அதிசயமாய்,சக்தி டிவியில் இன்று மதியம் ரசிக்கத்தக்க நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பினார்கள்.மேற்கிந்திய கிரிக்கெட் அணி பற்றிய டொக்யூமெண்டரி ஒன்று தான்,தமிழ் உப தலைப்புகளுடன்.
தலைக்கவசம்,சைட் பாட்ஸ் எதுவுமில்லாத காலப்பகுதியில் பவுன்சர்களால் அவுஸ்திரேலியர்கள் மேற்கிந்திய கிரிக்கட் அணியை 1975, 'The Frank Worrell Trophy'இல் எப்படி தாக்கி ஊனப்படுத்தி நிர்மூலமாக்கினார்களோ,அதே பவுன்சர்களை ஆயுதமாக்கி அவுஸ்திரேலியர்களையும்,இங்கிலாந்தினரையும் அவர்களது மண்ணிலேயே மண்கவ்வ வைத்த வரலாற்றை க்ளைவ் லொயிட், விவியன் ரிச்சர்ட்ஸ்,ரொபேர்ட்ஸ் என்று பழைய மேற்கிந்திய நாயகர்களின் பேட்டிகளோடு மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர் !
அதுமட்டுமல்லாது,வெள்ளையினத்தவர்களினதும் அவர்களின் மீடியாக்களினதும் நிறவெறி எப்படி இருந்ததென்றும்,அது மேற்கிந்தியத்தீவுகள் அவர்களுக்கெதிராக வெற்றிபெறும் சமயங்களில் எப்படி உச்சமடைந்தது என்பது பற்றியும்,அதனை தங்கள் திறமைகளாலும்,வெற்றிகளாலும் எப்படி பணிய வைத்து கறுப்பினத்தவர்களை சமனாக மதிக்க வைக்க ஒன்றுபட்டு போராடியது பற்றியும் அதில் காட்டியிருந்தனர்.
1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று ஆடிய மேற்கிந்திய அணி,இங்கிலாந்தை 5-0 என்று வெள்ளையடித்ததை 'Black wash' என்று ரசிகர்கள் பதாதைகள் ஏந்தி கொண்டாடியதை காட்டினார்கள்.
கூடவே,தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையினத்தவரின் ஆட்சி நடைபெறும்போது அங்கு சென்று கிரிக்கட் ஆட மேற்கிந்தியா மறுத்திருந்தபோதும், அணியில் சில வீரர்கள் தங்கத்திற்காகவும், பவுண்ட்ஸ்க்காகவும் விலை போனதுபற்றியும் காட்டப்பட்டது.
விவியன் ரிச்சட்ஸ்'இன் தலைக்கு ஏகப்பட்ட விலை பேசப்பட்டது,அச்சந்தர்ப்பத்தில் ரிச்சட்ட்ஸ் விலை போயிருந்தால் முழு மேற்கிந்திய அணி வீரர்களும் விலைபோயிருப்பார்கள்,ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக எதிர்த்து நின்றார் என்றும், இதனை நெல்சன் மண்டேலா வரவேற்று வாழ்த்தினார் என்றும் அதில் காட்டினார்கள்.
கூடவே அக்காலகட்டத்தில் கிரிக்கட்டுடன் பாப் மார்லி எந்தளவுக்கு ஒன்றுபட்டு செயல்பட்டார் என்பது பற்றியும்,அவர் பாடல்களின் வீரியம் பற்றியும் ரிச்சட்ஸ் போன்றவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தனர்.போட்டி ஆரம்பிக்கும் முன்பாக பாப் மார்லி அணியின் அறைக்கு வந்து பாடி உற்சாகப்படுத்துவார் என்றும்,அந்த உத்வேகம் தான் பல போட்டிகளை மனவுறுதியோடு விளையாடி வெல்லவைத்ததென்றும் பழைய வீரர்கள் பேசினார்கள்.பார்க்கவே மிக உணர்ச்சிகரமாக இருந்த அந்த தொகுப்பு எங்கேனும் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்..!
இப்படியாக வீறுகொண்டெழுந்த மேற்கிந்தியத்தீவுகள் 1980 இல் இருந்து 1995வரை,தொடர்ச்சியாக 15ஆண்டுகளாக எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் படைத்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமல் தொடருகிறது,.!
'Fire in Babylon' காணொளி..!
0 comments:
Post a Comment