ற அலப்பறைகள் தான் "யார் இவன்" என்ற கேள்வியை பலருக்கு உருவாக்கி தேடவும் வைத்திருக்கும்.சாரு அளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஜெமோ கண்டுகொள்ளப்படாததால் தான் பலருக்கு இன்று ஜெமோவை விட சாருவை அதிகப்படியாக  தெரிந்திருக்கிறது.தமிழ் பொண்ணுடனான அந்த "சாட் ஸ்காண்டால்" வெளிவந்ததற்கு பின்னர் தான் பலருக்கு சாருவை தெரியவந்தது.இதே போல தான் நித்தியானதாவை கூட!அதற்காக இது போன்ற "செக்ஸ் ச்கேண்டால்ஸ்" மட்டும் தான் பிரபலமாக ஒரே வழி என்று இப்போதே வேஷ்டியை முழங்காலுக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு கிளம்பிவிடாதீர்கள். வேண்டுமானால் நீங்களும் அவர்கள் போல் "பிரபலம்"ஆகியதன் பின்னாடி மேலும் உங்கள் புகழை பரப்ப இது போன்ற கைங்காரியங்களில் ஈடுபடுங்கள்.சொன்னது நான் தான் என்று கடைசி வரை கூறிவிடாதீர்கள்;முக்கியமாக உங்கள் மனைவியருக்கு.



இதைப்பற்றி பலர் ஏலவே கூறியிருந்தாலும் கூட,உண்மையானது என்னமோ நம்மவர்கள் மத்தியில் முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படாமை தான்.பொதுவாக சொல்வதானால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பது இதை தான்.இன்னமும் புரியவில்லையா?அரைத்த மாவை அரைப்பது தான்.
1 . Creativity
2 . Variety

ஒரு சினிமாவை எடுத்துக்கொண்டால் கூட,சாதாரண ரசிகன் எதிர்பார்ப்பது படத்தில் புதிதாக ஏதாவது முயர்ச்சித்திருக்கிறார்களா,படம் நல்ல கலவைகளுடன் வந்திருக்கிறதா என்று தான்.எந்த விடயத்திலும் மேல்கூறிய இரண்டு விடயங்களையும் தான் பொதுவாக அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த இரண்டு  விடயங்களையும் பூர்த்தி செய்பவர்கள் இலகுவாக மற்றையோரை கவர்ந்துவிடுகின்றனர்.

இவற்றுடன் முக்கியமான இன்னொரு,எதற்குமே முதல் கால் வைத்தவன் தான் அதிகமாக பேசப்படுவான்.அவன் பெயர் தான் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.சிலர் விமர்சனம் செய்வதற்கென்றே பிறந்திருப்பார்கள்.போன ஜென்மத்தில் விமர்சனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.ஒரு சினிமா படத்தில் ஆயிரம் குறை குற்றம் கண்டுபிடித்து எழுதி கிழிப்பார்கள்.கை நிறைய பணம் இருந்தால் ஸ்பான்சர் செய்து நீ தான் இப்படத்தின் இயக்குனர் என்று அந்த விமர்சகர்களை இயக்குனராக்கி வேடிக்கை பார்க்கவேண்டும் என்பது எனது கனவு.அப்போதாவது அவர்களால் எந்த பிழையும் இல்லாமல் ஒரு காவியத்தை எடுத்து முடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

சினிமா மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் கூட, அடுத்தவர் வாழ்க்கையை விமர்சனம் செய்வதிலிருந்து கண்ணில் தென்படும் அனைத்தையும் விமர்சனம் செய்பவர்களால்,அவர்களின் விமர்சனங்களை போல,அவர்களாலேயே வாழ்ந்துவிட முடிவதில்லை.விமர்சனம் செய்வது என்பது இலகு தான்.ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் சிறப்பான படைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்று கூறிக்கொண்டாலும் கூட,பெரும்பாலானோர் தங்களால் முடியாததை இன்னொருவன் தங்கள் கண்முன்னே சாதிக்கையில் அவனை விமர்சனம் என்கின்ற போர்வையில் குழிபறிக்க காத்திருக்கின்றனர்.

எதோ பெரிதாக சொல்கிறானே இவன் என்ன பெரிய **************(விரும்பியதை போட்டுக்கொள்ளுங்கள்)என்று நினைக்கலாம்.இவற்றை சொல்வதற்கு பிரபலமாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.உங்களை சூழ நடப்பவற்றை அவதானமாக பார்த்தாலே நடப்பவை புரியும்.எவற்றிலும் முதலில் பார்வையாளனாக இருந்து மாற்றங்களை அவதானிப்பவனே அடுத்த "மாற்றுபவன்" ஆகிறான்(சரி விடுங்க மாற்றான்'னு வைச்சுக்கோங்க).அது தாங்க ஆங்கிலத்தில் கூறுவதாய் இருந்தால் "Trend Setter"...!

--------------------

                            

அலுவலக நண்பர்களுடன் சென்று நேற்று "ஸ்டெப் அப் 4 " (Step up 4)படம் பார்த்தேன். நடனத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் பல படங்கள் தமிழில் பார்த்திருப்போம்.ஆனால் இவர்களின் தளமே வேறு.படம் முடிந்த பின்னர் கூட எங்கள் உடலில் ஆட்டம் விட்டுப்போகவில்லை.படத்தை பற்றி விபரிக்க தேவையில்லை..கட்டாயம் பாருங்கள்.நிச்சயமாய் பிடிக்கும். நான் 3 D 'யில் பார்த்தேன்.ஆங்கில படம் பார்ப்பது அலுவலக நண்பிகளுக்கு இது முதல் முறை போலும் . ரொமான்ஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.பேசாமல் முதலே தீர்மானித்திருந்தபடி மாற்றான் பார்க்கவே கூட்டி சென்றிருக்கலாம் என்று நொந்துகொண்டேன்.



நடனம் பிடிக்காவிடில்,படத்தில் வரும் மியாமி கடல்கரை காட்சிகளையாவது தியேட்டரில் சென்று பாருங்கள்,கொடுத்த பணத்துக்கான வெகுமதி நிச்சயம் உண்டு.படம் பார்க்க முடியாது,அதில் வரும் சிறப்பான நடனங்களை மட்டும் தான் பார்ப்போம் எனில்,இங்கே செல்லுங்கள்.

சரி இறுதியாக கொஞ்சம் முன்னதாக நான் பேஸ்புக்கில் படித்து சிரித்த பிட்டு நியூஸ்...படத்தை பெரிதாக்கி பாருங்கள் எழுத்து புரியாவிடில்.



Post Comment

Monday, October 15, 2012

இலங்கையின் தலைசிறந்த பதிவர்-எழுத்தாளன்..!


"ஜேகே" என்று பதிவுலகில் அறியப்பட்ட,"குமரன்" என்று அவரின் நண்பர்களாலும் அழைக்கப்படும் ஜெயகுமரன் சந்திரசேகரம் என்பவர் தான் எனது மனதை கவர்ந்த,இலங்கையின் பதிவர்களிலேயே எழுத்தாற்றலில் உயர்ந்து நிற்பவர் என கருதப்படும் பதிவர்.அண்மையில் கூட ஒரு பதிவரை சந்திக்கையில் இவரைப்பற்றி கிலாகித்திருந்தேன்.எப்போது இவர் பதிவுகளுக்குள் சிக்குப்பட்டேன் என்பது சரியாக ஞாபகம் இல்லாவிடினும் கடந்த வருடத்தின் நவம்பர்-டிசெம்பர் மாதங்களில் என்பது ஞாபகமிருக்கிறது.எனது நல்ல நேரம்,அவர் தமிழில் எழுத ஆரம்பித்து அடுத்தடுத்த மாதங்களிலேயே அவர் பதிவுகள் பக்கம் சென்றுவிட்டேன்.கடந்த வருடம் ஆக்டோபரில் தமிழில் எழுத ஆரம்பித்தவர் ஜேகே.


சாதாரணமாய் எழுதப்படும் பதிவுகளுக்கும் ஜேகேயின் பதிவுகளுக்கும் இடையிலே பாரிய வித்தியாசம் காணப்படுவதை முதல் பதிவு வாசிக்கையிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.அது ஒரு "வியாழ மாற்றம்" பதிவு. முதலிலேயே வியந்த விடயம் அவரின் பதிவுகளின் நீளம்.வேறு பதிவர்கள் பத்து பதிவுகளாக வெளியிடும் விடயங்களை ஒரே பதிவில் வெளுத்து வாங்கியிருப்பார்.பதிவு நீளம் என்றால் பலரும் நினைப்பது அதன் குவாலிட்டி குறைவாக இருக்கும் என்று.ஆனால் ஜெகேயை பொறுத்தவரை எவ்வளவு பெரிய பதிவுகள் எழுதினாலும் அவரின் எழுத்திலோ,சொல்ல வரும் விடயப்பரப்பிலோ எவ்வித தோய்வையோ,அலம்பல்களையோ காணமுடியாது.

யாழில் பிறந்து,யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் பயின்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மேல்ப்படிப்பை முடித்து அவுஸ்திரேலியாவில் "M.Tech in  Enterprise Architecture " படித்த கல்விமான்.இவர் படித்த பாடசாலையில் படித்தது எனக்கு பெருமை என்று இப்போதே சொல்லிக்கொள்ள முடியும்.சென் ஜோன்ஸ்'இல் படித்த இன்னும் சில மூத்த பதிவர்கள் இருக்கிறார்கள்.பாடசாலை காலத்திலேயே இத்தகைய படைப்புக்கள் மீதான ஆர்வம் ஜேகே'க்கு இருந்ததாக அவரின் பள்ளி தோழன் கூறியிருந்தார்.



ஜேகேயின் பதிவுகளுக்கு ஆரம்பகாலத்தில் செல்லும் போது எனக்கு ஏற்படும் ஒரே கவலை,இத்தனை திறமையான எழுத்தாற்றல் இருந்தும் கூட வெளியுலகுக்கு தெரியவரவில்லையே என்று.பதிவுகளுக்கு கருத்திடுவது கூட ஒன்று இரண்டு பேர் தான்.ஒரு சமயம் இத்தகைய தரமான பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் தாமாக முன்னிறுத்தி ஆதரவை தெரிவிக்கலாம் என்று கூட அவரின் பதிவுக்கு கருத்திட்ட ஞாபகம்.

அப்படி புகழ்வதற்கு என்ன இருக்கிறது அவரின் பதிவுகளில் என்று கேட்கலாம்.சாதாரணமாக நீங்கள் பார்க்கும் ப்ளாக் பதிவுகளை விட இவரின் பதிவுகள் முதல் வாசிப்பிலேயே வேறுபட்டு தெரிவதற்கு காரணம் பல..!இவரின் சரளமான இலக்கியத்தரமான எழுத்து நடை,எழுதும் விடயங்களில் இருக்கும் பரவலான-ஆழமான அறிவு.. எப்பேர்ப்பட்ட விடயங்களையும் வாசிப்போருக்கு புரிந்துவிட கூடியவகையில் எழுத்தில் கொண்டுவந்துவிடும் திறமை..பதிவுகள் ஒவ்வொன்றிலும் ஆழம்..நான் ஒன்றும் பெரிய "வாசகன்" இல்லாவிட்டாலும் கூட எதோ சில பல புஸ்தகங்கள்,நாவல்கள் வாசித்த எனக்கு ஜேகேயின் சில பதிவுகள் மறுவாசிப்புக்கு தூண்டியிருக்கின்றன..

பல பதிவுகளுக்கு கருத்திடவே தோன்றுவதில்லை.காரணம் அவ்வளவு "Perfect "ஆக எழுதியிருப்பார்.அத்துடன் எத்தனை தடவை தான் உங்கள் எழுத்து அபாரம் அற்புதம் என்று கூறிக்கொண்டே இருப்பது.அவருக்கும் சலித்துவிடக்கூடுமல்லவா.ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் அவரிடமே கூறிவிட்டேன் "சும்மா பதிவுகளை எழுதி தள்ளாம புஸ்தகங்கள் எழுத தொடங்குங்கள்..இலக்கியவாதிகளின் எழுத்துக்கு நிகரான எழுத்தாற்றல் உங்கள் கைகளில் இருக்கின்றது..இப்படியான எழுத்துக்கள் ஈழத்தில் இருந்து வருவதில்லை.அவசியம் உங்கள் கைகளால் வரவேண்டும்" என்று.சரி பார்க்கலாம் என்று கூறி இருந்தார்.முக்கிய தடை "நேரம்" தான்.

எத்தகைய பதிவுகள் என்றாலும் அநியாசமாய் விளையாடுகிறார்.அரசியலோ,விளையாட்டோ..சில தொழில்நுட்ப புனை கதைகளில் சுஜாதா அளவுக்கு ஜொலிக்கின்றன இவரது எழுத்துக்கள்.இவரது பெரும்பாலான பதிவுகள் "வியாழ மாற்றம்""என் கொல்லைப்புறத்து காதலிகள்""கந்தசாமியும் கலக்சியும்""படிச்சதென்ன பிடிச்சதென்ன" என்ற தலைப்புகளிலும் "உ..ஊ..ம ப தா ப மா " என்கின்ற தலைப்பில் பாடல்கள்,இசை மீதான ஆராச்சியே செய்திருப்பார்.ஏற்கனவே "சவால் சிறுகதை"போட்டியில் இவரது "சட்டென நனைந்தது இரத்தம்" பதிவு இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது.

2007 இல் இருந்து "Stay Tuned with JK "என்று ஒரு ஆங்கில வலைப்பூவில் எழுதிவரும் ஜேகே(அதில் எழுதப்படும் விடயங்கள் என்னை போன்ற சாமனியனுக்கு புரிவதே இல்லை.)தமிழுக்கு எழுதவந்ததை தனது அம்பதாவது பதிவில் இவ்வாறு விபரிக்கிறார்.
"எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது.  எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன்." 
மேலும் அந்த சுவாரசிய சம்பவத்தை அவரின் இந்த முதல் பதிவின் மூலம் காணலாம் : "அரங்கேற்ற வேளை"

அதற்குள் பதிவு இவ்வளவு நீளமாகிவிட்டதா??இன்னமும் எத்தனையோ விடயங்கள் சொல்லுவதற்கு மனதில் இருக்கின்றன.பதிவு பெரிதாக நீளமாக இருந்தால் கூட பரவாயில்லை வாசிப்போம் என்று வாசகர்களை கட்டிப்போட ஜேகே அளவுக்கு எழுத்தாற்றல் கிடையாது எனக்கு.ஆனால் தமிழகத்தில் இருக்கும் சில "காமத்துப்பால்"எழுத்தாளர்களை விடவும்,அதிஷா,லக்கிலூக் போன்ற வளர்ந்துவரும் எழுத்தாளர்களை விடவும் ஈழத்து எழுத்தாளர் "ஜேகே" பலபடிகள் உச்சமானவர் என்பது மட்டும் இப்போது எனக்கு தெரிந்த உண்மை.இன்னும் ஒரு பதினைந்து வருடங்களில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளராக கூட உருவாக கூடும்.அதற்கேற்ற நேரமும்,வாய்ப்புகளும் ஜேகே'க்கு கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

அவரின் வலைப்பூக்கு செல்ல: படலை
பேஸ்புக் இணைப்பு: "Jeyakuramaran Chandrasegaram"

குறிப்பு: இப்பதிவு வெறுமனே புகழ்ச்சிக்காகவோ,வால்பிடிப்பதற்க்காகவோ எழுதப்பட்டது என்று சிலர் நினைக்கக்கூடும்.காரணம் தமிழர்கள் வளர்ந்த,வளர்க்கப்பட்ட விதம் அப்படி.எப்படி நினைத்தாலும் பரவாயில்லை.நல்ல படைப்புகள்,நல்ல கலைஞர்கள்,படைப்பாளிகள் என்றுமே முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள்..அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள்.என்னால் முடிந்த பங்கை நான் செய்கிறேன்.
திருப்தியுடன்,

Post Comment

Saturday, October 6, 2012

தாண்டவம்'மும் முதலிரவும்....!!

                      

அனுஷ்கா படத்தில கண் சத்திரசிகிச்சை நிபுணராக அதுதாங்க "கண்டாக்டராக" வேலை பார்க்கும் ஒரு கிராமத்து கிளி,ஏன் உசரத்த பார்த்து கொக்குன்னு கூட வைச்சிக்கலாம்.விக்ரம்,இந்தியாவின் "ரா" அமைப்பின் உயரதிகாரியாக கடமையாற்றும் ஒரு முறுக்கேறிய இளைஞர்.இவரும் அதே கிராமத்து கருங்காலி தான்.கிளி,கருங்காலி இருவருக்கும் தங்கள் தங்கள் வேலை மீது அபரீதமான காதல்.ஆனால் பெத்தவங்களுக்கின்னு ஒரு கடமை இருக்கிறதால வீட்டாலையே இருவருக்கும் சம்பந்தம் பேசி முடிச்சுக்கிறாங்க.

கல்யாணம் பிடிக்காத கருங்காலி,வயல் வெளியில மழை பெய்யும் போது, இருந்த ஒரு குடையையும் தனக்கு பிடிக்காது தன்னோட நாய்க்குட்டி நனைஞ்சிட கூடாதின்னு நெனைச்சு நாய்க்கு குடை பிடிக்கிற கிளியை பார்த்ததுமே குஷியாயிடுறார்.ஒரு சமயம் அதே சீனில் நாய்க்குட்டிக்கு குடைபிடிக்காது தனக்கு குடைபிடித்திருந்தால் கருங்காலிக்கு கிளியை பிடித்திருக்காதோ என்னமோ.தன்னை கட்டிக்க போற பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட எதுவுமே கதைக்காமல் தான் மழைக்கு நனைஞ்சிடுவேன்னு வீட்டுக்கு ஓடிப்போறார் கருங்காலி.

கல்யாணம் முடிஞ்சிடுது..தங்கள் தங்கள் துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் இருவரும் முதலிரவு படுக்கையறையில் தான் தன்னோட துணை என்ன வேலை செய்கின்றார் என்று கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.இவ்வளவு படிப்பறிவில் முன்னேறாத பழைய காலத்தில் கூட கல்யாணம் என்று வரும் போது தன் துணை என்ன வேலை என்று தெரிந்த பின் தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பார்கள்.இவர்களாக கேட்காவிட்டாலும் கூட,வீட்டில் யாராவது நிச்சயம் கூறி இருப்பார்கள் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் எவ்வளவு சம்பாதிக்கிறார்,பொண்ணு என்ன செய்கிறது என்றெல்லாம்.டாக்டர் பொண்ணு கூடவா தன்னோட கணவராக வர போறவர் என்ன செய்கின்றார் என்று கேட்காமல் ஜாலியாக மழையில் நனைந்துகொண்டிருக்கும்?

முதலிரவில் கிளி சொல்கிறது,"இப்போ எங்களுக்குள்ளே ஒண்ணும் நடக்க போறதில்லை(அதாவது புலி மானை வேட்டையாடுவது/கருங்காலி கிளியை அடித்து கொல்வது),முதலில பார்த்து,பழகி,நட்பாகி,காதல் மலர்ந்து,அதற்க்கு பின்னர் தான் இந்த வேட்டையாடு விளையாடு எல்லாமே".இதை தான் கருங்காலி கூட எதிர்பார்த்திருந்ததால் "ஓகே,அப்புறம் என்ன வா மூடிக்கிட்டு படுக்கலாம்"னு இருவரும் கொறட்டை விடுகிறார்கள்..! இருவரும் ஒரே எண்ணங்களுடன் படுக்கையறைக்கு வந்ததால் குழப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை.இப்போ கருங்காலிக்கு அந்த நினைப்பு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்?நெசமாலுமே அவன் கருங்காலியாய் இருந்திருந்தால்,கிளி இவ்வளவு கதைக்கும் வரையில் பார்த்துக்கொண்டா இருந்திருப்பான்?விடியும் போது கோழிக்கால் சூப் வைத்து குடித்திருக்கமாட்டான்?

                                 

கிராமம் என்பதால் காலையில் நெற்றி குங்குமத்தை அழித்து விட்டு,சேலையை கசக்கி விட்டு(ஏன்யா சேலையை வைத்து என்ன தான் செய்வார்களோ!)உள்ளே களோபரம் நடந்த மாதிரியே நடிக்கவும்,கருங்காலி வெளியே வந்து நீட்டி நிமிர்ந்து முறிவு எடுக்கவும், அப்பாடா மாப்பிள்ளை பொண்ணை சந்தோசமாக(!!) தான் வைத்திருக்கிறார் அப்பிடின்னு கிராமத்து உறவுகள் முடிவு செய்துகொண்டன!எப்படா இவனுக கதவை திறப்பாங்கள்,என்ன என்ன எபெக்ட்டு கொடுக்கிறாங்கன்னு பாக்கிறதுக்காகவே விடிஞ்சதில இருந்து முதலிரவு அறை வாயிலை குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றிக்கொண்டே இருந்திருப்பார்கள் போல!

எல்லாம் முடிந்து டெல்லிக்கு போறாங்க.தங்களது வேலையை கவனிக்கிறாங்க.இரவு வந்து கண்ணை மூடிவிட்டு தூங்குகிறார்கள்.எதுவுமே நடக்கலைன்னு இப்பவே நீங்க அவசரப்பட கூடாதுங்க.அவங்க இன்னும் ப்ரெண்ட்ஸ் கூட ஆகவில்லை.இனி நட்பாகி,காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி....இன்னும் ஒரு ரெண்டு வருஷமாவது நீங்க வெயிட் பண்ணனும்.(முன்பின் தெரியாதவர்கள் திருமணம் செய்கையில் பரஸ்பர அறிமுகத்துக்கு சிறிது காலம் எடுப்பது சிறந்ததே.ஆனால் இப்படியா?)கட்டேல போற கருங்காலி பய,டாக்டரம்மா சொல்ற எல்லாத்துக்குமே மண்டைய மண்டைய ஆட்டுது."நட்பாகி காதலாகி"ன்னு ஸ்டேட்மென்ட் விடுற டாக்டரம்மா,தனக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமுமே இல்லாத மாதிரி தானும் தன்பாடுமாய் இருப்பாங்க.கருங்காலி தான் ஏதும் "பர்போம்" பண்ணி அம்மணிய இம்ப்ரெஸ் பண்ணனுமாம் கல்யாணம் முடிந்த பிறகு கூட!

அவ்ளோ விவரமான கிளி தான்,தன் கணவர் ஆபத்தான வேலையொன்றை நோக்கி இங்கிலாந்து செல்ல,அவருக்கு தெரியாமலேயே இங்கிலாந்து செல்கிறது.வழமையான தமிழ் சினிமா ஹீரோயின் நியமப்படி,ஹீரோ ஆபத்தில் இருக்கும் போது,ஹீரோயின் ஏதும் விளக்கெண்ணை தனமான வேலை ஏதும் செய்து வில்லன்களிடம் மாட்டி ஹீரோவை இன்னமும் சிக்கலில் ஆழ்த்திவிட வேண்டும் என்பதற்க்கமைய கல்யாணம் கட்டி எதுவித கில்மாவும் காணாத நிலையில் கூட,கிளி கிளம்பி செல்கிறது.ஒரு வேளை படித்த கிளி என்பதால் வெளிநாட்டில் ஹனிமூன் வைச்சிக்கலாம்னு ஜோசிச்சிதோ என்னமோ.

அப்புறம் என்ன,கிளி கருங்காலிக்கு எவ்வித சுகத்தை கொடுக்காமலும்,கருங்காலி கிளியிடம் எதனையும் பெற்றுக்கொள்ளாமலும் விடவே கடுப்பான இயக்குனர் கிளியை பாம் வைத்து கொன்றுவிடுகிறார். 

                      
--------------------------
இப்படியான ஆண்,பெண்கள் நிஜ வாழ்க்கையில் இல்லை என்று கூறிவிட முடியாது.தங்கள் இலட்சியமே கண்ணாக இருக்கின்றவர்கள் கல்யாணத்தை விரும்புவதில்லை.தங்களுக்கு வர போகின்றவர்கள் பற்றி கவலை கொள்வதில்லை.வீட்டில் "உறவுகள்" பற்றி கண்டுகொள்வதில்லை.வேலை,வேலை,இலட்சியம் என்று வாழ்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்.ஆனால் இப்படியானவர்கள் ஆயிரத்தில் ஒருவர் என்று கூட வரையறுக்க முடியாது.அவ்வளவு சொற்பமானோர் தான் இப்படி இருக்கின்றனர்.அது போக அப்படியான இருவர் ஒரு திருமணத்தில் சேர்வது என்பது லட்ச திருமணத்தில் ஒன்றாக தான் இருக்க முடியும்.

அவ்வாறு இருக்கையில்,இப்படியான இலட்சிய புருஷர்கள்(!!)பொண்ணுகள் கல்யாணம் செய்துகொள்கையில் அவர்களுடைய துணை கட்டாயம் பாதிப்புக்குள்ளாக போகின்றது என்பது நிதர்சனம்.பாதிக்கப்படுவது ஆணாக இருந்தால்,அதன் விளைவு கற்பழிப்பாகவோ அல்லது விவாகரத்தாகவோ இல்லை தப்பான உறவுகளுக்கு அடிமையாவதாகவோ முடியும் அதே சமயத்தில் பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் அது சிலசமயம் விவாகரத்திலோ அல்லது தப்பான உறவிலோ தான் போய் முடியும்.

இவ்வளவு கேவலமான சிச்சுவேசனை படத்தில் எவ்வித லாஜிக்கும் இல்லாமல் காட்டியிருந்த இயக்குனர் எ.எல் விஜய்'ஐ அப்டேட் ஆகாத இயக்குனர் என்பதா,இல்லை ரசிகர்களை முட்டாளாக்கும் இயக்குனர் என்பதா,இல்லை தமிழ் சினிமாவின் கொடுப்பினை அவ்வளவு தான் என்று நொந்து கொள்வதா என்று தெரியவில்லை.படம் "பார்க்கலாம்"அளவுக்கு இருந்தாலும் கூட,படத்தில் இது மாதிரியான ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்.விக்ரம் தெரிவு செய்யும் ஒவ்வொரு இயக்குனர்களும்,விக்ரமை அடுத்த பிரபு,கார்த்திக்,சரத்குமார் மாதிரி சினிமாவை விட்டு தூக்கி வீச போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.ஒரு நல்ல நடிகனின் கேரியர் நாசமாய் போகிறது,விக்கிரமின் இயக்குனர் தெரிவால்-இயக்குனரின் கதை தெரிவால்.....!!
-----------------------------


இறுதியாக:
"கங்னம் ஸ்டைல்"உலகெங்கும் இப்போ சக்கை போடு போடுகிறது.T20 போட்டிகளில் கெயில் ஆடி இன்னமும் அதன் புகழை உயர்த்திவிட்டார்.இது பற்றி பேஸ்புக்கில் கடந்த மாதம் பதிந்திருந்தேன்.அந்த கங்னம் PSY 'இன் மேடை நிகழ்ச்சி இது உங்களுக்காக.பாடலின் மூலம் வெளிப்படும் மாஸ் இது..பார்க்கையிலேயே உடல்முடிகள் சிலிர்த்து நிக்கின்றன!பார்க்காதவர்கள் கண்டு களியுங்கள்..ஒரிஜினல் வீடியோ இப்போது நானூறு மில்லியன் பார்வைகளை பெறப்போகிறது இன்னமும் சில நாட்களில்.அது சார்ந்த பிற காணொளிகள் எல்லாம் சேர்த்தால் ஒரு 600 மில்லியன் ஹிட்ஸ் யூடியூபில்!!



இலங்கை,இந்தியாவில் இது ஹிட் ஆக அடுத்த மாதம் ஆகலாம் என்று கூறி இருந்தேன்.இப்போது தான் ஒவ்வொருவராக இதனால் கவரப்பட்டு ஷேர் செய்வது தெரிகிறது.இதைவிட கொலைவெறி தான் சூப்பர் ஹிட் என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை(!!!).

அன்புடன்...


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...