பிடித்த புத்தகங்கள் தொடர்பிலானஅழைப்பிற்கு நன்றி
Bella Dalima.இது தான் என் பட்டியல்;
1.பொன்னியின் செல்வன்-கல்கி
12,16,19 என்று மூன்று வயதுகளில் வாசிக்கப்பட்டது.ஒவ்வொரு வயதிலும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது, சுவாரசியம் குறையவேயில்லை.ஆரம்ப முப்பதுகளில் மீண்டும் வாசிப்பதாக திட்டம்!
2.புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
பாண்டியன் பார்வையில் என்னை உலகம் சுற்றும் வாலிபனாக்கி பாண்டியனாகவே வாசித்தேன்.இல்லை பார்த்தேன்.இல்லை அத்தனை புயல்களையும் எதிர்கொண்டேன் என்றே கூறலாம்.
3.ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
இருநூற்றிச்சொச்ச பக்கங்கள் தான்.முழுதாக மூன்று மணித்தியாலங்கள் போதும் என்றுதான் கையில் எடுத்தேன்.
ஆனால் இரண்டு வாரங்கள் வரை நீண்டது வாசித்துமுடிய!
இத்தகைய கனத்தை வேறெந்த புத்தகங்களிலும் அனுபவித்ததில்லை..!
4.புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
ஒரு மரத்தை சுற்றி மனிதர்களை படிப்பித்த சு.ராவின் முதல் படைப்பு!
5.கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
சுஜாதாவின் அறிவுக் களஞ்சியம் எனலாம்.தொடாத ஏரியாக்களே இல்லை.ஏராளமான புதுவிடயங்கள் தெரிந்துகொள்ளவும்,அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவியது.சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு பரிணாமங்களை பதித்துவைத்த படைப்பு.
“…ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்…”
“‘நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.’ இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்.”
“…இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது…”
6.தாய்-மக்ஸிம் கார்க்கி
நான்காம் ஆண்டு படிக்கும்போது(ராணி காமிக்ஸ்,அம்புலிமாமா காலத்தில்)எதேச்சையாக கையில் சிக்கிய புத்தகம்.இத்தனை பெரிதாக என்ன இருக்கிறது என்று வம்புக்கு வாசித்து முடித்த புத்தகம்.அதன் அழுத்தம் மீண்டும் சில வருடங்கள் கழித்து வாசிக்க வைத்தது.மக்ஸிம் கார்க்கியின் எழுத்தின் தாக்கம் இன்னமும் மனதில்!
7.ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா
8.ராஸலீலா - சாரு நிவேதிதா
என்னதான் விமர்சனங்கள்(தீவிர வி.வ மெம்பர்களாக இருந்தாலும்) ராஸலீலா சாருவால் மட்டுமே எழுதக்கூடிய படைப்பு என்பதில் சந்தேகமில்லை.
9.விஷ்ணுபுரம்-ஜெயமோகன்
படித்தால் கண் வலிக்கும்,முதுகு வலிக்கும்;முதன் முதலில் கை வலித்த புத்தகம்.ஆயிரம் பக்கங்களை தொட்டிருக்கும்(இதற்கு போட்டியாகத்தான் சாரு எக்சைல்-2ஐ 3000 பக்கங்களில் வெளியிடுவதாக கேள்வி ). ஜேம்ஸ் கமரோன் மாதிரி சிந்திக்கமுடியாத ஒரு வெளியில் இத்தகையதொரு கற்பனைப்படைப்பை படைத்ததற்காகவே பாராட்டப்படவேண்டியது.
10.காமசூத்திரா(தமிழில்)- வாத்சாயனர்
கிளர்ச்சிகளின் உச்சம்.என்றாலும்,பாலியலை தாண்டி, வாழ்க்கைப்பாடங்கள் ஏராளமானவற்றையும் வாழ்க்கை பற்றிய பூரண புரிதலையும் கற்றுத்தந்த நூல்..!
குறிப்பு:
1.எனக்கு பிடித்தது/பாதித்தது மட்டுமன்றி மற்றையோரும் வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தகங்களை தான் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன்.
2.தமிழ் புத்தகங்கள் பற்றிய தொடர் பதிவினை ஆங்கிலத்தில் பதிவதில் துளியும் சம்மதமில்லை.
3.பட்டியலில் ஆங்கில புத்தகங்களை எதிர்பார்த்து ஏமாந்திருந்தால் மன்னிச்சூ.ஆங்கில இலக்கியம் படித்தபோது கட்டாயமாக்கி இருந்தமையால் மூன்று ஆங்கில குறும் நாவல்களைப் படித்திருந்தேன்.அவை தான் இறுதியானதும் கூட!
4.யாரையும் தொடர அழைக்கவில்லை.காரணம்,ஏற்கனவே ஏராளம் பட்டியல்களால் நானே சோர்ந்துவிட்டேன்.+ ஒரு சிலரை மட்டும் அழைப்பதில் இஷ்டமில்லை.
5.இது என் தனிப்பட்ட பட்டியல்.யாருடைய அழுத்தங்களும் இதில் செல்வாக்கு செலுத்தியிருக்கவில்லை.