Thursday, December 20, 2012

கற்பழிப்புக்கு உண்மையான காரணம் என்ன?..!




தந்தை மகளை வன்புணர்வு செய்வது,சொந்தங்களுக்குள்ளேயே சீரழிப்புகள், சிறுமிகள் மீதான வன்முறைகள் என்று பெண்கள் மீதான வன்முறை எல்லைகடந்து சென்றுகொண்டிருக்கிறது.அதனை சில பெண்ணியவாதிகள் பயன்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த ஆண் சமுதாயமே வக்கிரம் கொண்டவர்கள், அடக்குமுறை கொண்டவர்கள் என்று தங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவிழ்த்துவிடுகின்றனர். வெறி கொண்ட காமுகர்களை மற்றைய ஆண்களால் அடக்க முடியவில்லை,இவர்களும் அவர்களுக்கு நிகரே என்று சாதாரண பெண்கள் மனதில் குழப்பத்தை உண்டாக்கி சமுதாய கட்டமைப்பில் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றனர் இந்த பெண்ணியவாதிகள்.சரி அவர்களை பற்றி பின்னால் ஒரு பதிவில் பார்ப்போம்.

இருபத்தி மூன்று வயதான கல்லூரி மாணவி ஒருவரை இந்திய தலைநகர் டெல்லியில் ஓடிக்கொண்டிருந்த பேரூந்தில் பலர் ஒன்றுசேர்ந்து கற்பழித்து,தலையில் இரும்பு கம்பியால் தாக்கி,உடல் முழுவதும் காயங்களுடன் விட்டு சென்றிருக்கின்றனர் சில காமுகர்கள்.பலத்த சர்ச்சையை தோற்றுவித்துக்கொண்டு,இந்திய பாராளுமன்றம் வரை பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது.உயிருக்கு போராடும் குறித்த மாணவியை சோனியா காந்தி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.இது டெல்லியில் நடந்தமையால் இந்தளவு தாக்கம் செலுத்தியிருக்கிறது.இதுவே வேறு சிறு மாநிலங்களாக இருந்திருந்தால் வெறும் பத்திரிகை செய்தியுடன் முடிவடைந்திருக்கும்.இந்தியா எங்கு செல்கிறது,வல்லரசாகுமா என்று ஆளுக்காள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,சத்தமே இல்லாமல் இந்தியா இங்கு தான் சென்றுகொண்டிருக்கிறது என்று "மொபைல் காங் ரேப்" மூலம் காட்டியிருக்கின்றனர் சில காமுகர்கள்!


இந்தியன் எக்ஸ்போ நெட் (Indianexponet) பத்திரிகையை நிறுவியோரில் ஒருவரும், இந்திய சமூக,அரசியல் விடயங்களை  எழுதிவருபவருமான இஷான் மோகன் (Ishaan  Mohan ), இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளுக்கான காரணங்களாக பத்து விடயங்களை தனது பத்திரிகையில் எழுதியிருந்தார்.அதனை தமிழாக்கி வெளியிடுகிறேன்,காரணம் அந்த பத்து காரணங்களையும் பார்க்கும் போது நிச்சயம் அவை உங்களுக்கு எதோ ஒருவகையில் மனதை உறுத்தக்கூடும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு
உயர் வாழ்க்கைத்தரமுள்ள குடும்பங்கள்,சாதாரண,கீழ்நிலை வாழ்க்கைத்தரம் கொண்ட குடும்பங்கள் என்று பல பொருளாதார வேறுபாடு கொண்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்த சமூகமாக தான் எமது சமூகம் இருந்துகொண்டிருக்கிறது.அடைய முடியா எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ள கற்பழிப்பு ஒரு வழியாக பலருக்கு தென்படுகிறது.ஒரு தரப்பு மறு தரப்பை தாக்க/அடைய பெண்கள் தான் இலகுவான இலக்காக மாறிவிடுகின்றனர்.

ஒருதடவை ரேப் செய்பவன் அத்துடன் நிறுத்துவதில்லை-பிடிபடாதவரையில்!

ஒருவன் ஒருதடவை கற்பழிப்பவன் அத்துடன் நின்றுவிடாமல் இரண்டாவது,மூன்றாவது என்று தனது சாதனை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான்.கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களில் பலர் அதுபற்றி முறைப்பாடு செய்வதிலோ,குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலோ முனைப்பு காட்டுவதில்லை காரணம்,தமது பெயர் அடிபடும் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்கின்ற பயத்தினால்.பெரும்பாலான வழக்குகள் உடனே முடிவடைந்துவிடுவதில்லை,காலம் காலமாக இழுபடும்.இப்படியான காரணங்களால் ஒதுங்கும் பெண்கள்,கற்பழிப்பவன் மேலும் தனது கைங்கரியத்தை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

சில சமயங்களில் இப்படி "பொது"வுக்கு பயந்த,குடும்ப மானம் மரியாதை என்று பயப்பிடும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், இந்த காமுகர்களின் விருப்பத்தெரிவாக அமைந்துவிடுகின்றனர்.எப்படியோ தான் தப்பிவிடுவேன் என்று தெரிந்துகொண்டே காரியத்தில் இறங்குகிறான் அவன்.


       

பாலியல் குற்றம் புரிவோரை நாமே அங்கீகரிக்கின்றோம்!
கேவலமான விடயம் ஆனால் அதுதான் உண்மை..ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால்,அவள் தன்னால் கெட்டவள்-தூய்மையற்றவள் என்கின்ற எண்ணம்,மனப்பாங்கு தான் இங்கு பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது.அவள் அனைவராலும் ஒதுக்கப்படுகிறாள்.சமூகத்தால்,உறவினர்களால்,கூட இருப்போரால் ஏன் பெற்றோரால் கூட தமது மகள் தப்பிழைத்தவள் என்ற ரீதியில் தான் அவள் நோக்கப்படுகிறாள்.எந்த மாப்பிள்ளை வீடுகளும் அப்படியான ஒரு பெண்ணை தமது மருமகளாகக ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

காம களியாட்டங்கள்   
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் பல்வேறு "காம களியாட்ட"எண்ணங்கள் மனதில் உண்டு.இன்றைய இளைஞர்கள் சமந்தா மீது கிறுக்கு கொண்டிருப்பதும்,முன்னோர் குஷ்புக்கு கோயில் கட்டியதும் இந்த களியாட்டங்களில் ஒரு வகையே!இது ஆரோக்கியமானது தான் ஆனால்,ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தே அது அவருடன்,அவருக்கு சொந்தமானவருடன் முடிவடைகிறதாஅல்லது  மற்றைய பெண்களை வன்புணர்வு செய்யும் நிலை வரை கொண்டு சென்றுவிடுகிறதா என்பது அமைகிறது.

ஒருவன் பெண்கள் மீது எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறான் என்பது அவனது அப்பா அவன் அம்மா மீது கொண்டிருக்கும் மதிப்பு,மற்றைய பெண்கள் மீது பொதுவாக கொண்டிருக்கும் மதிப்பு என்று பல காரணங்கள் தீர்மானிக்கின்றன.இன்றும் உலகில் பெண்கள் என்றாலே அவர்கள் ஆண்களின் காமத்தேவைக்கு பயனாகும் ஒரு "உபகரணம்" என்கின்ற மனப்பாங்கு பல ஆண்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அனைத்து இடங்களிலும் போலீஸ் நிற்கமுடியாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இத்தகைய பாலியல் வன்புணர்வு செய்வோராக திருந்தாவிட்டால் கற்பழிப்பை தடுக்க முடியாது என்பதே உண்மை. கற்பழிப்பை தடுக்க நாட்டின் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் போலீஸ் பாதுகாப்பு வைக்க முடியாது.எமது நாட்டின் மக்களில் ஒரு குறித்த வீதமானோர் கற்பழிப்போராக இருக்கின்றனர்.பலருக்கு சில பயங்கள்,தடைகள் காரணமாக முயற்ச்சியில் இறங்காமல் இருக்க,சிலர் மட்டும் துணிந்து இறங்கிவிடுகின்றனர்.

நடத்தை கெட்ட பெண்களே கற்பழிக்கப்படுகின்றனர். 

இந்திய போலீசில் கூட கற்பழிப்பு புகார் கொடுக்க எந்த பெண்ணாவது சென்றால், "நீ நடத்தை கெட்டவள்,அதனால் தான் இப்படி நடந்தது" என்று தான் போலீசாரே கூறுமளவுக்கு இந்திய கலாச்சாரம்,மெண்டாலிடி அனைவரிடமும் ஊறிப்போய் இருக்கிறது.போலீசார் கூட அதே சமூகத்திலிருந்து, அதாவது வாய்ப்பு கிடைக்காத-வெறுப்படைந்த,கீழ்த்தரமான சிந்தனை கொண்ட சமூகத்திலிருந்தே வந்திருப்பதால் அவர்களையும் திருத்த முடியாது.அவர்களிடமிருந்து நல்ல சிந்தனைகளையோ, முற்போக்கான எண்ணங்களையோ எதிர்பார்க்க முடியாது அதே சமயம் அப்படி எண்ணம் கொண்டவர்களை போலீஸ் வேலைக்கு சேர்த்துக்கொள்வது என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராதது.


               

அம்மாக்களால் முடியும்!
சமூகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர "அம்மாக்களால்"முடியும்.தனது மகள் எப்படி உடையணிகிறாள், ஜீன்ஸ் போடுகிறாளா,போடும் சட்டை உடலில் எங்கு தங்குகிறது எங்கு விலகுகிறது என்று பார்த்து திருத்தும் அம்மாக்கள் தமது ஆண் பிள்ளைகளையும் வளர்ப்பிலேயே திருத்த முடியும்,சீரிய எண்ணங்களை சிறுவயதிலிருந்தே அவர் மனங்களில் விதைக்க முடியும்.அத்தகைய ஆரம்பகால விதைப்பு தான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக காரணமாகிறது. ஒருத்தி விபசாரியாக இருந்தாலும் கூட அடிப்படையில் அவள் ஒரு பெண் தான் என்கின்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் மனதில் வரவேண்டும்;அதற்க்கு அம்மாக்கள் உதவவேண்டும்-இது எதிர்கால அம்மாக்களுக்கும் பொருந்தும்.

பாலியல் கல்வி 
இன்றைய பெரும்பாலான இளைஞர் யுவதிகள், பாடசாலையில் கற்றுத்தரும் மேலோட்டமான பாலியல் கல்வியில் தெரிந்துகொள்ளும் விடயங்களை விட(சிலருக்கே அந்த வாய்ப்பும்!) போர்னோ படங்கள் பார்ப்பதன் மூலம் அது சம்பந்தமாக தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர்.ஆனால் பழமைவாத சிந்தனைகளோடு இருக்கும் சில ஊடகங்களும்,மக்களும் இத்தகைய பாலியல் கல்வி அவசியமற்றது என்று கூக்குரலிட்டு இந்த சமநிலையை குழப்பிவிடுகின்றனர்.சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வயது வந்தோருக்கும் இன்று பாலியல் கல்வி அவசியமாகிறது.ஆனால் பாலியல் என்ற வார்த்தையை கண்டாலே துடித்து ஒதுங்கும் பலர் எங்களை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

ஆங்கில-இந்தி சிந்தனை வேறுபாடு
ஆங்கில மொழியில் படித்தவர்கள் சமுதாயத்தில் செக்ஸ் என்பது எந்தளவு ஆரோக்கியமானது,எந்தளவு பொதுவானது என்பது பற்றிய புரிதல் தேவையான அளவு வந்துவிட்டது.ஆனால் மறுபக்கம் இந்தி பேசும் சமூகத்தில்(இது மற்றைய அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்) அத்தகைய புரிதல்கள் இன்னமும் வந்துவிடாமல் "செக்ஸ் என்பது ஒரு கெட்ட சமாசாரம்" என்கின்ற புரிதலுடன் தான் பெரும்பாலானோர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த இந்தி -ஆங்கில மொழி சமூகத்துக்கிடையிலான இடைவெளி வெகு சீக்கிரம் குறைக்கப்பட்டு பாலம் அமையப்பெறல் வேண்டும்.அல்லது தொடரும் காலங்களிலும் பெண்கள் மீது தான் முழுமையான குற்றச்சாட்டு இடம்பெற்றுக்கொண்டிருக்கப்போகிறது.

மனவுறுதி கொண்ட பெண்கள் வேண்டும் 
பெண்கள் என்றால் மென்மையானவர்கள், எதையுமே தீரமாக எதிர்கொள்ள தெரியாதவர்கள் என்கின்ற எண்ணத்தை மாற்றி,பெண்கள் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும்.அவர்கள் மீது குடும்ப பொறுப்பு என்கின்ற பெரிய பாரத்தை மட்டும் செலுத்திவிடாது இது போன்ற விடயங்களில் ஒரு தெளிவான மனப்பாங்கை வளர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.எந்த சமூகத்திலும் கற்பழிப்பு இருக்கின்றது ஆனால் எங்கள் சமூகத்தில் தான் கற்பழிக்கப்பட்ட பெண் தப்பானவளாக,தூய்மையில்லாதவர்களாக கருதப்படும் மனப்பாங்கு இருக்கிறது..

மனதில் தூய்மையாக,எண்ணங்களில் சுத்தமான மனிதர்களை மதியுங்கள்-உடல் ரீதியாக பார்க்காமல்!

--------------------------------------



மருத்துவ கல்லூரி மாணவி தான் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்.இரவு படம் பார்த்துவிட்டு பதினோரு மணிக்கு பஸ்ஸில் வரும்போது தான் இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.சாமம் பன்னிரண்டு மணிக்கு சுதந்திரமாய் பெண்கள் நகைகளோடு(!) நடமாடும் காலம் இன்னமும் வந்துவிடவில்லை என்பதை படித்த பெண்கள் அறியாதவர்களா என்ன! எத்தகைய கல்விமுறைகளும்,சட்டதிட்டங்களும் காமுக மிருகங்களை காமம் வெறிக்கேறிய தருணங்களில் கட்டுப்படுத்தி விடுவப்போவதில்லை.அதை உணர்ந்து தங்களுக்கேற்ற பாதுகாப்பில் பெண்களும் கொஞ்சம் அவதானமாய் இருப்பது அவசியம்.   
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தான் இந்த செய்தியை கேட்கும் எந்த மனமும் துடிக்கும்.ஆனால் பாலியல் வறட்சியை உருவாக்கி விடுவதும் இதே மனங்கள் தான் இதே சமூகம் தான்.திருமண வயதை பிந்திய இருபதுகளாகவும்,முப்பதுகள்,நாற்பதுகளாகவும் கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் பாலியல் வறட்சியால் விரக்தியடையும் நிலைமை கானப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.தூக்கிலிடவேண்டும் என்று கூறும் மக்கள் தான் பாலியல் கல்வி வேண்டாம் என்கின்றனர் -விபசாரத்தை முற்றாக ஒழிப்போம் என்கின்றனர். பழமைவாத எண்ணங்களிலிருந்து எப்போது அனைவரும் வெளியேறுகின்றனரோ, அன்று தான் ஒரு விடிவு..! அதற்கு பின்னர் தூக்கிலிடுவோம் !!

குறிப்பு:கற்பழிப்புக்கு வன்புணர்வு என்றும் ஒரு நாகரிகமான பதம் உள்ளது.நான் கற்பழிப்பு என்பதை பாவித்த காரணம்,வன்புணர்வு எனும்போது பெரும்பாலானோர் மனதில் கற்பழிப்பு எனும் சொல் ஏற்படுத்தும் தாக்கத்தை இது ஏற்படுத்துவதில்லை.

இது பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர்.ஆனால் இந்த பதிவு நீண்டு செல்வதை நான் விரும்பவில்லை.வாசிப்போரும் (ஒரு சிலரை தவிர)விரும்பமாட்டார்கள் என்று தெரியும்.
  

Post Comment

Sunday, December 16, 2012

சமந்தாவின் "நீதானே என் பொன்வசந்தம்"..!

           


எனக்கொரு தயாரிப்பாளர் கிடைத்து ஒரு இயக்குனர் ஆகியிருந்தால்....என்று ஆரம்பித்து எத்தனையோ காதல் படங்கள் வெள்ளிவிழா காண்பது போல கனவுகள் கண்டிருக்கிறேன்.ஒரு இரண்டரை மணிநேரம் ரசிகர்களை சலிக்காமல் தியேட்டர் இருக்கையில் கட்டிப்போடுவது என்ன அவ்வளவு பெரிய விடயமா என்று எனக்கு மட்டுமல்ல பலருக்கு இவ்வாறான சிந்தனை இருந்திருக்க கூடும்.ஆமாம் அது மிக கடினமான பணி தான் என்பதை கெளதம் மேனன் நிரூபித்திருக்கிறார்.மின்னலே,வாரணம் ஆயிரம்,விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற அழகிய காதல் கதைகளை தந்த கௌதமின் மற்றுமொரு காதல் படைப்பு தான் நீதானே என் பொன்வசந்தம்!

சிறு வயதிலேயே ஒன்றாக பழகிவரும் ஜீவா,சமந்தா இருவர்களுக்கிடையிலும் அவர்களது இளமை வாழ்வின் ஒவ்வொரு காலப்பகுதியில் ஏற்படும் சந்திப்புகள்-பிரிவுகள்,காதல்,ஏக்கம்,துன்ப இன்பங்கள்,ஈகோக்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகள் பற்றியது தான் படத்தின் கதை.காதலர்கள் தமக்கிடையில் வளர்த்துக்கொள்ளும் ஈகோக்கள்,சரியான புரிந்துணர்வு இல்லாமை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சொல்ல முனைந்திருக்கிறார் கெளதம்.

படத்தின் மைனஸ்கள்

1.மெதுவான-நீண்ட இழுவை காட்சிகள் 
படத்தின் முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் பார்ப்போரை சீக்கிரமாக முடித்துவிடு,அல்லது போவர்ட்(Forward) பண்ணி விடு என்று முனக வைத்திருந்தது.அந்தளவுக்கு இழுவையாக இருந்தன.கவுதம் படங்கள் என்றாலே வசனங்கள் மிக மெல்லிய குரலில் தான் நடிகர்களிடமிருந்து வெளிப்படும்.

முதலே ஊகிக்க வைக்க முடிந்த காட்சிகள்..இடைவேளை வரும் காட்சியில் சரி அடுத்து இடைவேளை தான் என்று காட்சி தொடங்கிய போதே தெரிந்திருக்கும்.ஆனால் அதையே சில நிமிடங்களுக்கு இழுத்திருப்பார்.இப்படியான காட்சிகள் பல படம் முழுவதும் கொட்டாவி விட வைத்தது.கெளதம் படங்கள் படத்துடன் ஓட்டவைத்துவிடுவன.அந்த மாஜிக் இப்படத்தில் பெரும்பாலான இடங்களில் தவறவிடப்பட்டிருந்தது.

2.இளையராஜா இசை 
கௌதமின் பெரிய பலமே ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசை என்றால் மறுக்க முடியாது.கௌதமின் காதல் காட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து இசையால் மயக்கிவிடுவார் ஹாரிஸ்.ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் கெளதம் தனக்கு தானே எடுத்துக்கொண்ட ரிஸ்க் தான் இளையராஜாவை ஒப்பந்தம் செய்தது.இளையராஜாவின் பீரியட் முடிவடைந்துவிட்டது என்று தெரிந்தும் எதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவருடன் சேர்ந்துகொண்டார் கெளதம்.விளைவு படத்தில் தெளிவாக தெரிந்தது. 

சற்றே சில காட்சிகளில் கெளதம் சறுக்கும்போது ஹாரிஸ் தனது பின்னணி இசையால் அந்த சறுக்கல்களை மூடி மறைத்துவிடுவார்.vtv'யில் ரஹ்மானும்,மின்னலே,வாரணம் ஆயிரத்தில் ஹாரிஸும் என்ன செய்தார்கள் என்று சொல்ல தேவையில்லை. ஆனால் இளையராஜா அந்த சறுக்கல்களை ஊதிப் பெருதாக்கி காட்டியிருக்கிறார்.படத்தின் பெரும்பாலான இடங்களில் பாடல்களோ,பின்னணி இசையோ கவரவே இல்லை.படத்தின் "மிகப்பெரிய மைனஸ்" இசை தான் என்று அடித்து கூறலாம்.அதுவும் படத்தின் முக்கிய காட்சிகளில் இளையராஜா பாடும் இரைச்சல்கள் "ஐயோ வேண்டாம்"ராகம்.

இரண்டாம் பாதியில் பாடலுக்கு படமா இல்லை படத்துக்கு பாடலா எனுமளவுக்கு பாடல்கள் வந்தவண்ணம் இருந்தன.ஏலவே பெரிதாக கவராத பாடல்கள் படத்தில் தொடர்ந்து வரும்போது ஏற்படும் அவஸ்தை அப்பப்பா..பெரும்பாலானோர் படம்பார்க்க வந்த போது தான் முதன்முதலாக பல பாடல்களை கேட்டிருந்தனர்.இது கெளதம் படங்களில் இதுவே முதன்முறையாக இருந்திருக்கும்!

3.சந்தானம்-நகைச்சுவை 
சந்தானம் வந்த காட்சிகள் சிறு கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது உண்மை தான்.ஆனால் முழுக்க முழுக்க காதல் படம் என்று முடிவாகிவிட்ட பின்னர்  செருகப்பட்ட நகைச்சுவைகள் அவசியம் தானா என்று கெளதம் ஜோசித்திருக்கலாம்.காரணம் காதல் காட்சிகள்,காதல் வசனங்கள் பார்ப்போர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை,கூடவே இருந்துகொண்டு சந்தானம் கொடுக்கும் கவுண்டர் காமெடிகள் குலைத்துவிடுகின்றன.

சந்தானத்துக்கென்று தனி காமெடி ட்ராக் வேறு.விண்ணைத்தாண்டி வருவாயாவில் சில காட்சிகளை உல்ட்டா பண்ணி எடுக்கப்பட்டிருந்தது.இப்படியான சந்தானத்தின் சில காட்சிகளையும்,வேறு சில மொக்கை சீன்களையும் கத்தரித்து படத்தை ட்ரிம் ஆக்கியிருந்தால் படம் பார்ப்போரை கொட்டாவி விடவைத்திருக்காது.


படத்தின் ப்ளஸ்கள் 

1. சமந்தா 
எங்கே சமந்தா பற்றி காணவில்லை என்போருக்கு! படம் முழுக்க சமந்தா தான்.அல்லது சமந்தாவை முன்னிலைப்படுத்தியே படம் பண்ணியிருக்கிறார் கெளதம் என்றும் கூறலாம்.அழகோ அழகு அப்படி ஒரு அழகு.தராசின் இருபக்கமும் சமனாக வீற்றிருந்த காஜல்-சமந்தா போட்டியில் சமந்தா வெற்றிபெற்றுவிடுகிறார்.

ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா "ஜெஸ்சி"அளவுக்கு பலரை கவர்ந்திருக்காது என்பது உண்மை;காரணம் சமந்தாவின் பாத்திரம் அப்படி.ஜீவாவுக்காக ஏங்கும் ஆனால் ஈகோ கொண்ட பாத்திரம்.இதே ஜீவா சமந்தாவுக்கு ஏங்கும் வகையிலும்,சமந்தா கண்டுக்காத மாதிரியும் படம் வந்திருந்தால் சமந்தா நிச்சயம் ஜெஸ்சியை தாண்டி மனங்களில் இடம்பிடித்திருப்பாள். 

2. படத்தின் இறுதி ஒருமணிநேரம் 
எனக்கு படத்தின் இரண்டாம் பாதி பிடித்திருந்தது.அதிலும் இறுதி ஒரு மணிநேரம் ஜீவா,சமந்தாவுடன் ஒன்றிவிட்டேன்.அதுவும் இறுதி அரை மணிநேரம் மிக  அழுகையை தவிர்க்க போராடினேன் என்னுமளவுக்கு கவர்ந்திருந்தது. காதலை சொல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் தேடிவரும் துணையும்,அதனை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லவிடாமல் தடுக்கும் ஈகோவும் மாறி மாறி வந்து உணர்ச்சிவெள்ளமாக்கி விட்டிருந்தது.

அதுவும் அடுத்தநாள் காலை திருமணத்தை வைத்துக்கொண்டு முதல்நாள் இரவு சமந்தா ஜீவா இருவரும் தமது காதல் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கியமான இடங்களை போய் பார்க்கும் சந்தர்ப்பங்களில் "அட நாய்களே யாராச்சும் ஒருவராவது ஈகோவை விட்டு மனசை திறந்து பேசி தொலைங்கடா" என்று ஏங்க வைத்தது.
-------------------------------------
கெளதம் மேனன் படங்களுக்கு எப்பவுமே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது.நடுநிசி நாய்கள் வாங்கிக்கட்டியதாலும், விண்ணைத்தாண்டி வருவாயா'க்கு அடுத்து வரும் காதல் படம் என்பதாலும் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.காபி ஷாப்'பில் காபி சாப்பிடும் ஜீவா-சமந்தா படங்களை பலர் தத்தமது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவாக்கிவிட்டிருக்க மறுபக்கம் சமந்தா சமந்தா என்று பையன்கள் ஜொள்ளுவிட்டுக்கொண்டு இருந்தார்கள்.பெண்களில் பலருக்கு ஜீவா பிடித்த நாயகனாகி இருந்தார்.ரஹ்மான்-ராஜா ரசிகர்கள் மீண்டும் ஒருதடவை முட்டிக்கொள்ள பாடல்கள் சந்தர்ப்பம் கொடுத்திருந்தது என அனைத்து தரப்பும் இப்படத்தை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் நடந்தது?"நீதானே என் பொன்வசந்தம் " படு மொக்கை படமாகவோ அல்லது சுப்பர் ஹிட் காதல் படமாகவோ வந்திருக்க வேண்டியது.ஆனால் கெளதம் இரண்டுக்கும் இடையில் கொண்டுவந்து முடித்திருக்கிறார்.முதல் பாதி போன்றே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால் படம் படு மொக்கையாகவும்,இரண்டாம் பாதி போன்று முதல் பாதி அமைந்திருந்தால் படம் சூப்பர் ஹிட் ஆகவும் அடித்திருக்க வாய்ப்பிருந்தது.. தவறவிட்டுவிட்டார் கெளதம் மேனன்.படம் படு மொக்கையாக வந்திருந்தால் கூட கவலை வந்திருக்காது,இப்படி முடிந்துவிட்டதே நடுவில் என்று தான் கவலை. 

சமந்தா அழுது புலம்பி வெளிக்காட்டிய கவலைகளை அழாமல் வெளிக்கொணர்வதில் ஒரு ஆணாக வெற்றி பெற்றிருக்கிறார் ஜீவா. சமந்தாவுக்கும் நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தது படத்தில்.படம் முழுவதுமே இவர்களை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது.அவர்களை தவிர என்றால் சந்தானமும்,சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண் கேரக்டர் தான் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது.

ஹாரிஸ்/ரஹ்மான் இருந்திருந்தால் அவர்கள் படத்தை நிச்சயம் இதைவிட ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்று நிச்சயமாக கூறலாம்.அத்துடன் கௌதமும் டப்பா காலி போல தெரிகிறது.மீண்டும் மீண்டும் பழைய படங்களை ஞாபகப்படுத்தும் காட்சிகள்.சாய்ந்து சாய்ந்து, என்னோடு வாவா மற்றும் இடையிடையே ஒலிக்கும் நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன.

அங்காங்கே சில முத்த காட்சிகளும் உண்டு ஆங்கில பட சிச்சுவேசனில்..!

இது படத்தை பற்றிய "எனது"பார்வை மட்டுமே.எனக்கு பிடித்த விடயங்கள் பலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.பிடிக்காத விடயங்கள் பிடித்து போயிருக்கலாம்.சிலருக்கு இரண்டாம் பாதி பிடிக்கவில்லை ஆனால் எனக்கு நன்றாக பிடித்திருந்தது.


கட்டாயம் பாருங்கள் என்று சொல்வதை விட ஒருதடவை பார்க்கலாம் என்று சொல்லலாம்.காதல் பீலிங்கில் இருப்பவர்கள்,காதலிக்க இருப்பவர்கள், எப்பவாச்சும் ஒரு உறவுக்குள் நுழைய இருப்பவர்கள் "கட்டாயமாக" பரிந்துரைக்கிறேன். படம் படு குப்பை என்கின்ற ரீதியில் விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.முழுதாக பார்க்காமல் விட்டுவிடலாம் என்று மறுத்துவிட கூடிய படமல்ல இது.

கெளதம் இனிமேலும் ராஜாவை தெரிவுசெய்வார் என்று தோன்றவே இல்லை.அத்துடன் மற்றைய இயக்குனர்களும் இதனை முன்னுதாரணமாக கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.கெளதம் மேனன் அடுத்த படைப்பையாவது சிறப்பாக கொடுப்பார் என நம்புவோம்.மறுபடி சூர்யா,ஹாரிஸை நோக்கி தான் போகவேண்டும்.

படத்துக்கு எனது மார்க் - 60


Post Comment

Sunday, December 9, 2012

ஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்?



வெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய வரும்.ஏன் எதற்கு என்று காரணமின்றியே பொதுவிலிருந்து ஒழித்து மறைக்கப்பட்ட விடயமாகிவிட்டன முன்னைய காலங்களில் காதலும்;இப்போ காமமும்.அதற்க்கு அடுத்ததாக சமூகத்தில் எம்மை சுற்றி பெரியளவில் பரவிவரும் "வருத்தம்"கூட இதே வகையறா தான்.ஆம் அது ஒருவகையான வருத்தம் என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

புரியவில்லையா எதனை பற்றி கூறிக்கொண்டிருக்கிறேன் என்று? அண்மையில் கொழும்பு,பம்பலபிட்டி கடல்கரை ஓரமாய் ஒரு கார் ஒன்றினுள் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு இறந்துகிடந்தார்.கொலை தான்.,ஆனால் பணத்துக்காகவா இல்லை வேறு ஏதும் வெட்டுக்குத்தா  கோணத்தில் அனைவரும் ஜோசித்துக்கொண்டிருந்த சமயம் தான் அந்த கொலைக்கான காரணம் தெரியவந்தது,அதுவே கடந்த சில நாட்களாக "டாக் ஒப் த டவுன்"ஆக மாறி இருந்தது.ஆமாங்க கொலைக்கான காரணம் ஆண்-ஆண் காதல்/தொடர்பு/உறவு தான் என்று தெரிந்த கணத்தில், அனைவரும் உண்மையில் அதிர்ந்துதான் போய்விட்டார்கள்.

ஒரு வர்த்தகரின் நண்பருக்கும், வர்த்தகரின் மகனுக்குமிடையிலான ஹோமோ உறவு பற்றி குறித்த வர்த்தகருக்கு தெரிய வந்து,அதனை நிறுத்துமாறு நண்பரை எச்சரித்திருக்கிறார் வர்த்தகர்.பெற்றோர் சொல்லி எத்தனை பிள்ளைகள் காதலை விட்டிருக்கின்றனர்?அது போல தான் இந்த உறவும் அவர்களால் கைவிட முடியாத உறவாகி தொடர,வேறு வழி தெரியாத குறிப்பிட்ட வர்த்தகர் கடல்கரை ஓரமாய் ஒரு காருக்குள் தனது நண்பரை கழுத்துவெட்டி கொலை செய்திருக்கின்றார்.போலீஸ் எப்படியோ மோப்பம் பிடித்து கொலையாளியை கைதுசெய்திருக்கிறது. 

                

ஒருசில மாதங்களுக்கு முன்னராக பேஸ்புக்கில் நான் கொழும்பில் ஒரு இடத்தில் இரு ஆண்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பதை பார்த்தேன் என்று ஒரு நிலைத்தகவலை பகிர்ந்த போது,"இவன் சும்மா பேமசுக்காக கதை விடுறான்"என்கின்ற ரீதியில் தான் சிலர் பேசிக்கொண்டார்கள்,ஏன் என்னிடமே நீ பொய் தானே சொல்கிறார் என்று தான் கேட்டார்களே தவிர அதனை ஒரு விளிப்புணர்வாய் எத்தனை பேர் கருதியிருப்பார்கள் என்றால் மிக சொற்பமாகவே இருந்திருக்கும்.

இதைப்பற்றி மேலும் எனது நண்பர்களிடம் கிலாகித்த சமயத்தில் தெரிந்துகொண்டது என்னவெனில்,இப்படியான "ஓரினச்செயற்க்கையாளர்கள்" வருடாந்தம் ஒரு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை தலைநகரில் நடாத்தி வருகிறார்கள்,அதுவும் ஒவ்வொரு அதனில் வருடமும் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து செல்கிறது என்பது தான்.இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கொல்கத்தா,மும்பை,சென்னை என்று இத்தகைய பேரணிகள் கூட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. 



கடந்தவாரம் பொரளை செல்லும் பேரூந்தில் ஒருத்தனை நையப்புடைத்து பேரூந்தைவிட்டு வெளியே தள்ளிவிட்டான் ஒருத்தன்.என்ன காரணம் என்று கேட்டதற்கு பக்கத்தில் நின்ற ஒரு பெண்ணின் கூந்தலை முகர்ந்தானாம்.பிழை தான்;சரி என்று சொல்லவில்லை,ஆனால் இதைவிட பெரிய கொடுமைகள் வெளியில் தெரியாமலே நடந்தேறுகின்றன. பேரூந்துகளில் சில ஆண்களின் பெண்களை நோக்கி நீட்டிய "பீரங்கி"கள், பெண்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் ஆண்களின் பக்கம் கூட திரும்புகின்றனவோ என்கின்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே தொடர்கிறது.

இதனாலேயே நான் சில சமயங்களில் பேரூந்தில் இருந்து வருவதை தவிர்த்து நின்ற நிலையில் பிரயாணம் செய்கின்றேன்.நான் மட்டுமல்ல பல நண்பர்கள் இதனை "அனுபவித்திருப்பார்கள்"உணர்ந்திருப்பார்கள்.இருக்கையில் இருக்கும் போது எமது தோள்களை இந்த பீரங்கிகள் எப்போதும் குறிவைக்க தவறுவதில்லை. இவர்கள் காமுகர்களா;அப்படியானால் எங்களுக்கே இப்படி என்றால் பெண்களின் நிலை? அல்லது இவர்கள் அவர்களா?ஓரின பால்கவர்ச்சி கொண்டவர்களா?

இந்த குழப்பத்துக்கு விடை கண்டுகொள்வது மிக கடினமானது.காமுகனாய் இருந்தால் அந்த இடத்திலேயே அவனை நாறடித்து விடலாம்.அதுஒன்றும் பெரியவிடயம் இல்லை.ஆனால் இவர்கள் அவர்களாக இருந்தால்?அதே தண்டனை இவர்களுக்கும் பொருந்துமா?அவ்வாறு செய்வதால் அவர்களின் உணர்சிகளை கேவலப்படுத்தி விடுவோமா என்கின்ற குழப்பம் பெரும்பாலான சமயங்களில் எனது வாயையும் கையையும் கட்டிப்போட்டுவிடுகின்றன.



சமூகத்தால் அடக்கப்படும் சில உணர்ச்சிகள் தான் ஒருசமயத்தில் போராட்டமாய் வெடிக்கின்றன.அது இவர்களுக்கும் பொருந்தும் தானே?அனைத்து தரப்பினர்களாலும் புரிந்துகொள்ளப்படாத அவர்களின் விருப்புவெறுப்புகள் ஒருகட்டத்தில் அவர்களை பாதித்து அதுவே அவர்களை வீரியமாக்கவும் செய்யும் என்பது தெரியாததல்ல.ஆனால் தனிப்பட்ட உணர்சிகளை மற்றையவர் சம்மதம் இல்லாமல்  பொது இடத்தில் பிரயோகிப்பது முற்றிலும் தவறானது அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறை கூட ஓரினச்சேர்க்கை தவறானது என்று அறிக்கை விட்டவுடன்,இது ஒரு "நோய்" என்று கருதும் தோற்றப்பாடு இன்றுவரை தொடர்கிறது.பிள்ளை பிறக்க வாய்ப்பில்லாத எந்தவொரு உறவும் பாவம்.அது இயற்கைக்கு புறம்பானது என்று கிறீஸ்தவ சமயமும்  எதிர்த்ததால் இவர்களின் பாடு பெரும் பாவமாகிவிட்டது.

ஓரினச்செயர்க்கை என்பது பெரும்பாலானோருக்கு பிறவியிலேயே வந்துவிடுகிறது,கர்ப்பத்தின்போதான ஹோர்மோன்களின் குளறுபடியால் இது ஏற்படுகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது.அப்படி என்றால் இது அவர்களின் தவறல்லவே.மாறாக குழுவாக செயல்படும்போதும்,சிறுவயதில் குழப்பமான சூழலில் வளரும்போதும் இத்தகைய தம்-பால் கவர்ச்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்க்கான சரியான காரணம் இன்னமும் தெரியவராத நிலையில் ஒவ்வொருத்தரும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவகையில் பெரும்பாலானோர் எதிர்ப்பால் மீதான நாட்டமும் சிலர் தம்-பால் மீதான நாட்டத்தையும் கொண்டிருக்கின்றனர். 

குற்ற உணர்வுஎன்பது  ஓரினச்செயர்க்கையாளர்களுக்கு எந்தவொரு கணமும் ஏற்படக்கூடியது தான்.பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை விட ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெருமளவிலான குற்றவுணர்வால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.ஆண் ஓரின செயற்க்கையாளர்களில் ஒருவர் ஆணாகவும்,மற்றையவர்  தங்களை பாவனைப்படுத்தி கொள்வர்.இதில் பெண்ணாக தன்னை உருவகப்படுத்தும் ஆண் தான் சமூகத்தால் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.காரணம் எமது சமூகம் ஒரு ஆண் பெண்ணாக நடப்பதை எத்தருணத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை.


      

ஆண்-பெண் உறவு என்கின்ற நல்ல கட்டமைப்புக்குள் இருக்கும் இந்த சமுதாயம்,கலாச்சாரம் எல்லாம் இவர்களை அனுமதிப்பதன் மூலம் குழப்பமடைந்து சிதைந்துவிடும் என்பது தான் பலரின் கருத்தாக இருக்கிறது.ஆனால் இந்த ஆண் பெண் உறவுகளுக்கு பின்னால் ஒளிந்து மறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான கள்ள உறவுகள்,முறையற்ற உறவுமுறைகள் ஏன் ஹோமோ உறவுகள் கூட இதுவரை காலமும் மழுங்கடிக்கப்பட்டும் மூடி மறைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அல்லது தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் இருந்திருக்கின்றனர்.

சரி இவற்றை மறைத்து,இவர்களின் உணர்வுகளை அடக்கித்தான் வைத்திருப்போம் என சமூகத்தில் அனைவரும் கிளம்பினால் வெகு சீக்கிரம் ஒரு நாள் இவர்களது எதிர்கால சந்ததியில் ஒரு பிள்ளை வந்து தைரியமாக "அப்பா,நான் ஒரு gay" என்றோ இல்லை மகள் வந்து நான் ஒரு லெஸ்பியன் என்றோ வெளிப்படையாக துணிந்து கூறும் காலம் ஒன்றும் தொலைவில் இல்லை.இதை நான் கூறுவதற்கு காரணம், அந்தளவில் எம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலே இவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 

ஒரு சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன,திருமணங்களும் நடந்தேறுகின்றன முறைப்படி.அதுபோல சில பிரபலங்கள் கூட தாங்கள் ஒரு ஹோமோ செக்சுவல் தான் என்று வெளிப்படையாக அறிவித்தவண்ணமிருக்கின்றனர். மறுபக்கம் பேரணி,ஆர்ப்பாட்டம் என்றும்,"லிவிங் டுகெதர்" என்றும் அவர்கள் படிப்படியாக சமூகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இதன் வளர்ச்சி அடுத்த ஐந்து பத்து வருடங்களில் அபரிதமாக இருக்கலாம். 

இவர்களால் தான் எயிட்ஸ் நோய் கூட பெறுமளவில் பரவுகிறது என்கின்ற சமூகத்தின் பயத்தினால் இவர்கள் மீது ஒரு கேவலமான பார்வையே எப்போதும் சமூகத்திடமிருந்து இவர்களுக்கு பரிசாக கிடைக்கிறது.இன்றைய இளைய சமுதாயம் ஓரளவுக்கேனும் இவர்களை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம்.ஆனால் இது போதாது.முழு சமுதாய அளவில் இவர்கள் பற்றியும்,இவர்களது உணர்வுகள் பற்றியும் ஒருவித விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.அவர்களை முதலில் சமூகம் அங்கீகரிக்கட்டும்;அதன்பின்னர் அவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பொதுப்படையாக பேசலாம்.

குறிப்பு: எந்த கருத்தாக இருந்தாலும் இங்கு பகிருங்கள்,இன்று இதனை பேஸ்புக்கில் பகிரவுமுள்ளேன்.மேலதிக கருத்துபரிமாற்றங்களுக்கு அங்கும் தொடரலாம்.
தொடர: மைந்தன் சிவா


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...