Thursday, May 30, 2013

"குட்டிப்புலி"-சசிக்குமாருக்கு முதல் தோல்வி...?


            


சிங்கம் பார்ட் 2 தொலைக்காட்சிகளில் கொடுக்கும் அலப்பரை விளம்பரங்களுக்கு சற்றும் குறையாமல் சசிக்குமாரின் 'குட்டிப்புலி'க்கும் விளம்பரங்கள் சீறிப்பாய்ந்தன.காரணம் சன் பிக்சர்ஸ்.படம் வெளிவரமுன்னதாகவே அவர்கள் வெளியிடும் ஏராளமான முன்னோட்ட காட்சிகளை வைத்தே படத்தின் கதை இது தான்,படத்தின் சுவாரசியங்கள் இவை தான் என்று பட்டியல்போட்டு காட்டுவது சன் பிக்சர்ஸ்க்கு கைவந்த கலை!'என் மகன் சிங்கம் மாதிரி..ஆனா பெயர் தான் புலி'அப்பிடின்னு சரண்யா பொன்வண்னன் வேறு மணிக்கொருமுறை உருவேற்றிக்கொண்டிருந்தார்.


சுப்பிரமணியபுரம்-நாடோடிகள்-போராளி-சுந்தரபாண்டியன்னு வெற்றிகளை மட்டுமே தந்துகொண்டிருந்த சசிக்குமாரின் ஐந்தாவது தமிழ்படம் குட்டிப்புலி.இயக்கம் அறிமுக இயக்குனர் முத்தையா.இவர் இயக்குனர் பூபதி பாண்டியனின் அசிஸ்டண்ட்டாக கொஞ்சகாலம் வேலைபார்த்தவர்.இசை ஜிப்ரான்.ஏற்கனவே 'வாகை சூடவா' மற்றும் 'வத்திக்குச்சி'யில் தன்னை நிரூபித்தவர்.'சர சர சாரைக்காத்து வீசும் போது' புகழ் ஜிப்ரான்.ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.'வில்லேஜ் தியேட்டர்ஸ்' தயாரிக்க,சன் பிக்சர்ஸ் வழங்க,ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருக்கிறது.

தனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் முத்தையா தெருவில் பார்த்து வளர்ந்த ஒரு உண்மை கதாபாத்திரத்தை சசிக்குமார் வாயிலாக திரையில் காட்டியிருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் இயக்குனர் முத்தையா கூறியிருந்தார்.சரி படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.



சண்டியருக்கு மகனாய் பிறந்த சசிக்குமார் தானும் சண்டியராக ஊரில் வலம்வருகிறார்.பிறந்து சின்னவயதிலேயே தந்தை இறந்துவிட தாய் சரண்யா பொன்வண்ணன் தான் பாசத்துடன் வளர்த்துவருகிறார்.மகனும் அம்மா மீது நல்ல பாசம்.சண்டித்தனத்தால் அங்காங்கே விதைத்து வைத்திருந்த விதை எப்போது வெட்ட வரும் என்கின்ற பயத்தால்,திருமணமே செய்யக்கூடாதென்று பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடக்கிறார். இப்படியான தருணத்தில் வரும் வம்புகளும்-சண்டைகளும்-பழிவாங்கல்களுக்கும் மத்தியில் லக்ஷ்மிமேனன் மீது வரும் காதலும்-அம்மா பாசமும் என்று படம் செல்கிறது.


சன் பிக்சர்ஸ் கொடுத்த அலப்பரை,ஒரே போர்முலாவுக்குள் சுற்றும் சசிக்குமார் என்று இந்தப்படம் மீது இருந்த பயத்தை படம் நிரூபித்திருக்கிறது.சசிக்குமாரின் முதல் நாங்கு படங்களும் ஒரே மாதிரியானவையாக இருந்தாலும் அதற்குள் ஒரு சுவாரசியம், விறுவிறுப்பு,காட்சிகளின் ஒருங்கிணைப்பு படங்களை வெற்றிபெற வைத்தன.குட்டிப்புலியில் அவை எல்லாமே மிஸ்சிங்.சசிக்குமார், சரண்யா, லக்ஷ்மிமேனன்,ஆடுகளம் முருகதாஸின் நடிப்பு அருமை.ஆனால் அதனை உரியமுறையில் பயன்படுத்திக்க அறிமுக இயக்குனர் தவறிவிட்டார்.

தாட்டியரே தாட்டியரே என்று சசிக்குமார் அறிமுகமாகும் காட்சியிலும் சரி,'பெருசாட்டம் பாத்தாய்..சிறுசாட்டம் பாத்தாய்..புலியாட்டம் பாக்றியா' என்று பஞ்ச் அடித்து சிலம்பில் ஆடும்போதும்,அடடான்னு நம்மளுக்குள் ரத்தம் பாயும் வேகத்தை அடுத்தடுத்த காட்சிகளில் கட்டாயமாக சிதைத்து விட்டிருக்கிறார்கள்.இடையில் ஒரு காபி குடித்துவிட்டு வரலாம்னு பலதடவை தோன்றவைத்த முதல் சசி படம் இது தான்.அந்தளவு இழுவை.படம் முழுவதுமாய் 'கனா காணும் காலங்கள்' செட் ஒண்ணு வந்து படத்துக்கு இன்னமும் வெறுத்தனமாய் இழுவை வைத்துவிட்டு போகிறார்கள்.காதல்,காதல் ஆட்வைஸ்,காமெடி என்கின்ற பெயரில் அவர்கள் பண்ணும் அலம்பல் தாங்கமுடியவில்லை.

இடைவேளைக்கு முன்பு சாகும்படி வெட்டுப்பட்டு விழும் சசிக்குமார் இரண்டாம்பாதியில் உடனடியாகவே 'ரிக்கவர்' ஆகி 'பைட்' பண்ணுகிறார். முதல் பாதி தான் கொஞ்சம் ஆவரேஜ்,இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திவிடுவார்கள்(விடுங்கடான்னு வேண்டிக்கிட்டேன்)என்கின்ற எதிர்பார்ப்பை, இதனைவிட முதல் பாதி பரவாயில்லை என்கின்ற அளவுக்கு இரண்டாம்பாதி மழுங்கடித்துவிடுகிறது.இறுதியில் ஒரு சின்ன டுவிஸ்ட் வைத்து 'பெண்மைக்கு அழகு வீரம்' அப்பிடின்னு முடித்திருக்கிறார்கள். இதைவிட சொல்ல வேறேதுமில்லை படத்தில்.!So Sad...

படத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள்.வைரமுத்துவும்,முனைவர் முத்துக்குமாரும் எழுதியிருக்கிறார்கள்.பத்மலதா-சக்ரவர்த்தி இணைந்து பாடிய 'அருவாக்காரன்' பாடலும்,கோல்ட் தேவராஜ் பாடிய 'காத்து காத்து' மற்றும்,'தாட்டியரே தாட்டியரே' பாடல்களும் லேசாக மனதில் நிக்கின்றன.இவற்றை தவிர்த்து அங்காங்கே பழைய பாடல்களையும்,'அக்காமக அக்காமக' ரீமிக்ஸ் பாடலையும் பயன்படுத்தி ஒருமாதிரியாக ஒப்பேற்றியிருக்கிறார்கள்.இசை வாகை சூடவா 'ஜிப்ரானா' என்று கேட்கவைக்கிறார்.இயக்குனர் புதிதாய் இருக்கையில்,ஒரு நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கலாம்! இடையிடையே 'ஆடுகளம்' படத்தின் பின்னணி இசையை காப்பி பண்ணியிருக்காரோ என்றும் எண்ணவைக்கிறது!

சண்டிக்கட்டில் திரியும் சசிக்குமார் ஒரு சமயம் பான்ட்-சர்ட்-கூலிங் க்ளாஸ்-ஷூ சகிதமாய் கெட் அப் கொடுக்கும்போது அம்மாவிடம் கேட்கிறார் 'ஏம்மா,மக்கள் இதை ஏத்துக்கொள்வாங்களா?" அப்பிடின்னு.ஏன் இல்லை!! எந்த கெட் அப்'பாக இருந்தாலும் சசிக்குமாரின் பலமான கதையும் அவர் நடிப்பும் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் தான்!கிராமத்து கதைகளும்,கிராமத்து 'கெட் அப்'புகளும்,கிராமத்து குத்தும், தாடி, மீசை,அரிவா,சாதி போன்றவற்றை விட்டு சசிக்குமார் வெளியில் வரவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.இனியாவது சுதாகரித்துக்கொண்டால் ஒரு நல்ல நடிகன்-இயக்குனரை தமிழ் சினிமா இழக்கவேண்டி ஏற்படாது.

குட்டிப்புலி-சசிக்குமார் ரசிகர்கள் வேண்டுமானால் பார்க்கலாம்.அதைவிட பெஸ்ட் ஆப்சன்,சசிக்குமாரின் பழைய நான்கு பட டிவிடிகளை வாங்கி பார்ப்பது..!என்னோட மார்க் 55/100.

Post Comment

Wednesday, May 15, 2013

"சூது கவ்வும்"- விமர்சனம் என்பார்வையில்...!

   grey சூது கவ்வும் [2013]

சூது கவ்வும்.படம் வெளிவந்தது முதலே எங்கு பார்த்தாலும் சூப்பர்,கலக்கல் என்று தான் விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.விமர்சனங்களின் 'ஒன் லைன்' மட்டும் வாசித்தவண்ணமிருந்தேன்,காரணம் எப்படியாவது அதற்குமுதல் படத்தை பார்த்துவிடவேண்டும் என்கின்ற ஆவல்.படம் பார்த்து முடிந்த பின்னாடி என்னுடைய 'ஒன் லைன்'விமர்சனம் கூட அதே தான்..'கலக்கல்,தாறு மாறு'..!காரணம்?


+விஜய் சேதுபதியின் நடிப்பு.அவர் முக ராசி,தாடி என்று அனைத்துமே அந்த தாஸ் கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது.தாடி தான் சேதுபதிக்கு பெரிய ப்ளஸ் போலும்!பீட்ஸா,நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படங்களை விட இப்படத்தில் நன்றாக நடித்திருப்பது தெரிகிறது.எந்த சினிமா விழாவுக்கோ,பேட்டிகோ விஜய் சேதுபதி சென்றால்,கட்டாயம் 'ப்ப்ப்ப்ப்ப்பாஆ என்ன பொண்ணுடா இவ..பேய் மாதிரி...'என்ற டயலாக்கை தான் மாறி மாறி சொல்ல கேட்கிறார்கள்.சூது கவ்வும் படம் விஜய்சேதுபதிக்கு இன்னும் பல வசனங்களை சொல்ல வைக்கும்..!ஸ்டைலிஷ் காதல் படங்கள்,மொக்கை மசாலா படங்கள் என்று செல்லாமல் இதுபோன்று சில படங்களை தெரிவு செய்து நடித்தால் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் 'சசிக்குமார்'க்கு கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கும்.வங்கி மேனேஜர் மகளை கடத்தி அவர் ஆபீசுக்கு நேரே சென்று பணத்தை வாங்கிவிட்டு திரும்பிவரும் காட்சிக்கு விசில் பறக்கின்றது!

+படத்தின் இன்னொரு ப்ளஸ் அதன் நேர்த்தியான திரைக்கதை.90% குற்றமே சொல்லமுடியாத திரைக்கதை.அதுமட்டுமல்லாது படம் முழுவதும் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள்.அடுத்து இது தான் நடக்குமென்று எதிர்பார்ப்போம்.ஆனால் கடைசிவரைக்கும் அது நடக்கவே நடக்காது.எதிர்பார்க்காத ஒன்றில் கொண்டுபோய் முடிப்பார் இயக்குனர் நலன் குமாரசாமி.ஒவ்வொன்றுமே சிறிய சிறிய ட்விஸ்ட்கள் என்பதால் படத்தின் எந்த கணமும் அலுப்புத்தட்டவில்லை.உட்கார்ந்து மிக நேர்த்தியாக செதுக்கிய திரைக்கதை.இரண்டாம் பாதி நிற்கவேயில்லை..ஓடுகின்ற விறுவிறுப்பு! 

+இரண்டு மூன்று பாடல்கள் வருகின்றன.அவை கூட தேவை இல்லை என்று தான் தோன்றியது.'காசு பணம் துட்டு மணி மணி..' என்ற பாடலும் 'ட்ரவுசர் கழண்டிரிச்சே' என்கின்ற பாடலும் ரசிக்கக்கூடியன.இறுதியில் தேவையில்லாது ஒரு டூயட் ஒன்று.அதை கத்தரித்திருக்கலாம்.(கட்டாயம் மூன்று பாடல்கள் வந்தால் தான் காசு போடுவேன்னு தயாரிப்பாளர் சொன்னாரோ என்னமோ!).பின்னணி இசை என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லாவிட்டாலும்,படத்தின் 'திரில்லிங்'கை எவ்விடத்திலும் சந்தோஷ் நாராயணன் குழப்பிவிடவில்லை. 

+'தாஸ்' அண்ட் கோ'வுக்கு பிற்பாதியில் மிகப்பெரும் உதவிபுரியும் கதாபாத்திரமான மேட்டர் பட டைரெக்டர் 'டாக்டர் தாதா',சைக்கோ போலீஸ் 'பிரம்மா' ஆகியோருக்கான 'இன்ட்ரோ' முதல் பாதியிலேயே கொடுக்கப்படுவது சிறப்பு.கதையின் இடைவேளைக்கு பிந்திய பாகத்தில் வரும் முக்கிய இரு கேரக்டர்கள் இவர்கள் இருவரும்.ஆனால் முதல் பாதியில் அப்படி நினைத்திருக்கவில்லை.ஏதாவது ஒரு பிட்டு கேரெக்டர்க்கு வருவார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்.கதாபாத்திரங்களின் பின்னணி சொல்லப்பட்டிருக்கும் விதம்,ஒரு 'ப்ளோ'வில் வரும் காட்சிக்கோர்வை என்பன படத்துக்கு ப்ளஸ்.

+சீரியசான திரில்லிங் கதையா இல்லை காமெடி கதையா என்று ஜோசிக்க வைக்குமளவுக்கு ஒவ்வொரு சீனிலும் ஏதாவது ஒரு காமெடி இருக்கும்.இறுதியில் போலீஸ் துரத்தி வந்து பிடிக்கும் சமயத்தில் பின்னாடி இருந்து தாஸ் காங் ஆள் ஒருத்தன் துப்பாக்கியை பிரம்மாவை நோக்கி நீட்டுவான்.பிரம்மா அசட்டு சிரிப்பு சிரிக்க,அதே துப்பாக்கியால் பிரம்மாவின் மூக்கை உடைத்துவிட்டு 'துப்பாக்கி காட்டி மிரட்டிக்கிட்டிருக்றேன்..நீ சிரிக்கிறே?' அப்பிடின்னு மரண சீரியஸ் நேரத்திலும் 'கொல்' என்று ஒன் லைன் காமெடி!இப்படி ஏகப்பட்ட சீரியஸ் சீன்களுக்குள் காமெடியை நுழைத்து சிரிப்பை படம் முழுவதும் மெயின்டெயின் பண்ணியது படத்துக்கு இன்னொரு ப்ளஸ். 

+பெண் கதாபாத்திரம் என்று படத்தில் வருவது என்னமோ தாஸை மாமா மாமா என்று சுற்றிவரும் 'ஷாலு'என்கின்ற கற்பனை கதாபாத்திரம்.இந்த பெண் கதாபாத்திரம் தாஸுக்கு மட்டுமே புலப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.படத்தில் இவர்களின் கடத்தல்கள் அனைத்திலும் தாஸுடன் ஒட்டிக்கொண்டு வருகிறாள்.இவளுடன் தனியாக தாஸ் பேசும் காமெடிகள் தனி.மற்றையது மினிஸ்டர் ஞானோதயமாக வரும் எம் எஸ் பாஸ்கரின் மனைவி.பாஸ்கரின் நடிப்பு,சைக்கோ போலீஸ் பிரம்மாவின் நடிப்பு என்று அவரவர் பாத்திரங்களில் ஒவ்வொருவரும் திறமையை வெளிக்காட்டியிருக்கின்றனர்.குறிப்பாக போலீஸ் பிரம்மா ஆட்டத்துக்குள் இறங்கிய பின்னர் தான் படம் களைகட்டுகிறது காரணம் பிரம்மாவின் பாத்திரம் படைக்கப்பட்ட விதம்,மற்றும் அவரது நடிப்பு.படத்தில் இவர் வாய்திறந்து பேசியதே மிக மிக குறைவு.ஆனால் ஆக்சன் பிரமாதம்!

-படத்தில் உறுத்திய விடயங்கள் இரண்டு.ஒன்று இடைவேளை வரும்போது இடம்பெறும் வாகன விபத்து.அது படமாக்கிய விதம் சொதப்பல்.அத்துடன் அந்த விபத்தில் கட்டாயம் மூன்று பேராவது இறந்திருப்பார்கள் என்று நினைக்கையில் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் மீண்டு வந்ததாக காட்டியது ஏனோ நியாயப்படுத்த முடியவில்லை.அதுபோன்று கடத்தலுக்கு பெற்ற பணத்தை விளையாட்டு ரக சிறிய ஹெலிகாப்டரில் வைத்து தூக்கி சென்றது நம்பவே முடியவில்லை.அந்தளவு பாரத்தை அது தாங்காது என்று சிறிய குழந்தை கூட சொல்லிவிடும்.குறும்பட இயக்குனர் ஒருவரின் முதல் படம் என்பதனால் என்னமோ பல காட்சிகளில் குறும்பட எபெக்ட்ஸ் தெரிகிறது.ஆனால் இவை எல்லாம் படத்தின் ஓட்டத்துடன் காணாமல் போய்விடுகின்றன!

**ஒரு புதிய முயற்சி அப்பிடி இப்பிடின்னு சொல்லமுடியாது.இது போல எகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன.ஆனால் சூது கவ்வும் ஒரு சுவாரசியமான முயற்சினு சொல்லிக்கலாம்கட்டாயம் பார்க்கவேண்டிய படம். என்னோட மார்க்கு 73/100.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரி பட விமர்சனம் ஒரு பக்கம் இருக்கட்டும்.படத்தில் கடத்தல் தொழில் செய்யும் தாஸ் அண்ட் கோ'வின் பிளான் பக்கா.அத்துடன்,வழமையான கடத்தல் போலல்லாது,சாதாரண அமவுண்ட் ஒன்றை பெற்றுக்கொண்டு கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்கின்றனர்.அப்படி என்றால் எந்த பிரச்சனையும் வராது என்பது அவர்கள் நம்பிக்கை.இதையும்,அவர்களது கடத்தல் தொழிலின் ஐந்து விதிமுறைகளையும் பார்க்கும்போது,எனக்கே அடடா இது போல நாமளும் பண்ணலாமே என்று தோன்றுகிறது.எத்தனை பேருக்கு அப்படி தோன்றியிருக்கும்?எத்தனை பேர் இப்படி செய்யலாம் என்று களத்தில் குதிக்க தயாராக இருக்கப்போகிறார்கள்?பயமாக இருக்கிறது.காரணம்,படங்கள் தான் நம்மவர்களுக்கு முக்கிய இன்ஸ்பிரேசன்.மட்டக்களப்பில் காதலியின் தாய் தந்தையை கொலை செய்தவர்கள் கூறியது சுறா போன்ற படங்களை பார்த்து தான் கொலைக்கான 'ப்ளான்' போட்டோம் என்று.படத்தை படமாக பார்த்தால் ஓகே.ஆனால் பெரும்பாலானோர் அப்படி பார்ப்பதில்லை.உள்வாங்கிவிடுகின்றனர்.அஞ்சு பத்துக்கு செயின் அறுப்பவர்கள்,எனி அம்பதாயிரம் ஒருலட்சம் என்று சின்ன அமவுண்ட்க்கு கடத்த தொடங்கிவிடுவார்களோ!!


Post Comment

Monday, May 13, 2013

சுவரில்லா சித்திரங்கள்-'சுவர் கிறுக்கல்கள்'

        அழுவதா...சிரிப்பதா... : இன்றைய தலைமுறை ஒரு பக்கம் கல்வியிலும்,தொழில்நுட்பத்திலும் கலக்கிக்கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் எதற்கும் கவலையில்லாமல் இருக்கிறது. ஒரு பொது இடத்தில் காதலிக்க ஆட்கள் தேவை என்றும், இப்போதைக்கு காதல் செய்ய தயராக உள்ளவர்கள் என்று ஏழு பேர் பெயரையும் எழுதி போட்டுள்ளனர். இதை யார் எப்படி எடுத்துக்கொண்டாலும் இவர்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக சந்தோஷமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

படம்: மைலாப்பூர் குட்டி.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் கிறுக்கல், கேலிச்சித்திரம், போஸ்டர், பேனர் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!


சுவர் கிறுக்கல்கள் என்றால் ஆங்கிலத்தில் 'கிராப்(F)டி' என்பார்கள்(Graffiti).நம்மவர்களுக்கு 'டாய்லெட்' கிறுக்கல்கள் என்றால் தான் புரியும்,காரணம் அந்தளவுக்கு சிறு வயது முதலே 'டாய்லெட்' கிறுக்கல்களை பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள் நாம்.பாலர் வகுப்பு படிக்கையில் பென்சிலாலும்,பின்னர் பேனா மை,கரித்துண்டு,பாடசாலை கலர் வெண்கட்டி துண்டுகள், மற்றும் கொஞ்சம் வசதி என்றால் நிறத்தூரிகைகள்,'பெய்ன்ட் ஸ்ப்ரே' கொண்டும் இந்த சுவர் கிறுக்கல்கள் அழகு அசத்தி,அசிங்கப்படுத்தி வந்திருக்கின்றன..!

நேரடியாக மோத,கருத்துக்களை வெளியிட திராணியற்று பெரும்பாலும் களவாகவே சுவர்களில் கிறுக்கப்படுவதால்,அதனை கிறுக்குவதற்க்கும்,பிடிபடாமல் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு தனித்திறமை,துணிவு வேண்டும்.ஏனெனில் இவ்வாறு கிறுக்கப்படுவதெல்லாம் யாரைப்பற்றி என்று பார்த்தால்,நிச்சயமாய் எதோ ஒரு வகையில் அதிகாரத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை பற்றியதாய்த்தான் இருந்து தொலைக்கும்.அத்தகைய உயர்ந்த அதிகாரத்தை நேரடியாக எதிர்த்து நிற்க இவர்களால் முடியாவிட்டாலும்,மறைமுகமாக எதிர்க்கக்கூட ஒரு சாமர்த்தியம் தேவை.எப்போது எந்த குள்ளநரி எதிர்த்தரப்புக்கு துப்பு கொடுக்கும்,காட்டிக்கொடுக்கும்,கை நீட்டும் என்று தெரியவே தெரியாது.அதனால் அதிகாரத்துக்கு எதிரான கிறுக்கல்களில்,யார் கிறுக்கியது என்ற விடயம் ஒரு சிலரை தவிர மற்றையோருக்கு தெரிந்திருக்காது. 

கோபத்தை வெளிக்காட்டவும்,தங்கள் ஆசைகளை வெளிக்காட்டவும்,சிலசமயம் இல்லாத பிரச்சனைகளை பூதாகரமாக உருவாக்கி விடுவதற்கும் இந்த சுவர் கிறுக்கல்கள் கைகொடுக்கின்றன.பாடசாலையில் படிக்கும் காலகட்டத்தில் சாதாரணமாக நான் டாய்லெட் பக்கம் போவதில்லை,ஆனால் ஒவ்வொரு வாரமும் புதிதாக என்ன செய்தி என்று பார்ப்பதற்க்கு வாரத்துக்கு ஒருதடவையேனும் அந்தப்பக்கம் செல்வதுண்டு.'சுகாதாரமும் உடல் கல்வியும்'பாடத்தில் படிப்பித்த அந்தரங்க உறுப்புகளினை வரைந்து பெயர்குறித்து பழக சிலருக்கு இந்த 'டாய்லெட்' சுவர்கள் பயன்பட்டிருக்கின்றன.எந்த ஆசிரியருக்கும் எந்த ஆசிரியைக்கும் இடையில் கள்ள தொடர்பு,யார் யாருக்கிடையில் கூடல்,ஊடல் என்று அனைத்தும் இங்கே தான் கிறுக்கி வைக்கப்படும்.கிட்டத்தட்ட 'டாய்லெட்' சுவர்கள் பெரும்பாலான சமயங்களில் 'நோட்டீஸ் போர்ட்'டாக தான் தொழிற்பட்டிருக்கின்றன!

இதனை ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடாகவோ ஏன் ஒருவித மனநோயாகக் கூட இருக்கலாம்.சில சமயங்களில் மற்றையவர்களால் கண்டுணரப்படாத 'ஆட்டிஸ'/மன இறுக்கத்தின் வெளிக்காட்டுதலாக,வெறுப்பின் உச்சபட்ச விளைவாக கூட இதனை சொல்லிக்கொள்ளலாம்.ஏன்,இவர்களில் தகுந்த மேடை//வாய்ப்பு/சந்தர்ப்பம் கிடைக்காத கவிஞர்களாக,எழுத்தாளர்களாக,ஜோக் ரைட்டர்களாக கூட இருக்கலாம்.ஏனெனில்,சில கிறுக்கல்கள் எளிய ஹைக்கூ கவிதைகளாகவும்,ஏடாகூட சந்த அமைப்புள்ள வாக்கியங்களாகவும்,தேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஒருவரின் கிறுக்கல்கள் போலவும்,வயிறு புண்ணாக்கும் ஒற்றை மற்றும் இரட்டை அர்த்த ஜோக்குகளாகவும் கிறுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

பாடசாலையை விட்டு வெளியே வந்தால்,தேர்தல் காலங்களில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பங்குக்கு ஊர் சுவர்களில்,வீதிகளில் இரவோடு இரவாக கிறுக்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.முதல் கிழமை 'பெயிண்ட்' அடித்த சுவர்களாய் இருந்தால்,கிறுக்கும் நெஞ்சங்கள் கொஞ்சம் 'ஓவராகவே' உணர்ச்சிவசப்பட்டு கருப்பு 'பெயிண்ட்டால்' கட்சி கொடி வரைந்துவிட்டு சென்றிருப்பார்கள்.அந்த வீட்டுக்காரர் தீவிர எதிர்க்கட்சி ஆதரவாளராய் இருப்பார்.வீட்டுக்கு வெளியே அராஜக ஆளுங்கட்சியின் கட்சி சின்னம் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும்(நம்மூரில் பெரும்பாலும் வீணைச் சின்னம் தான்!,இதனாலேயே சங்கீத பாடத்துக்கு வீணை வரைந்து பெயர் குறிக்க கேட்டிருந்த போது சரியாக வரைந்து பெயர் குறித்த நினைவு!).அப்படியான சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் மறுபடியும் புதிதாய் 'கலர் பெயிண்ட்'வாங்கி அடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டாலும்,அவர் நிதிநிலைமை இடம்கொடுக்காது.பின்னர்அது தானாகவே வெயில் மழைக்கு என்று தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கும்போது சேர்ந்தே மறைந்துவிடும்.

இந்த சுவர் கிறுக்கல்கள் பின்னதாக பல்வேறு பரிணாமங்களை எடுத்துக் கொள்கிறது.எமது உயர்தர வகுப்பில் அது துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிடுதல் என்கின்ற பரிணாமத்தை எடுத்துக்கொண்டது.ஒவ்வொரு வகுப்பிலும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பிடிக்காமல் ஒரு ஜீவன் இருக்கும்.பெரும்பாலும் ஆசிரியர்களுடன் நெருக்கமாக பழகும் ஒருத்தன் அல்லது எங்களது ரகசியங்களை ஆசிரியர்களிடம் 'போட்டுக்கொடுப்பான்' என்று சந்தேகிக்கப்படும் ஒருத்தனாக அவன் இருப்பான்.அப்படிப்பட்ட ஒருவனை பற்றி சில மாணவர்கள் ஒன்று கூடி துண்டுப்பிரசுரம் அடித்து விட்டார்கள்.அதுவும் பாடசாலையில் வினியோகிக்காமல்,வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு அதிகாலை 4-5 மணிக்கு கொண்டுவந்து போட்டுவிட்டு சென்றார்கள்.அவர்களுடைய 'பிளானிங்க்'பர்பெக்ட்..!சந்தேக நபர்களை ஒவ்வொருவராய் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்தார்கள்.யார் அதனை செய்தார்கள் என்பது இன்னமும் தான் பலருக்கு தெரியவரவில்லை, காரணம் அவர்கள் செய்தது அதிகாரத்துக்கு எதிரான விஷயம் என்பதும் பிடிபட்டால் டிசி(TC)கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதும் வெளியிட்டவர்களுக்கு தெரிந்தே இருந்தது. 

Post Comment

Wednesday, May 8, 2013

கண்ணா 'அம்மாத்தகடு' போச்சே!


இணையத்தை விட்டு விலகியிருத்தல் சாத்தியமா என்கின்ற பதில் இல்லாத கேள்வியை கேட்டுக்கொண்டே இணையத்தினுள் கூடுகட்டி குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்னைப்போன்ற பலர்.இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான்.அடிமையாகியிருத்தல். சிலர் தெரிந்தும்,பலர் தெரியாமலும்.இணையத்தை தவிர்த்து பார்த்தால் வேறு பொழுதுபோக்குகள், நேர-விழுங்கிகள் இல்லாமை ஒரு முக்கிய காரணம் என்னைப்போன்ற பலருக்கு.

என்னுடைய பிரத்தியேக கணணி திடீரென செயல்பாட்டை இழந்துவிட்டது.முதல் நாள் நின்ற போது,வெறுமனே 'பேட்டரியை' கழற்றி,பூட்டி மறுபடி இயக்க்கிப்பார்த்த போது வேலை செய்தது.அடுத்தநாள் மறுபடியும் முருங்கை மரத்தில்.திரும்பவும் அதே போல் பேட்டரியை கழற்றி பூட்டி பார்த்தேன்..அடடா,வேலை செய்தது!அடுத்த நாளான கடந்த வியாழக்கிழமை, இந்த விளையாட்டின் மூன்றாம் நாள்.மறுபடி பேட்டரியை கழற்றி பூட்டி பார்த்தேன். இம்முறை 'அட்டம்ப்ட் பெய்லியர்'!முதன் முறை 'வார்னிங்' கொடுத்தபோதே சுதாகரித்திருக்க வேண்டும்.தண்ணீர் கூட இரண்டு முறை தான் பொறுக்கும்,மூன்றாம் முறை முழுங்கிவிடும் என்பார்கள்.எனக்கு முழுங்கியேவிட்டது!!

விஷயம் தெரிந்த நண்பனை கொண்டு என்னவென்று பார்ப்போம் என்றால்,'இந்தா வருகிறேன்..அந்தா வருகிறேன்'என்று மூன்று நாட்கள் அலைக்கழித்து நேற்று வந்து பார்த்தான்.அவனுக்கும் அவனது வேலை ஒருபக்கம்.ஐந்து மணிக்கு வருகிறேன் என்றவன் இறுதியாக ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தான்.கவிழ்த்து வைத்து,கழற்றிவிட்டு பிரித்து மேய்ந்ததில்,அவனால் சரிப்படுத்த முடியாத சாபம் ஒன்று தான் எனது லாப்டாப்பை பிடித்து வாட்டுகிறது என்று தெரியவந்தது.யாரும் செய்வினை வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு கள்ளச்சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன்!

இறுதியாக இன்று ஒரு கடையில் கொடுத்து பார்த்தேன்.'அம்மாத்தகடு'(Mother Board) போய்விட்டது,மாற்றுவதானால் எப்படியும் இருபதாயிரம் முடியும் என்றார்.!மூன்று வருடங்களுக்கு முன்பதாக எண்பதாயிரத்துக்கு வாங்கிய லாப்டாப்,இன்றைய பெறுமதியின் அடிப்படையில் பார்க்கையில்,இருபதாயிரம் என்னவோ லாப்டாப் விலையில் வெறும் 50% தான்!இணையம் இல்லாததால் ஏராளமான நேரம் விஞ்சி கிடக்கின்றது.. கூடவே,எத்தனையோ விடயங்களை,உலக நடப்புகளை விட்டுவிட்டு,ஒன்றுமே இல்லாத வெறுமையாய் இருப்பது போன்ற எண்ணமும் வாட்டி வதைக்கிறது.

என் காதலி என்னிடம் மறுபடி வந்து சேர இன்னமும் இரண்டு நாட்கள் ஆகும் என்றார் அந்த கடைக்காரர்.அதுவரையில் எப்போதோ லைப்ரரியில் எடுத்து,இன்னமும் தொடப்படாதிருக்கும் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலவடிவம் என்று கூறப்படும்,ஜெமோவின் முக்கிய படைப்புகளில் ஒன்றான  'ஏழாம் உலகம்' மற்றும் சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகளடங்கிய புஸ்தகமொன்றும் தான்  கைகளில் தவழப்போகின்றன.!

எங்கேயோ ஒரு 'இன்டர்நெட் கபே'யிலிருந்து, 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...