Monday, May 13, 2013

சுவரில்லா சித்திரங்கள்-'சுவர் கிறுக்கல்கள்'

        அழுவதா...சிரிப்பதா... : இன்றைய தலைமுறை ஒரு பக்கம் கல்வியிலும்,தொழில்நுட்பத்திலும் கலக்கிக்கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் எதற்கும் கவலையில்லாமல் இருக்கிறது. ஒரு பொது இடத்தில் காதலிக்க ஆட்கள் தேவை என்றும், இப்போதைக்கு காதல் செய்ய தயராக உள்ளவர்கள் என்று ஏழு பேர் பெயரையும் எழுதி போட்டுள்ளனர். இதை யார் எப்படி எடுத்துக்கொண்டாலும் இவர்களைப் பெற்றவர்கள் நிச்சயமாக சந்தோஷமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

படம்: மைலாப்பூர் குட்டி.


நீங்களும் இது போன்ற வித்தியாசமான சுவர் கிறுக்கல், கேலிச்சித்திரம், போஸ்டர், பேனர் போன்றவைகளை பார்த்தால் படம் எடுத்து அனுப்பவும். நீங்கள் அனுப்பும் படம் தரமானதாகவும், உங்கள் சொந்த சரக்காகவும் இருக்கட்டும். பேஸ்புக் போன்ற வலைத்தளத்தில் உலாவரும் படங்களை எடுத்து அனுப்ப வேண்டாம். நன்றி!


சுவர் கிறுக்கல்கள் என்றால் ஆங்கிலத்தில் 'கிராப்(F)டி' என்பார்கள்(Graffiti).நம்மவர்களுக்கு 'டாய்லெட்' கிறுக்கல்கள் என்றால் தான் புரியும்,காரணம் அந்தளவுக்கு சிறு வயது முதலே 'டாய்லெட்' கிறுக்கல்களை பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள் நாம்.பாலர் வகுப்பு படிக்கையில் பென்சிலாலும்,பின்னர் பேனா மை,கரித்துண்டு,பாடசாலை கலர் வெண்கட்டி துண்டுகள், மற்றும் கொஞ்சம் வசதி என்றால் நிறத்தூரிகைகள்,'பெய்ன்ட் ஸ்ப்ரே' கொண்டும் இந்த சுவர் கிறுக்கல்கள் அழகு அசத்தி,அசிங்கப்படுத்தி வந்திருக்கின்றன..!

நேரடியாக மோத,கருத்துக்களை வெளியிட திராணியற்று பெரும்பாலும் களவாகவே சுவர்களில் கிறுக்கப்படுவதால்,அதனை கிறுக்குவதற்க்கும்,பிடிபடாமல் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு தனித்திறமை,துணிவு வேண்டும்.ஏனெனில் இவ்வாறு கிறுக்கப்படுவதெல்லாம் யாரைப்பற்றி என்று பார்த்தால்,நிச்சயமாய் எதோ ஒரு வகையில் அதிகாரத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை பற்றியதாய்த்தான் இருந்து தொலைக்கும்.அத்தகைய உயர்ந்த அதிகாரத்தை நேரடியாக எதிர்த்து நிற்க இவர்களால் முடியாவிட்டாலும்,மறைமுகமாக எதிர்க்கக்கூட ஒரு சாமர்த்தியம் தேவை.எப்போது எந்த குள்ளநரி எதிர்த்தரப்புக்கு துப்பு கொடுக்கும்,காட்டிக்கொடுக்கும்,கை நீட்டும் என்று தெரியவே தெரியாது.அதனால் அதிகாரத்துக்கு எதிரான கிறுக்கல்களில்,யார் கிறுக்கியது என்ற விடயம் ஒரு சிலரை தவிர மற்றையோருக்கு தெரிந்திருக்காது. 

கோபத்தை வெளிக்காட்டவும்,தங்கள் ஆசைகளை வெளிக்காட்டவும்,சிலசமயம் இல்லாத பிரச்சனைகளை பூதாகரமாக உருவாக்கி விடுவதற்கும் இந்த சுவர் கிறுக்கல்கள் கைகொடுக்கின்றன.பாடசாலையில் படிக்கும் காலகட்டத்தில் சாதாரணமாக நான் டாய்லெட் பக்கம் போவதில்லை,ஆனால் ஒவ்வொரு வாரமும் புதிதாக என்ன செய்தி என்று பார்ப்பதற்க்கு வாரத்துக்கு ஒருதடவையேனும் அந்தப்பக்கம் செல்வதுண்டு.'சுகாதாரமும் உடல் கல்வியும்'பாடத்தில் படிப்பித்த அந்தரங்க உறுப்புகளினை வரைந்து பெயர்குறித்து பழக சிலருக்கு இந்த 'டாய்லெட்' சுவர்கள் பயன்பட்டிருக்கின்றன.எந்த ஆசிரியருக்கும் எந்த ஆசிரியைக்கும் இடையில் கள்ள தொடர்பு,யார் யாருக்கிடையில் கூடல்,ஊடல் என்று அனைத்தும் இங்கே தான் கிறுக்கி வைக்கப்படும்.கிட்டத்தட்ட 'டாய்லெட்' சுவர்கள் பெரும்பாலான சமயங்களில் 'நோட்டீஸ் போர்ட்'டாக தான் தொழிற்பட்டிருக்கின்றன!

இதனை ஒரு ஆற்றாமையின் வெளிப்பாடாகவோ ஏன் ஒருவித மனநோயாகக் கூட இருக்கலாம்.சில சமயங்களில் மற்றையவர்களால் கண்டுணரப்படாத 'ஆட்டிஸ'/மன இறுக்கத்தின் வெளிக்காட்டுதலாக,வெறுப்பின் உச்சபட்ச விளைவாக கூட இதனை சொல்லிக்கொள்ளலாம்.ஏன்,இவர்களில் தகுந்த மேடை//வாய்ப்பு/சந்தர்ப்பம் கிடைக்காத கவிஞர்களாக,எழுத்தாளர்களாக,ஜோக் ரைட்டர்களாக கூட இருக்கலாம்.ஏனெனில்,சில கிறுக்கல்கள் எளிய ஹைக்கூ கவிதைகளாகவும்,ஏடாகூட சந்த அமைப்புள்ள வாக்கியங்களாகவும்,தேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஒருவரின் கிறுக்கல்கள் போலவும்,வயிறு புண்ணாக்கும் ஒற்றை மற்றும் இரட்டை அர்த்த ஜோக்குகளாகவும் கிறுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

பாடசாலையை விட்டு வெளியே வந்தால்,தேர்தல் காலங்களில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பங்குக்கு ஊர் சுவர்களில்,வீதிகளில் இரவோடு இரவாக கிறுக்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.முதல் கிழமை 'பெயிண்ட்' அடித்த சுவர்களாய் இருந்தால்,கிறுக்கும் நெஞ்சங்கள் கொஞ்சம் 'ஓவராகவே' உணர்ச்சிவசப்பட்டு கருப்பு 'பெயிண்ட்டால்' கட்சி கொடி வரைந்துவிட்டு சென்றிருப்பார்கள்.அந்த வீட்டுக்காரர் தீவிர எதிர்க்கட்சி ஆதரவாளராய் இருப்பார்.வீட்டுக்கு வெளியே அராஜக ஆளுங்கட்சியின் கட்சி சின்னம் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும்(நம்மூரில் பெரும்பாலும் வீணைச் சின்னம் தான்!,இதனாலேயே சங்கீத பாடத்துக்கு வீணை வரைந்து பெயர் குறிக்க கேட்டிருந்த போது சரியாக வரைந்து பெயர் குறித்த நினைவு!).அப்படியான சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர் மறுபடியும் புதிதாய் 'கலர் பெயிண்ட்'வாங்கி அடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டாலும்,அவர் நிதிநிலைமை இடம்கொடுக்காது.பின்னர்அது தானாகவே வெயில் மழைக்கு என்று தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கும்போது சேர்ந்தே மறைந்துவிடும்.

இந்த சுவர் கிறுக்கல்கள் பின்னதாக பல்வேறு பரிணாமங்களை எடுத்துக் கொள்கிறது.எமது உயர்தர வகுப்பில் அது துண்டுப்பிரசுரம் அடித்து வெளியிடுதல் என்கின்ற பரிணாமத்தை எடுத்துக்கொண்டது.ஒவ்வொரு வகுப்பிலும் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் பிடிக்காமல் ஒரு ஜீவன் இருக்கும்.பெரும்பாலும் ஆசிரியர்களுடன் நெருக்கமாக பழகும் ஒருத்தன் அல்லது எங்களது ரகசியங்களை ஆசிரியர்களிடம் 'போட்டுக்கொடுப்பான்' என்று சந்தேகிக்கப்படும் ஒருத்தனாக அவன் இருப்பான்.அப்படிப்பட்ட ஒருவனை பற்றி சில மாணவர்கள் ஒன்று கூடி துண்டுப்பிரசுரம் அடித்து விட்டார்கள்.அதுவும் பாடசாலையில் வினியோகிக்காமல்,வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு அதிகாலை 4-5 மணிக்கு கொண்டுவந்து போட்டுவிட்டு சென்றார்கள்.அவர்களுடைய 'பிளானிங்க்'பர்பெக்ட்..!சந்தேக நபர்களை ஒவ்வொருவராய் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்தார்கள்.யார் அதனை செய்தார்கள் என்பது இன்னமும் தான் பலருக்கு தெரியவரவில்லை, காரணம் அவர்கள் செய்தது அதிகாரத்துக்கு எதிரான விஷயம் என்பதும் பிடிபட்டால் டிசி(TC)கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதும் வெளியிட்டவர்களுக்கு தெரிந்தே இருந்தது. 

Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...