Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Friday, September 26, 2014

Fire in Babylon- ஒரு பார்வை..!

அதிசயமாய்,சக்தி டிவியில் இன்று மதியம் ரசிக்கத்தக்க நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பினார்கள்.மேற்கிந்திய கிரிக்கெட் அணி பற்றிய டொக்யூமெண்டரி ஒன்று தான்,தமிழ் உப தலைப்புகளுடன்.

தலைக்கவசம்,சைட் பாட்ஸ் எதுவுமில்லாத காலப்பகுதியில் பவுன்சர்களால் அவுஸ்திரேலியர்கள் மேற்கிந்திய கிரிக்கட் அணியை 1975, 'The Frank Worrell Trophy'இல் எப்படி தாக்கி ஊனப்படுத்தி நிர்மூலமாக்கினார்களோ,அதே பவுன்சர்களை ஆயுதமாக்கி அவுஸ்திரேலியர்களையும்,இங்கிலாந்தினரையும் அவர்களது மண்ணிலேயே மண்கவ்வ வைத்த வரலாற்றை க்ளைவ் லொயிட், விவியன் ரிச்சர்ட்ஸ்,ரொபேர்ட்ஸ் என்று பழைய மேற்கிந்திய நாயகர்களின் பேட்டிகளோடு மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர் !

அதுமட்டுமல்லாது,வெள்ளையினத்தவர்களினதும் அவர்களின் மீடியாக்களினதும் நிறவெறி எப்படி இருந்ததென்றும்,அது மேற்கிந்தியத்தீவுகள் அவர்களுக்கெதிராக வெற்றிபெறும் சமயங்களில் எப்படி உச்சமடைந்தது என்பது பற்றியும்,அதனை தங்கள் திறமைகளாலும்,வெற்றிகளாலும் எப்படி பணிய வைத்து கறுப்பினத்தவர்களை சமனாக மதிக்க வைக்க ஒன்றுபட்டு போராடியது பற்றியும் அதில் காட்டியிருந்தனர்.

1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று ஆடிய மேற்கிந்திய அணி,இங்கிலாந்தை 5-0 என்று வெள்ளையடித்ததை 'Black wash' என்று ரசிகர்கள் பதாதைகள் ஏந்தி கொண்டாடியதை காட்டினார்கள்.

கூடவே,தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையினத்தவரின் ஆட்சி நடைபெறும்போது அங்கு சென்று கிரிக்கட் ஆட மேற்கிந்தியா மறுத்திருந்தபோதும், அணியில் சில வீரர்கள் தங்கத்திற்காகவும், பவுண்ட்ஸ்க்காகவும் விலை போனதுபற்றியும் காட்டப்பட்டது.

விவியன் ரிச்சட்ஸ்'இன் தலைக்கு ஏகப்பட்ட விலை பேசப்பட்டது,அச்சந்தர்ப்பத்தில் ரிச்சட்ட்ஸ் விலை போயிருந்தால் முழு மேற்கிந்திய அணி வீரர்களும் விலைபோயிருப்பார்கள்,ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக எதிர்த்து நின்றார் என்றும், இதனை நெல்சன் மண்டேலா வரவேற்று வாழ்த்தினார் என்றும் அதில் காட்டினார்கள்.

கூடவே அக்காலகட்டத்தில் கிரிக்கட்டுடன் பாப் மார்லி எந்தளவுக்கு ஒன்றுபட்டு செயல்பட்டார் என்பது பற்றியும்,அவர் பாடல்களின் வீரியம் பற்றியும் ரிச்சட்ஸ் போன்றவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தனர்.போட்டி ஆரம்பிக்கும் முன்பாக பாப் மார்லி அணியின் அறைக்கு வந்து பாடி உற்சாகப்படுத்துவார் என்றும்,அந்த உத்வேகம் தான் பல போட்டிகளை மனவுறுதியோடு விளையாடி வெல்லவைத்ததென்றும் பழைய வீரர்கள் பேசினார்கள்.பார்க்கவே மிக உணர்ச்சிகரமாக இருந்த அந்த தொகுப்பு எங்கேனும் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்..!

இப்படியாக வீறுகொண்டெழுந்த மேற்கிந்தியத்தீவுகள் 1980 இல் இருந்து 1995வரை,தொடர்ச்சியாக 15ஆண்டுகளாக எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் படைத்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமல் தொடருகிறது,.!


'Fire in Babylon' காணொளி..!

Post Comment

Monday, August 19, 2013

ஆதலினால் பதிவு செய்வீர் 002...!


பேஸ்புக் பதிவுகளின் தொகுப்பு:

இப்போதெல்லாம் பெரும்பாலானோர் ட்விட்டரிலும்,பேஸ்புக்கிலும் தான் தங்கள் எழுத்துக்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.மீளப்பெற முடியாத எழுத்துக்கள், கற்பனைகள்  அவை.அதனால் மாதத்துக்கு இருதடவையேனும் ட்விட்டர்,பேஸ்புக்கில் கிறுக்கித் தள்ளுவனவற்றை ப்ளாக்கில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்,எனக்கான ஒரு சேமிப்பாக..!எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..!விரும்பியவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.என்னுடன் பேஸ்புக்கில்,ட்விட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு இவை பழைய விடயங்கள் தான் :) அந்தவகையில் இது இரண்டாவது பதிவு.



சுதந்திரம்..!


'நாடோடிகள்'படத்தில் மொட்டை மாடியில் படுத்திருப்பார்களே?அதுபோன்று இரவில் வானத்தை பார்த்தபடி தூங்கவேண்டும்.சுகமான கடல்காற்று தழுவிச்செல்ல வேண்டும்.ஒரு ரேடியோவில் 'நான்-ஸ்டாப்'பாக இளையராஜா பாடல்கள்(இரவென்பதால் ராஜாவுக்கு முன்னுரிமை)ஒலிக்கவேண்டும்.தனித்து அல்ல,நெருங்கிய நண்பர்கள் சிலருடன் நாட்டு நடப்புகள் பற்றியும்,ஏரியா பெண்கள் பற்றியும் அளவளாவியபடியே நேரத்தை களிக்க வேண்டும்.

ஆமா திடீரென மழைபெய்துவிட்டால்?கொழும்பில் எப்போது மழை பெய்யுமென்று யாருக்கும் தெரியாதே?மொட்டை மாடியில் சின்னதாக கூரை வேய்ந்துவிடுவோமா?ம்ம்ஹும் அப்படியானால் நட்சத்திரங்களை எப்படி வேவு பார்ப்பது?


சரி மழை தொடங்கினால்,எழுந்து வீட்டுக்கு சென்றுவிடலாம் தான். ஆனால்,நடுச்சாமத்தில் ஏறி இறங்கி பொடியள் அட்டகாசம் என்று அடுத்த நாள் காலை ப்ளாட் முழுவதும் தலைப்பு செய்தியாகிவிடுமே?

ஒரே இரவில் கெட்டவனாகிவிட முடியும் ஒரு குறுகிய சமூக கூட்டத்துக்கு.என்ன,மொட்டை மாடியில் சென்று தூங்கவேண்டும்..!எதற்கு வம்பு..'நல்ல பையன்கள்'என்றால்,இரவு முழுவதும் இணையத்தில் கழித்துவிட்டு,போர்த்து மூடிக்கொண்டு விட்டத்தை பார்த்தபடி தூங்குவார்களாம்.சந்தேகமே வேண்டாம்.இத்தனை வருடங்கள் என்னை ஒரு நல்ல பையனாக நான் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்..!


பெண்களும் வேலைப்பழுவும் பெண்ணியவாதிகளும்..!


கொழும்புக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்கு வரும் சில பெண்களை பார்த்து வியந்திருக்கிறேன்.புகையிரத பயணம் தான். சிலசமயம் புகையிரதம் புறப்படும் நேரம் காலை 5.30-6.30 ஆக இருக்கும்.அப்படியாயின் காலை 4 மணிக்கோ அதற்கு முன்பதாகவோ எழுந்திருந்து சமையல் வேலையை கவனித்தால் தான் குறித்த நேரத்துக்கு புகையிரதத்தை பிடிக்கமுடியும்.காலை உணவும்,மதிய உணவும் சமைத்து கொண்டேவருவார்கள். கணவருக்கும் கொடுத்து விடுவார்கள்.


வேலை முடிந்து மாலையில் 6மணிக்கு புகையிரதத்தை பிடித்து வியர்த்து நாறிய மந்தை கூட்டத்துள் ஒருத்தியாக 'நின்று' பயணித்துதனது நகரத்தை அடைய 8 மணி,பின்பு புகையிரத நிலையத்திலிருந்து கடைசி பேரூந்தை பிடித்து நகரத்திலிருந்து தொலைவிலிருக்கும் கிராமத்துக்கு ஒரு மணி நேர பயணம்.9,9.30 ஆகும் இரவு வீடு போய்ச்சேர!

இதற்குள் சின்ன வயது பிள்ளைகள் இருந்தால் டபுள் வேலை!இரவு கணவன் தொலைக் காட்சிக்குள் தன்னை தொலைத்துவிட,அடுத்த நாளுக்கான காய்கறிகளை வெட்டி வைப்பதோடு,பிள்ளைகளையும் கவனித்து கணவனுக்கும் பணிவிடை செய்து படுக்கச்செல்லும் போது நேரம் இரவு 12 ஐ தொட்டிருக்கும்..'அப்பாடா..'என்று கண்ணயரத்தான் 'அடடா நாளை எழும்புவதற்கு அலாரம் வைக்கவில்லையே"என்கின்ற ஞாபகம் எமனாக வந்து தொலையும்.'விடிய எந்திரிச்சு சமைச்சு வேலைக்கு கிளம்பணுமே' என்ற வெறுப்பில் எப்படித்தான் இவர்களுக்கு தூக்கம் வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கக்கூட வலிக்கிறது..!
இரும்பு பெண்கள்;பாவம்,பெண்ணியம் பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை..!


அரசியல்?

தமிழ் கூட்டமைப்பை கடுமையாக தாக்கியும்,ஒரு பெரும்பான்மை கட்சியை ஆதரித்தும் தேர்தல் மேடைப்பேச்சு ஒன்று தயார் செய்து தரும்படி யாழ் தேர்தலில் 'குதித்திருக்கும்' ஒருவர் சார்பாக அவர் நண்பர் கேட்டார்.



'சரி எவ்ளோ தருவீங்க'ன்னேன்.'(அரசியல்ப்பா...உசிரு சம்பந்தப்பட்டது..!)அதெல்லாம் இல்ல மச்சான் சூடா ஒரு பேச்சு ரெடி பண்ணி அனுப்பு'ன்னு ஆர்டர் பண்ணான்.'சரிடா மச்சான்'ன்னு போனை கட் பண்ணிட்டேன்.



நேத்து ஒருத்தர் 'நான் சுயேச்சைல நிக்கிறேன்..மாற்றத்துக்கு ஆதரவு தாங்க'அப்பிடின்னார். சாரிங்க எனக்கு இன்னும் ஓட்டு போடுற வயசு வரலைன்னு சொல்லிட்டேன்..

இவங்கள்லாம் எங்க இருந்து வந்தீங்களோ தெரியாது..ஆனா என்னய எங்க கொண்டு போய் நிறுத்தப்போறீங்கன்னு மட்டும் தெளிவா தெரிஞ்சிடுச்சு மாப்ளே..!ஆளை விடுங்கப்பா..அஞ்சு நாளைக்கு கடைக்கு லீவு போட்டுக்கிறேன்..!!


அரச கரும மொழி


என்னதான் தமிழ் இலங்கையில் அரச கரும மொழி என்று வெளியே கூறிக்கொண்டாலும், சிங்களம் மட்டுமே நடைமுறையில் உள்ளது என்பது எந்த அரச திணைக்களம், சங்கங்களுக்கு செல்கின்றவர்கள் கண்கூடாக காணக்கூடிய ஒன்று!


அதுவும் சில அலுவலர்கள் உட்சபட்சமாக ஒரு ஆங்கில வார்த்தை கூட கலக்காது தனி இலக்கிய சிங்களம் பேசுவார்கள்.ஓரளவு சிங்களம் தெரிந்த நமக்கே சிங்கியடிக்கும்.முற்றாக தெரியாதவர்கள் முழிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியாது.இன்று இதனை இன்னொரு தடவையாக அனுபவப்பட்டேன்.

யாரோ சொன்னார்கள் 'கொழும்பு பல்கலைக்கழகம்'என்பதில் 'ழ'கழன்று தொங்கி காணாமல் போய்விட்டது,அதனை தமிழ் மாணவர்களே சரிசெய்ய கேட்டபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று. மும்மொழியிலும் எழுதப்பட்ட பல்கலை பெயரில் தமிழில் மட்டும் எழுத்துக்கள் காணாமல் போவது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.(சுகததாச ஸ்டேடியம் இன்னொரு உ+ம்).

ஆமா,இதை எல்லாம் ஏன் இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்?தெரியவில்லை.உங்களுக்கு புரிந்திருக்குமோ என்னமோ..ம்ம்ம்


பாஸ்....?!


இந்த 'பாஸ்'என்கின்ற வார்த்தை எப்படி நம்கூட ஒட்டிக்கொண்டது தெரியவில்லை. பெரும்பாலானோர் 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்' படத்துக்கு பின்பதாக தான் அதனை அதிகம் பாவிக்கத் தொடங்கியிருந்தனர்.ஆனால் நான் 'பாஸ்'பாவிக்க தொடங்கியது அதற்கு முன்பு;வேறு காரணத்தால்!


மூன்று வருடங்களுக்கு முன்பு,'ஜெய்லானி'என்கின்ற பதிவரின் 50'ஓ இல்லை 100ஆவது பதிவுக்கு 'வாழ்த்துக்கள் அக்கா'அப்பிடின்னு கமெண்டிவிட்டு வந்துவிட்டேன்.(பிகரா இருக்குமோ!!)சில நாட்களின் பின்னர் தான் தெரியவந்தது அது பெண் பதிவரில்லை,ஆண் பதிவர் அப்பிடின்னு.அடடா அந்த மனுஷன் என்ன நினைத்திருப்பார் 'அக்கா'என விளித்ததற்கு என்று பிற்பாடு தான் வருந்திக்கொண்டேன். சிலசமயம்புனைபெயர்களால் இத்தகைய பிரச்சனைகள் வருவதுண்டு.
உ+ம்:சுஜாதா,சாரு நிவேதிதா

அன்றிலிருந்து எங்கு சென்றாலும்,'பாஸ்'போட்டு கதைப்பது, கமெண்ட்டுவது வழக்கமாகி விட்டது.அண்ணா,தம்பி,ஐயா என்று கதைப்பதை விட 'பாஸ்'என்று அழைப்பதை நெருக்கமாக உணர்ந்தேன். ஆரம்ப காலங்களில் 'நான் என்ன படைத்தளபதியா?பாஸ்ன்னு கூப்பிடாதீங்க'அப்பிடின்னு கடிந்துகொண்ட சிலரும் இருக்கிறார்கள், அவர்களும் இப்போது 'பாஸ்'க்கு அடிமை ஆகிவிட்டனர்.

பெண்கள் கூட இப்போதெல்லாம் கமெண்ட் இடும்போது 'பாஸ்'என்பதை பாவிக்கின்றனர், அது அவர்களுக்கு கூச்ச சுபாவத்தை மறைத்து துணிவாக பொதுவில் இயங்க ஊக்கமளிப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்.எது எப்படியோ 'பாஸ்'என்பது பல உறவு முறைகள், வயது,பால் வேறுபாடுகள் போன்ற தடைகளை உடைத்து சகஜமாக பழக உத்தரவாதமளிக்கும்,ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குள் ஊடுருவிய ஒரு அற்புதமான வார்த்தை..!

--------------------------------

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஸ்ரீதேவி அளவுக்கு இன்றைய சமந்தாவோ நஸ்ரியாவோ ஒடிஞ்சுபோன அர்ஜூன்மகள் ஐஸ்வர்யாவோ,தேஞ்சு போன கமல் மகள் ஸ்ருதியோ என்னை ஆட்கொள்ளவில்லை..!


இதில,ரூ.1.5 கோடி கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்னு ஸ்ருதி அறிக்கைவிட்டிருக்கார். எக்ஸ்ராவா கொஞ்சம் போட்டு 2 கோடி தர்றோம்மா...நீங்களும்,அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் கம்னு வீட்ட இருந்தா அதுவே கோடி புண்ணியம் நமக்கு..!

----------------------------

ஒருபக்கம் அறிவிலிகள் நடிகர்களுக்காக தற்கொலை செய்கிறார்கள் என்றால்,அதை விஞ்சிய அறிவிலிகள் அந்த தற்கொலையில் காமெடி செய்து இன்பம் காண்கிறார்கள்..!


நிச்சயமாக ரசிக்க முடியவில்லை;இரண்டையுமே..!!

------------------------------

வாந்திகள்,வக்கிரங்கள் எப்போதுமே அருவருக்கத்தக்கவை.பஸ்சில் பக்கத்தில் இருப்பவன் வாந்தி எடுப்பவன் என்றால் இன்னொரு சீட்டில் போய் உட்கார்வது உசிதமான காரியம்.பேஸ்புக்கில் அப்படியானவர்களின் போஸ்ட்டுகள் உங்கள் டைம்லைனில் வராமல் செய்துகொள்வது உங்கள் மேல் வாந்தி தெறித்து அசிங்கப்படுத்தி விடாமல் இருக்கவும்,அமைதியான வாழ்க்கைக்கும் வழிசமைக்கும்..!


காரணம் வாந்தி எடுக்கும் பழக்கம் இருப்பவர்களால் அதனை நிறுத்திக்க முடியாது.அது இயல்பு..!

--------------------------

'கௌரவம்'பார்த்தால் இந்த காலத்தில் வாழ முடியாது.எதிரிக்கு எதிரியாகவும்,வில்லனுக்கு வில்லனாகவும்,சதிகாரருக்கு சகுனியாகவும் தந்திரங்களுக்கு மத்தியில் ராஜதந்திரியாகவும் இருந்தால் தான் ஓரளவுக்கேனும் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும்.


ஏதோ ஒரு வகையிலான 'ரத்த பூமி'யில் தான் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!

-------------------------
கிளிநொச்சி


யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,திருகோணமலையிலுள்ள பிரதான தெருக்களை விட கிளிநொச்சியில் ஒரு சில பெருந்தெருக்கள், முக்கியமாக ஏ9 நெடுஞ்சாலை மிக விசாலமாக,அழகாக,நவீனமாக, வெளிநாட்டு தரத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளது!


அந்த நெடுஞ்சாலையில் செல்கையில் அப்படி ஒரு அழகிய 'பீல்' கிடைக்கும்..!புதிதாய் செல்பவர்களுக்கு(சிங்கள மக்கள்,வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு),அடடா என்ன ஒரு முன்னேற்றம்.. என்ன ஒரு நவீனத்துவம்..என்ன ஒரு அழகிய நகரம்..என்று ஏகப்பட்ட 'என்ன ஒரு...'க்கள் மனதில் தோன்றி மறையும்.



'முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது'என்பதற்கு இதைவிட வேறு நல்ல உதாரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றைய காலங்களில்.. ம்ஹும் கிடைப்பதாய் இல்லை..!


கிரிக்கட்

விராட் கோஹ்லி..!|எனக்கு கோஹ்லியை பிடிக்காது|ஆணவத்தை குறைத்து, பழக்க வழக்கங்களை திருத்திக்கொண்டால் சச்சினை மிஞ்சிவிடக்கூடிய(பிடித்துவிடக்கூடிய) நாயகன்..!



ஷேவாக்(251போட்டிகளில்) 15சதமும்,சங்ககாரா(351),மஹேல ஜெயவர்த்தன(402), டில்ஷான்(264)போட்டிகளில் தலா 16 சதமும்,கலீஸ் 321 போட்டிகளில் 17 சதமும் அடித்திருக்க,விராட் கோஹ்லி வெறும் 106 போட்டிகளில் 15 செஞ்சரிகளை குவித்திருக்கிறார்..!!

ஒரு நாள் போட்டிகளில் அதிக செஞ்சரி அடித்தவர்கள் பட்டியலில் சத்தமில்லாமல் 17ஆவது இடத்துக்கு வந்துவிட்டார் விராட் கோலி!இன்னும் 7 சதம் அடித்தால் நான்காவது இடம்..!மேலும் 15 அடித்தால், சச்சினுக்கு அடுத்ததாக 2ஆவது இடத்துக்கு வந்துவிடுவார்..!

கோஹ்லிக்கு ஈக்குவலான/மேலான பெறுபேறுகளை வைத்திருப்பவர் இப்போது ஆம்லா. வெறும் 74போட்டிகளில் 11 சதம்!வேகமாக 2000,3000 ஓட்டங்களை பெற்றவராக ஆம்லா இருக்கிறார்.துடுப்பாட்ட சராசரி 55(கோஹ்லிக்கு 50)!ஆனால் கோஹ்லிக்கு ஆம்லா போட்டி கிடையாது காரணம்,அவருக்கு வயது 30 ஆகிவிட்டது.கோஹ்லிக்கு வெறும் 24 வயது!

ஆனால்,இந்த வருடம் தலா 18போட்டிகளில் விளையாடி இருந்தாலும் மிஸ்பா உல் ஹக்(808)கோஹ்லியை(607) விடஅதிக ஓட்டம் குவித்திருக்கிறார்!9அரைச்சதங்கள்,அதில் நான்கு நேற்று முடிவடைந்த மேற்கிந்திய தீவுகளுடனான 5போட்டிகள் கொண்ட தொடரில் அடிக்கப்பட்டவை!!

----------------------------------

கிரிக்கட் எந்தளவுக்கு நம் நாட்டவருக்கு 'பாஷன்' என்றால் அதற்கு நாங்கள் விளையாடிய துடுப்புக்களே பதில் சொல்லும்.


சீவப்பட்ட தென்னை மட்டை,பனை மட்டை,கட்டில் பார்,ஏதும் தட்டையான வடிவம் கொண்ட மரக்கட்டை,பாடசாலை வகுப்பறையினில் கையில் கிடைக்கும் கொப்பி புத்தகங்கள் என்று உண்மையான 'பேட்'டை விட 'பேட்'மாதிரியானவைகள் தான் பெரும்பாலும் கைகொடுத்திருக்கின்றன.



அதனால் எப்படியாவது ஒரு 'பேட்'கிடைத்துவிட்டால்,அதனை வருடக்கணக்கில் பாவித்து,கை உடைந்தால் ஆணி அடித்து,நூல் கட்டி,கீழ்பக்கமாக உடைந்து தேய்ந்தால் அதற்கும் நூல் கட்டி,சிலசமயம் 'பேட்டரி கவர்'எடுத்து கீழே தேயாத வகையில் அடித்து சிறிது காலத்தில் பேட்டில் கையே பிடிக்கமுடியாத வகையில் ஆணிகள் நிரம்பி வழியும்.

அப்படி இருந்தும் கூட அதனை வைத்து கிரிக்கட் என்னும் ஆணியை பிடிங்கினோம். இப்போதும் பிடிங்கிக்கொண்டிருக்கிறார்கள் பலர்..!!


டுவிட்டர்

ட்விட்டரில் 2250 பொலோவர்ஸ் கிடைத்திருக்கிறார்கள்..புது நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்.புது செய்திகள்,புது விடயங்கள், புது மொக்கைகள், புது சண்டைகள், புது எதிரிகளும் கிடைத்திருக்கின்றன(றார்கள்).என்னுடைய ட்வீட்கள் குமுதம் ரிப்போட்டர் மற்றும் விகடன் வலைபாயுதேவில் வந்திருக்கிறது ஒரு சந்தோஷம். 


ட்விட்டரில் ட்வீட்டியவற்றை இங்கு பகிர விரும்பவில்லை.ட்விட்டர் பக்கத்தில் இருக்கிறது, விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள். ட்விட்டர் வைத்திருப்பவர்கள் 'பாலோ' பண்ணிக்கலாம்.டொனேஷன் எதுவும் கேட்கமாட்டேன்,உண்டியல் கூட குலுக்கமாட்டேன் 





விளையாட்டு அரசியல்..!

எங்கிருந்தோ வீதியின் குறுக்கே ஓடிவந்த பந்தினை,நடந்து வந்துகொண்டிருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருள் நீண்டகாலமாய் ஒழிந்திருந்த சிறுவன் தட்டிவிட அது எதிரே இருந்த கழிவு நீர் வாய்க்காலுக்குள் சென்று விழுந்தது.அவர் அப்படியே போய்விட்டார்.


அவர் சந்தியை எட்டுவதற்குள் இரு சிறுவர்கள் ஓடிவந்தார்கள்,ஒருவர் கையில் பேட் இருந்தது.நிச்சயம் அந்த பந்துக்கு சொந்தக்காரராய் இருக்கவேண்டும்.



சிறுவன்1: டேய் எங்கடா பந்து?
சிறுவன்2: தெரியாது..நீ தானே போட்டாய்?
சிறு1: நீ தானே அடிச்சாய்?
சிறு2: நான் எங்க அடிச்சேன்..பட்'ல படாம போயிரிச்சுடா..வைட் பால்!
சிறு1:நீ ஏன் அடிக்காம விட்டே?அது உன்னோட பிழை..!
சிறு2:நீ தானே வைட் போட்டே..நீ தான் தேடு போ..

அச்சமயம் அந்த இடத்தை கடந்து சென்ற எனக்கு இன்னமும் புரியவில்லை..பந்து வீதிக்கு சென்று தொலைந்ததற்கு காரணம் பந்து போட்டவனா இல்லை அதை அடிக்காமல் விட்டவனா இல்லை அதை தட்டிவிட்ட பெரியவரா..இல்லை தட்டிவிட்டதை சொல்லாமல் வந்த நானா...என்று..!


கற்பு அவர்களுக்கு மட்டும்தானா?

நாங்களும் சொல்லுவோம்..நமக்கும் கற்பு இருக்கும்மா..!ஏன் பொண்ணுக மட்டும் தான் இதைசொல்ல முடியுமா!!


When A Boy
Accepts Your Friend Request It Means He
Accepted Your “Friendship” Not Your
“Proposal”,
When A Boy Sends You A Friend Request It
Means He Wants To Be Your Friend Not Your
Boyfriend,
When He Tag You It Means He Wants To
Share His Thoughts With You And Not That
He’s Lost In Your Thoughts,
When He Comments On Your Status It Means
He’s Just Being Social And Not Flirting,
When He Like Your Comment It Means He
Like Your Comment Not You...!

Am i right guys??



ரஹ்மானின் மேஜிக்

உண்மையில் ராஜா-ரஹ்மான் என்று எதிரெதிரே மோதுபவர்கள் வெகு சிலர் தான்.அவர்களை தவிர்த்து பெரும்பாலானோருக்கு ராஜாவையும் ரஹ்மானையும் சமனாகவே பிடித்திருக்கிறது~!ராஜா தொட்ட சில உச்சங்களை ரஹ்மானும்,ரஹ்மான் தொட்ட சில உச்சங்களை ராஜாவும் தொடமுடியாது. காரணம் 'காலம்"!!ரஹ்மான் கதை முடிந்துவிட்டது என்று எங்கிருந்தாவது கதை வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதாவது ஒரு மேஜிக்கை கொடுத்துவிடுவார் ரஹ்மான்!'Coke Studio'வுக்காக என்னா ஒரு இசை.. ரஹ்மானிடமிருந்து..!!
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..எத்தனை தடவையோ..!!

Post Comment

Saturday, August 20, 2011

சாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்!!



இலங்கை ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் அசைக்க முடியாத ஒரு வீரராக அண்மைய காலங்களில் வலம்வரும் ஒரு துடுப்பாட்ட நட்சத்திரம் தான் "லிண்டம்லிலகே பிரகீத் சாமர சில்வா"!இலங்கை என்று சொன்னாலே வெளிநாட்டவர்களின் வாயில் அண்மைய காலங்களில் கதைபடும் அளவுக்கு மிக பிரபலமாக இருந்து வரும் சாமர சில்வா இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக்குழுவின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட!

1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதின்னான்காம் தேதி இலங்கையில் பாணதுறை எனப்படும் இடத்தில் இலங்கை கிரிக்கட்டை வாழவைக்க உதித்த செம்மல் சாமர சில்வா!பாணதுற ராயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சாமர சில்வா 1998 இல் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்! 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் ஒரு நான்கு ஐந்து அரைச்சதங்களை மத்தியவரிசையில் வந்து விளாசி இப்போ இன்று மட்டும் ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் நாயகன் இப்போ நான் இந்தப் பதிவை எழுதும் போது கூட ஒரு சிறந்த சாதனையாக பூச்சியத்தில் ஆட்டமிழந்து அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தீர்க்கமான தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்!

மொத்தமாக எழுபத்தி இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கும் சாமர சில்வா,ஒரே ஒரு சதம் மற்றும் 'பண்ணி இரண்டு" அரை சதங்களை விளாசித்தள்ளி இருக்கிறார்!இவற்றில் நான்கு 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் பெறப்பட்டதுடன் அந்த ஒரே ஒரு சதம் அந்த உலகக்கிண்ண தொடருக்கு முன்பதாக இந்திய அணிக்கெதிராக பெறப்பட்டது.அப்போ போர்ம்'க்கு வந்த சாமர சில்வா இன்று வரை அந்த போர்ம்'ஐ தொடர்ந்து வருகின்றமை அவரது அண்மைய சாதனைகளை பார்க்கும் போது தெட்டத்தெளிவாக தெரிகிறது!அவரது பன்னிரண்டு அரைச்சதங்களில்,முதலாவது அவரது முதல் அறிமுகப்போட்டியில் அவுஸ்த்ரேலிய அணிக்கெதிராக பெறப்பட்டது.உலகக்கிண்ணம்,அறிமுகப்போட்டி தவிர்த்து மிகுதியாக இருக்கும் எழு அரைச்சதங்களையும் இலங்கை அணியின் 'பல வெற்றி வாய்ப்புகளை தடுத்து" பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

பெரும்பாலும் ஒரு நாள் போட்டியில் முப்பத்தைந்து,நாற்பது ஓவர்களின் பின்னர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்தாட வேண்டிய இறுதி தருணங்களில் வந்து அத்தனை நாட்களாக நோன்பு நோற்று முடிந்து வந்தவனை போல பந்துகளை விழுங்கி ஏப்பம் விடுவதில் அவருக்கு நிகர் அவரே!!ரசல் ஆர்னோல்ட்'ஐ அவர் ஓய்வு பெறும் போது பிரதிநித்துவம் செய்ய அணிக்குள் வந்த புயல் என்று சாமர சில்வாவை ஆரம்ப காலத்தில் சொல்லும் போது நான் சந்தேகப்பட்டேன் அப்பவே..இப்ப அதனை நிரூபிக்கிறார் நம்ம தலைவர்!!


சமூக வலைத்தளங்களில் கிரிக்கட் விரும்பி இலங்கை ரசிகர்களால் பெரும்பாலும் பாவிக்கப்பட்ட ஒரே கிரிக்கட் நாமம் சாமர சில்வா!!எவ்வளவு தான் கடி மேல் கடி விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத நட்சத்திரம் சாமர சில்வா,நாட்பத்தைந்தாவது ஓவர்களில் கஷ்டப்பட்டு பத்து பந்துகளை வீணாக்கி பெறப்படும் ஒரே ஒரு ஓட்டத்தை பூர்த்தி செய்ய உசிரைக்கூட பொருட்படுத்தாது பாயக்கூட தயங்கியதில்லை என்பதிலிருந்து அவர் எந்தளவுக்கு இலங்கை கிரிக்கட்டின் எழுச்சிக்கு பயன்பட்டிருக்கிறார் எனபதை நீங்கள் ஊகித்து அறியலாம்!!

சில சமயங்களில் அவருக்குள்ளே ஒரு வேகம் பிறக்கும்..அப்போது அடிப்பார் பாருங்கள் கையிலிருக்கும் பேட் கூட பறக்கும் பாஸ்!!சும்மா அவரின் இடத்தை தக்க வைக்க அவர் தட்டும் சிங்கிள் எங்கயாச்சும் மிஸ் ஆகி எல்லைக்கோட்டை தொட்டுவிட்டால் அவரின் சந்தோசத்துக்கு அளவே இருக்காது!!
இலங்கை கிரிக்கட் அணியின் ரசிகர்கள் கைகளில் சாமர சில்வாவோ,அல்லது அவரை சளைக்காமல் களைக்காமல் தெரிவு செய்யும் தெரிவுக்குழுவினரோ கைக்கெட்டிய தூரத்தில் சிக்குவார்களாய் இருந்தால் அவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம் தான் போங்கள்!அவ்வளவு அன்பில் இருக்கிறாங்க நம்ம பசங்க!!

இன்னிக்கு நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வான வேடிக்கை காட்டி இருக்கும் சாமர சில்வாவை நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறது!!வாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்!!

Post Comment

Thursday, July 28, 2011

லார்ட்சில் தோனி பந்து வீசியது தவறா??


லார்ட்ஸ் டெஸ்ட்டில் தோனி பந்துவீசியது தொடர்பில் சர்ச்சைகள் முடிவடைந்தபாடில்லை.அதைப்பற்றியும்,இந்திய அணியின் தோல்வி குறித்தும் பல விமர்சனங்கள் வெளிவந்தவாறு !

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா சவாலின்றி சரணடைந்ததையடுத்து பேடி, வடேகர், கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.இது பற்றி செய்திகளில் வந்த விடயங்கள் யாதெனில்:

"பிஷன் சிங் பேடியிடம் கேட்டபோது, மாட் பிரையர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரர், ஆனால் டோனி பிரையரைக் காட்டிலும் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளர் என்று கேலியாகக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்வியை கபில்தேவ் வர்ணித்ததாவது, நாம் இந்தப் போட்டியைக் காப்பாற்றியிருக்கலாம், களம் ஒன்றும் மோசமாக இல்லை, ஆனால் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தனர். இங்கிலாந்தில் ரன் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தடுப்பாட்டம் விளையாடி நீடிக்க முடியாது.

நாம் தாக்குதல் ஆட்டம் ஆடவேண்டும். லட்சுமணும், டிராவிட்டும் அவர்கள் பாணியில் விளையாடியதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். நமது பொறுப்பை உணர்ந்து நம் கிரிக்கட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சச்சின் பற்றியும், அவரது 100 வது சதம் பற்றியும் பெரும் ஊதிப் பெருக்கல்கள் நிகழ்ந்தது. இதனால் கவனம் இழக்கப்பட்டது என்றார் கபில்தேவ்.

பேடி தெரிவிக்கையில், துடுப்பாட்டம் தான் நம் அணியின் பலம் எனில் ஏன் டொஸ் வென்று முதலில் அவர்கள் கையில் துடுப்பாட்டத்தை கொடுக்க வேண்டும். அதுவும் திட்டமிடுதல் இல்லாமல் 474 ரன்களை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்போதும் பயிற்சியாளரிடம் விடயத்தை ஒப்படைக்கக் கூடாது. வீரர்கள் தாங்களாகவே சில விடயங்களில் முன்னேற வேண்டும்.

சச்சினைப் பொறுத்தவரையில் நான் வருந்துகிறேன். முதல் இன்னிங்ஸில் நல்ல பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பதுங்கினார். அவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல, ஆனாலும் அவர் ஆதிக்கபூர்வமாக துடுப்பாட்டம் செய்திருக்க வேண்டும். சேவாகும், சச்சினும் இது போன்று விளையாடக்கூடாது. சச்சின் ஆதிக்க வழிக்குத் திரும்ப வேண்டும் என்றார் பேடி.

மேலும், டோனி பந்து வீசியது குறித்து பதிலளித்த பேடி, இது ஒரு பெரிய தர்மசங்கடம், இவ்வாறு செய்வதன் மூலம் எதிராளிக்கு நம் பந்து வீச்சு வறட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டினார் டோனி.

இது குறித்து வடேகர் கூறுகையில், டோனி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நிதி திரட்டல் போட்டி இது என்று நினைக்கிறாரா? அவர் பந்து வீச முடிவு செய்தது முட்டாள் தனமானது.

வெங்சர்க்கார் தன் தரப்பில் கூறுகையில், ஜாகீரும், சச்சினும் உலகக் கோப்பை இறுதிக்குப் பிறகு நேராக லார்ட்ஸ் வருகின்றனர். குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்கள் தேவை, இந்திய அணி நல்ல முன் பயற்சி செய்யவில்லை என்றார்."

தோனியின் பந்துவீச்சு பெறுமதிகள்
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests58578580---4.46-000
ODIs1861121411/141/1414.007.0012.0000
T20Is26------------
First-class99108780---4.33-000
List A242393621/141/1418.005.5319.5000
Twenty2095------------

லார்ட்சில் ஜாகீர் கான் காயம் காரணமாக 13.3 ஒவர்கள் மட்டுமே வீசினார். இதுவும் கூட இந்திய அணி 196 ரன் வித்தியாசத்தில் தோற்க காரணமாக அமைந்தது என்று வசீம் அக்ரம் தெரிவித்தார்

தோனி பந்து வீச நேர்ந்தது ஜாகிர் கான் காயமடைந்து வெளியேறியமையே ஆகும்!வெறுமனே 13 .3 ஓவர்கள் பந்துவீசியவுடன் சாகிர் மைதானத்தை விட்டு வெளியேற,தோனிக்கு வேறு வழி தெரியவில்லை!முழங்கை பிரச்சனையால் மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்போட்டியில் கூட விளையாடாத ஜாகிர் கானை எந்த உடல் தகுதியை பார்த்து இவர்கள் அணிக்குள் தேர்வு செய்தனர் என்பது கேள்விக்குறி!சமர்செட் அணியுடனான பயிற்ச்சிபோட்டியில் விளையாடி இருந்தாலும் அந்த போட்டியில் எந்தவித விக்கட்டையும் ஜாகிர் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவது டெஸ்ட்டுக்கு ஸ்ரீசாந்தை தெரிவு செய்திருக்கின்றனர்.இதனை முதல் டெஸ்ட்டிலேயே செய்திருக்கலாமே!இந்திய அணியின் பலம் துடுப்பாட்டமே.முதல் டெஸ்ட்டில் துடுப்பாட்டம் சொதப்ப பந்துவீச்சு பக்கம் கவனம் திரும்பி இருக்கிறது!

அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை இணைத்துக்கொண்டு விளையாடியபோது,ஜாஹீரின் வெளியேற்றம் பந்துவீச்சில் ஒரு வறட்சித்தன்மையை ஏற்படுத்தியது தோனிக்கு.பிரவீன் குமார் விக்கட்டுகளை எடுத்தாலும் அவரின் பெரும்பாலான விக்கட்டுகள் ஆட்டத்தின் பின் பகுதியிலேயே எடுக்கப்பட்டன.இஷாந்த் சர்மாவும் ஹர்பஜன் சிங்கும் விக்கட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார்!வேறு வழி தெரியாமலேயே தோனி தானே பந்து வீச முயன்றிருக்கலாம்!இங்கிலாந்து கூட ஜோனத்தன் ற்றோட்டை பகுதி நேர பந்துவீச்சாளராக சில சமயங்களில் பாவித்திருந்து சில நல்ல இணைப்பாட்டங்களை பிரித்திருக்கிறது.அவ்வாறு தோனி முயன்றிருக்கலாம்.எவ்வளவு நேரம் தான் விக்கட் எடுக்காத இஹாந்த் சர்மாவையும் ஹர்பஜன் சிங்கையும் பயன்படுத்துவது!எட்டு ஓவர்கள் பந்து வீசிய தோனி எந்த விக்கட்டையும் கைப்பற்றவில்லை.மொத்தமாக முதல் தர போட்டிகளில் வெறுமனே மூன்று விக்கட்டுகளை மட்டுமே தோனி கைப்பற்றி இருக்கிறார்.என்ன செய்வது,யாருமே இல்லாத நேரத்தில் பந்து வீசி இருக்கிறார்.யுவராஜ் இருந்திருந்தால் அவரை பாவித்திருக்கலாம்.ஆனால் ரைனாவால் பகுதி நேர பந்துவீச்சை சிறப்பாக செய்ய முடிந்திருக்கவில்லை!

Sreesanth could be in the India playing XI for the Trent Bridge Test with Zaheer Khan being ruled out

தலைவரான பின்னர் தோனி பல விடயங்களை பரீட்சித்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்!அப்போது அவரை அனைவரும் தூக்கி வைத்து கொண்டானினார்கள்.அன்றைய டோனியின் முயற்சி பிழைத்து போய்விட்டதால் அவரை வரிந்து கட்டி சாடுகின்றனர்!இதே இந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தாலோ அல்லது தோனி ஒரு விக்கட்டை/பீட்டர்சன் விக்கட்டை கைப்பெற்றி இருந்தால் இதே விமர்சகர்கள் என்ன செய்திருப்பார்கள்???

அதே நேரம் ஆஷஸ் தொடர் போல வாய் ஜாலங்களை தொடங்கி விட்டனர் இங்கிலாந்தின் மூத்த வீரர்கள்.இயன் பொத்தம் இது பற்றி தெரிவிக்கையில் "

சொந்த மண்ணில் அதிக வலுவுடன் உள்ள இங்கிலாந்து அணியை இந்தியா தோற்கடிக்க முடியாது.உலக கிரிக்கட்டின் மன்னராக வலம் வருகிறோம். எங்களை பிளவுப்பட்ட இந்திய கிரிக்கட் அணி தோற்கடிக்க முடியாது "என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மீண்டுவர முடியாது என இங்கிலாந்தின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியினர் ஆக்ரோஷமாக உள்ளனர். அவர்கள் இந்திய அணியை வீழ்த்துவோம் எனற உறுதியில் உள்ளனர். உலக டெஸ்ட் அரங்கில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பசி, இங்கிலாந்து அணியிடம் இருக்கிறது என்றும் பாய்காட் தெரிவித்திருக்கிறார்.


பார்ப்போம் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் எழுச்சி பெறுமா என்று!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...