அஜித்தினதோ,விஜய்யினதோ,சூர்யாவினதோ சரி,தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறதென்றால்,முக்கிய காரணம் குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் தான். ஆனால் ஒரு படம் அதிக விலை கொடுத்து தொலைக்காட்சிகளினால் வாங்கப்படுகிறதாயின் அதற்கு மிக முக்கிய காரணம் 'பேமிலி ஆடியன்ஸ்'தான்.சனி ஞாயிறுகளில் குடும்பமாக இருந்து பார்த்து மகிழ்பவர்களை டார்கட் பண்ணி,எந்தப்படத்தை,யார்படத்தை போட்டால் வேறு சேனல்களுக்கு மாற்றாமல் மக்கள் பார்ப்பார்கள் என்று அறிந்து, தெரிந்து தான் சில படங்களின் தொலைக்காட்சி உரிமங்களுக்காக சேனல்கள் அதிக விலை தருகின்றன.அந்த உரிமங்களுக்கு செலுத்தப்பட்ட விலையை விளம்பரங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும்.கூடவே தொலைக்காட்சி ரேட்டிங்கும் கருத்தில் கொள்ளப்படும்.
சனி ஞாயிறு தினங்களாக இருக்கட்டும்,அல்லது முக்கிய பண்டிகை தினங்களாக இருக்கட்டும், குறைந்தது ஏதாவது ஒரு சேனலில் கண்டிப்பாக விஜய் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்.விஜய் படங்களின் உரிமங்களை வாங்குவதற்கு கொடுக்கப்படும் விலையிலிருந்தே, ரசிகர்களை தாண்டி விஜய் மீதான மக்கள் விருப்பு எத்தகையது என்பது தெரிந்துவிடும். சிறுவயது குழந்தைகள் தொடக்கம் வயதானவர்கள் வரை 'எண்டர்டெய்னர்' என்கின்ற ரீதியில் விஜய் கவர்ந்திருக்கின்ற காரணத்தினால் தான் தொலைக்காட்சி உரிமங்கள் இந்தளவு விலை கொடுத்து வாங்கப்படுகின்றன.
விஜய்யின் நண்பன் 12கோடிக்கும்,துப்பாக்கி 14கோடிக்கும்,தலைவா 15 கோடிக்கும், ஜில்லா 18 கோடிக்கும்(சன் டிவி)டிவிக்களால் வாங்கப்பட்டிருக்கிறது (மாற்றான் &பில்லா2 போன்றவை 10கோடிக்கும் குறைவான தொகைக்கு தான் விலை போனது இங்கு குறிப்பிடத்தக்கது.) முருகதாஸுடன் விஜய் இணையும் அடுத்த படம் (எஸ்.ஏ.சியின் வாய் மூடப்பட்டிருக்கும் பட்சத்தில்) 20கோடிக்கு விலை போனாலும் வியப்பேதுமில்லை..!பில்லாவை விட மாற்றான் சற்று அதிக தொகைக்கு விலை போயிருக்கிறது.அஜித்தை விட தன் ரசிகர்களை தாண்டி பிறராலும் சூர்யா ரசிக்கப்படுகிறார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை தான்.சூர்யாவின் அண்மைக்கால பேச்சுக்களை கேட்டிருந்தால் புரிந்திருக்கும்,'குழந்தைகள் விரும்பி என்னை ரசிக்கிறார்கள்" என்பதை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பார்.விஜய்க்கு எஸ்.ஏ.சி விளம்பரதாரர் என்றால் சூர்யாவுக்கு சூர்யாவே தான் விளம்பரதாரர்.என்னதான் வெறுக்கப்பட்ட ஹீரோவாக காட்டிக்கொள்ளப்பட்டாலும்,வயது வேறுபாடின்றி,ரசிகர்களையும் தாண்டி, பலராலும் விரும்பப்படுகின்ற ஹீரோவாக விஜய் இருக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவு.அப்படி பலருக்கு பிடித்தமானதாக இருப்பதனாலேயே விஜய் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கின்றார்.
அஜித்தின் கடந்த பதினைந்து படங்களிளான வில்லன்,ஆஞ்சனேயா, ஜனா,அட்டகாசம்,ஜீ, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார்,கிரீடம்,பில்லா,ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா2 ஆகிய படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் எஞ்சுவது என்னமோ பில்லா, மங்காத்தா,வரலாறு என்று வெறும் மூன்று-நாங்கு படங்கள் தான்.நண்பனில் விஜய் எந்தளவு அண்டர்ப்ளே பண்ணினாரோ,அது போல கிரீடத்தில் அஜித் பண்ணியிருந்தார்.அஜித் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அது பிடிக்கவில்லை.(அழகிய தமிழ் மகனில் விஜய் நெகட்டிவ் ரோல் பண்ணியிருந்தது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை,ஆனால் மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது!)அதற்கு பிறகு வந்த படங்களை பார்த்தால்,பில்லா கொடுத்த பிரமாண்ட வெற்றியால் ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா 2 என கடந்த ஐந்து படங்களுமே அஜித்தை ஒரே போர்முலாவுக்குள் சிக்க வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான்.அடுத்து வரும் 'ஆரம்பம்'கூட அதே மாதிரியான போர்முலா என்று தான் ஸ்டில்களை பார்க்கையில் தெரிய வருகிறது.
எத்தனை தோல்வி என்றாலும்,அது ஒரே போர்முலா என்றாலும் கூட நாங்கள் 'தல'யை ரசிப்போம் என்பது அஜித் ரசிகர்களின் குரலாக இருந்தாலும்,அதே நீலம்,கறுப்பு,வெள்ளை படங்களையும்,அதே கோர்ட்,பைக், க்ளாஸ்,நரைத்த முடி கதாபாத்திரங்காளையும் அவர் ரசிகர் தாண்டி எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்று கேட்டால் மிக மிக குறைந்த அளவினராக தான் இருப்பார்கள்.அஜித் படங்களுக்கான தொலைக்காட்சி உரிமங்கள் விலை போகின்ற அளவை வைத்தே அதனை கணித்துவிடலாம்.அஜித் இயல்பாக இருக்கிறேன் பேர்வழி என்று தன்னுடைய கேரியரை பாழாக்கிக்கொள்கிறார்.42 வயது ஆனால் பார்த்தால் 50 வயது மதிக்கலாம்.நான்கு ஐந்து வயது குறைந்த விஜய்-சூர்யாவை பாருங்கள் என்ன மாதிரி உடம்பை மெயிண்டெய்ன் செய்கிறார்கள் என்பதை!இன்னமும் அவர்கள் இருவரும் 30 வருடங்கள் கூட இண்டஸ்ரியில் இருந்துவிட முடியும்.ஆனால் அஜித்தின் உடம்புக்கும்,அவரின் அக்கறை யீன்மைக்கும் இன்னமும் எத்தனை வருடங்கள் அவரால் தாக்குப்பிடிக்க முடியும்?
விஜய்-அஜித் என்று இருந்த போட்டி இப்போது மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது விஜய்-சூர்யா என்பதாக.காரணம்?சூர்யா அடுத்தடுத்து கொடுத்து வரும் வெற்றிப்படங்கள். ஹாரி,கவுதம் மேனன்,முருகதாஸ் என்று திறமையான இயக்குனர்களுடன் சேர்ந்து இயங்குவது மட்டுமல்லாமல்,சிறந்த படங்களையே தெரிவு செய்து நடிக்கிறார் சூர்யா.இது அஜித் விஜய் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.பேரழகன் தொடக்கம் சிங்கம்2 வரையிலான 15 படங்களில் வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம்,கஜினி என்று ஒன்பது-பத்து படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய் நடித்த கடந்த 16 படங்களில் (கில்லி தொடக்கம் துப்பாக்கி வரை),திருப்பாச்சி, போக்கிரி,நண்பன்,கில்லி,துப்பாக்கி என்று எட்டு-ஒன்பது படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய்யும் சூர்யாவும் 8 தொடக்கம் 10 படங்கள் வெற்றியை கொடுக்க குறித்த காலப்பகுதியில் வெறும் 4 ஹிட் படங்களை கொடுத்து இருக்கும் அஜித்தை சூர்யா மெல்ல மெல்ல ஓவர்டேக் செய்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அஜித் ரசிகர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அஜித் மெல்ல மெல்ல தமிழ் இண்டஸ்ரியை விட்டு ஓரம்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.!
நரைத்த முடிக்கும்,தாடிக்கும் டை அடிக்காமல்,இயல்பாக நடிக்கிறேன் பேர்வழி என்று அஜித் இப்போது நடிப்பதை அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் விரும்பலாம்..அஜித் ரசிகைகள் விரும்பலாம்.திரைத்துறையில் நிலைத்திருக்க வேண்டுமானால்(ஹீரோவாக!)அந்த இயல்பை மறைத்துத்தான் ஆகவேண்டும்.ரஜனிக்காந்த்க்கு கூட அது பொருந்தித்தான் ஆகிறது! கூடவே உடம்பிலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும்.கமல்-ரஜனிக்கு பின்னாடி இருக்கும் அஜித்-விஜய் என்ற இருக்கும் போட்டியை உடைப்பதன் மூலம்தான் தானும் முன்ணனி நாயகனாகலாம் என்பது சூர்யா எப்போதோ போட்டுவிட்ட கணக்கு.அதற்கு பலியாகிக் கொண்டிருப்பது அஜித் தான்! ஒரு கால கட்டத்தில் அது விஜய்யாக இருந்தது.ஆதி-குருவி-வில்லு-சுறா என்று தொடர்ச்சியான காவியங்கள் விஜய் கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் விஜய் தான் ஓரம்கட்டப்படுவார் என்று நினைத்திருந்தேன்.காரணம் இணைய எதிர்ப்பும் விஜய்க்கே எப்போதும் அதிகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் காவலன்'னில் தன்னை மாற்றிக்கொண்ட விஜய் வேலாயுதம்-நண்பன்-துப்பாக்கி என்று வேறுபட்ட ஹிட் படங்களை கொடுத்து அந்த ஆபத்திலிருந்து வெளியேறிக்கொண்டார்.தலைவா-ஜில்லா சொதப்பினாலும் அதற்கடுத்து முருகதாஸ் கூட படம் பண்ணுகிறார் விஜய்.அது நிச்சயம் ஹிட் அடிக்கும்.
2008-2013 வரையிலான ஆறு வருட காலப்பகுதியில் (ஆரம்பம் அடுத்த பொங்கல் தான்)வெறும் நான்கு படங்களில் மட்டுமே அஜித்தினால் நடிக்க முடிந்திருக்கிறது!இத்தனைக்கும் வருடக் கணக்கில் படம் பண்ணும் ஷங்கர்,பாலாவுடன் கூட இணைந்திருக்கவில்லை!அதில் ஒரு ஹிட் மூன்று தோல்வி!இதே காலப்பகுதியில் சூர்யா ஏழு படங்களில் நடித்திருக்கிறார்,அதில் ஆதவன் மட்டும் தான் சரியாக கல்லா கட்டவில்லை.மாற்றான் தோல்வி கிடையாது.இதே ஆறு வருட காலப் பகுதியில் விஜய் 8 படங்களில் நடித்திருக்கிறார்,அதில் வில்லு&சுறா தோல்விப்படம். காவலனில் இருந்து துப்பாக்கி வரை தொடர்ச்சியான ஹிட் படங்கள்.எட்டாவது படம் தலைவா அடுத்த 9 ஆம்தேதி ரிலீஸ் ஆகிறது.ஆக கடந்த ஆறு வருடங்களில் வெறும் ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்திருக்கும் அஜித் ஏதோ ஒரு தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை சிற்றறிவு உள்ள யாராலும் புரிந்துகொள்ள முடியும்!இல்லை தல எப்படி இருந்தாலும் ரசிப்போம் என்கிறீர்களா?நீங்கள் தான் 'தலை'க்கு கூடவே இருந்து ஆப்பு செருகுகின்றீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்!
பாஸ் என்கின்ற பாஸ்கரனில் 'அந்த கூலிங் க்ளாசை கழற்றி எறியடா"என்று ஆர்யாவுக்கு சந்தானம் சொல்வதை போல அஜித்க்கு இப்போது யாராவது அந்தவேலையை செய்தாகவேண்டும்.ஏகன்-பில்லா டைப் படங்களிலிருந்தும் அந்த காஸ்டியூம்களில் இருந்தும் வெளியே வந்து வேறுபட்ட படங்கள் பண்ண வேண்டும்.முதலில் விஷ்ணுவரதனுடன் எனிமேல் எந்த படங்களிலும் அஜித் ஒப்பந்தம் ஆகிவிடாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்ணனியில் இருப்பது விஜய் தான்.அஜித் கூட அங்காங்கே கொடுத்து வருகிறார்.ஆனால் சூர்யா எந்த புது இயக்குனர்களுக்குமே வாய்ப்பு கொடுக்காது தங்களை வெற்றிகரமான இயக்குனர்கள் என்று நிரூபித்த இயக்குனர்களிடம் மட்டுமே படம் பண்ணுகிறார்.இத்தனை ஹிட் கொடுத்த பின்பும் ஒரு Safe Zone'இல் இருந்துகொண்டு படம் பண்ணும் சூர்யாவை அஜித் சிறிது காலம் பொலோ செய்யலாம். முன்ணனி இயக்குனர்களுடன் கை கோர்க்கலாம்.அது வித்தியாசமான படங்களை அஜித் தருவதற்கும்,மீண்டு வருவதற்கும் வழிவகுக்கும்.
இன்னமும் டீப்பாக சொல்வதானால்,அஜித் தொப்பையை குறைக்கலாம்.உப்பிப்போயிருக்கும் முகத்தை சரி பண்ணலாம்,ஊதிப் போயிருக்கும் உடம்பை நினைத்தால் குறைக்கலாம்.பாடல்களிலும் சரி,படத்திலும் சரி தேவை இல்லாமல் நடப்பதை விடுத்து,பாடல்களில் ஹீரோயினையும்,க்ரூப் டான்சர்களையுமே எப்போதும் ஆடவிடாது,தலை கொஞ்சமாவது மூமெண்ட்ஸ் போடலாம்.ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடிக்கிறார் ,ஹெலிகாப்டரில் பறக்கிறார் என்றெல்லாம் செய்தி வரும்போது இது ஒரு மேட்டரே கிடையாது.நினைத்தால் அதை கூட செய்யலாம்.அக்கறை எடுத்து ஒரு வருடத்தில் ஒரு படமேனும் ரிலீஸ் பண்ணலாம். வித்தியாசமான படங்களை தெரிவு செய்யலாம்.'தல' கேட்டால் எந்த முன்ணனி இயக்குனர் தான் முடியாது என்று சொல்லப்போகிறார்கள்?
ஒரு முன்ணனி நாயகனான அஜித்,கடந்த ஆறு வருடங்களில் ஒரே ஒரு வெற்றி படம் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்பதை கேட்கும்போது, அஜித்துக்கு 'Something is wrong Some where" என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?அந்த 'சம்திங்' என்பதற்குள் பில்லா டைப் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களாகளோ அல்லது அத்தகைய கதைகளையே அஜித்திடம் கொண்டு செல்லும் இயக்குனர்களோ இல்லை அத்தகைய கதைகளினையே தேர்ந்தெடுத்து நடிக்கும் அஜித் கூட உள்ளடங்கி இருக்கலாம்!ஏன் இவர்கள் அனைவருமாக கூட இருக்கலாம். எது எப்படியோ,தன் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதனை எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் அது அஜித் மீண்டுவர வழிசமைக்கும்.அஜித் இன்னமும் எத்தனை வருடங்கள் தமிழ் இண்டஸ்ரியில் இருப்பார் என்கின்ற தலைவிதியை தீர்மானிப்பதாக கூட அது அமையலாம்..!