Thursday, June 27, 2013

"சிங்கம் 2"-முதல் விமர்சனம்-செம்ம வேட்டை..!!!


படம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போதிருக்கிறது.பில்லா-நாகராஜசோழன் எம் எல் ஏ-முனி-விஸ்வரூபம்-துப்ப்பாக்கி என்று அதே வரிசையில் இப்போது இயக்குனர் ஹாரியின் 'சிங்கம்'.

விஜய் வேண்டாமென்று நிராகரித்த கதைகள் வேறு நடிகர்கள் நடித்து ஹிட் ஆகியிருக்கின்றன.அப்படியான ஒன்று தான் சூர்யாவின் சிங்கம்.அதன் முதல் பாகம் வந்து ஹிட் அடிக்க,இந்தியிலும் அஜய் தேவ்கன்,காஜல் நடிப்பில் ரீமேக் ஆகி வெளியாகியது.அந்த வெற்றியை தொடர்ந்து,சிங்கம் பார்ட் 2 வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே படத்தின் ட்ரெயிலரில் சூர்யா அனைத்து சேனல்களிலும் மணிக்கு மூன்று முறை வந்து 'யார்லே..எலே வாங்கலே..." அப்பிடின்னு அரிவாவ கையில வைச்சு மிரட்டி அப்பாவி ஜனங்களை தியேட்டருக்கு வான்னு மிரட்டியிருந்தார்.எங்க போகாமல் விட்டால் வெட்டிவிட்டிடுவாரோன்னு பயந்து நானும் போயிட்டேன்.. அதன் பின்னர் நடந்தது என்ன?

ஆரம்பமே அமர்க்களம் தான்.ஒரு காலேஜுக்குள் புகுந்து ரவுடிக்கும்பல் ஒன்று அட்டகாசம் செய்துகொண்டிருக்கிறது.பொண்ணுங்க மேல கைவைக்கிறதும்,எதிர்த்து கேக்கிறவங்கள அடிச்சு நொறுக்கிறதுமா இருக்கும்போது,இத பாத்து பொறுக்கமுடியாத அஞ்சலி துரைசிங்கம் ஐயாவுக்கு(அதாங்க சிங்கம் பார்ட் 2) போன் போட்டு சொல்றாங்க.சர்ர்னு ஒரு பொலீஸ் ஜீப்ல வந்து இறங்கிறார் சூர்யா.அப்பிறம் என்ன? ஓட ஓட அடி..இடைக்கிட,உசரம் பத்தாம போக,பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார்...அதுக்கு 'பாஞ்சு அடிச்சா பதினஞ்சு டன் வெயிட்டா..'''அப்பிடின்னு ஒரு பஞ்ச் சொல்லி சமாளிச்சிக்கிறார்.பைட்டு சீன் முடிஞ்ச சந்தோசத்தில காலேஜ் பொண்ணுங்க கூட ஆட்டம் போடுறார்.அஞ்சலி சேர்ந்து ஆடுறாங்க.இத தூத்துக்குடில படமாக்கியிருக்காங்க.எல்லாரும் இவர் புகழ் பாடுறாங்க.'இட்ஸ் சிங்கம் டான்ஸ்"அப்பிடின்னு காலேஜ்ல ஆட்டம்போடுறாங்க.

சென்னை ரவுடிஸ் எல்லாரையும் ஆல்ரெடி போட்டு தள்ளினதால,இம்முறை கொஞ்சம் பெரிய ரவுடீஸ் கொண்டுவர வேண்டியது அவசியம் எண்டதால,கதைய கொஞ்சம் அரசியலோட சம்பந்தப்படுத்தி,ஆப்ரிக்கா வரைக்கும் கொண்டு போயிருக்கிறார் ஹாரி.கதை ஆப்ரிக்காவுக்கு போகுது இடைவேளைக்கு அப்புறமா தான்.'ஐ ஆம் வெயிட்டிங்க்' அப்பிடின்னு துப்பாக்கில விஜய் பஞ்சு வைச்ச மாதிரி 'வாங்கலே......" அப்பிடின்னு ஆப்ரிக்க தீவிரவாதிகளுக்கு அடித்தொண்டையில சவால் விடுறார் ஈஸ்வரசிங்கம்.

சிங்கம் முதல் பாகத்திலேயே அனுஷ்கா மேட்டர்,கல்யாணம் கட்டிக்கிற அளவுக்கு வந்திட்டதால,இந்த பார்ட் 2'ல புதுசா ஹன்சிகாவ இறக்கியிருக்காங்க.ஹன்சிகா கொஞ்சம் மெலிஞ்சு காலேஜ் பொண்ணா வர்ராங்க.அனுஷ்கா இடைவேளைக்கு முன்னாடி கொஞ்ச சீன்லயும், இடைவேளைக்கு அப்புறமா க்ளைமாக்ஸ்லயும் ஒருதடவை வர்றாங்க.அதை தவிர படம் முழுக்க ஹன்சிகா தான் ஆட்சி பண்றாங்க.அனுஷ்காவுடன் பாடல் காட்சிகளில் துள்ளி துள்ளி நடிச்ச சூர்யா ஹன்சிகா எண்டதால,தரையிலயே நின்னு நடிக்கிறாப்லே.ஹன்சிகாவோ, அனுஷ்காவோ,ரெண்டு பேருமே சூர்யாவோட அம்மா மாதிரி தான் இருக்காங்கப்பா..!


நம்மகூட ஜாலியா இருந்த பய இப்போ குளுகுளு ஹன்சிகாவ கண்டவுடன அந்த பக்கம் தாவிடிச்சே அப்பிடின்னு பீலிங்ல இருந்த அனுஷ்காவுக்கு ஒரு டெமோ குடுத்து விளக்குறார் சூர்யா.அத கேட்டிட்டு,வழமையான மோட்டு ஹீரோயின் மாதிரி 'உங்கள புரிஞ்சுக்கிட்டேங்க..ஐ லவ் யு சோ மச்" அப்பிடின்னு உருகுறாங்க அனுஷ்கா..அட இதில்லாம் எதுக்குன்னு கேக்கிறீங்களா?அடுத்த பாட்டு போடுறதுக்கான சிச்சுவேசனாம்!!

இடைவேளைக்கு அப்பிறமா ஆப்ரிக்கா போகனும்கிறதால அந்த இடத்தில ஹாரி ஒரு பஞ்ச் வைக்கிறார்..'ஊரு விட்டு ஊரு..நாடு விட்டு நாடு...கண்டம் விட்டு கண்டம் குறிக்கோளோட பாஞ்சு தாக்கிற சிங்கம் டா' அப்பிடின்னு.ஒவ்வொரு பஞ்சும் பறந்து பறந்து கையால ஓங்கி எதிலயாவது அடிச்சு தான் சொல்றார் சூர்யா.ஏன்னா,அப்போதான் நங்கூரம் மாதிரி நச்சின்னு மனசில பதியுமாம்.

கண்டம் விட்டு கண்டம் தேடி போற ஈஸ்வர சிங்கம் அயன் படத்தில கருப்பனுக கூட டீல் வைச்சிக்கிற மாதிரி டீல் வைச்சு மெயின் வில்லனான முகேஷ் ரிஷி'யயும்,தென்னாபிரிக்க நடிகர் ஒருவரையும் கண்டுபிடிக்கிறார்.க்ளைமாக்ஸ் பைட் நைஜீரியால நடக்குது.

இசை தேவிஸ்ரீ பிரசாத்.பெரிதாக வேலையில்லை இவருக்கு.சிங்கம் ஒன்ரின் பாடல்களுக்கு எக்ஸ்ராவா ரெண்டு ஸ்வரத்த போட்டு பாட்டை ரிலீஸ் பண்ணியிருக்காப்லே!'காதல் வந்தாலே காலிரண்டும் தன்னாலே'பாடலை போலவே ஒரு பாடல் அதே போல செட் போட்டு அதே போல குனிஞ்சு குனிஞ்சு ஆடியிருக்காப்லே சூர்யா!"கன்னுக்குள்ள கண்ண வைச்சு என்ன சுடாதை"எண்ட டூயட் தான் அது.

விவேக்கு முதல் பாகத்தில எரிமலை எப்படி பொறுக்கும்னு ஆட்டுப்புழுக்கைய ஆத்தில கரைச்சு பர்போம்மன்ஸ் காட்டியிருந்ததால,இந்தவாட்டி ப்ரொமோசன் குடுத்து இன்ஸு ஆக்கியிருக்காங்க,அதாம்பா இன்ஸ்பெக்டர்.நாடுவிட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம் பாயும்போது தமிழ் நாட்டில சிங்கத்துக்கு உதவி பண்றது நம்ம எரிமலை தான்! 

"ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு"காத்திருந்து கண்ணி வைச்சவன பிடிச்சிருக்கேன்..ஒரு பய தப்பமுடியாது"அப்பிடின்னு சொல்லும்போதாச்சும் 'இது தப்பாச்சே" அப்பிடின்னு எந்திரிச்சு ஓடியிருக்கனும்..முதல் பாகத்தில தமிழ் நாட்டு எதிரிகளையும்,இரண்டாம் பாகத்தில சர்வதேச எதிரிகளையும் போட்டு பந்தாடியிருக்கிறதால,மூணாவது பாகத்தில ஏலியன்ஸ் கூட பைட்டு வைக்கலாம்னு ஹாரியும் சூரியாவும் ப்ளான் போட்டிருக்காங்கப்பா.அதுக்கு ஒரு ட்ரெய்லர் விட்டு அதில "ஊரு விட்டு ஊரு,நாடு விட்டு நாடு,கண்டம் விட்டு கண்டம்,கெரகம் விட்டு கெரகம் பாஞ்சு தாக்கும் அப்பலோ சிங்கம்டா" அப்பிடின்னு பஞ்ச் வைப்பாரு.'வாங்கலே.." அப்பிடின்னு வாண்டட்டா ஏலியன்ஸ இங்க கூப்பிடுவாரு..அதுக்கு முன்னாடி நாம வேற கெரகம் ஒன்னுக்கு போயிடணும்பா..! 

'போங்கலே................!"


Post Comment

Tuesday, June 25, 2013

எஸ்.ரா'வின் 'சீட்டாட்டம்' -சிறுகதை..!

எஸ்.ரா'வின் சிறுகதை தான்.,ஆனால் அதற்கு முன்பதாக சுயபிரசங்கம்..

           "தைரியசாலிகளாகவும்,காந்தசக்தி பொருந்திய கண்கள் பொருந்தியவர்களுமான இவர்கள் சுக்கிர ஆதிக்கரென பார்த்த மாத்திரத்தில் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.மனம் எப்போதும் அழகான விடயங்களிலும் சங்கீதம்,நடனம்,கவிதை,சினிமா முதலிய இன்பகரமான விஷயங்களிலும் ஈடுபட்டிருக்கும்.ஐம்புலங்களினாலும் அனுபவிக்கக்கூடிய விடயங்களை எல்லாம் நன்கு கவனிப்பர்.சந்தோஷமாக வாழ்வதே இவர்கள் வாழ்வின் இலட்சியம்.போகங்கள் மனதை இழுக்கும்.வேதாந்திகள் உலகம் மாயை என்று சொல்லக்கேட்டால் இவர்களிக்கு சிரிப்பாக இருக்கும்.இத்தனை சுகங்கள் நிறைந்த இடத்தையா இப்படி கூறுகின்றனர் என்று நினைப்பார்கள்.

காவியம்,ஓவியம்,சங்கீதம்,நடனம் போன்றவற்றில் மனதை பறிகொடுக்கக் கூடிய இவர்களே இன்றுவரை பண்டைய சின்னங்களையும் நாகரிகங்களையும் கலைகளையும் பாதுகாத்து நமக்கு அளிப்பவர்கள். உல்லாசங்களில் கவனம் செலுத்துவதால் சுற்றுப்புறம்,வீடு,  தோட்டம் போன்றவற்றில் கவனம் செலுத்துவர்.வீட்டை அழகுப் பொருட்களால் நிரப்ப விரும்புவர்.இவர்களில் ஆண்களுக்கு கூட நகைகள் அணியப்பிடிக்கும். எப்போதும் சிரித்த முகத்தினராய் இருப்பார்கள். கலைஞர்களை ஆதரிப்பார்கள்.இந்த எண்ணின் கீழ் தான் பிரசித்தமான கலைஞர்கள் பிறக்கிறார்கள்..'"

கொஞ்சமாவது எண் ஜோசியம்,அதாங்க நியுமொரொலொஜி பற்றி தெரிந்திருந்தவர்கள் உடனேயே அடையாளம் கண்டுபிடித்திருப்பார்கள் மேலே குறிப்பிட்டது எந்த எண் பற்றியது என்று.'6'ஆம் எண்காரர் பற்றி எண் ஜோசியத்தில் கூறியிருப்பதை தான் எடுத்துவந்து சேர்த்திருக்கிறேன்.கடவுள் நம்பிக்கை அருகிப்போய்விட்ட என்னிடத்தில் சற்றே நம்பிக்கைக்கு ஆளான விஷயம் இந்த ஜோசியம்,அதுவும் முக்கியமாக எண் ஜோசியம்.நானும் ஆறாம் எண்ணில் பிறந்துவிட்டதால் பெருமை பீற்றிக்கொள்வதற்காக இதனை பகிரவில்லை,கட்டாயம் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.எண் ஜோசியத்தில் நம்பிக்கை வர வைத்தது என்னமோ இந்த ஆறாம் நம்பர் தான்.

சிறுவயதில் இருந்து மேலே குறிப்பிட்டது போன்று இசை,கவிதை,கலை ஆர்வம்,நகைச்சுவை உணர்வு தானாகவே என்னுள் இருக்கின்றது.நகைச்சுவையை எங்கள் பாஷையில் சொல்வதானால் 'மொக்கை'.எப்போதும் சந்தோஷமாக,பிரச்சனைகளை மறந்து ப்ரீயாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பேன்.இதனால் தான் எண் ஜோசியம் மீது நம்பிக்கை வந்தது என்றில்லை.இவை எல்லாவற்றையும் ஒரு சம்பவத்தின் பின்னர் தான் தொடர்புபடுத்தி பார்க்க ஆரம்பித்தேன்.ஓரளவுக்கு ஒரே எண்காரர்கள் பொதுவான குணாதிசயங்களை கொண்டிருப்பதை கண்கூடாக காண முடிந்தமை தான் எண் ஜோசியம் உண்மையாக இருக்குமோ என்கின்ற நம்பிக்கையை கொடுத்தது.

பல்கலைக்கழகம் நுழைந்த முதல் வருடம் பொதுவாகவே ராகிங் எனப்படும் பகிடிவதை இருக்கத்தான் செய்யும்.கூட்டமாக இருத்தி வைத்து வதைத்து (F)பன் எடுக்கும் காலம்.இடையிடையே யாராவது சீனியேர்ஸ் வந்து 'ஆறாம் நம்பர் எல்லாம் கை தூக்கு?'என்று கேட்பார்கள்.அவர்கள் இருக்கும் மூட்'டை பொறுத்து அவர்களுக்கான 'வெகுமதிகள்' வழங்கப்படும்.ஒரு தடவை ஒரு பெண்ணுக்கருகில் உட்கார்ந்திருந்தேன்.வழக்கம் போல ஒருவர் வந்து 'டேய் நீ ஆறாம் நம்பர் தானே?எழும்பி போய் அங்கால மூலையில இரு போ" அப்பிடின்னு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்று ஒதுக்கி வைத்தார்.ஏன் எல்லோரும் இந்த கொலைவெறியில் இருக்கிறார்கள் என்று ஜோசிக்கத்தொடங்கினேன்.யூனிவர்சிட்டியில் மட்டுமல்ல,பொதுவாகவே ஆறாம் நம்பர் ஆட்கள் மீது ஒரே இமேஜ் தான் இருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக தான் தெரியவந்தது.ஆமாங்க அந்த இமெஜ் வேறொன்றுமில்லை 'பொம்பிளை கள்ளனுக"..!

பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் இந்த ஆறாம் எண்காரர்கள் கில்லாடிகளாக தெரிந்தார்கள்.ஒரு கூட்டத்தில் பொண்ணுகளை உசார் செய்வதில் ஒருத்தன் திறமையாக இருந்தால்,உடனே நான் அவனுடைய பிறந்த தினத்தை கேட்டு தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பேன். ஏமாற்றமின்றி பெரும்பாலானோர் ஆறாம் எண்காரரே!பெண்கள் எங்கள் கண்கள்.,பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை..பெண்கள் சுற்றிவர இல்லாவிட்டால் வாழ்க்கையே இருண்டுவிட்டது போன்று தோன்றுவது எல்லாம் இவர்களுக்கு எப்போதும் பெண்கள் சூழ இருப்பதை வேண்டி நிற்கும்.பெண்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது அது கல்லூரிகளாகட்டும், வேலைத்தளங்களாகட்டும்.

யாழ்-கொழும்பு போக்குவரத்து இப்போது தரைவழி ஆகிவிட்டது.2007-08 இல் எல்லாம் விமானம் மூலம் தான்.ஒருதடவை சென்றுவர குறைந்தது 20000 முடியும்.அதைவிட மலிவாக இந்தியாவுக்கு சென்று வந்துவிடலாம்.கொழும்பு வந்த பின்னர் ஒருதடவை யாழ் சென்று திரும்புகையில் விமானத்தில் எடுத்துவந்தது ஒன்றே ஒன்று தான்.என்னுடைய யமகா கீபோர்ட். காம்பியூட்டர் கூட கொண்டுவர நினைத்திருக்கவில்லை.கவிதை என்கின்ற பெயரில் பாடசாலை உயர்தரத்திலும் சரி,கல்லூரிக்காலங்களிலும் சரி சுற்றியிருப்பவர்களை தொல்லைப்படுத்தி வந்திருக்கிறேன்.இவற்றை எல்லாம் நினைத்துப்பார்க்கையில் தான் எண் ஜோசியம் மீதான நம்பிக்கை துளிர்விட்டிருந்தது எனக்கு.ஆறாம் எண்காரரை தவிர்த்து எண் ஜோசியம் மீது நம்பிக்கையை அதிகரித்த பெருமைக்குரியவர்கள் எட்டாம் எண்காரர்கள்.அந்த கதைகளை இங்கே தவிர்ப்பது சில நட்புகள்-உறவுகளின் நீட்சிக்கு நல்லது.

சரி,கலை வல்லுனர்களில் பெரும்பாலானோர் இந்த எண்காரர்கள் என்று மேலே கூறியிருந்தார்கள் அல்லவா,காவியக்கவி கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரஹ்மான் போன்ற பலர் ஆறாம் எண்காரரே.முதல் குறிப்பிட்ட இருவரினதும் பிறந்ததினமும் எனது பிறந்த தினமும் ஒன்று.ஆம் அது நேற்று :) ஏன் தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை,ஜெயலலிதா போன்றோரும் ஆறாம் எண்காரர்தாம்.

வாலி பாடிச்சென்றார்..,எனக்காக..!

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக -
அன்னை மடியை விரித்தாள் எனக்காக 

தவழும் நிலவாம் தங்கரதம் 
தாரகை பதித்த மணிமகுடம் 
குயில்கள் பாடும் கலைக்கூடம் 
கொண்டது எனது அரசாங்கம்.."

இந்த நம்பர்களை வைத்து எஸ் ரா எழுதிய 'சீட்டாட்டம்' என்கின்ற சிறுகதை என்னை மிகவும் யோசிக்க வைத்த சிறுகதை.அந்த சிறுகதையையும் எண் ஜோசியத்தையும் சம்பந்தப்படுத்திக்க நான் முயலவில்லை.ஆனால் வாசிக்காதவர்கள் கட்டாயம் ஒருதடவை வாசித்துப் பாருங்கள்.வாசித்து முடிந்தவுடன் ஏதாவது எண்ணவோட்டங்கள் மனதில் எஞ்சி நிற்பது திண்ணம்.


சீட்டாட்டம்

   சிறுகதை
இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள், சில சமயம் கற்பனையை விட உண்மை விசித்திரமாகவே இருக்கும்,
அவர்கள் சீட்டுவிளையாடிக் கொண்டிருந்த அறை கடற்கரையோர வீடு ஒன்றில் உள்ளது, அந்த வீட்டின் உரிமையாளர் வினி, அவள் இப்போது நொய்டாவில் வசிக்கிறாள், அவள் சென்னையில் இருந்த போது அந்த வீட்டில் தங்கியிருந்தாள், அவள் ஊரைவிட்டுப் போன பிறகும் சீட்டாட்டம் தடை செய்யப்படக்கூடாது என்பதற்காக சமையலுக்கும் உதவிக்கும் ஒரு ஆளை நியமித்துப் போயிருக்கிறாள், அந்த ஆள் தினமும் இரண்டு முறை உணவுத் தட்டுகளை அறையின் ஜன்னலில் வைத்துப் போகிறான், சில நேரம் பழங்கள் மற்றும் உணவு அப்படியே சாப்பிடப்படாமல் இருக்கின்றன, சில நேரம் சிகரெட் தேவை என்ற குறிப்பு ஜன்னலில் சொருகப்பட்டிருக்கிறது, அந்தச் சமையற்காரன் உள்ளே விளையாடும் மூவரையும் பார்த்ததேயில்லை ஆனால் அவர்களைப் பற்றி அவனாக நிறையக் கற்பனை செய்து வைத்திருக்கிறான்
அவர்கள் மூவரும் சீட்டாடத்துவங்கிய போது மூன்று நிபந்தனை விதித்தார்கள், முழுமையாக ஒருவர் வெற்றி பெரும்வரை ஆட்டத்தைப் பாதியில் விட்டு எவரும் விலகிப் போக கூடாது. விளையாட்டின் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக்கூடாது, சீட்டாட்டம் முடிவுக்கு வரும்வரை அந்த அறையின் கதவு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பதே நிபந்தனை,
அந்த மூவருக்கும் பெயர்கள் இருந்த போதும் அவர்கள் 3, 6, 9 என அவர்களின் விருப்பமான எண்களால் அழைக்கப்படவே விரும்பினர், மூன்றாம் எண் உள்ள அந்த ஆள் இருபத்தியோறு வயது நிரம்பியிருந்தான், அதிகம் குடித்து அலையும் அவன் நான்குமுறை காதல் தோல்வியடைந்திருந்தான், ஆறாம் எண் உள்ளவன் ஒரு வணிகன், அவன் மனைவி அழகானவள், அவளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டான், அவளது அழகு நெருப்பைப் போல காண்பவரைப் பற்றிக் கொண்டுவிடுகிறது என்று சந்தேகம் கொண்டவானயிருந்தான், ஒன்பதாம் எண் உள்ளவன் நாற்பது வயதான ஒரு உயர் அதிகாரி அவன் மற்றவர்களைத் தோற்கடிப்பதில் ஏற்படும் சந்தோஷத்திற்காகவே சீட்டில் ஆர்வம் கொண்டிருந்தான், இவர்கள் மூவரும் ஒன்பதாம் எண் உள்ளவனின் ரகசியத் தோழியான வினி என்பவள் வீட்டினைச் சீட்டு விளையாடத் தேர்வு செய்தார்கள்,
சீட்டாட்டத்தில் அவர்கள் மாறிமாறி ஜெயிப்பதும் தோற்பதுமாக இருந்தார்கள், ஒரு ஆள் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றிபெற முடியாதபடி விளையாட்டு நீண்டு கொண்டேயிருந்த்து, இந்த விளையாட்டு அவர்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் பற்றிய சில யூகங்களே நிஜத்தை விட முக்கியமானது, அவர்கள் இப்படி எல்லாம் நினைத்திருக்க்கூடும் என்பதே இதன் புதிர்தன்மை,
யூகம் 1 : சீட்டில் ஆறர்ம் எண் கொண்டவன் தோற்றுப்போய்விட்டால் அதற்கு ஈடாக அவன் மனைவியை பறித்துக் கொண்டு அவளுடன் சல்லாபம் செய்யலாம் என்பதைப் பற்றி கற்பனை செய்து கொண்டான், அது சீட்டு விளையாட்டினை விட சுவாரஸ்யமாக இருப்பதாக நினைத்தான் 3ம் எண் உள்ளவன்
யூகம் 2 : 3ம் எண் உள்ளவன் இன்று தோற்றுப்போய் விட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொண்டுவிடுவான், அவனது சாவின் பிறகு அவனது பழைய காதலிகளை சந்தித்து அவனது கடைசி நிமிசம் பற்றிச் சொல்லி அவர்களோடு நெருங்கிப் பழக அதிக சாத்தியமிருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ந்தான் 6ம் எண் மனிதன்
யூகம் 3  :ஒன்பதாம் எண் உள்ளவன் தன் எதிரில் ஆடும் நபர்கள் திடீரெனப் பெண்களாக மாறிவிட்டால் அவர்களுடன் எப்படி உறவு கொள்ளலாம் என்று கற்பனை செய்தான்
யூகம் 4   : தனது தோல்விக்குக் காரணமான ஒன்பதாம் எண் உள்ளவனை கொல்வதற்கு என்ன ஆயுதங்களை தேர்வு செய்வது எப்படிக் கொல்வது என்று நினைத்தபடியே மௌனமாக விளையாடினான் ஆறாம் எண்
யூகம் 5 : இந்தச் சீட்டுவிளையாட்டு ஒரு சதித்திட்ட்ம் இதைத் தீட்டியவள் 9ம் எண்ணின் கள்ளக்காதலி அவள் மூவரையும ஒழிப்பதற்காக இதை ஏற்பாடு செய்திருக்கிறாள்,  இந்தச் சதி அவள் நினைத்த்து போல நடக்க கூடாது, ஆகவே ஆட்ட முடிவில் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்தான்3 எண் உள்ளவன்
யூகம் 6   :கையில் உள்ள சீட்டுக்ள் யாவும் உயிருள்ள பறவைகள் போல பறந்துவிடந்து துடிக்கின்றன, அதைக் கட்டுபடுத்தி வைப்பது சிரம்மானது என்று திகைத்தபடியே சீட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் ஆறு எண் உள்ளவன்
யூகம் 7  :இரவும் பகலும் மாறிக் கொண்டேயிருக்கிறது, கடிகாரம் இல்லாமல் சீட்டின் உதவியாலே காலத்தை அளக்கமுடிகிறது, இதுவரை எவ்வளவு சீட்டுகள் இறஙகியிருக்கின்ற்ன  எவ்வளவு ஆட்ட்ம் முடிந்திருக்கிறது என்பதை வைத்து நாட்களைக் கணக்கிடுவது ஒரு விசித்திரம். என்றான் 3ம் எண் உள்ளவ்ன்
யூகம் 8  :ஒரு சீட்டினை ஒருவன் கையில் இருந்து கிழே போடுவதற்கும் மற்றவன் அதை எடுப்பதற்கும் இடையில் எண்ணிக்கையற்ற  உலக நிகழ்வுகள் நடக்கின்றன, பலர் பிறக்கிறார்கள் பலர் சாகிறார்கள் பலர் புணர்கிறார்கள் பலர் முத்த்மிட்டுக் கொள்கிறார்கள் பல கொலைகள் நடக்கின்றன பலர் காதலிக்க துவஙகுகிறார்கள் பலர் துரோகம் செய்கிறார்கள், பலர் செய்வதற்கு எதுவும் இல்லாமல் சகமனிதனை துன்புறுத்துகிறார்கள், இதற்கு இடையில் தான் சீட்டாட்டம் நடக்கிறது என்றான 9ம் எண் உள்ளவன
யூகம் 9  :ஒரு மலர் உதிர்வதை அல்லது பூப்பதைப் போல ஒரு விந்தையே ஒரு சீட்டை எடுப்பது, சீட்டு விளையாட்டு ஒரு விசித்திரத் தியானம், அங்கே நமது எண்ணங்கள் ஒடுங்கிவிடுகின்றன நாம் கரைந்து போய்விடுகிறோம் கண்களும் கைகளும் மட்டுமே செயல்படுகின்றன என்றான் ஆறாம் எண்
யூகம் 10 : சீட்டுவிளையாட்டு என்பது நமது வெறுப்பு. ஆசை மற்றும் கோபத்தை அளவிட உதவும் ஒரு கருவி. சீட்டு ஆடுகின்றவர்கள் தன்னைப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள், சீட்டுவிளையாட்டில் தோல்வியை இயல்பாக ஒருவராலும் எடுத்துக் கொள்ள முடியாது, புத்தன் சீட்டு ஆடினாலும் தோற்பதை கண்டு கோபமடைந்தே தீருவான் என்றாம் 3ம் எண் ஆள்
யூகம் 11  :சீட்டுவிளையாட்டில் மனம் எப்போதுமே இல்லாத விசயங்களைக் கற்பனை செய்கிறது, நடக்காத சாத்தியங்களை நிறைவேற்றி பார்க்கிறது, சீட்டு ஆடுபவர்களுக்கு உலகம் ஒரு இலந்தைபழம் அளவு சுருங்கிப்போய்விடுகிறது என்றான் 9ம் எண் ஆள்
யூகம் 12  :ஒருவர் கையில் உள்ள சீட்டும் மற்றவர் கையில் உள்ள சீட்டும் விநோதமான உறவு கொண்டிருக்கின்றன, அவை மனிதர்களின் வழியே தன் ஒன்ற சேருதலையும் பிரிவையும் ஏற்படுத்திக் கொள்கின்றன என்றான் 6ம் எண் மனிதன்
யூகம் 13  :எல்லாச் சீட்டுகளும் ஒன்று போலக் காணப்பட்டாலும் அதன் மதிப்பும் சேர்கையும் ஒன்றுபோல இருப்பதில்லை ஆகவே உலகை கையில் எடுத்து விளையாடுவதன் சிறிய வடிவமே சீட்டாட்டம், ஆகவே சீட்டாடி வெல்ல தெரிந்தவன் உலகை எளிதாக புரிந்து கொண்டுவிடுவான் என்றான் 9ம் எண்மனிதன்
யூகம் 14  :ஒவ்வொரு முறை சீட்டில் தோற்கும் போது காம்ம் பொஙகுகிறது, வென்றவனும் காமத்தை பற்றியே நினைக்கிறான், ஆகவே சீட்டு விளையாட்டின் வெற்றியும் தோல்வியும காமத்தூண்டல்களே, எல்லா விளையாட்டின் வெற்றியும் புணர்ச்சியால் மட்டுமே சாந்தியடைகிறது மனிதன் தனது ஒரே புகலிடமாக பாலின்பத்தையே கொண்டிருக்கிறான் என்றான் 3ம் எண் உள்ளவன்
யூகம் 15  :சீட்டுவிளையாட்டின் போது உருவாகும் மௌனம் தூக்கின் முன்னால் நிற்கும் மௌனம் போல அடர்த்தியானது, அது தொடர்ந்து மனதை வன்முறையை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறது, சீட்டு மனிதன் கண்டுபிடித்த ரகசியமான ஆயுத்ம் என்று நினைத்தான் 6ம் எண் கொண்டவன்
யூகம் 16  :ஏதாவது ஒரு நிமிசம் 3வரும் ஒரே சீட்டைத் தேர்வு செய்வதும் 3வரும் ஒரே சீட்டை கிழே போடுவதும் நடக்கிறது  அப்போது ஒரே ஆள் தான் மூன்று தோற்றத்தில் விளையாடுவது போல உள்ளது என்றான் 9ம் ஆள்.  சீட்டாட்டம் உச்சமடையும் போது நிர்வாணமாக இருப்பது போலேவே தோன்றுகிறது, அறைக்கு வெளியே உள்ள உலகின் சிறு சப்தம் கூட பேரோசையாகி விடுகிறது, ஆகவே சீட்டு விளையாட்டு உலகின் நுண்மையை மனம் அறியும் தருணம் என்றான் 6ம் எண் மனிதன்
யூகம் 17  :சீட்டில் வைக்கப் பணம் இல்லாத போது வீட்டின் அருகாமையில் உள்ள மரங்கள் தெருநாய்கள் காட்டில் உள்ள மிருகங்கள் அருவி ஆறு மலை ஆகாசம் நட்சத்திரம் சூரியன் சந்திரன் என எதையும் பந்தயப்பொருளாக வைத்துச் சூதாடலாம், அது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே, அதை எவரும் ஆட்சேபணை செய்ய முடியாது. சீட்டுவிளையாட்டு   கணிதத்தின் உன்னத நிலை அதை விளையாடி அனுபவிக்கிறோம் என்றான் 9ம் எண் உள்ளவன்
யூகம் 18  :கள்ளத்தனத்தை கற்றுக் கொள்வதற்கு எளிமையான பயிற்சியே சூதாட்டம், சீட்டு ஆடும் மேஜையில் வைக்கபடும் உணவு பானகம் இரண்டும் ருசியிழந்துவிடுகின்றன, சூது தேனையும் கசக்க செய்யக்கூடியது என்றான் 3ம் எண்காரன்
யூகம் 19  :விதியை நேர்கொள்ள விரும்பினால் சூதாடி பார்க்கலாம்,   எல்லா சீட்டுவிளையாட்டிலும் கண்ணுக்கு தெரியாமல் விதியும் சேர்ந்து உட்கார்ந்தே ஆடுகிறது, அதன் பரிகாசக்குரலை பல நேரங்களில் நாம் கேட்க முடியும் என்றான் 6ம் எண்
யூகம் 20  :தோற்றுத்திரும்புகின்றவன் அடையும் வலி சொல்லற்றது, அதை புரிந்து கொள்ள சூதாடினால் மட்டுமே முடியும் ஆகவே சூதாட்டம் என்பது வலியை விரும்பி ஏற்றுக் கொள்வது என்றான் 9ம் எண்
இப்படி அவர்கள் நினைத்த யூகங்களைத் தாண்டி அவர்கள் விளையாடிக் கொண்டேயிருந்தார்க்ள் 8365 நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் விளையாடிய போதும் சீட்டாட்டம் முடிவடையவேயில்லை, ஒரு நாள் சமையல்காரன் அந்த அறைகதவை திற்ந்து பார்த்த உள்ள மூன்று காலி நாற்காலிகள் மட்டுமே இருந்தன, அதன் முன்னே உள்ள மேஜையில் சீட்டுகள் சிதறியிருந்தன, அவர்களை காணவில்லை, எங்கே போனார்கள் யார் ஜெயித்தார்கள் எப்போது வெளியேறி போனார்கள் என்பது இன்றுவரை மர்ம்மாக இருக்கிறது, சீட்டுவிளையாட்டினைப் போலவே அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கும் முடிவில்லாத சாத்தியங்கங்கள் இருக்கின்றன, அதனால் அவர்களை யாரும் தேடவேயில்லை

Post Comment

Friday, June 14, 2013

'தீயா வேலை செய்யணும் குமாரு'-கலகலப்பு பார்ட்#2..!

                                            

'கலகலப்பு' கூட்டணியான சுந்தர் சி,சந்தானம்,யூடிவி மோஷன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் 'தீயா வேலை செய்யணும் குமாரு'.நடிக நடிகையர் யார் என்று பார்த்தால் சித்தார்த், ஹன்சிகா,சந்தானம்,பாஸ்கி,மனோபாலா,டெல்லிகணேஷ், தேவதர்ஷினி என்று பெரிய லிஸ்டே நீளும்.பெயரை பார்த்தபோதே காமெடி படமாக தான் இருக்கும் என்று தெரிந்திருந்தாலும்,சுந்தர் சி'க்கு காமெடி கைவந்த கலை என்பதால் படம் சற்றே எதிர்பார்ப்பை கூட்டிவிட்டிருந்தது.சந்தானமும் அதற்கு ஒரு காரணம்.

பாட்டன்,பூட்டன்,அப்பா அம்மா,அக்காமார்கள் என்று நாயகன் சித்தார்த்தின் குடும்பமே லவ்வோ லவ்வுன்னு லவ்வி கல்யாணம் செய்துகொண்ட குடும்பம்.ஏரியாவிலேயே லவ்வுக்கென்று ஒரு ட்ரேட் மார்க்குடன் வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்த சித்தார்த்துக்கு ஏனோ லவ் என்றாலே பிடிப்பதில்லை.காரணம் சில ப்ளாஷ்பேக்'கள்.இப்பிடியே இருந்திடாதேடா, யாரையாவது லவ் பண்ணுடான்னு வீட்டிலும் சரி,வேலை செய்யும் ஐ.டி ஆபீசிலும் சரி ஏகப்பட்ட ஆட்வைஸ்கள்.ஆனால் சித்தார்த்துக்கு பொண்ணும் அமையல,லவ் பண்ணவும் பிடிக்கல..ஏன்,எப்பிடி லவ் பண்றதுன்னு கூட தெரியாம சொதப்பிகிட்டிருக்கார்.அந்த நேரத்தில் தான் ஆபீசுக்கு புதுசா ஒரு பொண்ணு வருது.ஆமா,அது நீங்க நெனைக்கிற மாதிரியே நம்ம ஹன்சிகா தான்.

அவங்கள பாத்தவுடனேயே நம்மாளுக்கு பட்டர்ப்ளை பறக்குதாம்..மெல்லிய காத்து மெதுவா வீசுதாம்..அதாங்க,லவ்வு ஸ்டார்ட் ஆயிருச்சு.ஆனா அங்க தான் ஒரு பிரச்சனை,ஆபீசிலயே ஒரு ஜிம்& ஹாண்ட்சம் பாய் ஹான்சிகாவ பிக்கப் பண்ணிக்க முயற்சிக்கிறான்.ஒரு வழியும் தெரியாத சித்தார்த்க்கு அத்தான் பாஸ்கி ஐடியா குடுக்கிறார்,ஊர்ல 'நோக்கியா' அப்பிடின்னு ஒரு லவ் குரு இருக்கார்.அவர்கிட்ட போனா எல்லாம் சரியாகிடும் அப்பிடின்னு.அந்த லவ் குரு வேற யாருமில்லைங்க..நம்ம சந்தானமே தான்.அந்த பாய்ண்ட்ல இருந்து ஆரம்பிக்கும் லவ் கோர்ஸ் என்னாகிறது,எப்படி ஹான்சிகாவை சித்தார்த் கைப்பிடிக்கிறார் என்பதை மிகவும் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் சுந்தர் சி.

படம் நீளத்துக்கும் காமெடி பரவிக்கிடக்கிறது.ஒவ்வொரு சீனிலும் சிரிப்பதற்கு ஏதாவது ஒரு மேட்டர் இருக்கும்.அதனால் படம் தொடங்கும்போது சிரிப்பதற்காக திறந்த வாய் படத்தின் இறுதி சீன் வரைக்கும் மூடவேயில்லை. சந்தானத்துக்கு 'ஓகேஓகே'இன்ரோ மாதிரி பைக்கில் இன்ரோ கொடுத்திருக்கிறார்கள்.ஹீரோக்களுக்கே இல்லாத அமர்க்களம் இப்போதெல்லாம் சந்தானத்துக்கு தான் கிடைக்கிறது.தியேட்டரில் விசில் பறக்கிறது.காஸ்டியூம்ஸ் கூட சித்தார்த்தை விட சந்தானத்துக்கு தான் எடுப்பாக கொடுத்திருக்கிறார்கள்.அம்மணி குஷ்பு தான் காஸ்டியூம்ஸ்க்கு பொறுப்பு.

'எங்கேயும் எப்போதும்' சத்யா தான் இசை.சுந்தர் சி தனது காமெடி பலத்தை நம்பி இறங்குவதனாலோ என்னமோ,இசைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஓரிரு பாடல்கள் ரசிக்கலாம்.'அழகென்றால் அவள் தானா சஞ்சனா..'ஹிட் ஆகும் வாய்ப்புகள் பிரகாசம்.இசை ஓரளவுக்கு சோடை போனாலும்,பாடல் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.இரண்டு பாடல்கள் ஜப்பானில் எடுத்திருக்கிறார்கள்,பாடல்கள் அத்தனையையும் பா.விஜய் தான் எழுதியிருக்கிறார்.

                                                  Theeya Velai Seiyyanum Kumaru

கலகலப்பில் அங்காங்க்கே சீரியலாக மரண காமெடி இருக்கும்.ஆனால் இங்கு படம் முழுவதும் லேசான காமெடி வந்திட்டே இருக்கும்.திரைக்கதை வசனத்தில் 'சூதுகவ்வும்' நலன் குமாரசாமி உதவியிருக்கிறார்.படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் செல்வதற்க்கு இதுவும் ஒரு காரனமாய் இருந்திருக்கலாம்.நீ.பொ.வ'வில் சந்தானம் ஜோடியாக வரும் குண்டு பொண்ணு இதிலும் வருகிறார்.ஆபீசில் சித்தார்த் நண்பராக வருபவர் படத்தின் ஆரம்பத்தில் பட்டைகிளப்புகிறார்.கலகலப்பில் வரும் பாட்ஷா அடியாள் முதல்கொண்டு பலர் இதிலும் பிரசன்னம்.சமந்தாவும் விஷாலும் ஒரு காட்சிக்கு வந்துவிட்டு செல்கிறார்கள்.

படத்துக்கு முக்கிய பலம் சந்தானம் தான்.ஹன்சிகா அதே வெள்ளை தக்காளி,என்ன பாடல் காட்சிகளில் நன்றாக இடுப்புக்கு கீழே கவர்ச்சி காட்ட வைத்திருக்கிறார் சுந்தர் சி.தியேட்டரில் முன் இருக்கைகளில் அமர்ந்து பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.மொத்தத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு ஒரு முழு நீள காமெடி கலாட்டா..!கட்டாயம் பார்த்து ரசிக்கலாம்.என்னுடைய மார்க் 65/100.

Post Comment

Monday, June 3, 2013

'சித்தார்த்- சமந்தா'காதலும் நம்மவர்களின் சோகமும்..!





பசங்களுக்கு சமந்தா மீதும்,பொண்ணுகளுக்கு சித்தார்த் மீதும் அளவு கடந்த ஒருதலைக்காதல் இருந்துவந்தது.அதானால் தான் இந்த சித்தார்த்-சமந்தா சேர்க்கை ஊரில் அத்தனை இளசுகள் மனசை உலுக்கியிருந்தது.சமந்தா ஒரு படி மேலே போய்,கல்யாணம் கட்டிய கனவான்களையே பேஸ்புக்கில் புலம்ப விட்டு வீட்டுக்காரம்மா கையால் உதை வாங்கி கொடுத்தார்.(இப்போதெல்லாம் வீட்டுக்காரம்மாக்கள் கையால் அடிப்பதே காலால் உதைப்பது போல் இருப்பதாக 'கட்டிளம்'கணவர்மார்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்..!)அந்தளவுக்கு சமந்தா மீது உசிராக இருந்தனர் அனைவரும்.அதைவிட முக்கிய காரணம்,சமந்தா குதிரை மீது ஏறிக்கொண்டால்,சில வருடங்கள் பிரச்சனையில்லாமல் சவாரி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தமை தான்.எப்படியும் திரிஷா,ஜோதிகா விட்டுச்சென்ற இடத்தை குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களுக்காவது சமந்தா நிலைத்து நின்று ஜொள்ளுவதற்கு துணைபுரிவார் என்கின்ற நம்பிக்கை.

எப்போது சித்தார்த் கூட சமந்தா காதல் என்று செய்தி வந்ததோ,அன்று புகையத்தொடங்கிய பலரின் வயிறு,முடிந்த விஜய் அவார்ட்ஸில் பொங்கி புஸ்வாணமாகி போய்விட்டது.சித்தார்த் ஏற்கனவே திருமணம் முடித்தவன்-விவாகரத்தானவன் என்று முடிந்தவரை காதலை பிரிக்க ஆளுக்காள் முயன்றும் அது சரிவராமல் போகவே சமந்தா ரசிகர் மன்றம் மெது மெதுவாக குலைய தொடங்கியது!எப்படி சூர்யா-ஜோதிகா ஜோடி அச்சமயம் சூட்டை கிளப்பியதோ,அதனைவிட மேலாக இந்த ஜோடி பரபரப்பை கிளறியிருக்கிறது.அண்மையில் சித்தார்த்-சமந்தா ஜோடியாய் நடித்த 'ஜபர்தஸ்த்' திரைப்படம் பெரு வெற்றி பெற,அந்த ரொமான்ஸை நிஜத்திலும் தொடர்வதற்காக தங்கள் காதல் செய்தியை பப்ளிக்கில் வெளியிட்டிருக்கின்றனர்.


விஜய் அவார்ட்ஸ் ஒளிபரப்பும் போது,சித்தார்த்-சமந்தா வரும் சமயம் நான் டிவி பார்க்காமல்  இருந்துவிட்டேன்.காரணம் நானும் ஒரு சமந்தாவின் தீவிர வெறியன்.கிளம்பிவந்து பேஸ்புக்கில் கடுப்பை கொட்டியிருந்தேன்: 

'பசங்களோட கனவுக்கன்னி சமந்தா போயிரிச்சு ஐ ஜாலி'ன்னு பொண்ணுக இப்போ செம ஹாப்பியா இருப்பாங்க.ஆனால் பசங்க சித்தார்த் மேட்டர் ஓவர்னு சாந்தமா இருக்காங்களா பாருங்க?இவளுக தான் ரெண்டாவது மூணாவதாவும் போக தயாரா இருக்காளுகளே!சமந்தா மாதிரி ஒரு பொண்ணும்,இதே மாதிரி ஒரு மேடையும்,சித்தார்த் மாதிரி பர்சனாலிட்டியும் ஒருதடவை தந்து பாருங்கள்..அப்போ தெரியும் நம்ம திறமை!வெறித்தனமா பண்ணுவம்லே வெறித்தனமா..!ஆல்ரெடி பிரிப்பேர் பண்ணி வைச்சிருக்கம்..நாமளும் சொல்லுவம்லே!

'என்கிட்ட எதும்மா உன்னய ஹெவியா லைக் பண்ண வைச்சது?முத்துப்போன்ற எனது சிரிப்பா?அல்லது முரட்டு தோள் உடம்பா?இல்ல நாட்டியமாடும் என்னோட நடையா..இல்லை நவரசத்தை காட்டும் என்னோட முகமா...பாக்கட்ல இருக்கிற என்னோட பணமா....?சொல்லும்மா சொல்லு! கடத்திட்டு வந்து மேடையில வைச்சு இப்பிடியெல்லாம் லவ் டார்ச்சர் கொடுக்கக்கூடாது..!நீ இப்பிடி வெறித்தனமா என்ன லவ் பண்ணும்போது உன்ன விட்டு எங்கம்மா போகப்போறன் என் செல்லமே...!!எங்க மாமா மேல ஒருதடவ உப்புமூட்டை ஏறு?'சியேர்ஸ் கைஸ்...சமந்தா இல்லைனா சமத்தா இன்னொன்னு வரும்லே!

சரி அதிருக்கட்டும்.நேற்று தான் அந்த காணொளி பார்க்க கிடைத்தது யூடியூப்பில். நிஜமாவே சொக்கிவிட்டேன்.ஆம்,சித்தார்த்தின் பர்போமன்ஸ் கலக்கல்! தான் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என்று நிரூபித்துவிட்டார் சித்தார்த்.ப்ரியா ஆனந்த்,ஸ்ருதி என்ன,எந்த பெண்ணுக்குத்தான் இத்தகைய 'ஸ்வீட் பாய்'யை பிடிக்காது! என்னம்மா பாடினான்யா!'பாடாத பாட்டெல்லாம் பாடவந்தாள்...காணாத கண்களை கண்களை காண வந்தாள்...என்று ஆரம்பித்து ஏராளமான காதல் பாடல்களை கலந்துகட்டி நிஜமாகவே ஒரு பாடகர் பாடுவது போல அவ்வளவு அழகாக,சமந்தா மேல் இருந்த 'பீல்'லை கொட்டி உணர்ச்சி பொங்க பாடுவதை பார்த்துக்கொண்டிருந்த அந்த் சந்தர்ப்பத்திலேயே என்னை சமந்தாவுக்கான 'காம்பெட்டிஸன்'னிலிருந்து ஓரம் கட்டியிருந்தார்..இல்லை இல்லை நானாக ஒதுங்கிக்கொண்டேன்!திரையில் ஒரு பாதியில் சித்தார்த் பாடுவதையும்,மறு பாதியில் சமந்தா வெட்கப்படுவதையும் காட்டுகையில் ஏற்பட்ட உணர்ச்சிகளை விபரிக்க முடியாது..! அது கோபமா..இல்லை சந்தோஷமா..இல்லை கடுப்பா..இல்லை உற்சாகமா..இல்லை கவலையா..அழுகையா... இவை அனைத்தையும் கலந்தடித்த பீலிங் அது!

ஏன் இத்தனை பெண்கள் சித்தார்த் பின்னால் இருக்கிறார்கள் என்பதையும்,ஏன் சமந்தா இத்தனை இளசுகள் மனதில் குடியிருக்கிரார் என்பதையும் அந்த ஒரு பத்து நிமிட காணொளி தெளிவாக விளக்கிவிடும்!தனுஷ்,த்ரிஷா என்று வந்திருந்த அனைவரும் உருகிக்கொண்டிருந்தனர்..கமலோ,அடடா இவன் என்னைவிட காதல் மன்னனாக இருப்பானோ என்று மனதுக்குள் நினைத்திருப்பார்.இல்லை ஒரு படத்தில் சமந்தாவை ஒப்பந்தம் செய்து ஒரு முத்தம் கொடுப்பதை இழந்துவிட்டேனே என்று கவலையில் வாடியிருப்பார்!

இறுதியில் ஒரு சிறிய இடைவெளி விட்டுவிட்டு,கும்கி பட பாடல் 'ஐயையயோ....ஆனந்தமே....' என்று உச்ச ஸ்தாயியில் ஆரம்பிக்கும் போது நானே உருகிவிடுகிறேன்..பாவம் இந்த பெண்கள் எம்மாத்திரம்!உங்களுடன் போட்டியிட முடியாது சித்தார்த்..நீங்கள் நிஜமாலுமே ஹீரோ தான்.சமந்தா எனும் அழகு தேவதையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்..இந்த திருமண வாழ்க்கையையாவது அழகாக கொண்டு நடாத்துங்கள்..சமந்தாவுக்கு எத்தனை உள்ளங்களில் எத்தனை விதங்களில் கனவு கோட்டைகளை,கனவு வாழ்க்கையை உருவாக்கி பாத்திருக்கிறோம்..அதைனை விட சிறப்பான ஒன்றை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்..!



இரு விழி உனது..இமைகளும் உனது...
கனவுகள் மட்டும்...எனதே எனது....!!

உனது அழகிய வதனமும்,உன் கண்களில் காட்டும் அத்தனை அசைவுகளுக்கும்,உதட்டில் நீ சுழிக்கும் அத்தனை சுழிப்புகளுக்கும்,உன் முகத்தில் அந்த வெட்கமே வந்து வெட்கப்படுமே..அந்த வெட்கங்களுக்கும்...சேலையில் நீ வருகையில் அடித்தள்ளும் அந்த  அழக்குக்கும் நான் அடிமை..!உன்னை கொண்டாடிய பெருமை போதும் எனக்கு..!நீ சமத்தா இருக்கணும் சமந்து குட்டி... 

நெஞ்சை பூபோல் கொய்தவளே.... 
என்னை ஏதோ செய்தவளே...!
உன்னை உருகி உருகி காதலித்த அத்தனை உள்ளங்கள் சார்பில்,

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...