பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரெயில்" மற்றும் "புதிய வார்ப்புகள்" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வாரம் கிடைத்திருந்தாலும், "புதிய வார்ப்புகள்"ளையே சில தினங்களுக்கு முன்னர் பார்க்க கிடைத்தது.சிறு வயதில் ஒரு தடவை பார்த்திருந்தாலும்,படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட வேண்டும் என்று தூண்டியது என்னமோ பள்ளிப்பருவம் முடிந்த பின்னரான வாசிப்பு தேடலில் நான் பார்த்த அனேக இடங்களில் "புதிய வார்ப்புகள்" பற்றி ஏதாவது ஒரு குறிப்பு காணக்கிடைத்தமை தான்.
தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர் பாக்கியராஜ் ஹீரோவாக நடித்த முதலாவது படம்.(இதற்க்கு முன்னராக,பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்திருந்தார்).சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வசனகர்த்தாவாக இருந்த பாக்கியராஜ்'ஜை புதியவார்ப்புகள் படத்தின் மூலம் ஹீரோவாகி இருந்தார் பாரதிராஜா.
1979 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது பெற்ற அன்றைய கால சினிமாவில் மட்டுமன்றி இன்று வரைக்கும் புகழப்படும் திரைக்காவியம் தான் இந்த புதிய வார்ப்புகள்.கிராமத்து மணம் தவழும் பாரதிராஜாவின் அக்மார்க் திரைக்கதை.பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு வாத்தியாராக செல்லும் பாக்கியராஜ் அங்குள்ள ஒரு பெண் மீது காதல் கொள்வதும்,காமுகனை ஊரிலுள்ள பெண்களை எல்லாம் தன் ஆசைக்கு ஊறுகாயாக பாவிக்கும் கிராம தலைவரால் அக்காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் மற்றும் பல கிராமத்து குறும்புகள்,கூத்துக்கள் தான் படத்தின் கதை.படத்தின் நாயகி ரதி.கிராமத்து கேரக்டருக்கு பொருத்தமான தெரிவு.
படிக்காத கிராமத்து மக்கள் எவ்வாறு கிராமத்து "தலைவர்களால்" ஏமாற்றப்படுகின்றார்கள் ஏமாந்து போகின்றார்கள், அவர்களின் சிந்தனை திறனும் எடுக்கப்படும் முடிவுகளும் எந்தவகையில் அமைகின்றன அவை எவ்வாறு அவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன போன்ற பல்வேறு விளிம்புகளை பாரதிராஜா தொட்டுசென்றிருக்கின்றார்.படத்தை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்,இன்றைய காலகட்டத்தோடு பொருந்தி பார்ப்பதை விட அன்றைய காலகட்டத்துடன் பொருத்தி பார்க்கையில் தான் "புதிய வார்ப்புகள்" அன்றைய கால தாக்கத்தை உணர்ந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
படத்தில் கவுண்டமணி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் ரொம்ப இளையவயதினராய் உங்களால் பார்க்கமுடியும்.கவுண்டமணி ஊர் பெரியவனின் கையாளாக வந்து எப்போதுமே "உள்ளதை சொல்றீங்க" "உள்ளதை சொல்றேன் ஐயா" என்ற இரு வசனங்களையும் கொண்டே படத்தில் நடித்து முடித்திருப்பார் அல்லக்கையாக.இறுதியில் தனக்கென ஆபத்து வரும்போது திருந்தி நல்லவனாகின்றார்.கிராமத்தில் மூளைவளர்ச்சி குன்றியவனாக ஜனகராஜ் நடித்திருப்பார்.வேறு தெரிந்த முகங்கள் யாரும் இல்லை.படத்தில் குடும்பக்கட்டுப்பாட்டு அதிகாரியாக ஒரு பெண்வருவார்,இறுதியில் அவரும் கிராமத்தலைவருக்கு ஊறுகாய் ஆகி இறப்பார்.பாவம்.பெயர் தெரியவில்லை.
கதாநாயகனாக படத்தில் நடிப்பவர் அந்த கட்டம் கட்டமான மூக்கு கண்ணாடி அணிந்திருக்கவேண்டும் என்று பாத்திரத்தை படைத்த பாரதிராஜாக்கு பாக்கியராஜ் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறார்.பின்னைய படங்களில் கூட அந்த கண்ணாடி பாக்கியராஜுடன் ஒட்டிக்கொண்டுவிட்டது.அதுவே அவரின் ஒரு அடையாளமாய் கூட மாறிவிட்டிருந்தது.
16 வயதினிலே'வில் ஆரம்பித்து 'புதிய வார்ப்புக்கள்' வரை பார்த்துவிட்டு எல்.வி.பிரசாத் தன்னை உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்ள முடியுமா என்று கேட்டதை தனது உச்சபட்ச கௌரவமாக எடுத்துக்கொள்வதாகச் சொல்வார் பாரதிராஜா என்று விகடனில் ஒரு தடவை வெளிவந்திருந்தது.!புதிய வார்ப்புகள்' படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா' என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க. அப்பா- அம்மா உயிரோடு இல்லை!' என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டாராம் பாக்யராஜின் அம்மா. இன்றும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டுமாம் பாக்யராஜுக்கு!
படத்தின் இசை நம்ம இளையராஜா.பாடல்கள் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் .படத்தின் பாடல்கள் அத்தனையும் சிறப்பு என்றாலும் ஷண்முகப்பிரியா ராகத்தில ராஜா கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு இசையமைத்த "தம்தன தம்தன தாளம் வரும்" என்கின்ற பாடல் தான் அனைத்தையும் தாண்டி காலத்தை வென்றது.இன்று கேட்டாலும் ராஜாவின் இசை நெஞ்சை வருடிச்செல்லும். இது தான் அந்தப்பாடல்;
தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுப வேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது..
சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது ..
சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மணம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெண்மனம் பூவிலும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக்கிள்ளியது.
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ மன்னவன் தந்தனன் நெஞ்சனையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ இனி கனவுகள் தொடர்ந்திட....
சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ கயல் சிந்திஎழ
மணம் மன்னவன் உன்னடி வந்து தொழ..
சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ கயல் சிந்திஎழ
மணம் மன்னவன் உன்னடி வந்து தொழ..
சிந்திய பூமலர் சிந்திவிழ அணுபோல் உணர்வோ தினம் முந்திஎழ
அந்தியில் வந்தது சந்திரனோ சந்திரன் போல் ஒரு இந்திரனோ..
முந்தைய நாளினில் எந்தன் முன்பலனோ துணை சுகம்தர சுவை பெற...
(ஜென்சி இளையராஜாவுடன் )
இந்த பாடலை பாடியவர் ஜென்சி.இவ்விடத்தில் ஜென்சி பற்றி கட்டாயம் குறிப்பிட வேண்டும்.அதிகமான பாடல்களை பாடியிருக்காவிட்டாலும்,இளையராஜாவின் இசையில் அற்புதமாய் சில பாடல்களை பாடியிருக்கின்றார்.உதாரணமாய் மேற்கூறிய பாடல்,மற்றும் "அலைகள் ஓய்வதில்லை"யில் "காதல் ஓவியம்", வாடி என் கப்பக்கிழங்கே, "நிறம் மாறாத பூக்க"ளில் ஆயிரம் மலர்களே மலருங்கள் போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கன.ஒரு நான்கு ஐந்து ஆண்டுகளே பின்னணி பாடகியாய் பாடி இருக்கிறார்.ஆனால் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை ஜென்சியின் காந்த குரலாலும் ராஜாவின் இசையாலும் மனம்கவர்ந்திருக்கும்.
பார்க்காதவர்கள் ஒருதடவையேனும் பாருங்கள்"புதிய வார்ப்புகள்"!பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் மற்றும் இளையராஜாவின் கலைவண்ணத்தை பார்க்க விரும்பின்.பாரதிராஜாவை கிராமத்து கதைகளில் அடிச்சிக்க யாராலும் முடியாது என்பது கண்கூடு!அலைகள் ஓய்வதில்லை,கிழக்கே போகும் ரயில் என்ற வரிசையில் இதுவும் ஒரு
"ஓடுகாலி" படம் தான்.கிராமத்தில் காதலித்து சில பல தடைகள் எதிர்ப்புகளால்
கிராமத்தை விட்டு ஓடிச்சென்று வாழ்வோம் என்று நாயகனும் நாயகியும்
ஓடுவதும்,கிராமத்தார் கலைப்பதும் அந்த காலகட்ட படங்கள் பெரும்பாலானவற்றின்
க்ளைமாக்ஸ்'ஸாய் இருந்தது.பலர் ஓடிப்போய் கல்யாணம் கல்யாணம் செய்வதற்கு முன்னோடிகளாய் இந்த படங்கள்
தான் அமைந்திருந்தன.இவை அன்றைய காலகட்டத்தில் புதிய புரட்சியும் கூட!
"சில நிர்ணயங்களுக்குள் வாழ்வது ஒரு வாழ்க்கை..
"சில நிர்ணயங்களுக்குள் வாழ்வது ஒரு வாழ்க்கை..
சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை..
மீறிய இவர்கள்...
"புதிய வார்ப்புகள்"
என்று கூறி பாரதிராஜா ஸ்டைலில் முடிவடைகிறது இந்தப்படம்.