Friday, September 26, 2014

பிரம்ம குமாரிகள்..!


பிரம்ம குமாரிகள் பற்றிய எனது பதிவிற்கு கிடைக்கும் எதிர்வினைகள் கொஞ்ச நஞ்சமல்ல.நேரிலும், போனிலும் மணிக்கணக்காக விளக்கங்களும் விமர்சனங்களும் மிரட்டல்களும் கூடவே கணிசமான பாராட்டுகளும்.

உலகம் முழுக்க 190+ நாடுகள்ல நம்ம அமைப்பு இருக்கு.ஏன் ஐ.நா கூட அங்கீகரிச்சிருக்கு.உனக்கென்ன பிரச்சனை என்று இப்போதும் ஒருவர் போனில் அழைத்து அன்பாக 'பாராட்டியிருந்தார்'.சரி எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று துண்டித்துவிட்டேன்.
இன்னொருவர் அழைத்து முருங்கைக்காய்க்கும் எழுச்சிக்கும் சம்பந்தமே கிடையாது.எல்லாம் பாக்கியராஜ் பேன்ஸ் பண்ற அட்ராசிட்டி என்றார்.

வேறொருவர் 'டேய் நான் அஞ்சு வருசமா ஆந்திராவுக்கு போய்வந்துகிட்டிருக்கேன்..ஒருதடவ நீயும் வா,அப்போ தான் பிரம்மகுமாரிகளோட சக்தி என்னென்னு தெரியும்'என்று அழைத்தார்.
ஆந்திராவில் இவர்கள் தங்கள் தியான வலிமையால் தண்ணியே இல்லாமல் விவசாயம் செய்கிறார்கள்.கண்ணால் பார்த்தே காயை பழுக்க வைக்கிறார்கள் என்றார்.அப்படியே மெரசலாகிட்டேன்..!

அனைவரும் தாங்கள் கத்துகிட்ட மொத்தவித்தையையும் என்னிடம் இறக்கித்தொலைக்கிறார்கள்.சீக்கிரமே நானும் பிரம்மகுமாரனாக டியூன் ஆகிவிடுவேன் போல்தான் தெரிகிறது..!

------------------------------------------
இனி பதிவு:

ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருப்பான்.17-18வயதிருக்கும். கதைக்கும் ஆங்கிலத்தை வைத்து நிச்சயம் ஏதும் சர்வதேச பாடசாலையில் படித்திருக்கவேண்டும் என்று நினைத்தேன்.
அந்த உயர்தர உணவகத்தில் கேக்&சிற்றுண்டி ஒர்டர் செய்ததை,எடுத்துப்போக வந்திருந்தான்.எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று ஒருதடவை கடைக்காரரிடம் உறுதி செய்துகொண்டான்.

'அசைவம் இல்லைத்தானே?'
'இல்லை சேர்'

'வெங்காயம் இல்லை தானே?'
'இல்லை சேர்'

'உள்ளி சேர்க்கேல தானே?'
'இல்லை சேர்'

'இஞ்சி?'
'இல்லை சேர்'

'சரி பில்லை தாங்க'என்று கேட்டு வாங்கிக்கொண்டான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.'ஏன் தம்பி,இப்பிடி விசாரிச்சீங்க?' என்று கேட்டேன்.

'நான் பிரம்மகுமாரிகள்ல மெம்பரா இருக்கேன்.அங்க அசைவம் சாப்பிடக்கூடாதெண்டு சொல்லியிருக்காங்க என்றான்.

'அப்போ எதுக்கு வெங்காயம் உள்ளி எல்லாம்?'
'அங்க,எல்லா பொண்ணுகளையும் எங்கட சகோதரிகள் மாதிரித்தான் பாக்க,பழக சொல்லித் தர்றாங்க.அவங்கள நிமிந்து கூட பாக்கிறதில்லை.இந்த வெங்காயம் அதுகள சாப்பிட்டா ஆண்மை உணர்ச்சித்தூண்டல்கள் அதிகரிச்சு எதிர்ப்பால் பக்கம் எங்கள தூண்டும்..அதனால தான் அதையும் சாப்பாட்டில சேத்துக்கிறதில்லை'என்றான்.

'சரி போய்ட்டுவா தம்பி'என்று அனுப்பிவைத்தேன்.பிகர் பார்க்க வேண்டிய வயதில் உணர்ச்சிகளை முழுமையாக அடக்க சொல்லித்தருகிறார்களாம்.வெளியே விசாரித்துப் பார்த்ததில் அந்த அமைப்பில் உயர் பதவிகளில் இருப்பவர்களெல்லாம் 'அனைத்தையும்'அனுபவித்தவர்கள் தான்.தங்கள் காலம் முடிந்துவிட,வாழவேண்டிய இளவட்டங்களை உள்ளே ஈர்த்து 'படுத்திக்கொண்டு' இருக்கிறார்கள்.

ஏற்கனவே பல ஆண்டுகள் அதில் மெம்பராக இருந்து,வெறுத்து வெளியே வந்த நண்பரிடம் இவற்றைக் கூறி,ஏன் இப்பிடி?நீ ஏன் வெளிய வந்தே?என்னாச்சு? என்று கேட்டேன்.

'இப்பிடித்தான் மச்சான் நானும் கொஞ்ச நாள் பொண்ணப் பாத்தா மண்ணப்பாத்து நடந்தன் மச்சான்..வெங்காயம் முருங்கக்காய் எல்லாம் தொடுறதே இல்லை.எல்லாப் பொண்ணுகளுமே எங்கட சிஸ்டேர்ஸ்ன்னு சொல்லி சொல்லி ஊக்குவிச்ச பெரிய தலையள் கொஞ்ச நாளிலையே உள்ளுக்குள்ளயே சில பொண்ணுகளோட கசமுசான்னு தெரிய வந்திச்சு.சில பெருசுக நமக்கு அட்வைஸ் சொல்லிட்டு,தாங்க ஒரு பிகர செட் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க.அத பாத்தோன தான் எனக்கு எல்லாம் வெறுத்துப் போச்சு.இவங்கள நம்பிகிட்டு விடிய புருசனுக்கு தேத்தண்ணி போட்டுக்குடுக்காம கூட தியானத்துக்கு ஓடிவருவாளுக பொம்பிளைங்க! இவங்களப்போல ஆக்களும்,இவங்கள நம்பி லச்சக்கணக்கில காச கொட்டுற பெரும்புள்ளிகளும் தான் இவங்கட பலம். அவங்க இருக்கிற வரைக்கும் இவங்கள ஒண்டும் செய்ய முடியாது.ஆனா,இந்த ஜெனரேஷன் பிள்ளைங்க இவங்க பின்னாடி போறாங்க எண்டுறது தான் பெரிய ஆச்சரியம்' என்றான்.

செய்யும் தொழிலையும்,தன்னோட குடும்பத்தையும் சரிவர பாத்துக்கிறவனுக்கு கடவுளும் தேவையில்லை,கள்ளச் சாமியும் தேவையில்லை..!


Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...