Saturday, August 11, 2012

இலக்கியவாதி மிஸ்டர் "கோபாலு"!!


இலக்கியவாதி ஆகணும்கிற ஆசை கோபாலுக்கு விவரம் அறிஞ்ச வயசிலேருந்து பெட்ரோல் விலை போல ஏறிக்கிட்டே இருந்திச்சு.பிரெஞ்சு,ருசிய இலக்கியவாதிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட எதோ இந்த ஜெமோ,சாரு,எஸ் ரா அளவுக்காச்சும் கோபால்'ங்ற பெயர் பரபரப்பாய் அடிபடனும் இல்லாவிட்டால் இலக்கிய உலகை விட்டே ஒதுங்கி இருக்கணும்னு முடிவு பண்ணினான் கோபாலு.ஆனாலும் ஓவர் நயிட்டில ஒபாமா'வா கூட ஆகலாம் இந்த நாசமா போன இலக்கியவாதி ஆக முடியாதிங்கிற விஷயம் கொஞ்ச நாள் போக போக தான் புரிய ஆரம்பிச்சுது.

                         

சரி இவனுக என்னதான் அப்பிடி எழுதுறானுகன்னு முக்கி முக்கி வாசிச்சா கூட புரியமாட்டேங்குதே;யார்கிட்டயாச்சும் கேட்கலாம்னா கூட கோபாலின் வைராக்கியம் அதற்க்கு இடம்கொடுக்கவில்லை.இலக்கியம்னு எழுதுரவணுக எழுத்து தான் புரியமாட்டேங்குது..வாஸ்தவம் தான்,ஆனால் இலக்கியவாதிகளோட சேர்ந்து சுத்துற பயலுக எழுதுற எழுத்து கூட ஒரு இழவுக்கும் புரியமாட்டேங்குதே என்னடா செய்யலாம்னு ஜோசிச்சு ஜோசிச்சே கோபால்க்கு பல இரவுகள் தூக்கம் பறிபோயிருந்தது!ஏதும் "ஸ்பெசல் ட்ரெய்னிங்" கிளாஸ் போய் இதெல்லாம் கத்துக்கலாம்னா எந்த வார இறுதி பத்திரிகைகளிலும் அதற்க்கான விளம்பரங்கள் ஏதும் வருவதில்லை.

நானும் எத்தனையோ கதைகள் கட்டுரைகள் முதல்கொண்டு பிட்டு வரைக்கும் வாசிச்சிருக்கேனே ஏன் எனக்கு மட்டும் இப்பிடி..சேர்த்து வைச்சிருந்த காசெல்லாம் ஒன்று திரட்டி ஐநூறு ஆயிரம் பக்கம் வரக்கூடியதா பெரிய பெரிய புஸ்தகங்கள் எல்லாம் வாங்கி படிக்க முயற்ச்சித்தான்.கோபாலின் ராசிக்கு அவன் வாங்கியவை அனைத்தும் ரஷிய புஸ்தகங்கள்.அதில் வரும் பெயர்கள் கூட கோபாலின் பற்களுக்குள் சிக்குப்பட்டு உள்ளே செல்லமுடியாமல் அவஸ்தை தந்தன.எவ்வளவு தான் முயன்றும் மூன்று நான்கு பக்கங்களுக்கு மேலே கிரகித்து படிக்க முடியாமல் போகவே அந்த முயற்சியும் மண்ணைக்கவ்வியது.

இலக்கிய புஸ்தகங்களை படிக்காமலே,நாவல்களில் நுழைந்து நெளிவுசுளிவுகளை கண்டறியாமலே,நவீனத்துவங்கள் பற்றி பூரண தெளிவில்லாமலே வெறுமனே ஒரு இலக்கியவாதியின் அடிவருடியாய் ரெண்டு வருஷம் இருந்திருந்தாலே கோபாலு ஒரு "குட்டி இலக்கியவாதி"ஆகியிருக்கலாம்.அல்லது சில புஸ்தக கண்காட்சிகளுக்கு சென்று சில பல புஸ்தகங்களின் மதிப்புரை மற்றும் முன் இரு பக்கங்களை மாத்திரம் மனப்பாடமாக்கிவிட்டு அதை வைத்து சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய வெட்டுக்குத்துகளில் தனது பங்குக்கு கிளறிவிட்டு குளிர் காய்ந்திருக்கலாம்.இப்படியான சூட்சுமங்கள் தெரியாத அப்பாவிகள் இலக்கிய உலகில் தாக்குபிடிப்பது குறைவு என்று கோபாலுக்கு தெரிந்திருக்கவில்லை.

இலக்கியவாதியாய் எழுதி தான் நிரூபிக்க முடியல;வாழ்ந்தாவது நிரூபிப்போம்னு முடிவு செஞ்சான் கோபாலு.பேஸ்புக்கில் வொர்க்(work) என்பதற்கு "இலக்கியவாதி"ன்னு போட்டுகிட்டான்.பெயரை கூட தஸ்தாயெவ்ஸ்கி என்று மாற்றிவிட்டிருந்தான்.இணையத்தில நாலஞ்சு இலக்கியவாதிக எழுதினத காப்பி பண்ணி தன்னோட ஸ்டேடசாய் போட்டு பார்த்தான்.வெறுமனே மாலை நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க செல்வதாய் இருந்தால் கூட வீட்டில் எங்கு போகிறாய் என்று கேட்டால் "இலக்கிய மாநாடு"இல்லாவிட்டால் ஏதும் உள்ளூர்/உலக இலக்கிய சந்திப்பு அப்பிடின்னு தான் சொல்லிவிட்டு கிளம்புவான்.

மாயாவி காமிக்ஸ் கூட வாசித்து வளந்திராத நண்பர்களிடம் ""எக்சைல்" நாவலில் சாரு என்ன சொல்ல வர்றார் தெரியுமாடா?இப்பெல்லாம் "எக்செல்"இல் படம் கூட வரையலாம்னு பின்னவீனத்துவமாய் சொல்ல வர்றார்டா..பெரிய பெரிய புஸ்தகங்கள் வாசிச்சவங்களுக்கு கூட இது புரியலைன்னா பாத்துக்கோவேன்" என்று கூட பேசிப்பார்த்தான்..


கோபாலு இலக்கியவாதியாய் காட்டிக்க எடுத்த முயற்ச்சிகள் எல்லாம் செவிடன் காதில் இளையராஜா மியூசிக் என்ற மாதிரி தான் முடிந்திருந்தது.சின்ன வயசில இருந்து எதையும் நெனைச்சிட்டா சாதிக்காமல் விடமாட்டான் கோபாலு."நான் ஒரு இலக்கியவாதி"ங்கிற விஷயம் அவனோட நாடி நரம்பெல்லாம் ஊறி கிடந்தது.சிறுவர் கதைகள் சிலவற்றை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி பார்த்தான்.அவை கூட வெளிவரவில்லை.சிலசமயம் பத்திரிகை ஆசிரியர் இவனோட "இலக்கியவாதி கோபால்" என்ற பெயரை பார்த்து தான் சிறுவர் கதைகளை வெளியிடவில்லையோ என்னமோ.

கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவனோட ஆசைகள் அப்படியே கிடந்தன.கோபாலுக்கு தன் மீது வெறி இல்லை..அவனோட வெறி முழுதும் இலக்கியம் மீது தான் என்ற விஷயம் கோபால் மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்ததும் வீட்டில் தினசரி களோபரம் தான்.வீட்டுக்கு வெளிகதவில் கூட "இலக்கியவாதி கோபு" அப்பிடின்னு போர்டு மாட்டினா எந்த பொண்ணு தான் சும்மா இருப்பாள்!கோபாலு பிள்ளைகள் பாடசாலைக்கு ஏதும் கவிதை கட்டுரை எழுதனும்னா இரவு பகல் பாராது நித்திரை முழித்து செய்து கொடுப்பான்.எப்பவாச்சும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை "இலக்கியவாதி"கோபால் பிள்ளைகள் தட்டி சென்றிருக்கின்றனர்!

வீட்டில ஏதும் காரியம் ஆகணும்னா "மிசிஸ்" கோபால் தானே ஏதும் கடிதமோ அஞ்சலட்டையோ "இலக்கியவாதி கோபால்" என்று தலைப்பிட்டு தன்னோட அட்ரசுக்கு போஸ்ட் பண்ணி விடுவாள்.அதை பார்த்து கோபு மேலும் கீழும் குதிப்பதை பார்க்க சகிக்காவிட்டாலும் கூட,எதோ தன்னோட காரியம் ஆகணுமேன்னு கோபாலோட ஆத்துக்காரி...பாவம் அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.தன்னோட பிள்ளைகளை இலக்கியவாதிகளுக்கு தான் கட்டி கொடுக்கணும்னு கூட நெனைச்சிருந்தான் கோபாலு.அப்புறம் வரும் மாப்பிளை தன்னை விட சிறந்த இலக்கியவாதியாய் இருந்துவிட்டால் தனது மானம் என்னாவதுன்னு அந்த முயற்ச்சியை ஆரம்பத்திலேயே கைவிட்டுவிட்டான்.
------
இப்போதெல்லாம் பேஸ்புக்கில் கோபாலுக்கு நாலஞ்சு ரசிகர்கள்.கோபாலின் இலக்கியத்தை வாசிப்பவர்கள்.தமிழ் நயத்தை ரசிப்பவர்கள்.அவர்கள் தான் கோபாலின் உலகம்.தன்னால தமிழ் இலக்கியத்துக்கு ஏதும் செய்யமுடியலையே என்ற கவலைய விட, இந்த சமூகம் ஒரு நல்ல இலக்கியவாதியை இழந்துவிட்டது என்கின்ற சோகம் தான் கோபாலின் மனதை  இறுதி காலத்தில் வாட்டிக்கொண்டிருந்தது.

                                

தனது நீண்ட கால கனவின் பிரகாரம் ஏற்கனவே வீட்டுக்கு அண்மையிலிருக்கின்ற மயானத்தில் தனது பெயரில் ஒரு நினைவுச்சின்ன கோபுரம் ஒன்றை கடந்த வாரம் தான் கட்டி முடித்திருந்தார். இன்னமும், அதில் "இலக்கியவாதி கோபு" என்கின்ற பெயரும்,கீழே "இவன் ஒரு எழுத்தாளனாய் வாழ்ந்தான்...இறந்தும் அவன் எழுத்து பேசப்படும்"என்கின்ற வாக்கியமும் தான் பொறிக்கப்பட இருக்கின்றது.இன்று அதை பொறிப்பதற்கு கூட ஒருவனை ஏற்பாடு செய்தாகிவிட்டது.இலக்கிய மாநாடு ஒன்றுக்கு தலைமைதாங்க செல்லவேண்டும் என்று கூறி கிளம்பவேண்டியது தான் பாக்கி.அதுவும் முடிந்துவிட்டால் கோபாலுக்கு  தனது வாழ்க்கையில் தான் நினைத்த அத்தனையையும் சாதித்துவிட்ட பெருமையுடன் கண்ணை மூடுவான்...இலக்கியவாதி ஆவதை தவிர!


Post Comment

11 comments:

கோவி said...

சமுதாயத்தில் கோபால்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

K.s.s.Rajh said...

தல யாருக்கு ஊமைக்குத்தா செம குத்து குத்தியிருக்கீங்கனு மட்டும் புரியுது
சூப்பர்............

முத்தரசு said...

என்னவோ
சொல்ரீங்க
ஆமா
யாரு
அது
கோபாலு

Yoga.S. said...

பகல் வணக்கம்,மைந்தரே!கடேசில இலக்கிய வியாதி,சாரி வாதி ஆக்கிட்டீங்க,கங்கிராட்ஸ்!

Unknown said...

//

கோவி said...
சமுதாயத்தில் கோபால்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.///

ஆமாங்க !!

Unknown said...

//

K.s.s.Rajh said...
தல யாருக்கு ஊமைக்குத்தா செம குத்து குத்தியிருக்கீங்கனு மட்டும் புரியுது
சூப்பர்............//



யாருக்கும் இல்லப்பா...ஒரு சிறு கதை அவ்வளவே!

Unknown said...

/மனசாட்சி™ said...
என்னவோ
சொல்ரீங்க
ஆமா
யாரு
அது
கோபாலு/



கற்பனை கதாபாத்திரம் :)

Unknown said...

//Yoga.S. said...
பகல் வணக்கம்,மைந்தரே!கடேசில இலக்கிய வியாதி,சாரி வாதி ஆக்கிட்டீங்க,கங்கிராட்ஸ்!

///
அப்பா ஏன் இது!!

கிஷோகர் said...

இத்தனை பிராயத்தனப்பட்டும் தன்னால் , தன்னை ஒரு இலக்கியவாதி என அடையாள‌ப்படுத்திக்கொள்ள முடியாத கோபாலு, கடைசியில் தனது பெயரை "மைந்தன் சிவா " என மாற்றிக்கொண்டு ஃபேஸ்புக்கில் நுழைந்தான். # இந்த முக்கியமான இடத்த விட்டுட்டீங்களே அண்ணே!

கவி அழகன் said...

Oru pidi pidichirukinka

வெற்றிவேல் said...

யாருப்பா கோபாலு? ஊர்ல நிறைய கோபாலு இருக்கத்தான் செய்கிறார்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...