'பில்லா-2' படத்தை அடுத்து அஜீத் நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் விஜய் தான் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. இல்லை.. இயக்குனர் விஜய் இயக்க நடிகர் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.
======================================================================================== |
கௌதம் மேனன், மிஷ்கின், ஜனநாதன் என்று அடுத்தடுத்து நட்சத்திர இயக்குநர்களின் புராஜெக்ட்டுகளில்... ஜீவா. இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், சமீபத்தில் சிம்பு பற்றி வெளியிட்ட ஸ்டேட்மென்ட் பரபரப்புத் தீயைப் பற்றவைத்தது. ''அப்படி என்னதான் ரௌத்திரம்?'' என்று அறிய விரும்பினேன்.
''எப்படி இருக்கு 'நண்பன்’ அனுபவம்?''
''இது இந்தி ரீ-மேக் படமா இருந்தாலும், ஷங்கர் சார் அதைத் தமிழுக்குத் தகுந்த மாதிரி அழகான அனுபவமா மாத்தி இருக்கார். பல வெற்றிகளுக்குப் பிறகும் எளிமையா இருப்பது, படப்பிடிப்புக்கு முன்தயாரிப்புகளோட வர்றதுனு ஷங்கர் சாரோட வெற்றிக்கு ஏகப் பட்ட காரணங்கள். 'ஷங்கர் சார் ஷூட்டிங் ஸ்பாட்டை இவ்வளவு கலகலப்பா இதுக்கு முன்னே பார்த்ததே இல்லை’னு எல்லோரும் சொல்றாங்க. அப்படி ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் ரெகுலேஷன் முன்னாடி இருந்ததுபோல. நாங்க போய் எல்லாத்தையும் உடைச்சுட்டோம்!''
''நாலு வார்த்தைகளில் கேள்வி கேட்டால், இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வது விஜய் வழக்கம். மனிதர் ஸ்பாட்ல எப்படி?''
''விஜயைவிட நான் 10 வயசு சின்னவன். ஆனா, மனிதர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பார். ஏதாவது சீரியஸான ஷாட்டுக்கு முன்னாடி அவரைப் பயங்கரமாக் கலாய்ச்சுடுவேன். 'டேய்... நீ தயவுசெஞ்சு பக்கத்துல நிக்காதடா! டேஞ்சரஸ் ஃபெலோ நீ!’னு ஜாலியா மிரள்வார். ஒருமுறை அந்தமானில் படகில் போயிட்டு இருக்கும்போது... பேய் மழை. எந்தத் தீவில் இருக்கோம்னு தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. 'டேய்... இங்கேயே ஏதாவது நண்டு நத்தைகளைப் பிடி. சுட்டுச் சாப்பிட்டுப் பொழுதைக் கழிப்போம்’னு சொல்லிட்டு, ஜாலியா இருந்தார் விஜய்!''
''கௌதம், மிஷ்கின்னு அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி இருக்கிறீர்களே?''
''உண்மையில் கௌதம் மேனனைத் தவிர இதுவரை வேறு யாரிடமும் நானாகச் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. 'உங்க மாதிரி ஒரு டைரக்டர்கூட வொர்க் பண்ணணும்னு ஆர்வமா இருக்கேன். இல்லைன்னா, 'குவார்ட்டர் சொல்லு மச்சி’னு ராயபுரம் பக்கமே செட்டில் ஆகிடுவேன் போலிருக்கு’னு சொன்னேன். 'என்ன ஜீவா இப்படிச் சொல் றீங்க. நானே லோக்கலா ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன்’னு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கௌதம். 'லோக்கலா எடுத்தாலும் அதிலேயும் உங்க டச் இருக்குமே’ன்னேன். சமந்தாதான் ஜோடி. சந்தானமும் இருக்கார். கலக்கலாக் கலாய்ப்போம்!''
''மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் 'முகமூடி’ பற்றி சொல்லுங்க?''
''காதல், டெக்னாலஜினு ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டுக்குத் தேவையான எல்லா விஷயங்களும் 'முகமூடி’யில் இருக்கு. குங்ஃபூ பிராக்டிஸ், பாடி பில்டிங்னு ஏகப்பட்ட வேலைகள். சிக்ஸ் பேக் வைக்க முடியாட்டியும் அட்லீஸ்ட் நாலஞ்சு பேக் வெச்சாத்தானே மரியாதையா இருக்கும்? கண்டிப்பா 'முகமூடி’ பார்ட் 1, பார்ட் 2 வரும்னு நம்பறேன்.
'வந்தான் வென்றான்’ முடிச்சாச்சு. பிரமாதமா வந்திருக்கு. காமெடி, பாடல் கள்னு எல்லாத்தையும் கதையோட அழகாக் கோக்குறதுல கண்ணன் சார் ஸ்பெஷல். அடுத்து, நானும் ஜெயம் ரவியும் ஜனநாதன் சார் படத்தில் நடிக்கிறோம். ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் ஜனா சார் படத்தில் இருக்கும். அதைத் தொடர்ந்து நானும் ஆர்யாவும் சேர்ந்து நடிக்கலாம்னு இருக்கோம். அந்தப் படத்தை எஸ்.எம்.எஸ். ராஜேஸ் இயக்குவார். லைஃப் ஜாலியா இருக்கு பாஸ்!''
''ஆமா, நீங்களும் சிம்புவும் ஒரே தெருவில்தானே குடியிருக்கிறீர்கள். சமீபத்தில் 'சிம்பு எனக்கு நண்பன் இல்லை’ என்று சொல்லிவிட்டீர்களே, ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் பிரச்னை?''
''எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்னை. 'கோ’ முதலில் அவர் நடிக்க வேண்டிய படம். பிறகு எனக்கு வந்தது. 'கஜினி’... அஜீத் சார் நடிக்க வேண்டியது, 'தூள்’, 'சிங்கம்’ இரண்டும் விஜய் சார் நடிக்க வேண்டியதுனு ஏற்கெனவே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன் உதாரணங்கள் இருக்கு. முதலில் ஒரு படத்துக்கு ஒரு நடிகர் கமிட் ஆகி, பிறகு இன்னொரு நடிகர் நடிப்பது சாதாரணமான சம்பவம்.
அந்த வகையில்தான் 'கோ’ படத்தில் நான் நடிச்சேன். அடுத்து சிம்புவுக்குச் சொன்ன கதையைத்தான் கௌதம் சார் எனக்காகப் படம் பண்ணப்போறார்னு ஏகப் பட்ட வதந்திகள். ஆனால், இது புது ஸ்க்ரிப்ட். இப்படிப் பத்திரிகைகளில் கிசுகிசுவாக வந்த விஷயம் இது. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், 'சிம்பு உங்கள் நண்பரா?’னு கேட்டாங்க. 'இல்லை’னு சொன்னேன். தொடர்ச்சியா சிம்புவைப் பற்றியே கேள்விகள் வர, 'சிம்புவைக்கூட நம்பிடலாம். அவர் நேருக்கு நேர் சண்டை போடக்கூடியவர். ஆனா, நண்பர்கள் மாதிரி கூடவே இருப்பவர்களிடம்தான் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்கதான் பின்னாடி வந்து குத்திட்டுப் போயிடு வாங்க’னு சொன்னேன். ஆனால், நான் சொன்னது அப்படியே தலைகீழா மாறி பத்திரிகைகளில் நெகட்டிவா வந்துடுச்சு. டாம் குரூஸ் எப்படி எனக்குப் பழக்கம் இல்லையோ, நண்பர் இல்லையோ, அதே மாதிரிதான் சிம்புவும் எனக்கு நண்பர் இல்லை. அதே நேரத்தில் எனக்கு அவரோடு எந்தப் பிரச்னையும் இல்லை. சம்பாதிப்பதற்காக நான் சினிமாவுக்கு வந்தவன் கிடையாது. நான் பிறக்கும்போதே 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’தான். சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் அதிகம். நல்ல படம் பண்ணணும், எல்லோரோடும் ஃப்ரெண்டா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். ஏனோ சிம்புவுடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு செட் ஆகலை. மற்றபடி விஜய் சாரில் தொடங்கி விஷால், ரவி, ஆர்யானு மற்ற எல்லோரும் ஃப்ரெண்ட்ஸாத் தான் பழகுறோம். நான் என் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமே நம்புறவன். மற்றபடி எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை!''
நன்றி விகடன்