Friday, September 26, 2014

பேஸ்புக் பெண்கள்..!


'அதென்ன உங்க ஸ்டேடஸ்ச,உங்க போட்டோவ மத்தவங்க லைக் பண்ணனும்னு எதிர்பாக்கிறீங்க ஆனா ஏன் மத்தவங்க போட்டோவ லைக் பண்றீங்க இல்ல?'ன்னு புதுசா சாட்க்கு வந்த பொண்ணு கேட்டிச்சு.

'எது அந்த பர்பி டோல் போட்டோவையா லைக் பண்ணல?'
'இல்லை.'ன்னிச்சு.

'அந்த ரோஜாப்பூ போட்டோவையா?'
'இல்லைங்க..'

'அந்த நாய்குட்டி போட்டோவ சொல்றீங்களா?'
'இல்லைப்பா...'

'ஓகே ஓகே புரிஞ்சிரிச்சு..போன வாரம் ஒரு பிள்ளையார் போட்டோவ ப்ரொபைல்ல போட்டிருந்தீங்களே அதத்தானே கேக்கிறீங்க?'
'இல்லைங்க..'

'அப்புறம் எதத்தான் நான் லைக் பண்ணல?'
'போன மாசம் போட்டிருந்தனே?'

'அந்த கார்ட்டூனா?'
'இல்லப்பா..'

'காஜலா?'
'இல்லப்பா..'

'அனுருத் போட்டோவா?'
'இல்லப்பா..'

'அப்போ எதத்தான்பா போட்டீங்க?'

'அதாங்க என்னோட சின்னி விரல்ல கலர் கலரா நெயில் பொலிஷ் டிசைன் பண்ணி போட்டிருந்தனே?என்னோட ப்ரெண்ட் பூஜா கூட வந்து கியூட்ன்னு சொல்லி ரெண்டு ரெட் ஆப்பிள்   கமெண்ட் வேற போட்டிருந்தாளே..நீங்க பாக்கல?


Post Comment

புத்தக வெளியீட்டு காமெடிகள்..!


நண்பர்,அதிகளவாக வாசிப்பு,புத்தகங்கள்,இலக்கியம் சம்பந்தமாய் அறவே ஆர்வமற்றவர் என்று அறியப்பட்டவர். நேற்று அதிசயமாய் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.அடிக்கடி போனில் பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்டேன்.

'பொன்னியின் செல்வன்'வாசிச்சிருக்கீங்களா பாஸ்?போன வாரம்தான் வாசிச்சு முடிச்சேன்.செம புக்கு தல.அதபத்தி தான் விவாதிச்சிட்டிருக்கோம் பேஸ்புக்ல' என்றார்.எட்டிப் பார்த்தேன்.'its a great novel..very very interesting' அப்பிடின்னு ஆங்கிலத்தில் மிகத்தீவிரமாக விவாதம் போய்க்கொண்டிருந்தது.
'ம்ம்..வாசிச்சிருக்கேன்'என்றேன்.

'எப்போ?
'ஆறாம் ஆண்டு படிக்கும்போது முதல்தடவை'

'முழுசா வாசிச்சீங்களா?மொத்தமா அஞ்சு பாகம் இருக்கு பாஸ்!'
'ம்ம்..முழுசா வாசிச்சேன்..'

'செம இண்டெரெஸ்ட்டிங்க்லே?'
'ம்ம்ம் ஆமா ஆமா'

'டைட்டில் தான் சாட்டர் பாஸ்..சோழரின் வீர சாகசம்..சோழரின் பெருமை..அப்பிடின்னு ஏதும் டைட்டில் வைச்சிருந்தா நிறையப்பேர் வாங்கிவாசிச்சிருப்பாங்க'என்றார்.

'அப்பிடியா?நல்ல காலம் கல்கி செத்துப்போய்ட்டார்'என்று நினைத்துக்கொண்டேன்.
'அடுத்ததா சிவகாமியின் சபதம் வாசியுங்க பாஸ்'
'ம்ம்ம்..'

'கடல் புறா கூட வாசிக்கலாம் நீங்க..சாண்டில்யன்ன்னு ஒரு ரைட்டர்.செமயா எழுதியிருப்பார்!'
'ம்ம்..'
'கொஞ்சம் இருங்க பாஸ்..வெளில போய்ட்டு வர்றேன்..'என்று வராத கோலை அட்டெண்ட் பண்ணிக்கொண்டே திடீரென எழுந்து சென்றார்.

என்னவாய் இருக்குமென்று யோசித்தேன்.புத்தகம் விற்றுக்கொண்டு வந்தவர்கள் எனக்கு அருகே வந்துவிட்டிருந்தனர்.அடுத்த முறை அவரோடது..!

-------------------------------------------------------------------------------------------------------------------

சரி விசயத்திற்கு வருவோம்.

'திரை விலகும்போது..'என்கின்ற திருச்செந்தூரனின் வானொலி மேடை நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன்.

குறைந்தது 250-300பேராவது வந்திருப்பார்கள்.சிறப்பாக ஒழுங்கமைத்து நிகழ்ச்சியை நடாத்தியிருந்தார்கள்.ஒரு 200 புத்தகங்களேனும் குறந்தபட்சம் நிகழ்ச்சியில் விற்று முடிந்திருக்கும்.விலை 500ரூபாய் என்றாலும் 400க்கே விழா மண்டபத்தில் பெற்றுக்கொள்ளமுடிந்தது.பலரை புத்தகம் வாசிக்க,வாங்கத் தூண்டவேண்டும் என்கின்ற காரணத்தினாலும்,பலரை சென்றடையவேண்டும் என்கின்ற எண்ணத்தினாலும் கழிவு விலையில் கொடுப்பதாக நூலாசிரியர் தெரிவித்திருந்தார்.

அப்துல் ஹமீதின் பேச்சை பலரும் தங்களது தொலைபேசிகளில் பதிவுசெய்துகொண்டிருந்தனர்.உலக அறிவிப்பாளர் என்று அழைத்தால்,எந்த விதத்தில் இவர் உலக அறிவிப்பாளர் என்று பலரும் பட்டிமன்றம் வைப்பதால் தன்னை அன்பு அறிவிப்பாளர் என்றே அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் அப்துல் ஹமீட்.தங்கள் வானொலி/ ஊடகத்துறை சார்ந்த சாதனைகள்,முயற்சிகள் அனைத்தும் பதியப்படாமலே காலத்தினால் அழிந்துவிட்டன என்று கவலைப்பட்டார்.

ஊடகத்துறையினர் பலரும்,நாடகத்துடன் சம்பந்தமான பலரும் வந்திருந்தனர்.சரஸ்வதி மண்டபம் நிரம்பியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.சிறப்பான திட்டமிடலும் ஒழுங்கமைப்பும்,சமூக வலைத்தள ஆதரவும் இருந்தால்,புத்தக வெளியீட்டுக்கு கூட இலங்கையில் 500 பேரை திரட்டலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

ஷண்முகாஸ் சிற்றுண்டி மற்றும் குளிர்பானத்துடன் உபசரிப்பு வேறு..!வாழ்த்துக்கள் Senthooran Thiruchchenthooran..!



Post Comment

பொருளியல் ஆசிரியர் வரதராஜன்..!


பொருளியலும் வரதரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாகவே உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் படித்த மாணவர்கள் நினைத்திருப்பர்!வடக்கில் பொருளியல் என்றாலே கூடவே வரதரும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் பலருக்கும்!

உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவுக்குள் காலடி எடுத்துவைத்த போது 'இதெல்லாம் ஒரு மேட்டரா'என்று எனக்கிருந்த இறுமாப்பு தகர்ந்தது வரதரின் முதலாவது வகுப்பில் தான்!

ஒவ்வொரு பொருளியல் எண்ணக்கருக்களையும் அதன் ஆதி முதல்கொண்டு முழுமையாக விளக்குவதில் வரதருக்கு நிகர் அவரே!


பொருளியல் அவர் இரத்தத்தில் ஊறிய ஒன்று!அதுவே பிடிக்காத பொருளியலையும் பலருக்கு பிடித்தமானதாக்கியது!தீவிர நாட்டுப்பற்றாளன்.இதனாலேயே இந்தியன் ஆர்மியாலும், பின்னர் அண்மையில் இனந்தெரியாதோராலும்(!) கடத்தப்பட்டார்.கல்விமான்.அரசியல்-பொருளாதார விமர்சகர். வகுப்புகளில் அரசியல்-பொருளாதார நுண் காமெடிக்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.

ஒருசில ஆசிரியர்கள் தான்,ஆசிரியர் என்கின்ற ஸ்தானத்தையும் தாண்டி மனதில் ஒரு ஹீரோவாக,கடவுளாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.பொருளியலைப் பொறுத்த வரையில் பெரும்பாலானோருக்கு வரதர் அப்படித்தான்..!சிறந்த பொருளியல் ஆசானை தமிழ் மாணவர்களும் கல்விச் சமூகமும் இன்று இழந்து நிற்கின்றது!

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

Post Comment

மனிதாபிமானம்..!

'எவ்வளவு கொடூரமாக கட்டிவைத்து கொலை செய்திருக்கின்றனர் ISIS தீவிரவாதிகள்..!மனிதாபிமானம் அற்றவர்கள்'என்றாள் அந்த சிங்கள பெண்மணி என்னிடம்.

'உண்மை தான்..மனிதாபிமானம் அற்றவர்கள்'என்றேன்.

கைகள் கட்டியபடி உயிர்பிச்சைகேட்டு மண்டியிட்டு நின்ற என் சகோதரங்களின் நினைவு ஒருகணம் ஞாபகத்திற்கு வந்து சென்றது.'சரி,எல்லா சிங்களவர்களும் அப்படி இல்லைத்தானே!' என்று என்னை நானே சமாதானம் செய்ய முயற்சித்தேன்.

'அப்படி இல்லை என்றாலும்,இதனை என்னிடம் சொல்லும்போது ஒருவித குற்ற உணர்ச்சியாவது அவளிடம் இருந்திருக்கவேண்டுமே! அப்படி ஏதும் தெரியவில்லையே.. ஒருவேளை,நம் சகோதரர்கள் மட்டும் மனிதாபிமானத்திற்குள் உள்ளடங்கவில்லையா என்ன?'

இதை வாய்விட்டு அவளிடம் கேட்கவிரும்பவில்லை.'ஏன் கார்பெட்ல A9 ரோட்டு போட்டிருக்காங்க..யாழ்ப்பாணம் வரைக்கும் ரெயின் போகுது..மார்வலஸ் டெவலப்மெண்ட் நோர்த் சைட் ஆப்டர் வார்'என்கின்ற அந்த மிக அரிதான உண்மைகளை எத்தனை தடவைகள் தான் நானும் கேட்பது..!

Post Comment

அண்டர்வேர்ஸும் நானும்..!


மழைக் காலம் ஆரம்பமான அறிகுறிகள் தென்பட்டதால் எதற்கும் மேலதிகமாய் சில அண்டர்வேர்ஸ் வாங்கி வைத்துக்கொள்வோம் என்கின்ற நினைப்பில் இலங்கையின் பிரபல ஆடைச்சங்கிலி ஒன்றிற்கு சென்றேன்.பல மாடிகள் கொண்ட அந்த காட்சியறையில் ஒரு மூலையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் தான் ஆண்களுக்கான அண்டர்வேர்ஸ் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.மேலோட்டமாய் பார்த்ததில் மொத்தமாக மூன்று வரைட்டி.அதில் இரண்டு உள்ளூர் தயாரிப்பு,நூறு ரூபாய்க்கு ஐந்து வகையறா.

சரி இருப்பவற்றுள் தரமாக ஒன்றை எடுப்போமென்று பார்த்தால் எனக்கு சரியாக வரக்கூடிய சைஸ் இல்லை!அனைத்துமே Small and XL வகையில் தான் இருந்தன.ஒரே ஆச்சரியமாக போய்விட்டது. அப்படியாயின் இடுப்பளவு 28ற்கு குறைந்தவர்களும், 40ற்க்கு மேற்பட்டவர்களும் தான் இலங்கையில் அண்டர்வேர் அணிகின்றார்களா?மீடியம் மற்றும் லார்ஜ் கேட்டகரி ஆண்கள் வெறும் ஜிங்குணுமணி தானா என்று நினைக்கும்போது அமெரிக்க ஏகாபத்தியத்தின் மீது கம்யூனிசவாதிகளுக்கு ஏற்படும் கோபத்தைவிட அதிகமாய் கோபம் வந்து தொலைத்தது!

உள்ளூர் ப்ராண்டிலாவது இருக்கின்றதா என்று பார்த்தால், ம்ம்ஹும்அதிலும் இல்லை.!சரி,உதவிக்கு நிற்கும் யாரிடமாவது கேட்போமென்று நிமிர்ந்தால், ஒரு பெண் குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தார்.ஆண்களின் உள்ளாடை செக்க்ஷனுக்கு பெண்களை உதவிக்கு நிறுத்தியதன் அரசியல் கடைசிவரைக்கும் புரியவே இல்லை.'ஜொக்கி';ல மீடியமோ லார்ஜோ எதுவும் இல்லை,உங்ககிட்ட இருக்கா?' என்று கேட்க நினைத்தும்,எதற்கு வம்பென்று இருந்ததை அப்படியே போட்டுவிட்டு,இன்னொரு பிரபல ஆடையகத்திற்கு சென்றேன்.

அதுவும் நான்கு மாடிகளைக் கொண்ட காட்சியறை தான். ஆனால் ஆண்களின் அண்டர்வேர் செக்க்ஷனை கண்டுபிடிப்பதற்கு ஐந்து சுற்று சுற்றவேண்டியிருந்தது.ஒரு மூலையில் 'இதையெல்லாம் எவன் தேடுவான்'என்கின்ற எண்ணத்தில் ஒதுக்கிவைத்ததுபோன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.முதல் சென்ற கடையாவது பரவாயில்லை,இங்கு மொத்தமாக ஒரு ஐம்பது அண்டர்வேர் பொக்ஸ் தான் இருந்து தொலைத்தது.அதில் அரைவாசி என்னமோ சைனீஸ் வெர்ஷன்.அவனுக அவனுகளோட மெஷர்மெண்ட்ல தானே தைச்சிருப்பானுக..நமக்கு சூட் ஆகாது பாருங்க!

அண்டர்வேர்களிலும் உட்புகுந்த சைனீஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்துக்கொண்டே மீடியம்-லார்ஜ் சைஸ்களை தேடினால், காலக்கொடுமை,அங்கும் அந்த சைஸில் எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் Small& XL தான்!இருந்த ஒரு லாரஜ்'ஜும் பெட்டி திறக்கப்பட்டு உருக்குலைக்கப்பட்டிருந்தது.

இந்த மாற்றம் எதனால் என்று இன்னமும் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. ஒருவேளை பட்டாபட்டி கலாசாரம் ஒழிந்ததுபோல அண்டர்வேர் கலாசாரமும் ஒழிந்துவிட்டதா? நான் தான் விஷயம் புரியாமல் ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங்குடன் அலைந்துகொண்டிருக்கிறேனா என்று ஒரே குழப்பமாகிவிட்டது.அண்டர்வேர்ஸின் அவசியத்தை முன்னிலைப்படுத்தி போராடலாமென்றிருக்கின்றேன். யார் யார் வருகின்றீர்கள்..?!!

Post Comment

நண்டு- ஒரு அனுபவம்..!

பொழுதுசாய,கடற்கரை வீதியில் தாம் பிடித்த இறால் நண்டு மீன் போன்றவற்றை சில மீனவர்கள் வைத்து விற்பது வழக்கம்.அப்படித்தான் ஒருவர் நண்டு வைத்து கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரும் வாங்குவதாக தெரியவில்லை.

என்ன விலை என்று விசாரித்தால் 400ரூபாய் என்றார்.படிந்து 300 ரூபா கிலோ என்றார்.இதுவே வெள்ளவத்தை மீன் கடைகளிலோ,சூப்பர் மார்க்கெட்டிலோ வாங்குவதாயின் எப்படியும் கிலோ 800 தேறும்.வத்தல் தொத்தல் போக,எஞ்சுவது லாபம் என்று 'இரண்டு கிலோ போடுங்கோ' என்று கேட்டேன்.

என் அனுமதி இல்லாமலே 3கிலோ போட்டு பையை முடிச்சுப்போட்டு நீட்டினார்.4,5 நாட்களாவது ப்ரிட்ஜில் வைத்து சமைக்கலாம்தானே என்று அதை வாங்கிக்கொண்டு நடக்க வெளிக்கிட்டேன்.அவரும் என் பின்னாலே வந்தார்.ஆடு சிக்கிரிச்சுன்னு நினைத்தாரோ என்னமோ,'தம்பி இதையும் பிடியுங்க,இனி யாருக்கு விக்கிறது..200ரூபா தாங்கோ'என்றார்.

எப்படியும் அதில் 2கிலோ தேறும்போல் தெரிந்தது.சரி ஐந்து நாளைக்கு நண்டுமயம் தான் என்று அதையும் வாங்கிக் கொண்டேன்.வீட்டிற்கு கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஸ்டேடஸ் போடுவோமென்று உட்கார்ந்தால், குசினியில் நண்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்த அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார். என்னவென்று எட்டிப் பார்த்தால்,ஐந்துகிலோ நண்டில் இரண்டு கிலோ தான் தேறுமாம்.மிச்சம் எல்லாம் வத்தல்,தொத்தல்,கழிவுகளாம்.சரி, எப்படிப் பார்த்தாலும் லாபம் தானேயென்று இல்லாத மீசையை உருவிவிட்டுக்கொண்டேன்.எல்லாம் அனுபவம் தானே!

ஆடுகள் உருவாவதில்லை..உருவாக்கப்படுகிறார்கள்.ஆங்ங்க்!

Post Comment

Fire in Babylon- ஒரு பார்வை..!

அதிசயமாய்,சக்தி டிவியில் இன்று மதியம் ரசிக்கத்தக்க நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்பினார்கள்.மேற்கிந்திய கிரிக்கெட் அணி பற்றிய டொக்யூமெண்டரி ஒன்று தான்,தமிழ் உப தலைப்புகளுடன்.

தலைக்கவசம்,சைட் பாட்ஸ் எதுவுமில்லாத காலப்பகுதியில் பவுன்சர்களால் அவுஸ்திரேலியர்கள் மேற்கிந்திய கிரிக்கட் அணியை 1975, 'The Frank Worrell Trophy'இல் எப்படி தாக்கி ஊனப்படுத்தி நிர்மூலமாக்கினார்களோ,அதே பவுன்சர்களை ஆயுதமாக்கி அவுஸ்திரேலியர்களையும்,இங்கிலாந்தினரையும் அவர்களது மண்ணிலேயே மண்கவ்வ வைத்த வரலாற்றை க்ளைவ் லொயிட், விவியன் ரிச்சர்ட்ஸ்,ரொபேர்ட்ஸ் என்று பழைய மேற்கிந்திய நாயகர்களின் பேட்டிகளோடு மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர் !

அதுமட்டுமல்லாது,வெள்ளையினத்தவர்களினதும் அவர்களின் மீடியாக்களினதும் நிறவெறி எப்படி இருந்ததென்றும்,அது மேற்கிந்தியத்தீவுகள் அவர்களுக்கெதிராக வெற்றிபெறும் சமயங்களில் எப்படி உச்சமடைந்தது என்பது பற்றியும்,அதனை தங்கள் திறமைகளாலும்,வெற்றிகளாலும் எப்படி பணிய வைத்து கறுப்பினத்தவர்களை சமனாக மதிக்க வைக்க ஒன்றுபட்டு போராடியது பற்றியும் அதில் காட்டியிருந்தனர்.

1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று ஆடிய மேற்கிந்திய அணி,இங்கிலாந்தை 5-0 என்று வெள்ளையடித்ததை 'Black wash' என்று ரசிகர்கள் பதாதைகள் ஏந்தி கொண்டாடியதை காட்டினார்கள்.

கூடவே,தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையினத்தவரின் ஆட்சி நடைபெறும்போது அங்கு சென்று கிரிக்கட் ஆட மேற்கிந்தியா மறுத்திருந்தபோதும், அணியில் சில வீரர்கள் தங்கத்திற்காகவும், பவுண்ட்ஸ்க்காகவும் விலை போனதுபற்றியும் காட்டப்பட்டது.

விவியன் ரிச்சட்ஸ்'இன் தலைக்கு ஏகப்பட்ட விலை பேசப்பட்டது,அச்சந்தர்ப்பத்தில் ரிச்சட்ட்ஸ் விலை போயிருந்தால் முழு மேற்கிந்திய அணி வீரர்களும் விலைபோயிருப்பார்கள்,ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக எதிர்த்து நின்றார் என்றும், இதனை நெல்சன் மண்டேலா வரவேற்று வாழ்த்தினார் என்றும் அதில் காட்டினார்கள்.

கூடவே அக்காலகட்டத்தில் கிரிக்கட்டுடன் பாப் மார்லி எந்தளவுக்கு ஒன்றுபட்டு செயல்பட்டார் என்பது பற்றியும்,அவர் பாடல்களின் வீரியம் பற்றியும் ரிச்சட்ஸ் போன்றவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தனர்.போட்டி ஆரம்பிக்கும் முன்பாக பாப் மார்லி அணியின் அறைக்கு வந்து பாடி உற்சாகப்படுத்துவார் என்றும்,அந்த உத்வேகம் தான் பல போட்டிகளை மனவுறுதியோடு விளையாடி வெல்லவைத்ததென்றும் பழைய வீரர்கள் பேசினார்கள்.பார்க்கவே மிக உணர்ச்சிகரமாக இருந்த அந்த தொகுப்பு எங்கேனும் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்..!

இப்படியாக வீறுகொண்டெழுந்த மேற்கிந்தியத்தீவுகள் 1980 இல் இருந்து 1995வரை,தொடர்ச்சியாக 15ஆண்டுகளாக எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் படைத்த சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமல் தொடருகிறது,.!


'Fire in Babylon' காணொளி..!

Post Comment

பிடித்த புத்தகங்கள் 10..!

பிடித்த புத்தகங்கள் தொடர்பிலானஅழைப்பிற்கு நன்றி Bella Dalima.இது தான் என் பட்டியல்;

1.பொன்னியின் செல்வன்-கல்கி
12,16,19 என்று மூன்று வயதுகளில் வாசிக்கப்பட்டது.ஒவ்வொரு வயதிலும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது, சுவாரசியம் குறையவேயில்லை.ஆரம்ப முப்பதுகளில் மீண்டும் வாசிப்பதாக திட்டம்!


2.புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
பாண்டியன் பார்வையில் என்னை உலகம் சுற்றும் வாலிபனாக்கி பாண்டியனாகவே வாசித்தேன்.இல்லை பார்த்தேன்.இல்லை அத்தனை புயல்களையும் எதிர்கொண்டேன் என்றே கூறலாம்.


3.ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
இருநூற்றிச்சொச்ச பக்கங்கள் தான்.முழுதாக மூன்று மணித்தியாலங்கள் போதும் என்றுதான் கையில் எடுத்தேன்.
ஆனால் இரண்டு வாரங்கள் வரை நீண்டது வாசித்துமுடிய!
இத்தகைய கனத்தை வேறெந்த புத்தகங்களிலும் அனுபவித்ததில்லை..!


4.புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
ஒரு மரத்தை சுற்றி மனிதர்களை படிப்பித்த சு.ராவின் முதல் படைப்பு!


5.கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா
சுஜாதாவின் அறிவுக் களஞ்சியம் எனலாம்.தொடாத ஏரியாக்களே இல்லை.ஏராளமான புதுவிடயங்கள் தெரிந்துகொள்ளவும்,அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவியது.சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு பரிணாமங்களை பதித்துவைத்த படைப்பு.
“…ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்…”
“‘நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.’ இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்.”
“…இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது…”


6.தாய்-மக்ஸிம் கார்க்கி
நான்காம் ஆண்டு படிக்கும்போது(ராணி காமிக்ஸ்,அம்புலிமாமா காலத்தில்)எதேச்சையாக கையில் சிக்கிய புத்தகம்.இத்தனை பெரிதாக என்ன இருக்கிறது என்று வம்புக்கு வாசித்து முடித்த புத்தகம்.அதன் அழுத்தம் மீண்டும் சில வருடங்கள் கழித்து வாசிக்க வைத்தது.மக்ஸிம் கார்க்கியின் எழுத்தின் தாக்கம் இன்னமும் மனதில்!


7.ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா

8.ராஸ‌லீலா - சாரு நிவேதிதா
என்னதான் விமர்சனங்கள்(தீவிர வி.வ மெம்பர்களாக இருந்தாலும்) ராஸலீலா சாருவால் மட்டுமே எழுதக்கூடிய படைப்பு என்பதில் சந்தேகமில்லை.


9.விஷ்ணுபுரம்-ஜெயமோகன்
படித்தால் கண் வலிக்கும்,முதுகு வலிக்கும்;முதன் முதலில் கை வலித்த புத்தகம்.ஆயிரம் பக்கங்களை தொட்டிருக்கும்(இதற்கு போட்டியாகத்தான் சாரு எக்சைல்-2ஐ 3000 பக்கங்களில் வெளியிடுவதாக கேள்வி ). ஜேம்ஸ் கமரோன் மாதிரி சிந்திக்கமுடியாத ஒரு வெளியில் இத்தகையதொரு கற்பனைப்படைப்பை படைத்ததற்காகவே பாராட்டப்படவேண்டியது.


10.காமசூத்திரா(தமிழில்)- வாத்சாயனர்
கிளர்ச்சிகளின் உச்சம்.என்றாலும்,பாலியலை தாண்டி, வாழ்க்கைப்பாடங்கள் ஏராளமானவற்றையும் வாழ்க்கை பற்றிய பூரண புரிதலையும் கற்றுத்தந்த நூல்..!


குறிப்பு:
1.எனக்கு பிடித்தது/பாதித்தது மட்டுமன்றி மற்றையோரும் வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தகங்களை தான் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன்.
2.தமிழ் புத்தகங்கள் பற்றிய தொடர் பதிவினை ஆங்கிலத்தில் பதிவதில் துளியும் சம்மதமில்லை.
3.பட்டியலில் ஆங்கில புத்தகங்களை எதிர்பார்த்து ஏமாந்திருந்தால் மன்னிச்சூ.ஆங்கில இலக்கியம் படித்தபோது கட்டாயமாக்கி இருந்தமையால் மூன்று ஆங்கில குறும் நாவல்களைப் படித்திருந்தேன்.அவை தான் இறுதியானதும் கூட!
4.யாரையும் தொடர அழைக்கவில்லை.காரணம்,ஏற்கனவே ஏராளம் பட்டியல்களால் நானே சோர்ந்துவிட்டேன்.+ ஒரு சிலரை மட்டும் அழைப்பதில் இஷ்டமில்லை.
5.இது என் தனிப்பட்ட பட்டியல்.யாருடைய அழுத்தங்களும் இதில் செல்வாக்கு செலுத்தியிருக்கவில்லை.


Post Comment

ஈழத்துக் குறும்பட உலகு..!


'அண்ணே,உவனுகள் படம் எடுக்க முன்னமே 'அவார்ட் வின்னிங்'ன்னு டைட்டில் போட்டிட்டு தான் தொடங்குவாங்க போல என?'ஏராளமானோர் இப்படி கிளம்பியிருப்பதால்,இவன் யாரைச் சொல்கிறான் என்று தெரியாமல் குழப்பத்துடனேயே, 'ஏண்டா தம்பி அப்பிடி சொல்றாய்?'என்று கேட்டேன்.

'இல்லையண்ணே,இவனுக குடுக்கிற பில்ட் அப்புகளுக்கும் அலப்பரையளுக்கும் எடுக்கிற குறும்படத்துக்கும் சம்பந்தமே இல்லாமத்தானே கிடக்குது?பெரிய படத்தில ஒரு சீன் எடுக்கிறது போல குறும்படத்த எடுக்கிறானுகள். குறும்படத்தோட பேஸிக் கொன்செப்ட்டே இன்னும் இவனுகளுக்கு விளங்கல'என்றான்.

நான் பார்த்த பெரும்பாலான குறும்படங்கள் அப்படித்தான் இருந்தபடியால்,எனக்கும் அவன் சொல்வது சரியென்றே பட்டது.'எப்பிடின்னாலும் இது தொடக்கம் தானேடா..போகப் போக சரியாயிடும்.இப்ப எடுக்கிறதுகள் எல்லாமே முயற்சிகள் தானேடா'என்றேன்.

'அப்பிடி எண்டா ஒண்டு ரெண்டு திறமையான படைப்புகள் குடுக்கிற வரைக்கும் அமைதியா இருந்து,சாதிச்சிட்டு,அதுக்கு பிறகு ஒலகப் பட இயக்குனர்,ஆஸ்கார் வின்னிங்க் ஆக்டர் அளவுக்கு பில்ட் அப் குடுக்கலாம் தானே அண்ணே?'கேட்டான்.
'இவ்வளவு கதைக்கிறே,நீயே ஒரு குறும்படம் எடுக்க வேண்டியது தானே?கதைக்கிறது ஈஸி தம்பி..ஒரு படத்த எடுத்துப் பாரு அப்போ புரியும்'என்றேன்.

'இந்த பதில தாண்ணே அவனுகளும் சொல்லுறானுகள். இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியது தான். குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டின கதை தான் அண்ணே கடைசில..!அப்புறமண்ணே,மறந்தும் இத பேஸ்புக்கில போட்டிடாத.மத்தவங்க இருக்கிறது மாதிரியே பம்மிகிட்டு இரு.இல்லைன்னா அப்புறம் உன்னிய ஒதுக்கி வைச்சிடுவாங்க' என்று சலித்துக்கொண்டான்.

ஆடு தலையை ஆட்டிக்கொண்டது..!

Post Comment

ஸ்டெப் அப் -Step Up All In



Step up சீரிஸின் ஐந்தாவது பாகமாய் Step Up All In கடந்த 8ஆம் தேதி ரிலீஸாகி இருந்தாலும்,பிந்தித்தான் பார்க்கக் கிடைத்தது.

(சவோய்-3D).சாதா தமிழ் தியேட்டர்களில் வரிசையில் நிற்கச்சொன்னால் முட்டி மோதி அடுத்தவன் தலை மேல் ஏறி டிக்கட் வாங்கி பார்ப்பது ஒரு சுகமென்றால்,ஆங்கிலப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் இடிபடாமல் வரிசை ஒழுங்கில் நின்றுகொண்டு ஒரு ஜாண் ட்ரவுசரும் லோ-கட் டீஷர்ட் போட்டு தங்களை எக்ஸ்போஸ் செய்யும் அழகிகளை ஜொள்ளிக் கொண்டே படம் பார்ப்பது இன்னொரு சுகம்..!படம் நன்றாக இல்லாவிட்டாலும் வெளியே வரும்போது மனசு நிறைந்திருக்கும்..!


Ryan Guzman Briana Evigan Misha Gabriel Adam G. Sevani என்று அதே பழைய க்ரூவுடன் களமிறங்கியிருக்கின்றார்கள்.இம்முறையும் கதை வழமையானது தான்,வறுமை-இலட்சியம்-டான்ஸ்-போட்டி.. கூடவே கொஞ்சம் லவ்.இதுதான் நடக்குமென்று முழுதாக முன்னமே கணித்துவிடலாம்,என்றாலும் அந்த டான்ஸ்..க்ரேஸ்.. பாஷன்..அதுதான் பலமே..!

லாஸ் வெகாஸில் நடைபெறும் Vortex என்கின்ற Dancing Competition'ஐ மையப்படுத்தி இம்முறை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.பழைய The MOB (step up) டீமிலிருந்து Sean பிரிவதாக காட்டி,இன்னொரு டீமை உருவாக்கி இரண்டையும் எதிரெதிரே போட்டியிட வைத்திருக்கிறார்கள்.பெரிதாக இன்டரஸ்டிங்க் ட்விஸ்ட்ஸ் கிடையாது.டான்ஸிலும் பெரிய புதுமைகளோ வித்தியாசங்களோ இல்லை.அடுத்த தடவை புதிய க்ரூவுடன் களமிறங்குவது உத்தமம்.

இதைவிட இதன் முதல் வெளியீடான Step Up 4: Revolutionஎன்னை அதிகம் கவர்ந்திருந்தது.மியாமி கடற்கரை வீதியில் நடக்கும் ஆரம்ப ஆட்டமே களைகட்டும்.க்ளைமேக்ஸ் டான்ஸ் கூட பட்டையை கிளப்பியிருக்கும்.சீரிஸிலேயே அது தான் பெஸ்ட் என்பேன்.எனிவே,ஸ்டெப் அப் சீரிஸ் லவ்வேர்ஸ் ஒருதடவை பார்த்துவிடலாம்..!

Post Comment

‪மணிரத்தினம்‬ ‪க்ரேட்‬..!


இன்று 'தளபதி'படம் போய்க்கொண்டிருந்தது.வேறொரு சேனலும் மாற்ற மனசு இடம்தரவில்லை.எத்தகைய க்ளாஸிக் படம் அது.!ரஜனி-மம்முட்டி-அரவிந்தசாமி,ஸ்ரீவித்யா, ஷோபனா,ஜெய்ஷங்கர்,பானுப்பிரியா என்று எத்தகைய நடிகர் பட்டாளம்,கூடவே இளையராஜாவும்..!

ஜெய்ஷங்கருக்கு ஸ்ரீவித்யாவின் மகன் தான் சூர்யா என்று தெரிந்துவிடும்.அதன்பின்பு ஒரு காட்சியில் மூவரும் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்க,பின்னால் ரெயில் சத்தம் கேட்கும்.தாய் கண்ணீருடன் குற்ற உணர்ச்சி ததும்ப ஏக்கத்துடன் திரும்பிப்பார்ப்பாள்..மகனும் ஏக்கத்துடன் திரும்பிப் பார்ப்பான்..இதை ஜெய்ஷங்கர் பார்த்துக் கண்ணீர்விடுவார்.ஜெய்ஷங்கருக்கு பின்னாடி கமெரா வந்து இந்த மூவரினதும் வெவ்வேறுவித தவிப்புகள் உணர்ச்சிகள்,அழுகைகளை ஒன்றுச்சேர காட்டும் அந்த ஒரு ஷொட் போதும் இந்தப் படம் காலம் கடந்து பேசப்பட..!

ஒரு நாலைந்து ட்விஸ்ட்டுகளையும்,சுமாரான திரைக்கதையையும் சாதா நடிகர்களையும் வைத்து குறும்பட லெவலில் ஓரிரு படங்களை தந்தவுடன் அவர்களை அடுத்த மணிரத்தினம் இவர் தான் என்று நம்மவர்கள் புகழ்வதைப் பார்க்கும்போது நாம் 'தரமான தமிழ் படங்களில்'எந்தளவு தூரம் நாம் காய்ந்துபோய் கிடக்கின்றோம் என்பது புலனாகின்றது..!

Post Comment

லெஸ்பியன்ஸ் தொல்லை.!


கொள்ளுப்பிட்டியில் வேலை விசயமாக சிங்கள நண்பரின் காரில் போய்க்கொண்டிருக்க,சிவப்பு சமிக்ஞை காரணமாக பாதசாரிகள் கடவைக்கு நிறுத்தவேண்டிய தேவை.இரண்டு பெண்கள்,22-25 வயதிருக்கும்,கையைப் பிடித்துக்கொண்டு வீதியை கடந்துசென்றார்கள்.அதனைப் பார்த்த என் நண்பன் உடனே சொன்னான்,'மே தென்னம லெஸ்பியன்ஸ் மச்சான்'..!

போதாதற்கு,கார் கண்ணாடியை இறக்கிவிட்டு,'யூ டூ லெஸ்பியன்ஸ் நோ?'என்று அவர்களிடமே கேட்டான்.அடி விழுமென்று பார்த்தால்,யெஸ் என்று தலையாட்டிவிட்டு நண்பேண்டா என்று சந்தானம் சொல்வது போல மாறிமாறி தோள் மீதி கையைப்போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டு சென்றார்கள் அந்தப் பெண்கள் உரிமையுடனும், சந்தோசத்துடனும்..!

எனக்கு ஒரே ஆச்சரியம்,'எப்பிடி மச்சான் கண்டுபிடிச்சே?'என்று கேட்டபோது,'மச்சான் UK'ல இருக்கும்போது இதுபோல எக்கச்சக்கமான கப்பிள்ஸை பார்த்திருக்கிறேன்,சில பெண்கள் மிக மிக அழகாக இருப்பார்கள்..ஆனால் லெஸ்பியன்ஸ். ஆண்களை நிமிர்ந்துகூட பார்க்கமாட்டார்கள்'என்றான்.

பெண்கள் பாடசாலைகளில் இது மிக அதிகமாக,ஒரு பேஷனாக இன்றைய காலப்பகுதிகளில் பரவிக்கொண்டிருப்பதாக அண்மையில் ஒரு ஆசிரியர் கூறியிருந்தார்.இவற்றைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்காகவே தனிப்படை வேண்டும் என்கின்ற அளவில் இருந்தது அவர் பேச்சு.எல்லாம் உண்மைபோல் தான் தெரிகிறது..!


Post Comment

மார்கெட்டிங்க் வேலை..!



'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் மார்கெட்டிங் வேலையை 'நாய் வேலை மச்சான்'என்பார் ஆர்யா.உண்மையில் மார்கெட்டிங்கில் சேல்ஸ்மன் வேலையைத் தான் நாய் வேலை எனலாம்.வீதியில் இறங்கினாலே வறுத்தெடுக்கும் மதிய வெய்யிலில் ஒவ்வொரு பேக்குகளை காவிக்கொண்டு ஒவ்வொரு வீடு வீடாகவும் கடை கடையாகவும் அலையும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன்.வியர்த்துக் கொட்டும் ஆனால் கம்பனியின் ஸ்ட்ரிக்ட் ஓர்டர் காரணமாக கழுத்தில் ஒரு டை இறுக்கிக்கொண்டிருக்கும்..பார்க்கவே மிகப் பரிதாபமாக இருப்பார்கள்.


எனது கேரியரின் ஆரம்ப காலங்களில் வேலை தேடும்போது 'Management Trainee'என்கின்ற வார்த்தையில் ஆசைப்பட்டு ஒரு கம்பனிக்குச் சென்று ஏமாந்திருக்கிறேன்.காலையில் கூட்டம் கூட்டமாக கூடி அல்லேலூயா மாதிரி கோஷமிட்டார்கள்.ஏன் இப்படியென்று கேட்டதற்கு இது தான் 'Motivation'என்றார்கள். நானும் சேர்ந்து கூச்சலிட்டேன்.எரிச்சல் தான் மிச்சம்.பின்னர் கையில் ஒவ்வொரு கூப்பனை தந்து ஒவ்வொரு ஏரியாவாக பிரித்து அனுப்பிவிட்டனர்.அப்போது தான் லைட்டாக எனக்கு உறைக்க ஆரம்பித்தது.'அண்ணே ஒரு தண்ணிப் போத்தல் வாங்கிக்கிறேன்'என்று கடைக்குள் சென்று அப்படியே மறுபக்கத்தால் பஸ் பிடித்து அன்றே எஸ்கேப் ஆகிவிட்டேன்.

இவர்கள் வெய்யிலில் அலைவது கூட பரவாயில்லை. ஒவ்வொரு வீட்டிலும் கோலிங் பெல்லை அழுத்திவிட்டு நிற்கும்போது வீட்டுக்காரர் வந்து பிச்சைக்காரன் லெவலில் கேவலப்படுத்தி அனுப்பிவைப்பார்கள் பாருங்கள்..அப்போது தான் இது நாய்வேலை என்று அவர்களுக்கே கன்பேர்ம் ஆகும்..!

Post Comment

ஜாக்கெட் டிசைன்..!


பெண்கள் புடவை அணிகையில் மற்றைய ஆண்களைப் போல நானும் முக்கியமானவற்றை ரசித்துக் கொள்வேன்.ஆனால் அதையும் தாண்டி இன்னொரு விடயத்தையும் உன்னிப்பாக கவனித்துவிடுவேன்.அது தான் ஜாக்கெட்/ப்ளவுஸ் டிசைன்..!
'ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவா..'என்று ஆரம்பித்து ஏராளமான பாடல்கள் சிறுவயதிலேயே ஜாக்கெட் டிசைன் மீதான கவனத்தை தூண்டிவிட்டிருந்தன.அது இன்றும் தொடர்வதில் எனக்கு ஆச்சரியம் எதுவுமில்லை.ஆனால் எனக்கு ஆச்சரியம் தருவது என்னவென்றால் இந்த ஜாக்கெட் டிசைன்ஸ் தான்..!

காலம் காலமாக இந்த டிசைன்ஸ் மாறிக்கொண்டே வருகிறது.அதுவும் பொங்கலுக்கு ஒரு டிசைன்.. வருசத்திற்கு ஒரு டிசைன்,தீபாவளிக்கு ஒரு டிசைன் என்று ஒரே வருடத்தில் மட்டும் பலதடவைகள் பேஷன் டிசைன்ஸ் மாறிக்கொண்டேயிருக்கும்.அதற்கேற்றவாறு அப்டேட் செய்துகொள்வதற்குள் பெண்களுக்கு அடுத்த பண்டிகை வந்துவிடும்..!

அதிக நேரம் செலவிட்டு வித்தியாசமான ஜாக்கெட் டிசைனுக்கு ஓர்டர் கொடுத்துவிட்டு, தங்கள் நீண்ட தலைமுடியை விரித்து ஜாக்கெட்டுக்கு திரைச்சீலையாக்கிவிட்டு வரும் புத்திசாலிப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

Post Comment

பிரம்ம குமாரிகள்..!


பிரம்ம குமாரிகள் பற்றிய எனது பதிவிற்கு கிடைக்கும் எதிர்வினைகள் கொஞ்ச நஞ்சமல்ல.நேரிலும், போனிலும் மணிக்கணக்காக விளக்கங்களும் விமர்சனங்களும் மிரட்டல்களும் கூடவே கணிசமான பாராட்டுகளும்.

உலகம் முழுக்க 190+ நாடுகள்ல நம்ம அமைப்பு இருக்கு.ஏன் ஐ.நா கூட அங்கீகரிச்சிருக்கு.உனக்கென்ன பிரச்சனை என்று இப்போதும் ஒருவர் போனில் அழைத்து அன்பாக 'பாராட்டியிருந்தார்'.சரி எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று துண்டித்துவிட்டேன்.
இன்னொருவர் அழைத்து முருங்கைக்காய்க்கும் எழுச்சிக்கும் சம்பந்தமே கிடையாது.எல்லாம் பாக்கியராஜ் பேன்ஸ் பண்ற அட்ராசிட்டி என்றார்.

வேறொருவர் 'டேய் நான் அஞ்சு வருசமா ஆந்திராவுக்கு போய்வந்துகிட்டிருக்கேன்..ஒருதடவ நீயும் வா,அப்போ தான் பிரம்மகுமாரிகளோட சக்தி என்னென்னு தெரியும்'என்று அழைத்தார்.
ஆந்திராவில் இவர்கள் தங்கள் தியான வலிமையால் தண்ணியே இல்லாமல் விவசாயம் செய்கிறார்கள்.கண்ணால் பார்த்தே காயை பழுக்க வைக்கிறார்கள் என்றார்.அப்படியே மெரசலாகிட்டேன்..!

அனைவரும் தாங்கள் கத்துகிட்ட மொத்தவித்தையையும் என்னிடம் இறக்கித்தொலைக்கிறார்கள்.சீக்கிரமே நானும் பிரம்மகுமாரனாக டியூன் ஆகிவிடுவேன் போல்தான் தெரிகிறது..!

------------------------------------------
இனி பதிவு:

ஆறடி உயரத்திற்கு வளர்ந்திருப்பான்.17-18வயதிருக்கும். கதைக்கும் ஆங்கிலத்தை வைத்து நிச்சயம் ஏதும் சர்வதேச பாடசாலையில் படித்திருக்கவேண்டும் என்று நினைத்தேன்.
அந்த உயர்தர உணவகத்தில் கேக்&சிற்றுண்டி ஒர்டர் செய்ததை,எடுத்துப்போக வந்திருந்தான்.எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று ஒருதடவை கடைக்காரரிடம் உறுதி செய்துகொண்டான்.

'அசைவம் இல்லைத்தானே?'
'இல்லை சேர்'

'வெங்காயம் இல்லை தானே?'
'இல்லை சேர்'

'உள்ளி சேர்க்கேல தானே?'
'இல்லை சேர்'

'இஞ்சி?'
'இல்லை சேர்'

'சரி பில்லை தாங்க'என்று கேட்டு வாங்கிக்கொண்டான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.'ஏன் தம்பி,இப்பிடி விசாரிச்சீங்க?' என்று கேட்டேன்.

'நான் பிரம்மகுமாரிகள்ல மெம்பரா இருக்கேன்.அங்க அசைவம் சாப்பிடக்கூடாதெண்டு சொல்லியிருக்காங்க என்றான்.

'அப்போ எதுக்கு வெங்காயம் உள்ளி எல்லாம்?'
'அங்க,எல்லா பொண்ணுகளையும் எங்கட சகோதரிகள் மாதிரித்தான் பாக்க,பழக சொல்லித் தர்றாங்க.அவங்கள நிமிந்து கூட பாக்கிறதில்லை.இந்த வெங்காயம் அதுகள சாப்பிட்டா ஆண்மை உணர்ச்சித்தூண்டல்கள் அதிகரிச்சு எதிர்ப்பால் பக்கம் எங்கள தூண்டும்..அதனால தான் அதையும் சாப்பாட்டில சேத்துக்கிறதில்லை'என்றான்.

'சரி போய்ட்டுவா தம்பி'என்று அனுப்பிவைத்தேன்.பிகர் பார்க்க வேண்டிய வயதில் உணர்ச்சிகளை முழுமையாக அடக்க சொல்லித்தருகிறார்களாம்.வெளியே விசாரித்துப் பார்த்ததில் அந்த அமைப்பில் உயர் பதவிகளில் இருப்பவர்களெல்லாம் 'அனைத்தையும்'அனுபவித்தவர்கள் தான்.தங்கள் காலம் முடிந்துவிட,வாழவேண்டிய இளவட்டங்களை உள்ளே ஈர்த்து 'படுத்திக்கொண்டு' இருக்கிறார்கள்.

ஏற்கனவே பல ஆண்டுகள் அதில் மெம்பராக இருந்து,வெறுத்து வெளியே வந்த நண்பரிடம் இவற்றைக் கூறி,ஏன் இப்பிடி?நீ ஏன் வெளிய வந்தே?என்னாச்சு? என்று கேட்டேன்.

'இப்பிடித்தான் மச்சான் நானும் கொஞ்ச நாள் பொண்ணப் பாத்தா மண்ணப்பாத்து நடந்தன் மச்சான்..வெங்காயம் முருங்கக்காய் எல்லாம் தொடுறதே இல்லை.எல்லாப் பொண்ணுகளுமே எங்கட சிஸ்டேர்ஸ்ன்னு சொல்லி சொல்லி ஊக்குவிச்ச பெரிய தலையள் கொஞ்ச நாளிலையே உள்ளுக்குள்ளயே சில பொண்ணுகளோட கசமுசான்னு தெரிய வந்திச்சு.சில பெருசுக நமக்கு அட்வைஸ் சொல்லிட்டு,தாங்க ஒரு பிகர செட் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க.அத பாத்தோன தான் எனக்கு எல்லாம் வெறுத்துப் போச்சு.இவங்கள நம்பிகிட்டு விடிய புருசனுக்கு தேத்தண்ணி போட்டுக்குடுக்காம கூட தியானத்துக்கு ஓடிவருவாளுக பொம்பிளைங்க! இவங்களப்போல ஆக்களும்,இவங்கள நம்பி லச்சக்கணக்கில காச கொட்டுற பெரும்புள்ளிகளும் தான் இவங்கட பலம். அவங்க இருக்கிற வரைக்கும் இவங்கள ஒண்டும் செய்ய முடியாது.ஆனா,இந்த ஜெனரேஷன் பிள்ளைங்க இவங்க பின்னாடி போறாங்க எண்டுறது தான் பெரிய ஆச்சரியம்' என்றான்.

செய்யும் தொழிலையும்,தன்னோட குடும்பத்தையும் சரிவர பாத்துக்கிறவனுக்கு கடவுளும் தேவையில்லை,கள்ளச் சாமியும் தேவையில்லை..!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...