சமந்தா மற்றும் காஜலின் படங்களை 'சாட்டில்' அனுப்பிவிட்டு,'உங்க சாய்ஸ் இதில எது?'என்று யாராவது கேட்கும்போதெல்லாம் எனது தெரிவு சமந்தாவாகத் தான் இருக்கிறது.இருபத்தெட்டு வயதாகும் காஜலை,மாற்றான்-துப்பாக்கி படங்களுடன் சலித்துவிட்டது.என்ன தான் 'மேக்கப்' செய்துகொண்டாலும்,அந்த வயதுக்குரிய ஒரு முதிர்ச்சி காஜலில் தெரியத்தொடங்கிவிட்டது.பல பெண்களுக்கு பிந்திய இருபதுகளில்,உடல் பருமன் அதிகரித்து இடுப்பின் கீழே சகிக்கமுடியாத அளவுக்கு சதை போட்டு,மன அளவில் இளமையாக இருந்தாலும்,உடல் 'நீ ஒரு அம்மா தான்'என்று கட்டம்போட்டு காட்டிவிடும்.ஆனால் சமந்தாவின் உடல்வாகு,அவர் பிந்திய இருபதுகளிலும் இப்படியே தான் இருப்பார் என்கின்ற ஒரு உள்மனது மதிப்பீட்டின் காரணமாய்,இப்போது சில மாதங்களாய் கேட்பவர்களுக்கெல்லாம் சமந்தா என்கின்றேன்.இதுவே சித்தார்த்துடன் அடுத்தமாதம் கல்யாணம் என்று செய்திவந்தால்,அடுத்த நிமிடமே சமந்தாவுக்கு துரோகி பட்டம் கட்டிவிட்டு எனது தெரிவு உடனடியாய் இன்னொருவர் பக்கம் மாறத்தான் போகிறது.
****
சாதாரணதர பரீட்சை முடித்து உயர்தரம் ஆரம்பிக்கும்.உயர்தரத்தில் முதலாவது
தவணை செம விறுவிறுப்பாய் இருக்கும்.எதிர்காலத்தில் டாக்டர் இஞ்சினியர்
ஆகவேண்டும் என்ற தீராத தாகம் இருப்பவர்கள் தாமாகவே கணித- விஞ்ஞான துறையை
தேர்ந்தெடுத்திருப்பார்கள்.இது தான் நமக்கு சரி என்று மறுபக்கம் கலை-வர்த்தக
பிரிவை அரைவாசிப்பேர் தேர்ந்தெடுப்பார்கள்.ஆனால் இந்த கணித விஞ்ஞான
துறையில் எமது பிள்ளை டாக்டராக, இஞ்சினியராக வரவேண்டும் என்ற ஆசையுடன்,தமது
விருப்புக்காக அன்றி,பெத்தவங்க விருப்பத்துக்காக, கட்டாயத்துக்காக சேர்ந்த
கூட்டம் தான் அதிகமாக இருக்கும்.தனக்கு பிடிக்காததை இன்னொருத்தன் தெரிவு செய்து புகுத்தினால் அதை மூளையும் மனதும் எந்தளவுக்கு
அனுமதிக்கும் என்பது சிறிது நாட்களிலேயே அவர்களுக்கு தெரிய
வந்துவிடும்.முதலாம் தவணை பரீட்சையிலேயே மூன்று பாடமும் இருபது,முப்பது
என்று மார்க் வந்திருக்கும். இதற்க்கு மேலும் இருந்தால் தப்பிப்பிழைப்பது கடினம் என்று தெரிந்து இரண்டாம் தவணை தொடக்கத்தில் வர்த்தக பிரிவு வகுப்பில் முன்வரிசைகளை அலங்கரித்த வரலாறு பலருக்கு உண்டு.பாடசாலைக்கு எந்தளவு தாமதமாக வந்தாலும், வர்த்தகப்பிரிவில் முதல் வரிசை எப்படியும் 'ப்ரீயா' தான் இருக்கும்.சாதாரண தர பரீட்சையில் 'A'
சித்தி வேண்டாம் என்று நானாகவே ஒதுங்கிகொண்ட பாடங்கள் இரண்டு.ஒன்று
கணிதம்,மற்றையது விஞ்ஞானம்.எவ்வளவு தான் முயன்றும் இந்த இரு பாடைகளும்
சாரி,பாடங்களும் எனக்கு முரண்டுதான் பிடித்தது. அதனால் இவை இரண்டையும் தவிர்த்துவிட்டு மற்றைய எட்டு பாடங்களிலும் கவனத்தை செலுத்தினேன்.நான் எதிர்பார்த்த பரீட்சை முடிவு 8 'A' & 2 'B'.கணிதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் 'B' தான் என்று விடைத்தாள் திருத்தப்படு முன்பதாகவே முடிவுசெய்திருந்தேன் நான். முடிவுகள் வெளிவந்தன. 7 'A' & 3 'B' என்று.எதிர்பார்த்த இரு பாடங்களுக்கும் 'B' கிடைத்ததில் பெரிய சந்தோசம். எதிர்பாராமல் ஒரு பாடத்துக்கு 'B' கிடைத்தது.அது எப்படி என்று இன்னமும் தான் எனக்கு புரியவில்லை.ஆங்கிலமா? ஆங்கில இலக்கியமா?புவியியல்?ம்ம்ஹும் அந்தப்பாடம்,தமிழ்..!எது
எப்படியோ உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவை தெரிவு செய்ய இந்த இரண்டு
'B'க்களும் பேருதவி புரிந்ததனால் இன்னமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
*****
95 இல் யாழிலிருந்து இடம்பெயர்ந்து வரணிக்கு போய் சிறிது காலம்
இருந்துவிட்டு அதன் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றோம்.இரண்டாம் ஆண்டு
படித்துக்கொண்டிருந்தேன். கிளிநொச்சியில் நிம்மதியாக ஐந்தாறு
மாதங்கள்..மீண்டும் அங்கிருந்து இடப்பெயர்வு.இம்முறை அக்கராயன்.புலிகளின் பகுதியிலிருந்து இலகுவாய் வெளியே அவர்களின் கட்டுப்பாடற்ற பகுதிக்கு சென்றுவிட முடியாது.'பாஸ்' முறை,ஆள் பிணை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும்.அப்பா வியாபாரம் என்பதனால்,அடிக்கடி இடம்பெயர்ந்துகொண்டிருந்தது ஏராளமான இழப்புகளை கொடுத்திருந்தது.சாம்பலிலிருந்து எழுந்து பறப்பது என்பது தமிழர்களுக்கு பழக்கப்பட்டுவிட்ட ஒன்று.ஒவ்வொரு தமிழ் குடும்பமும் குறைந்தது இரண்டு மூன்று இடப்பெயர்வுகளை
சந்தித்திருக்கும்.முதல் இடப்பெயர்வில் 50வீதமான பொருட்கள்
எஞ்சும்.இரண்டாவது இடப்பெயர்வில் அது 25வீதமாகும்.மேலும் மேலும்
இடம்பெயருகையில் முக்கிய ஆவணங்கள்,நகை,பணம் மட்டும் தான் கையில்
எஞ்சியிருக்கும்.அதனால் அக்கராயனிலிருந்து மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கு
அப்பா விரும்பியிருக்கவில்லை. ஆனால் ஒற்றைக்காலில் நின்று அன்று அம்மா எடுத்த முடிவு தான் இன்று நாம் இந்த நிலையிலிருக்க காரணம்.அப்போது அக்கராயனிலிருந்து கிளம்பி வவுனியா வந்து ஏதோ ஒரு முகாமில் சில வாரங்கள் தங்கியிருந்து திருகோணமலை சென்று அங்கிருந்து கப்பல் மூலம் மீண்டும் யாழ் மீண்டோம்.நாங்கள் வெளியேறி சிறிது காலத்திலேயே புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக பேசிக்கொண்டனர்.அப்போது வெளியேறி இருந்திருக்காவிட்டால் இச்சமயம் எம் வாழ்க்கை முடிந்திருக்குமோ இல்லை முள்ளுக்கம்பிகுள்ளோ இருந்திருக்கும்.
உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் சுஜாதா விருதுகள்-இந்த ஆண்டிற்கன தேர்வு ஆறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இறுதித் தெரிவுகள் இப்படி அமைந்திருக்கின்றன:
சுஜாதா சிறுகதை விருது: அஜயன்பாலா
நூல்: அஜயன் பாலா சிறுகதைகள்
வெளியீடு: நாதன் பதிப்பகம்
தேர்வுக்குழு: சுப்ரபாரதிமணியன், அழகிய பெரியவன், சுரேஷ்குமார இந்திரஜித்
சுஜாதா நாவல் விருது : தமிழ் மகன்
நூல்: வனசாட்சி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
தேர்வுக்குழு: எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேச பாண்டியன், இமையம்
சுஜாதா கவிதை விருது: மனோ.மோகன்
நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி
வெளியீடு: புதுஎழுத்து
தேர்வுக்குழு: கலாப்ரியா,சமயவேல், இந்திரன்
சுஜாதா உடைநடைவிருது (இரு நூல்களுக்கு வழங்கப்படுகிறது)
பா.பிரபாகரன்
நூல் குமரிக்கண்டமாசுமேரியமா?,
வெளியீடு கிழக்குபதிப்பகம்
ராஜு முருகன்
நூல் வட்டியும்முதலும்
வெளியீடு ஆனந்தவிகடன்
தேர்வுக்குழு : இரா.நடராசன், ’தீக்கதிர்’குமரேசன், பாரதி மணி
சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது)
இதழ்கள்: ஞானம்,
தி.ஞானசேகரன் , ஆசிரியர்-ஞானம்
கருக்கல்
எம்.எஸ்.பாண்டியன், ஆசிரியர்-கருக்கல்
தேர்வுக்குழு:தமிழவன், கழனியூரன், அ.முத்துக்கிருஷ்ணன்
சுஜாதா இணையவிருது: வா.மணிகண்டன்
வலைப்பதிவு: http://www.nisaptham.com/
தேர்வுக்குழு:இரா.முருகன், இயக்குநர் ராம், மனோஜ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'சுஜாதா இணைய விருது'க்கான எனது பரிந்துரையாக 'படலை'யில் எழுதிவரும் ஈழத்தமிழ் எழுத்தாளர் அண்ணன் 'ஜேகே'யாக தான் இருந்தது. விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பியுங்கள் என்றபோதே அண்ணனுக்கு கூறினேன் உங்கள் தரப்பிலிருந்து அனுப்புங்கள்.உங்களை விட்டால் வேறு யாருக்கு கிடைக்க இருக்கிறது என்று நம்பிக்கையூட்டி.ஏனோ கிடைக்கவில்லை. நம்மவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கொடுக்க இப்படியான விருதுகள், அடையாளங்கள் இல்லை என்றே கூறலாம்.இலங்கை வலைப்பதிவர்களுள் ஜேகே அவர்கள் சத்தமில்லாமல் பெரிய வாசகர் வட்டத்தை தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த 'தெரிவுகள்' மாறிவிடும் என்பதில் நம்பிக்கை இல்லை.அண்ணன் எழுதுவது பெரும்பாலும் இலங்கை சம்பந்தமாகவே இருப்பதால் (இலங்கையில் பிறந்தால் பின்னர் அமெரிக்கா சம்பந்தமாகவா இருக்கும்!) இந்திய நண்பர்களை ஈர்த்திருக்க வாய்ப்பில்லையோ என்னமோ! எமது வழிகள் எமக்கு தானே புரியும்.அவரின் 'கந்தசாமியும் கலக்சியும்' என்கின்ற விஞ்ஞான தொடர் நாவல் அவரின் இணையப்பக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டது. சுஜாதாவின் பின்னர் யாருமே விஞ்ஞான சம்பந்தமாக தொடுகிறார்கள் இல்லை என்கின்ற ஆதங்கத்தில் எழுதினேன் என்பார்.ஆனால் சுவாரசியத்துக்கு குறைவில்லாத நாவல்.ஒவ்வொரு பகுதியும் எப்போது வெளிவரும் என்று காத்திருக்க வைத்த தொடர் அது.இப்படியான எழுத்தாளர்களை விருதுகள் கௌரவிக்காவிடில்,விருதுகளுக்கு தான் என்ன மதிப்பு?
தினம் ஒரு நிலைத்தகவல் பேஸ்புக்கில் பகிர்பவரானால்,அவரால் வருடம் 365 நிலைத்தகவல்கள் பகிரப்பட்டிருக்கும். ஆனால் வருட முடிவில் குறித்த ஒரு நிலைத்தகவலை மறுபடியும் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டால்,அது பகிர்ந்த தினம் ஞாபகம் இல்லையேல் ஒவ்வொரு நிலைத்தகவலாக தேடவேண்டும்.ஏதும் குறிச்சொல்லை பயன்படுத்தி பேஸ்புக்கிலோ அல்லது தேடியந்திரத்தில் சென்றோ அதனை தேடமுடியாது.இப்படியாக பேஸ்புக்கில் எழுதப்படும் அனைத்துமே ஒன்றுக்கும் பயன்படாத குப்பை போன்றதாக தான் முடிகிறது என்றார் அண்மையில் 'தமிழ் விக்கிப்பீடியா அறிமுக கருத்தரங்கை' நடாத்த இந்தியாவிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர். உண்மை தான்.ப்ளாக் அல்லது வேறு இணையதளங்களில் எழுதுவதானால் இந்த பிரச்சனை இல்லை.ஆனால் இப்போதெல்லாம் இலக்கியவாதிகள் தொடக்கம் ப்ளாக் வைத்திருப்பவர் வரை, அனைவரும் பேஸ்புக்கில் தான் உளறுவதை காணமுடிகிறது.காரணம் விவாதம்,லைக்குகள்,ஷேர்கள் என்று அதில் கிடைக்கும் 'ரீச்'.மற்றையது சோம்பேறித்தனம். முன்னர் போல் அதிகமானோர் வருவதில்லை என்று ப்ளாக் எழுதுபவர்களும் அதனை விட்டு விலகிக்கொண்டிருக்கின்றனர் இன்ட்லி போன்ற திரட்டிகள் கொடுத்த பிரச்சனையால்.இலங்கையில், இருவருடங்களுக்கு முன்பதாக ஒரு 25-50 பேர் தொடர்ந்து எழுதும் ப்ளாக்கராக இருந்தனர்.அது இப்போது 0-5 ஆக சுருங்கிவிட்டது.முன்னர் மொக்கை பதிவுக்கு கூட 4000-5000 வரை கிடைக்கும் 'வ்யூ'க்கள் இப்போது ஆயிரத்தை தாண்டுவதே பெரும்பாடாய் இருப்பதாக ப்ளாக்கில் இப்போதும் எழுதும் நண்பர்கள் கூறினார்கள்.இதனைவிட ப்ளாக்கில் எழுதுவதை நிரந்தரமாக கைவிடலாம் என்கின்ற தெரிவை மேற்கொள்வதில் பல பதிவர்கள் முனைப்பாய் இருக்கிறார்கள்.வாசிப்பவர்களுக்கு ப்ளாக் மீதான மோகம் குறைவடைந்து செல்கின்றது என்பது உண்மை போல்தான் தெரிகிறது.ஒவ்வொரு பதிவருக்கும்,அவர்கள் தமது எழுத்தின் வசீகரத்தால் கவர்ந்திழுத்த வாசகர்கள் தான் மீண்டும் மீண்டும் வருகிறார்கள்.அவர்களும் வராது போயின் கடையை சாத்திவிட்டு வேறுவேலை பார்ப்பதே உசிதம் போல் தோன்றுகிறது.இல்லாவிட்டால்,யார் வாசித்தாலென்ன வாசிக்காவிட்டால் என்ன எனது திருப்திக்கு, பிறிதொரு காலத்தில் நான் மீட்டிப்பார்க்க இனிமையாய் இருக்கும் என்பதனால் எழுதுகிறேன் என்று கூறிவிட்டு எழுதவேண்டியது தான்.சுயதிருப்தி.
தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அண்மையில் வெள்ளவத்தை ஹம்ப்டன் வீதியிலிருக்கும் தேசிய கலை இலக்கியப்பேரவையில் 'தமிழ் விக்கிப்பீடியா அறிமுக பட்டறை'ஒன்று நடைபெற்றது.
- தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம் -
- விக்கியாக்கம் முறைகளும் கொள்கைகளும்
- விக்கிப்பீடியா பயனர் பங்களிப்பின் அவசியம்
- விக்கிப்பீடியா தொகுத்தல்
- வார்ப்புரு, ஊடகக் கோப்புகள் பயன்பாடு
- சிறப்புத் தொகுப்புகள் எ.கா: கணிதச் சமன்பாடுகள், வேதியியல் குறியீடுகள் முதலியன
பற்றிய அறிமுகம் தரப்பட்டது.இலங்கையிலிருந்து எழுதும் சில தமிழ் விக்கிப்பீடியர்களும் வந்திருந்தனர்.உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் வெறும் ஐம்பதாயிரம் ஆக்கங்களே விக்கிப்பீடியாவில் இருக்கின்றது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்று.ஒவ்வொருவரும் தத்தமக்கு தெரிந்த,விரும்பிய துறைகளை சார்ந்தோ,விரும்பிய விடயத்தை பற்றியோ விக்கிப்பீடியாவில் எழுதி பங்களிப்பு செய்யலாம்.இதுவொன்றும் பெரிய கடினமான வேலை கிடையாது.ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்துவிட்டால்,அதன் பிற்பாடு அனைத்தும் பழகிவிடும்.தினசரி இரண்டு லட்சம் பார்வையாளர்களை தமிழ் விக்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.வெறுமனே பேஸ்புக்கிலோ ப்ளாக்கிலோ எழுதுவதை விட விக்கிப்பீடியாவில் எழுதினால் காலம்காலமாக அந்த ஆக்கம் எத்தனையோ பேருக்கு பயனுள்ளதாக அமையும்.ஏன் எமது பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் கூட சிலசமயம் எமது ஆக்கங்களை உசாத்துணையாக கொள்ளகூடும்!
ஆளுக்கொரு கட்டுரை எழுதினாலே தமிழ் விக்கிப்பீடியா அடுத்த சில மாதங்களிலேயே லட்சம் ஆக்கங்களை தொட்டுவிடும்!
******
'சேட்டை' போய் பார்த்துவிட்டு 'ஜொள்ளு +மொக்கை+கக்கா=சேட்டை'என்று திட்டி எழுதியிருந்தேன்.ஆனால் கடந்த சனிக்கிழமை 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வை பார்த்த பின்பு தான் 'சேட்டை'எவ்வளவு மேல் என்று புரிந்தது.விமல்,சிவகார்த்திகேயன் என்று இரண்டு காமெடிக்கு புகழ்போனவர்களை வைத்து 'கலகலப்பு' ரேஞ்சுக்கு ஒரு காமெடி படம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பிலிருந்தேன்.என்னை பொறுத்தவரை படம் படு மொக்கை.எங்காவது சில இடங்களில் கஷ்டப்பட்டு சிரிக்க வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.ஒரு சிலர் விமர்சனங்களில்,படத்தை ஆகா ஓகோ அளவுக்கு புகழ்ந்து எழுதியிருந்ததை கவனித்திருந்தாலும்,ஏனோ எனக்கு சிரிப்பே வரவில்லை. சிவகார்த்திகேயன் ஹீரோவாக சரிப்பட்டு வரமாட்டார் என்று தான் தோன்றுகிறது.அனுருத் இசையில் ஏலவே ஹிட் ஆகியிருக்கும் பாடல்களை கொண்ட இவரின் அடுத்த படமான 'எதிர்நீச்சல்' எப்படி அமையப்போகிறது என்று பார்க்கலாம்.'அது இது எது'வில் ரசித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாய் அவதாரம் எடுத்து சலிக்க வைக்கிறார்.இன்னமும் சினிமாவுடன் ஒட்டிக்கொள்ளாத 'டிவி புகழ்'சிவகார்த்திகேயனாக தான் எனக்கு தெரிகிறார்.விஜய் டிவியில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கையில் ஹீரோவாய் நடிப்போம் என்று கிளம்பிய இவரின் தெரிவு தவறானதோ என்று தான் சிந்திக்க வைக்கிறார்.(சிவா ரசிகர்கள் மன்னிச்சூ..நான் கூட அவரின் தீவிர ரசிகன் தான் தொலைக்காட்சியில்;திரைப்படங்களில் அல்ல.)இதனை விட சன்டிவியில் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் 'சண்டே கலாட்டா' நிகழ்ச்சி செம கலகலப்பாக இருக்கும்.மதுரை முத்து மற்றும் தேவதர்ஷினி இணைந்து கலக்கும் இந்த கலாட்டாவுக்காகவே ஒவ்வொரு ஞாயிறு காலையும் அடித்துப்பிடித்து எழும்பிவிடுவேன் ஒன்பது மணிக்கு முன்பதாக.விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு'வில் ஆரம்பித்து சன்டிவியின் 'அசத்தப்போவது யாரு'நிகழ்ச்சியின் மூலமாய் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்த மதுரை முத்துவுக்கு இந்த சண்டே கலாட்டா இன்னமும் அதிக ரசிகர்களை பெற்று தரும் என்று நம்பலாம்.
பேஸ்புக்கில் பல்லாயிரம் 'ஷேர்கள்'ஐ தாண்டி வெற்றிகரமாக சுழன்றுகொண்டிருக்கிறது இந்த எழுமலையான் படம்.இதுவெல்லாம் சித்து விளையாட்டு என்று எண்ணித்தான் நான் முதலில் ஷேர் செய்யாமல் தவிர்த்திருந்தேன்.ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் தான் என்னுடைய தெரிவு முட்டாள்தனமானது என்பதை உணர்த்தின.வழமையாக எழுமணிக்கெல்லாம்(!!) காலையில் எழுந்திருக்கும் நான் அதன் பின்னர் எழு ஐந்துக்கு எழும்பத்தொடங்கினேன்.கண்ணாடியை பார்த்து தான் அனைவரும் பல்லு விளக்குவார்கள்,முகத்துக்கு பவுடர் போடுவதோ,தலை சீவுவதோ கண்ணாடியை பார்த்து தான் நடக்கும்.நானும் அப்படித்தான் இருந்தேன்.ஆனால் அண்மைக்காலமாய் எல்லாவற்றையும் விட்டத்தை அண்ணாந்து பார்த்தவண்ணம் செய்துகொண்டிருந்தேன். காலையில் சோறு சாப்பிட்டேன்..மதியமானால் டீ மட்டும் குடித்தேன்.இரவானால் குளித்து வெளிக்கிட்டு வெளியே சுற்றக்கிளம்பி விடுகிறேன்.காக்கா கூட பேசுறேன்..பல்லி கூட பம்பரம் விடுறேன்..எறும்புக்கு பாயா வைக்கிறேன்.என்னடா இப்பிடியாகிட்டோம்னு ஜோசித்து பார்த்த போது தான் அடடா இதெல்லாம் அந்த எழுமலையான் சித்து விளையாட்டு தான் என்று புரிந்துகொண்டேன்.இனிமேலும் இப்படி அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக இப்போது நானும் அதனை பகிர்ந்துவிட்டேன்.இனி இரவில் 'வாக்கிங்' போகமாட்டேன்..அப்படி போனாலும் எழுமலையான் துணை இருப்பான் என்கின்ற துணிவு எனக்கு நிறையவே இருக்கிறது!
டிஸ்கி : எனது வலைப்பதிவின் அகலத்தை அதிகரித்து சில லொள்ளுத்தனங்களை செய்திருக்கிறேன்.யாரும் டிசைனிங் தெரிந்தவர்கள் இப்பக்கத்துக்கு 'ஹெடர்' ஒன்று அழகுற வடிவமைத்து தந்தால் மிகுந்த உதவியாய் இருக்கும்.நமக்கு தான் அந்த விடயங்கள் சரிப்பட்டு வருவதில்லையே!