Sunday, March 16, 2014

'Battle of the North' நடந்தது என்ன?



இந்த வருடத்துக்கான big matches அனைத்துமே ஏதோ ஒருவகையில் குழப்பத்திலேயே முடிவடைந்திருக்கின்றன.அதியுச்சமாக பற்றிக்ஸ் vs யாழ்ப்பாணக்கல்லூரிக்கிடையிலான போட்டியில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.யாழ் பத்திரிகைகளில் முன்பக்கத்தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்திருந்தன இவை.சரி, 'வடக்கின் மாபெரும் துடுப்பாட்டம்' (Battle of the North)இல் நடந்தது என்ன?

 சம்பவம் நடைபெற்றதினம் மூன்றாம் நாள்.முதல் நாள் துடுப்பெடுத்தாடிய யாழ் மத்தியகல்லூரி அணி சகலவிக்கட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு கட்டத்தில் 68 ஓட்டங்களுக்கு 9விக்கட்டுகளை இழந்திருந்தாலும்,இறுதிவிக்கடில் நிலோஜன்,லோகதீஸ்வரின் நிதானமான துடுப்பாட்டத்தினால் இறுதியில் 122 ஓட்டங்களுக்கு இரண்டாம் நாள் ஆட்டமிழந்தது.தனது இரண்டாம் இனிங்க்ஸை ஆரம்பித்த மத்தியகல்லூரி அணி,இரண்டாம் நாள் முடிவின் போது 9 விக்கட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருக்க,மூன்றாம் நாள் ஆட்டம் சூடுபிடிக்குமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி முதல் ஓவரிலேயே இறுதிவிக்கட் சாய்க்கப்பட,134 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது சென் ஜோன்ஸ் அணிக்கு.ஒரு நாள் முழுதாக மிச்சமிருக்க,10 விக்கட்டுகள் கைவசமிருக்க மிக உற்சாகமாக சென் ஜோன்ஸ் இரண்டாம் இனிங்க்சை ஆரம்பித்தது.முதல் இரு விக்கட்டுகளும் எவ்வித ஓட்டமும் பெற்றிருக்காமலேயே வீழ்த்தப்பட, போட்டி இன்னமும் சுவாரசியமானது. சிந்துர்ஜனும் அணித்தலைவர் துவாரகசீலனும்(இவர் இப்பருவகால போட்டி ஒன்றில் 200 ஓட்டங்களை குவித்து பலராலும் அறியப்பட்ட வீரர்)ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆரம்பித்து பின்னர் தொடர்ச்சியாக மூன்று ஓவர்களில் ஆறு பவுண்டரிகளை அடிக்க,சென் ஜோன்ஸ்,சென்றல் என இரு தரப்பும் ஆர்ப்பரித்தது.

இத்தருணத்தில் தான் அந்த சம்பவம் சம்பவம் என்கின்ற சம்பவம் நடைபெற்றது. மதூசனின் பந்தில் அணித்தலைவர் துவாரகசீலன் சற்றே முன்னோக்கிவந்து அடிக்க முற்பட்ட சமயத்தில் பந்து பட்டில் படாது கீப்பரின் கைகளுக்கு சென்றுவிட...ஸ்டம்பிங்க்...!! லெக் அம்பயர் ஆட்டமிழப்பு என்று அறிவித்ததன் தாமதம் ஏராளமான சென்றல் பழைய மாணவர்கள் மைதானத்துக்குள் நுழைந்து ஆட்டமிழப்பை பிட்ச் அருகாமையில் கொண்டாடினர்.சென் ஜோன்ஸ் பழைய மாணவர்கள் வெளியே நின்று வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர்,காரணம் அந்த விக்கட்டின் அருமை!!துவாரகசீலன் நின்றால் வெற்றி நிச்சயம் என்று சென் ஜோன்ஸும்,தோல்வி நிச்சயம் என்று சென்றல் தரப்பும் பலமாக நம்பினர்.

மைதானத்தில் கொண்டாடிக்கொண்டிருந்த சென்றலைட்ஸ் இப்போது கொண்டாட்ட மன நிலையிலிருந்து கோபமான மன நிலைக்கு மாறியதை வெளியிலிருந்து அவதானிக்க முடிந்தது.என்னவென்று பார்க்க ஒரு 10-15 ஜொனியன்ஸ் மைதானத்துக்குள் புகுந்து பார்த்தால், அந்த ஆட்டமிழப்பு வாபஸ் வாங்கப்பட்டதாகவும்,காரணம் ஸ்டம்பிங்க்கின் போது பெய்ல்ஸ் விழுந்திருக்கவில்லை,எனவே ஆட்டமிழப்பல்ல என்று நடுவர் துவாரகசீலனை மீண்டும் ஆட்டத்துக்கு அழைத்ததாகவும் தெரியவந்தது.இந்தச் செய்தி நம் காதுகளுக்கு எட்டும்முன்பதாகவே நடுவர் ஒருவருக்கு அடித்துவிட்டார்கள் என்றும்,நடுவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள் என்றும் செய்தி வந்து சேர்ந்தது. அப்புறம் என்ன! சென் ஜோன்ஸ் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மைதானத்தில் உட்கார,சென்றல் வீரர்கள் கூடாரத்துக்குள் உட்கார,விசயம் உயர்மட்டத்தினால் மூன்று மணி நேரம் ஆற அமர விசாரிக்கப்பட்டு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1.நடுவரில் தான் முதல் தவறு.சரியாக அவதானிக்காமல் உடனேயே ஆட்டமிழப்பை வழங்கியது.ஆனால் நடுவர் தவறை உணர்ந்து துடுப்பாட்ட வீரரை மீள அழைத்தால் அது தவறு என்று வாதிட்டு போட்டியை நிறுத்துவது எவ்வகையில் நியாயம்?நடுவரை தாக்கினால் போட்டி நிறுத்தபடும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதா?

2.பெய்ல்ஸ் விழுந்திருக்கவில்லை என்று வீடியோ ஆதாரங்கள் காட்டப்பட்டும்,இல்லை,ஆட்டமிழப்பு தான் வழங்கவேண்டும் என்று ஒற்றைக் காலில்  நின்றவர்கள் கிரிக்கட்டின் கனவான் தன்மைக்கு பொருத்தமானவர்களா?

3.ஆட்டமிழப்புக்காக நடுவரை தாக்குவது எத்தகைய பழக்கவழக்கம்? ஆட்டமிழப்பு வழங்கிய சமயம் மைதானத்தில் நூற்றுக்கணக்கான சென்றலைட்ஸ் வீரர்கள் தான் உள் நுழைந்திருந்தார்கள்.ஒரு ஜொனியனும் ஆட்டமிழப்பு வழங்கிய சமயத்தில் மைதானத்துக்குள் புகுந்திருக்கவில்லை, புகவேண்டிய தேவையுமில்லை.

4.இறுதியாக 2004 இல் சென் ஜோன்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் பிட்சில் மட் எரிக்கப்பட்டது.அப்போது ஆளுமைமிக்க அதிபர்களாக மதிப்புக்குரிய,காலஞ்சென்ற தனபாலனும்,ராஜதுரையும் இருந்தமையால் கனவான் தன்மையாக வெற்றி சென் ஜோன்ஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தொடர்ச்சியாக சென்றல் தான் வென்று வந்திருக்கிறது.அதன் பின் சென் ஜோன்ஸ் ஒரு போட்டிதானும் வெல்லவில்லை.அதற்கான வாய்ப்பு இம்முறை தான் கிடைத்தது.அதுவும் இத்தகைய சீர்கேட்டு செயலால் தடுக்கப்பட்டிருக்கிறது.அது ஏன் சென் ஜோன்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கும் சமயங்களில் மட்டும் பிரச்சனைகள் நடக்கின்றன? கடந்த 5,6 வருடங்களாக சென்றல் வெற்றி பெற்ற போது ஒரு துன்பியல் சம்பவம் கூட நடைபெற்றிருக்கவில்லையே?எங்கு பிரச்சனை?

5.போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது என்று அறிவித்த சமயத்திலிருந்து சென்றல் தரப்பினர் அதனை மிக ஆர்ப்பாட்டமாக கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்க,ஒட்டுமொத்த சென் ஜோன்ஸ் தரப்பும் கப் சிப் என்று அமைதியாக இருந்தது.மைதானத்தில் இருந்து இதனை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும் காரண காரியங்கள்.

6.முடிவெடுக்கும் நேரம் ஏறத்தாள 3-4 மணி நேரம்.எத்தகைய பரிந்துரைகளுக்கும் எதிராகவே சென்றல் தரப்பு வாதிட்டார்கள்.உயர்மட்ட கலந்துரையாடல்களின் போது கூட நிதானமற்ற விதத்தில் அநாகரிகமாக உரையாடிய சந்தர்ப்பங்களை பலர் அவதானித்திருக்கின்றனர்.எவ்வளவு நேரம் வீணாக்கப்படுகின்றதோ,அத்தனை தூரம் சென் ஜோன்ஸின் வெற்றி தாமதமாக்கப்படும் என்பது கிரிக்கட் தெரிந்த சிறுபிள்ளைக்கும் புரியக்கூடிய உண்மை.

7.நடுவர் ஸ்டம்பிங்க் செய்தது முறையில்லை,விக்கட் சாய்க்கப்படவில்லை என்று ஆட்டமிழப்பை வாபஸ் வாங்கியிருக்கிறார் என்றால்,ஆட்டமிழப்பு கோரிய விக்கட் கீப்பர்,வீரர்களின் கனவான் தன்மை எத்தகையது? அவர்களாவது பழைய மாணவர்களுக்கு கூறியிருக்கலாமே இது தங்களின் தவறு தான் என்று?Sportsmenship கிலோ என்ன விலை?

8.நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது போட்டியை நிறுத்தியமை கிரிக்கட்டின் எதிர்காலத்துக்கு எவ்விதத்தில் ஆரோக்கியமானதாக அமையப்போகின்றது?இனிமேலும் சென் ஜோன்ஸ் வெற்றி பெறும் சந்தர்ப்பங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?ஒவ்வொரு தடவையும் விட்டுக்கொடுக்கும் தரப்பாக சென் ஜோன்ஸ் இருக்கப்போகின்றதா என்ன? 

9.கிரிக்கட்டில் நடுவரின் முடிவு இறுதியானதா இல்லை அமைச்சர்களின் முடிவு இறுதியானதா? அப்படியாயின் எதற்கு கிரிக்கட்? 

10.பத்திரிகை செய்திகள் இப்படியாகத்தான் இருந்தன.
'நடுவரை தாக்கியதால் போட்டி நிறுத்தப்பட்டது'.
அப்படியாயின் யாரில் தவறு? நடுவரை அடிக்கவேண்டிய எவ்வித காரணமும் சென் ஜோன்ஸ் தரப்புக்கு இருந்திருக்கவில்லை.110 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களும் 8 விக்கட்டுகளும்,அன்றைய முழு நாளுமே மீதமாக இருந்தன.அத்துடன் இத்தகைய கேவலமான செயல்கள் எப்போதுமே சென் ஜோன்ஸ் மாணவர்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டிருக்கவில்லை.

11.வீடியோ ஆதாரம் ஏற்றுக்கொள்ளமுடியாதென்று வாதிட்டார்களாம் அமைச்...& வேறு சிலரும்.ஆமாம்,மைதானத்திலிருந்தே குறுகிய நேரகாலப்பகுதியில் அந்த காணொளியை எடிட் செய்து பெய்ல்ஸ் விழாதது போன்றும்,விக்கட் சாய்க்கப்படாதது போன்றும் மாற்றியிருப்பார்கள் சென் ஜோன்ஸ் மாணவர்கள்,..!!(வெகு சீக்கிரம் காணொளி பரவலாக வெளியிடப்படும்)

 போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதன் தாமதம்,சென்றல் வீரர்கள் கொண்டாடினார்கள்.அமைச்சர் டக்ளஸ் வந்திருந்தார்.அவரை சுற்றி கொண்டாட்டம் நடந்தது.அவரின் பிரதிநிதி ஒருவர் சென் ஜோன்ஸ் மாணவர்களுடன் கலந்துரையாட வர,எவருமே அவ்விடத்தில் நிற்காமல் நகர்ந்துசென்றனர்.முடிவு அறிவித்து அடுத்த 10 நிமிட நேரத்தில் மைதானத்தில் சென் ஜோன்ஸ் மாணவர்கள் நின்ற அடையாளமே இருந்திருக்கவில்லை.இத்தனைக்கும் இரண்டு மூன்று பழைய மாணவர்கள் தான் 'சரி எதுவா இருந்தாலும் எங்கட ஸ்கூல்ல போய் பாத்துக்கலாம், பேசிக்கலாம்'என்று கூறி அனுப்ப,அதற்கு மதிப்பளித்து மாணவர்களும்,பழைய மாணவர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்புக்கொடுக்காமல்.இத்தனைக்கும் பாடசாலை அதிபரோ,ஆசிரியர்களோ அவ்விடத்தில் இல்லை.முழுக்க முழுக்க பழைய மாணவர்களால் ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டது நிலைமை.இந்த நிலைமை ஏற்படுவதற்க்கு முக்கிய காரணம் விக்கட் விழுந்த சமயத்தில் உள்ளே ஓடிய சென்றல் பழைய மாணவர்கள் தான் என்பது சொல்லித்தெரிய வேண்டிய உண்மை இல்லை.பொலீஸ் பாதுகாப்பு தேவையில்லை,எமது பழைய மாணவர்களே நிலைமையை கட்டுப்படுத்துவார்கள் என்கின்ற உறுதிமொழியின் அடிப்படையில் பழைய மாணவர்கள் தான் பாதுகாப்புக்கும், ஒழுங்கை கவனிக்கவும்(!!) நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது! 

 எது எப்படியோ,அதிபர்கள் தனபாலன்,ராஜதுரை அவர்களின் ஆளுமை இப்போதிருக்கும் அதிபர்களுக்கு கிடையாது என்பது அக்மார்க் உண்மை. அவர்களின் பின்னால் பழைய மாணவர்களும்,மாணவர்களும் நின்றனர். இப்போது நிலைமை வேறு. நேற்று இரவு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து சென்றல் அணியின் 'POG'(Prefect of Games) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறாராம்.

குப்பைக்குள்ளும் ஒரு குண்டுமணி?

Post Comment

6 comments:

தனிமரம் said...

நல்ல ஆராய்வு !

Unknown said...

வணக்கம்,மைந்தரே!நலமா?///அது........அறுபத்தெட்டுகளில் இருந்து அப்படியே தான் இருந்து வருகிறது!ஆரம்பித்தது,யாழ்.இந்துக் கல்லூரியுடனான ஒரு போட்டியின் போது தான்.இடையில் சில ஆண்டுகள் திருந்தி(?!)இருந்திருக்கக் கூடும்.என்னவோ,நம் மக்களும் இன்டர்நாஷனல் லெவலுக்கு உயர்ந்து விட்டார்கள்!வாழ்க!!!

Unknown said...

நலமா,மைந்தரே?'வலம்புரி' யில் உங்கள் கட்டுரை படித்தேன்.நன்று,வாழ்த்துக்கள்!!!

Unknown said...

அப்படியா? லிங்க் அனுப்பிவிடுங்களேன் பேஸ்புக்கில்?

Anonymous said...

"எப்படியும் எங்களுக்கு வெற்றியைத் தர வேண்டும், இல்லாவிட்டால் 109 ஆவது போட்டி இனிமேல் நடைபெறவே மாட்டாது, வெற்றியைத் தராவிட்டால் இத்தோடு முடிந்தது" என்று சென் ஜோன்ஸ் மிரட்டி வெற்றியைப் பெற முயல்வதாக பரவலாக பேசப் படுகின்றது.

விளையாடி வென்றால்தான் வெற்றியே தவிர, கேட்டு வாங்குவது, சென்றால் போடும் பிச்சை. சென்ஜோன்சுக்கு பிச்சைதான் வேண்டுமா என்று அதிபரிடம் கேட்கவும். அவமானமாக உள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

வலைச்சர தள இணைப்பு : தனிமரங்கள் கூட நடப்பது போல !

Related Posts Plugin for WordPress, Blogger...