Wednesday, April 24, 2013

விஜய்-ஜோதிகா முத்தமும்;ஈகோவும்..|குஷி|..!


                               


'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலியாகட்டும் இல்லை நண்பன் நண்பியாகட்டும், தங்கள் நிலையிலிருந்து இறங்கிப்போகாத மனநிலை கொண்டவர்கள் எந்த உறவிலும் நீடித்திருக்க தகுதியற்றவர்கள் தான்.

தான் தவறு என்று தெரிந்திருந்தாலும் ஒத்துக்கொள்ளாத மனநிலை, அன்பையோ, இரக்கத்தையோ  சம்பந்தப்பட்டவர்களிடம் வெளிப்படுத்த முடியாத மனநிலை,'நான் எந்நிலையில் தான் இருப்பேன்,நீங்கள் வேண்டுமானால் இறங்கி வாருங்கள்' என்று நினைத்துக்கொள்ளும் மனநிலை என்று இந்த 'ஈகோ கேரக்டர்ஸ்' பலவித பரிணாமங்களை எடுத்துக் கொள்கின்றன.இது நிச்சயம் இப்போதிருக்கும் உறவு நிலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும்,விட்டுக் கொடுக்க முன்வரமாட்டார்கள். 'உனக்கு தான் ஈகோ' என்று மாறி மாறி குற்றம் சாட்டும் மனநிலை கூட ஒருவகை ஈகோ தான்.எது எப்படியோ,'எனக்கு ஈகோ இருக்கிறது'என்று ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கு கொண்ட 'ஈகோஸ்டிக் கேரக்டர்ஸ்' மிக குறைவே! 


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கும் 'ஈகோ'வை வைத்து வெளிவந்த படம் ஒன்று சொல்லுங்கள் என்று யாரை கேட்டாலும்,முதலில் வரும் பதில் 'குஷி' என்பதாகத்தான் இருக்கும்.அந்தளவுக்கு மனசில் பதியும்வகையில் 'ஈகோ கேரக்டர்ஸ்' பற்றி எஸ் ஜே சூர்யா 'குஷி'யை இயக்கியிருந்தார். பார்ப்பவர் மனங்களில் நிச்சயம் ஒரு தாக்கத்தை/மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட படமாக குஷி அமையப்பெற்றது என்று கூறிக்கொள்ளலாம்.

பிறந்த குழந்தையாக இருந்தபோதே தெரியாமல் சந்தித்துக்கொண்ட 'ஷிவா(விஜய்), 'ஜெனீபர்(ஜோதிகா), பள்ளிப்பருவத்தில் ஒருமுறை தெரியாமல் சந்தித்துக்கொண்ட ஷிவா-ஜெனீபர், 'உங்களை எங்கோ பார்த்த ஞாபகம் இருக்கே' என்கின்ற அறிமுகத்துடன் காலேஜில் சந்தித்துக் கொள்கின்றனர். அங்கு நண்பர்களாகின்றனர்.ஷிவாவின் நண்பன் பாபுவினதும் ஜெனீபரின் நண்பி சாந்தியினதும் காதலை சேர்த்துவைப்பதை மையப்படுத்தி ஷிவா-ஜெனீபர்' இருவர்க்கிடையில் 'சொல்லாத காதல்' பிறந்துகொள்கிறது. 

அந்த காதல் இருவரினதும் ஈகோவால் என்ன பாடுபடுகிறது..எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறது..எத்தகைய பிரிவை உண்டாக்கிறது..இறுதியில் சேர்த்து வைக்கிறதா இல்லை பிரித்து வைக்கிறதா என்பதை எஸ் ஜே சூர்யா தனக்கே உரிய பாணியில் புரியவைத்திருப்பார்.திறமையான இயக்குனர்கள் எல்லாம் நடிகனாக ஆசைப்பட்டு நாம் இழந்தவை ஏராளம்.சுந்தர் சி'யாவது இப்போது திருந்தி ஓரிரு மொக்கை படங்களை இயக்கிக்கொண்டிருக்கிறார். எஸ் ஜே சூர்யா ரஹ்மான் ஆகும் முயற்ச்சியில் இருப்பதாக கேள்வி. 

தமிழில் அதே எஸ் ஜே சூர்யாவின் 'வாலி'படத்தில் முதன்முதலில் தலை காட்டியிருந்தாலும்,சூர்யாவுடன் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' அஜித்துடன் 'முகவரி'யில் நடித்திருந்தாலும்,'குஷி' படம் ஜோதிகாவின் கேரியரில் ஒரு திருப்புமுனை என்று கூறலாம்.சற்றே திமிர் பிடித்த-ஜாலியான,அதேசமயம் கோபமான,'ஈகோ' கொண்ட 'ஜெனீபர்' பாத்திரத்தில் அற்புதமாய் நடித்திருப்பார் 'ஜோ'!

ஜெனி:கையில என்ன?
ஷிவா:லெட்டர் 
ஜெனி:லவ் லெட்டரா?
ஷிவா: எப்பிடி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
ஜெனி:அதான் மூஞ்சிலையே எழுதி ஒட்டிவைச்சிருக்கே..
சென்ஸ் இல்ல? மனேர்ஸ் இல்ல?பப்ளிக்ல எப்பிடி பீகேவ் பண்ணனும்னு தெரியாது?ரோடில லவ் லெட்டர் குடுக்கிறே?யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க?பேன்ட் போட்டிருக்காய்..சேர்ட் போட்டிருக்காய்..ஷூ போட்டிருக்கிறாய்..கார் வைச்சிருக்கிறாய்..ஆனா இப்பிடி ஸ்டுபிட்டா நடந்துக்கிறியே..ஏதாவது உருப்படியா நல்ல வேலை இருந்தா பாரு...

என்று ஆரம்பித்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்ப் வாங்கி 'சாரி சாரி சாரி'என்று கெஞ்சுகையில்  'ஜோ'வின் துடிப்பான துள்ளலான நடிப்பும், கெஞ்சலான முகபாவமும் நம்மை வஞ்சிக்கும். 


படத்தில் மிக பிரபலமாக பேசப்பட்டது இரண்டு காட்சிகள்.ஒன்று ஜோதிகாவின் இடுப்பை விஜய் பார்க்கும் ஸீன்.மற்றையது படத்தின் இறுதியில் வரும் லிப் லாக்.இப்படம் சூர்யாவின் வீட்டில் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட படமாக இருக்கலாம்.கோயிலில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.காற்று பலமாய் வீச,தீபம் அணைந்துவிடும்போல தோன்றும்..அச்சமயம் ஒரு ஆணும் பெண்ணும் ஓடிவந்து அது அணையாமல் கைகளால் மூடி பிடிப்பார்களே? ஆம் அந்த காட்சியின் 'ஒரிஜினல்' இந்த படத்தில் தான் இருக்கிறது என்று நினைத்தேன்.ஆனால் அது ராஜ்கிரண்-வனிதா நடித்த 'மாணிக்கம்' படத்தில் தான் முதல் இடம்பெற்றது என்றார் நண்பர்,பதிவர் துஷி.

காதல் படங்களுக்கு உயிர் கொடுப்பதே 'தவிப்பு' தான். எப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பார்கள்..எப்போது காதலை சொல்வார்கள்? எப்போது ஒன்று சேர்வார்கள்..எப்போது கல்யாணம் நடக்கும்? என்று ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தவிப்பை கூட்ட கூட்ட ஒரு கட்டத்தில் படம், பார்ப்பவர்களை நுனிக்கதிரைக்கு கொண்டுவந்துவிடும்.அந்த மாதிரியான ஏகப்பட்ட சீன்கள் 'குஷியில்'உண்டு!கெளதம் மேனனுக்கு மாஸ்டராய் இருந்திருப்பார் போலும் எஸ் ஜே சூர்யா..!

ஷிவாவும்,ஜெனியும் தமது நண்பர்களின் காதலை சேர்த்துவைத்து காரில் அனுப்பிவிடும் சமயம்..அப்படி இப்போதாவது அந்த அடம்பிடிச்ச கழுதை 'ஈகோ'வை விட்டுவிட்டு இருவரும் காதலை சொல்லிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.கை குலுக்கிக் கொள்வார்கள்.'பாய்'சொல்லி பிரிந்து விடுவார்கள்.
இருவரும் ஊருக்கு கிளம்பும் காட்சி.காதலை சொல்லவில்லையே என்கின்ற தவிப்பில் ஜெனி call பண்ணுவார்.அந்த சமயத்தில் தான் ஷிவாக்கும் அதே நினைப்பு வந்து ஜெனிக்கு call பண்ணுவார்.போன் என்கேஜ் ஆகி கதைக்க முடியாமல் போய்விடும்.அங்கும் நமது எதிர்பார்ப்பு பொய்த்துவிடுகிறது.

ட்ரெயின்க்கு கிளம்புகிறார்கள்.அப்போதாவது கதைப்போம் என்று இருவரும் நினைக்கிறார்கள்.ஜெனி ஷிவா வீடு செல்ல,ஷிவா ஜெனி வீடு தேடி செல்ல.. அப்போதும் மிஸ்ஸிங்.அடுத்த காட்சி சென்றல் புகையிரத நிலையத்தில். அங்கும் இருவரும் தத்தமது அப்பார்ட்மெண்ட் செல்லாமல், மற்றையவர் அப்பார்ட்மெண்ட் செல்ல...அப்போதும் எமது எதிர்பார்ப்பு தவிடுபொடி!அடடா பெரும்பாலான காதல் கதைகள் புகையிரத நிலையத்தில் தான் முடிவது என்று எதிர்பார்த்தால்..அங்கும் சூர்யா நம்மளை கவிழ்த்து விடுகிறார்.தமது ட்ரெயினுக்கு செல்கையில் இருவர் வண்டியும் எதிரெதிரே வீதியில் நிற்கும்.பார்ப்பார்கள்..ஆனால் சுயநினைவில் இல்லை இருவரும்..

இப்படியாக படம் முழுவதுமாய் தவிப்பு தவிப்பு ஏக்கம் காதல் ஈகோ என்று அமர்க்களப்படுத்தியிருக்கும் படம் தான் குஷி.விஜய்யிடம் நடிப்பை வெளிக்கொணர்வது எப்படி என்பது எஸ் ஜே சூர்யா,ஷங்கர்,முருகதாஸ் போன்றோருக்கு தான் தெரிகிறது.படத்துக்கு விஜய்-ஜோதிகா தெரிவு அபாரமானது. வேறு யாராலும் அந்தந்த பாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தியிருக்க முடியாது.ஜெனியின் அப்பாவாக வரும் விஜயகுமார்.. காமெடிக்கு விவேக்..ஷிவாவின் அப்பாவாய் நிழல்கள் ரவி,அனிதாவாய் வந்து கவர்ச்சியில் கலக்கிய மும்தாஜ்... 'மகெரீனா'பாடலுக்கு வந்த ஷில்பா ஷெட்டி என்று ஏராளமானோர் மனதில் நிக்கின்றார்கள்.  


 படத்தின் வெற்றிக்கு கதை-திரைக்கதை எந்தளவு முக்கிய பங்கு வகித்ததோ, அதற்கு குறைவில்லாத பங்களிப்பை தேனிசைத்தென்றல் தேவாவின் இசை வழங்கியிருந்தது.பாடல்களாகட்டும்,பின்னணி இசையாகட்டும்,கதையின் ஓட்டத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் தேவாவின் இசை படத்துக்கு முக்கிய பலம்.2000 ஆம் ஆண்டு எல்லாம் தேவா உச்சத்தில் இருந்த காலம். 'மேகம் கறுக்குது...','ஒஹ் வெண்ணிலா..','யார் சொல்வதோ','ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்..','மக் மக் மகெரீனா', என்று அனைத்து பாடல்களும் ஹிட் என்றால், 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடல் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம்.

சில்க் ஸ்மிதாவின் காலத்துக்கு பின்னர் ஒரு கவர்ச்சி நடிகையாக தனி முத்திரை பதித்தவர் மும்தாஜ்.படம் வெளிவந்த காலத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல்.காட்சிகள் தான் கொஞ்சம் நெருக்கமானது என்றால்,பாடலில் வரும் பாருங்கள் ஆங்..ஆ...அவ்வ்.. என்று விதம் விதமான சத்தங்கள்...எல்லாம் சேர்த்து ஒரு செம 'ஐட்டம் சாங்'காக சில காலம் பிரசித்தமாய் இருந்தது அந்தப்பாடல்.


மக்கோரீனாவில் ஷில்பா ஷெட்டி.(முக்கியமாக 2.28-2.30min பாருங்கள் அவ்வ்)அப்படியே 5.22 தொடக்கம் பாடல் இறுதிவரை பாருங்கள்,ஒரு ஒன்றரை நிமிட பாடல் காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். கூடவே பின்னால் நின்று ஆடும் 'டான்ஸ் க்ரூப்பில்' இன்றைய எத்தனை 'டான்ஸ் மாஸ்டர்கள்' ஆடுகிறார்கள் என்று கண்டுபிடியுங்கள். 

 
(படத்தில் வரும் பின்ணனி இசைக்கோர்வை)


 
'மேகம் கறுக்குது' பாடல். பெண்களின் பேவரிட்டாகவும்,'ஜோ'வின் குட்டை பாவாடைக்காக ஆண்களின் பேவரிட்டாகவும் இருந்தது.  

 
'ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்..'இளசுகளின் பேவரிட்.மக்கேரீனா பாடலும்,இப்பாடலும் ஒலிக்காத ஐஸ்க்ரீம் வாகனங்கள் இருந்திருக்காதென நினைக்கிறேன்!

 
'யார் சொல்வதோ யார் சொல்வதோ..'

 
'கட்டிப்புடி கட்டிப்புடி டா...' பெருசுகள் கண்,மற்றும் காதை பொத்திக்கொள்ள, இளசுகள் இரண்டையும் பெரிதாய் திறந்துவைத்து பார்த்த/கேட்ட பாடல்.  

 
'ஓ வெண்ணிலா....' 'காதல் தேசம்' படத்தின் 'ஓ வெண்ணிலா..இரு வானிலா' பாடலை அடிச்சுக்க முடியாவிட்டாலும்,காதல் பிரிவில் தவிர்க்கமுடியாத பாடல்.சோகமான காட்சிகள் படத்தில் வரும்போது, இப்பாடலை கொண்டு அமைக்கப்பட்ட பின்னணி இசை டச்சிங். 

 இப்படத்தில் இசையமைத்ததற்காக அவ்வாண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் கிடைத்தது. ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவார்ட் கிடைத்தது. 2001 இல் பவன் கல்யான் மற்றும் பூமிகாவை வைத்து,அதே 'குஷி' என்கின்ற பெயரில் தெலுங்கிலும் இயக்கி வெளியிட்டார் எஸ் ஜே சூர்யா.இதற்க்கு இசை ஏ ஆர் ரஹ்மான்.படம் அங்கும் ஹிட்.அதை தொடர்ந்து 2003 இல் இந்தியில் 'பரீட் கான் மற்றும் கத்ரீனா கபூரை வைத்து இந்தி 'குஷி'யை எடுத்தார்.இது 'ஏனோ ஒந்தாரா' என்கின்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவந்தது.'ஈகோ'வை கட்டிப்பிடித்துக்கொண்டு உடும்பாட்டம் அனைத்து சமூகத்திலும் பலர் இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சாட்சி ஏது!

குறிப்பு: 'குஷி' படம் பற்றி வெளிவந்த முதல் தமிழ் பதிவு இதுதான் என்று நினைக்கிறேன்.இணையத்தில் தேடிப்பாருங்கள்.

Post Comment

6 comments:

Anonymous said...

என்னாச்சு ? ? திடீர்னு குஷியான மாதிரி தோணுது ?

scenecreator said...

குஷி பற்றி நல்ல பதிவு.தெலுங்கில் ரகுமான் இசை இல்லை மணிஷர்மா.தொடர்ந்துபழைய படங்கள் எழுதுங்கள்.

கார்த்திக் சரவணன் said...

என் மனம் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று...

Unknown said...

குஷி !!!!!!!!!!!!!!!!!!!!

priyan said...

குஷியில் அந்த முத்த காட்சி இருப்பது எனக்கு (தமிழ் நாட்டில் நிறைய பேருக்கு) தெரியாது .. கட்டி புடி கட்டிபுடிடா பாட்டு முடிந்தவுடன் மொத்த அரங்கமும் காலியாகிவிடும் தியேட்டரில் ...

Unknown said...

nice!

Related Posts Plugin for WordPress, Blogger...