Monday, October 15, 2012

இலங்கையின் தலைசிறந்த பதிவர்-எழுத்தாளன்..!


"ஜேகே" என்று பதிவுலகில் அறியப்பட்ட,"குமரன்" என்று அவரின் நண்பர்களாலும் அழைக்கப்படும் ஜெயகுமரன் சந்திரசேகரம் என்பவர் தான் எனது மனதை கவர்ந்த,இலங்கையின் பதிவர்களிலேயே எழுத்தாற்றலில் உயர்ந்து நிற்பவர் என கருதப்படும் பதிவர்.அண்மையில் கூட ஒரு பதிவரை சந்திக்கையில் இவரைப்பற்றி கிலாகித்திருந்தேன்.எப்போது இவர் பதிவுகளுக்குள் சிக்குப்பட்டேன் என்பது சரியாக ஞாபகம் இல்லாவிடினும் கடந்த வருடத்தின் நவம்பர்-டிசெம்பர் மாதங்களில் என்பது ஞாபகமிருக்கிறது.எனது நல்ல நேரம்,அவர் தமிழில் எழுத ஆரம்பித்து அடுத்தடுத்த மாதங்களிலேயே அவர் பதிவுகள் பக்கம் சென்றுவிட்டேன்.கடந்த வருடம் ஆக்டோபரில் தமிழில் எழுத ஆரம்பித்தவர் ஜேகே.


சாதாரணமாய் எழுதப்படும் பதிவுகளுக்கும் ஜேகேயின் பதிவுகளுக்கும் இடையிலே பாரிய வித்தியாசம் காணப்படுவதை முதல் பதிவு வாசிக்கையிலேயே என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.அது ஒரு "வியாழ மாற்றம்" பதிவு. முதலிலேயே வியந்த விடயம் அவரின் பதிவுகளின் நீளம்.வேறு பதிவர்கள் பத்து பதிவுகளாக வெளியிடும் விடயங்களை ஒரே பதிவில் வெளுத்து வாங்கியிருப்பார்.பதிவு நீளம் என்றால் பலரும் நினைப்பது அதன் குவாலிட்டி குறைவாக இருக்கும் என்று.ஆனால் ஜெகேயை பொறுத்தவரை எவ்வளவு பெரிய பதிவுகள் எழுதினாலும் அவரின் எழுத்திலோ,சொல்ல வரும் விடயப்பரப்பிலோ எவ்வித தோய்வையோ,அலம்பல்களையோ காணமுடியாது.

யாழில் பிறந்து,யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் பயின்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மேல்ப்படிப்பை முடித்து அவுஸ்திரேலியாவில் "M.Tech in  Enterprise Architecture " படித்த கல்விமான்.இவர் படித்த பாடசாலையில் படித்தது எனக்கு பெருமை என்று இப்போதே சொல்லிக்கொள்ள முடியும்.சென் ஜோன்ஸ்'இல் படித்த இன்னும் சில மூத்த பதிவர்கள் இருக்கிறார்கள்.பாடசாலை காலத்திலேயே இத்தகைய படைப்புக்கள் மீதான ஆர்வம் ஜேகே'க்கு இருந்ததாக அவரின் பள்ளி தோழன் கூறியிருந்தார்.



ஜேகேயின் பதிவுகளுக்கு ஆரம்பகாலத்தில் செல்லும் போது எனக்கு ஏற்படும் ஒரே கவலை,இத்தனை திறமையான எழுத்தாற்றல் இருந்தும் கூட வெளியுலகுக்கு தெரியவரவில்லையே என்று.பதிவுகளுக்கு கருத்திடுவது கூட ஒன்று இரண்டு பேர் தான்.ஒரு சமயம் இத்தகைய தரமான பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் தாமாக முன்னிறுத்தி ஆதரவை தெரிவிக்கலாம் என்று கூட அவரின் பதிவுக்கு கருத்திட்ட ஞாபகம்.

அப்படி புகழ்வதற்கு என்ன இருக்கிறது அவரின் பதிவுகளில் என்று கேட்கலாம்.சாதாரணமாக நீங்கள் பார்க்கும் ப்ளாக் பதிவுகளை விட இவரின் பதிவுகள் முதல் வாசிப்பிலேயே வேறுபட்டு தெரிவதற்கு காரணம் பல..!இவரின் சரளமான இலக்கியத்தரமான எழுத்து நடை,எழுதும் விடயங்களில் இருக்கும் பரவலான-ஆழமான அறிவு.. எப்பேர்ப்பட்ட விடயங்களையும் வாசிப்போருக்கு புரிந்துவிட கூடியவகையில் எழுத்தில் கொண்டுவந்துவிடும் திறமை..பதிவுகள் ஒவ்வொன்றிலும் ஆழம்..நான் ஒன்றும் பெரிய "வாசகன்" இல்லாவிட்டாலும் கூட எதோ சில பல புஸ்தகங்கள்,நாவல்கள் வாசித்த எனக்கு ஜேகேயின் சில பதிவுகள் மறுவாசிப்புக்கு தூண்டியிருக்கின்றன..

பல பதிவுகளுக்கு கருத்திடவே தோன்றுவதில்லை.காரணம் அவ்வளவு "Perfect "ஆக எழுதியிருப்பார்.அத்துடன் எத்தனை தடவை தான் உங்கள் எழுத்து அபாரம் அற்புதம் என்று கூறிக்கொண்டே இருப்பது.அவருக்கும் சலித்துவிடக்கூடுமல்லவா.ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் அவரிடமே கூறிவிட்டேன் "சும்மா பதிவுகளை எழுதி தள்ளாம புஸ்தகங்கள் எழுத தொடங்குங்கள்..இலக்கியவாதிகளின் எழுத்துக்கு நிகரான எழுத்தாற்றல் உங்கள் கைகளில் இருக்கின்றது..இப்படியான எழுத்துக்கள் ஈழத்தில் இருந்து வருவதில்லை.அவசியம் உங்கள் கைகளால் வரவேண்டும்" என்று.சரி பார்க்கலாம் என்று கூறி இருந்தார்.முக்கிய தடை "நேரம்" தான்.

எத்தகைய பதிவுகள் என்றாலும் அநியாசமாய் விளையாடுகிறார்.அரசியலோ,விளையாட்டோ..சில தொழில்நுட்ப புனை கதைகளில் சுஜாதா அளவுக்கு ஜொலிக்கின்றன இவரது எழுத்துக்கள்.இவரது பெரும்பாலான பதிவுகள் "வியாழ மாற்றம்""என் கொல்லைப்புறத்து காதலிகள்""கந்தசாமியும் கலக்சியும்""படிச்சதென்ன பிடிச்சதென்ன" என்ற தலைப்புகளிலும் "உ..ஊ..ம ப தா ப மா " என்கின்ற தலைப்பில் பாடல்கள்,இசை மீதான ஆராச்சியே செய்திருப்பார்.ஏற்கனவே "சவால் சிறுகதை"போட்டியில் இவரது "சட்டென நனைந்தது இரத்தம்" பதிவு இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது.

2007 இல் இருந்து "Stay Tuned with JK "என்று ஒரு ஆங்கில வலைப்பூவில் எழுதிவரும் ஜேகே(அதில் எழுதப்படும் விடயங்கள் என்னை போன்ற சாமனியனுக்கு புரிவதே இல்லை.)தமிழுக்கு எழுதவந்ததை தனது அம்பதாவது பதிவில் இவ்வாறு விபரிக்கிறார்.
"எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது.  எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன்." 
மேலும் அந்த சுவாரசிய சம்பவத்தை அவரின் இந்த முதல் பதிவின் மூலம் காணலாம் : "அரங்கேற்ற வேளை"

அதற்குள் பதிவு இவ்வளவு நீளமாகிவிட்டதா??இன்னமும் எத்தனையோ விடயங்கள் சொல்லுவதற்கு மனதில் இருக்கின்றன.பதிவு பெரிதாக நீளமாக இருந்தால் கூட பரவாயில்லை வாசிப்போம் என்று வாசகர்களை கட்டிப்போட ஜேகே அளவுக்கு எழுத்தாற்றல் கிடையாது எனக்கு.ஆனால் தமிழகத்தில் இருக்கும் சில "காமத்துப்பால்"எழுத்தாளர்களை விடவும்,அதிஷா,லக்கிலூக் போன்ற வளர்ந்துவரும் எழுத்தாளர்களை விடவும் ஈழத்து எழுத்தாளர் "ஜேகே" பலபடிகள் உச்சமானவர் என்பது மட்டும் இப்போது எனக்கு தெரிந்த உண்மை.இன்னும் ஒரு பதினைந்து வருடங்களில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளராக கூட உருவாக கூடும்.அதற்கேற்ற நேரமும்,வாய்ப்புகளும் ஜேகே'க்கு கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

அவரின் வலைப்பூக்கு செல்ல: படலை
பேஸ்புக் இணைப்பு: "Jeyakuramaran Chandrasegaram"

குறிப்பு: இப்பதிவு வெறுமனே புகழ்ச்சிக்காகவோ,வால்பிடிப்பதற்க்காகவோ எழுதப்பட்டது என்று சிலர் நினைக்கக்கூடும்.காரணம் தமிழர்கள் வளர்ந்த,வளர்க்கப்பட்ட விதம் அப்படி.எப்படி நினைத்தாலும் பரவாயில்லை.நல்ல படைப்புகள்,நல்ல கலைஞர்கள்,படைப்பாளிகள் என்றுமே முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள்..அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள்.என்னால் முடிந்த பங்கை நான் செய்கிறேன்.
திருப்தியுடன்,

Post Comment

21 comments:

Unknown said...

வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!!!
கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் சொல்லித்தான் போய் பார்க்கின்றேன்...
அருமையான இசை பதிவு ஒன்றை வாசித்து முடித்தேன்.
நன்றி பகிர்ந்தமைக்கு..
உங்கள் வழிகாட்டலை பின் தொடர்பவன் என்பதில் மகிழ்ச்சி....
// புகழ்ச்சிக்காகவோ,வால்பிடிப்பதற்க்காகவோ எழுதப்பட்டதல்ல//

suharman said...

சிறுகதைகள் முதல் சினிமா அரசியல் விளையாட்டு என இவரது அனைத்து வித பதிவுகளையும் ஆரம்பம் முதல் அவரது பதிவுகளை படித்து வருபவன் என்ற வகையில் என்ன காரணங்களுக்காக இவர் பதிவுகள் மற்றையவர்களை சென்றடைய வில்லை என்பது எனக்கு கேள்வியாக இருந்தது இறுதியாக யாழ்ப்பாண கிரிக்கட்டை வைத்து எழுதிய பதிவு ஒரு வழியாக இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.நன்றி சிவா!

Unknown said...

கேள்விப்பட்ட பதிவர் அதுவும்

”வேலிகள் தொலைத்த படலையின் கதை” மிக பரிச்சியமான தலைப்பு இன்றே படிக்கிறேன்

கேரளாக்காரன் said...

//இப்பதிவு வெறுமனே புகழ்ச்சிக்காகவோ,வால்பிடிப்பதற்க்காகவோ எழுதப்பட்டது என்று சிலர் நினைக்கக்கூடும்.காரணம் தமிழர்கள் வளர்ந்த,வளர்க்கப்பட்ட விதம் அப்படி.எப்படி நினைத்தாலும் பரவாயில்லை.நல்ல படைப்புகள்,நல்ல கலைஞர்கள்,படைப்பாளிகள் என்றுமே முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள்..அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள்.என்னால் முடிந்த பங்கை நான் செய்கிறேன்.//

தொடருங்கள்...... நாங்களும் தொடர்கிறோம்

Unknown said...

/
Iroshan Puviraj said...
வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!!!
கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் சொல்லித்தான் போய் பார்க்கின்றேன்...
அருமையான இசை பதிவு ஒன்றை வாசித்து முடித்தேன்.
நன்றி பகிர்ந்தமைக்கு..
உங்கள் வழிகாட்டலை பின் தொடர்பவன் என்பதில் மகிழ்ச்சி....
// புகழ்ச்சிக்காகவோ,வால்பிடிப்பதற்க்காகவோ எழுதப்பட்டதல்ல////

நன்றி இரோஸ்.

Unknown said...

ஜே.கே பற்றி அடிக்கடி வியந்துகொள்ளும் அவரது வாசகன் நான்.

ஜே.கே. பற்றி மிக முக்கியமான விஷயம்.. மனுஷன் எவ்வளவு வாசித்திருக்கிறார். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார். எழுத வேண்டும் என்ற ஆசை கொண்ட அனைவருமே முடிந்தவரையில் கொஞ்சமாவது வாசிப்பது நல்லது ஆழமாக, திறந்த மனதுடன்! எதையாவது அரைகுறையாக வாசித்து அதில் அரைகுறையாக எதையாவது புரிந்துகொண்டு, ஒரு அரைகுறை அறச்சீற்றம் கொண்டு கூவிக் கொண்டிருப்பதை தவிர்த்து, ஜே.கே.யிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது நம் எல்லோருக்கும்!

மைந்தன் பதிவில் குறிப்பிட்ட உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான். என்ன செய்வது எனக்குத் தெரிந்து அநேகமாக குப்பைகளுக்குத்தான் மகுடம் சூட்டுகிறார்கள்!

இராஜ முகுந்தன் said...

இந்த இடத்துக்கு புதியவன் நான். எனவே எனக்கு அனைவரும் புதியவர்களே. போய் பார்த்தேன். நல்ல எழுத்தற்றலே. அவரையும் தொடர்கின்றேன். நன்றி மைந்தன்.

ஹாலிவுட்ரசிகன் said...

ஹி ஹி ... பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு, நேற்று ஃபேஸ்புக்கில் கிஷோகர் போட்ட செய்தியின் விளக்கமோ என்று ஏமாந்துவிட்டேன்.

நானும் தொடர்ந்து ரசித்துப் படிக்கும் ஒரு பதிவர். நீங்கள் சொன்னது போல //எத்தனை தடவை தான் உங்கள் எழுத்து அபாரம் அற்புதம்// என்று சொல்வது? அவருக்கே சலித்துப் போயிருக்கும். என் ஃபேவரைட்டான கொஞ்ச நாட்களாக வியாழமாற்றத்தைக் காணவில்லை. சுவாரஸ்யமான பல விடயங்களோடு நல்ல பாடல்களையும் ஞாபகப்படுத்திவிடுவார்.

கொல்லைபுறத்துக் காதலிகள் தொடரை இனித் தான் ஆரம்பிக்க வேண்டும்.

Unknown said...

/சுகர்மன் said...
சிறுகதைகள் முதல் சினிமா அரசியல் விளையாட்டு என இவரது அனைத்து வித பதிவுகளையும் ஆரம்பம் முதல் அவரது பதிவுகளை படித்து வருபவன் என்ற வகையில் என்ன காரணங்களுக்காக இவர் பதிவுகள் மற்றையவர்களை சென்றடைய வில்லை என்பது எனக்கு கேள்வியாக இருந்தது இறுதியாக யாழ்ப்பாண கிரிக்கட்டை வைத்து எழுதிய பதிவு ஒரு வழியாக இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.நன்றி சிவா!
//
பலரை சென்றடைய வேண்டும் என்பதற்கான ஒரு முயற்ச்சியே இது.

Unknown said...

நல்ல பகிர்வு... படலையில் இணைந்து கொண்டேன்...

தனிமரம் said...

நீங்கள் மூத்தவர் சொன்ன பின் என்ன தாமதம் இனி பின் தொடர்கின்றேன்!

எஸ் சக்திவேல் said...

அவரிடம் இன்னும் ஆற்றல் உண்டு. அதனாற்தான் நான் அவருக்கு 'விமர்சன' இம்சை கொடுப்பது... (so that he will go higher)

geevanathy said...

சுவாரசியம் நிறைந்த கருத்தாழம் மிக்க எழுத்து நடை

நன்றி மைந்தன்

K.s.s.Rajh said...

நானும் இவரின் பதிவுகளை வாசித்து இருக்கின்றேன் திறமையான ஒரு பதிவர் ஆனால் நீங்கள் சொல்வது போல பதிவுலகில் இவருக்கான அடையாளம் இன்னும் கிடைக்கவில்லை என்றே எனக்கும் தோன்றுகின்றது

தமிழன் said...

உங்களுக்கு பிடித்த இலங்கை பதிவர்களில் முதலாமவர் என்று சொல்லுங்கள். இலங்கையில் இவர்தான் சிறந்தவர் என்பது நீங்கள் ஏதோ தீர்புக்கூறுவது போல இருக்கிறது.

ARV Loshan said...

ஜேகே என்ற பெயர் எனக்கு இவர் ஆங்கிலத்தில் எழுதும்போது பழக்கமாக ,இருந்தாலும் வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை! பற்றி அறியக் கிடைத்தது என் தம்பி & தம்பியின் நண்பர்கள் மூலமாக.
எல்லா இடுகைகளும் வாசிக்காவிட்டாலும் சில இடுகைகள் மிக மனம் கவர்ந்தவை..
மைந்தன் சொன்னது போல வாசித்து முடித்தவுடன் ஈர்ப்பிலும் பிரமிப்பிலும் ஏதும் எழுதத் தோன்றுவதில்லை.
நம்மைப் போல மசாலா பதிவர்களை விட ஜே.கே இடம் வாசித்து அறிந்துக்கொள்ளவும் ரசிக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன
இன்னும் அதிகமானோரிடம் இவரைக் கொண்டு சேர்த்த மைந்தனுக்கும் வாழ்த்துக்கள்.

ஜேகே said...

முன்னமேயே சொன்னது போல இப்படி ஒரு பாராட்டை பார்த்தபோது சந்தோஷம் வராமல் பதட்டம் தான் வந்தது. படலை நம்மட தளம் தானா என்ற சந்தேகமும் கூட வந்தது! உங்கள் எல்லாரின் அன்புக்கு மிகவும் தாழ்மையான நன்றிகள். இந்த பாராட்டும் நீங்கள் எல்லாரும் இப்படி வாசிக்கிறீர்கள் என்பதும், எழுதும்போது மனதில் வந்து குந்திவிட கூடாது என்ற பயம் வேறு வருகிறது. மீண்டும் ஒருமுறை அன்புக்கு நன்றி.

Riyas said...

ஜேகேயின் நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன்.. வியாழமாற்றம் மற்றும் இசைப்பதிவுகள் மிக சுவாரஷ்யம்..

நீங்கள் சொன்னது போன்று நாம் பத்து பதிவாக போடுவதை அவர் ஒரே பதிவாக போட்டு விடுகிறார்..

சுதா SJ said...

கேள்வி பட்டு இருக்கேன்.. ஆனால் அவர் பதிவுகள் எதுவும் இதுவரை படித்தது இல்லை மைந்தன்..

நீங்கள் சொல்வதை பார்க்க ஆச்சரியமா இருக்கு.. இதுவரை படிக்காமல் தவற விட்டுவிட்டேனே என்றும் தோனுது.. :(

இனி தொடர்ந்து படிக்கலாம் என்று இருக்கேன்..
அடையாளம் காட்டியமைக்கு நன்றி மைந்து ^_^

கிஷோகர் said...

இந்த பதிவை வாசிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. காரணம் அன்று நீங்கள் இவரைப் பற்றி சொன்னதே இவர் பால் எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டது. ரெண்டு மூன்று பதிவுகள் கூட பார்த்தேன். அடடா.. பின் தொடர மறந்து விட்டேன். சீக்கிரத்தில் அதை செய்தாக வேண்டும்.

பி.அமல்ராஜ் said...

ஜேகே பற்றிய எனத்து கருத்தியலை அப்படியே சொல்லியிருக்கிறியள் மைந்தன். எனக்கும் மிகவும் பிடித்தமான ஒரு எழுத்தாளர் அத்தோடு இவரது எழுத்து ஸ்திரத்தன்மைகொண்டது. காலாகாலத்திற்கு நின்று நிலைக்கக்கூடியது. அவ்வளவு ஆழமும் கருத்தும் மொழிப்போக்கும் அதில் கொட்டிக்கிடக்கும். ஜேகே யிற்கு கிடைத்த கைக்கரியம் எனக்கு கிடைக்கவில்லையே என அடிக்கடி நான் பொறாமைப்பட்டதுண்டு. என்னை பிரமிக்கவைக்கும் எழுத்து ஆளுமை. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் ஜேகே அண்ணர். ஈழத்தின் புதிய இளைய இலக்கிய பாதையில் பிரமாண்ட மாற்றத்தை உங்களால் நிகழ்த்த முடியும். காத்திருக்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...