
1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.
இவை அனைத்தும் ஓகே,எனக்கு என்ன சந்தேகம் என்றால்,நோன்பு காலத்தில் குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நோன்பு நோற்றால் மட்டும் போதுமா அல்லது மனதும் நல்ல சிந்தனைகளை செயல்களை சிந்திக்க வேண்டுமா?நோன்பு காலத்தில் கெட்ட விடயங்களை சிந்திப்பதும்,தகாத வார்த்தைகளை பேசுவதும் ஏற்புடையதா??அவ்வாறு அத்தகைய வார்த்தைப்பிரயோகங்களை பாவிப்பதன் மூலம் நோன்பின் மகத்துவம் சிதைக்கப்படுமா இல்லையா என்பதே!
"பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
”பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்"
(நன்றி இஸ்லாம் கல்வி)

எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பன் நோன்பு நோற்கும் இதே காலத்தில் தொடர்ந்து தகாத வார்த்தை பிரயோகங்களை சமூக வலைத்தளங்களில் பாவித்து வருகிறார்.இதனை பார்க்கும் பொது அவர் பிடிக்கும் நோன்பின் மகத்துவம் செயலற்றுப் போகிறது என்பதை நான் சிந்தித்தேன்.நிச்சயமாக எந்த ஒரு சமயமும் நோன்பின் போது இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கப்போவதில்லை என்பது நிதர்சனம்.ஆனால் வெறுமனே கடமைக்காக நோன்பு பிடிப்பதை விட அதன் மகத்துவத்தை உணர்ந்து நோன்பு பிடிப்பவர்களுக்கே அதன் உண்மையான பயன் சென்றடையும் என்பது தெளிவு.
அதிகப்படியான கோபத்தின் வெளிப்பாடும்,தகாத வார்த்தைப்பிரயோகங்களும் நோன்பு காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தானே?வெறுமனே முஸ்லிம் நண்பர்களை அவமதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப்பதிவை எழுதவில்லை ஆனால் நோன்பின் மகத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளல் வேண்டும் என்ற நோக்கத்துடனே எழுதுகிறேன்.இது முஸ்லிம் நண்பர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மத நண்பர்களுக்கும் பொருந்தும்.அனைத்து மதங்களும் அன்பு வழியையே அடிப்படியில் போதிக்கின்றன.அதனை விளங்கிக்கொள்ளாத நபர்கள் இத்தகைய புனிதமான ரமலான் மாதத்தில் தங்களை கீழ்த்தரப்படுத்துவது மட்டுமல்லாமல் நோன்பின் மீது மற்றையவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் கெடுத்து விடுகிறார்கள்!!
