Thursday, December 20, 2012

கற்பழிப்புக்கு உண்மையான காரணம் என்ன?..!
தந்தை மகளை வன்புணர்வு செய்வது,சொந்தங்களுக்குள்ளேயே சீரழிப்புகள், சிறுமிகள் மீதான வன்முறைகள் என்று பெண்கள் மீதான வன்முறை எல்லைகடந்து சென்றுகொண்டிருக்கிறது.அதனை சில பெண்ணியவாதிகள் பயன்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த ஆண் சமுதாயமே வக்கிரம் கொண்டவர்கள், அடக்குமுறை கொண்டவர்கள் என்று தங்கள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவிழ்த்துவிடுகின்றனர். வெறி கொண்ட காமுகர்களை மற்றைய ஆண்களால் அடக்க முடியவில்லை,இவர்களும் அவர்களுக்கு நிகரே என்று சாதாரண பெண்கள் மனதில் குழப்பத்தை உண்டாக்கி சமுதாய கட்டமைப்பில் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றனர் இந்த பெண்ணியவாதிகள்.சரி அவர்களை பற்றி பின்னால் ஒரு பதிவில் பார்ப்போம்.

இருபத்தி மூன்று வயதான கல்லூரி மாணவி ஒருவரை இந்திய தலைநகர் டெல்லியில் ஓடிக்கொண்டிருந்த பேரூந்தில் பலர் ஒன்றுசேர்ந்து கற்பழித்து,தலையில் இரும்பு கம்பியால் தாக்கி,உடல் முழுவதும் காயங்களுடன் விட்டு சென்றிருக்கின்றனர் சில காமுகர்கள்.பலத்த சர்ச்சையை தோற்றுவித்துக்கொண்டு,இந்திய பாராளுமன்றம் வரை பிரச்சனை விஸ்வரூபமெடுத்திருக்கிறது.உயிருக்கு போராடும் குறித்த மாணவியை சோனியா காந்தி வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.இது டெல்லியில் நடந்தமையால் இந்தளவு தாக்கம் செலுத்தியிருக்கிறது.இதுவே வேறு சிறு மாநிலங்களாக இருந்திருந்தால் வெறும் பத்திரிகை செய்தியுடன் முடிவடைந்திருக்கும்.இந்தியா எங்கு செல்கிறது,வல்லரசாகுமா என்று ஆளுக்காள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க,சத்தமே இல்லாமல் இந்தியா இங்கு தான் சென்றுகொண்டிருக்கிறது என்று "மொபைல் காங் ரேப்" மூலம் காட்டியிருக்கின்றனர் சில காமுகர்கள்!


இந்தியன் எக்ஸ்போ நெட் (Indianexponet) பத்திரிகையை நிறுவியோரில் ஒருவரும், இந்திய சமூக,அரசியல் விடயங்களை  எழுதிவருபவருமான இஷான் மோகன் (Ishaan  Mohan ), இந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளுக்கான காரணங்களாக பத்து விடயங்களை தனது பத்திரிகையில் எழுதியிருந்தார்.அதனை தமிழாக்கி வெளியிடுகிறேன்,காரணம் அந்த பத்து காரணங்களையும் பார்க்கும் போது நிச்சயம் அவை உங்களுக்கு எதோ ஒருவகையில் மனதை உறுத்தக்கூடும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு
உயர் வாழ்க்கைத்தரமுள்ள குடும்பங்கள்,சாதாரண,கீழ்நிலை வாழ்க்கைத்தரம் கொண்ட குடும்பங்கள் என்று பல பொருளாதார வேறுபாடு கொண்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்த சமூகமாக தான் எமது சமூகம் இருந்துகொண்டிருக்கிறது.அடைய முடியா எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ள கற்பழிப்பு ஒரு வழியாக பலருக்கு தென்படுகிறது.ஒரு தரப்பு மறு தரப்பை தாக்க/அடைய பெண்கள் தான் இலகுவான இலக்காக மாறிவிடுகின்றனர்.

ஒருதடவை ரேப் செய்பவன் அத்துடன் நிறுத்துவதில்லை-பிடிபடாதவரையில்!

ஒருவன் ஒருதடவை கற்பழிப்பவன் அத்துடன் நின்றுவிடாமல் இரண்டாவது,மூன்றாவது என்று தனது சாதனை பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான்.கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களில் பலர் அதுபற்றி முறைப்பாடு செய்வதிலோ,குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலோ முனைப்பு காட்டுவதில்லை காரணம்,தமது பெயர் அடிபடும் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடும் என்கின்ற பயத்தினால்.பெரும்பாலான வழக்குகள் உடனே முடிவடைந்துவிடுவதில்லை,காலம் காலமாக இழுபடும்.இப்படியான காரணங்களால் ஒதுங்கும் பெண்கள்,கற்பழிப்பவன் மேலும் தனது கைங்கரியத்தை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றனர்.

சில சமயங்களில் இப்படி "பொது"வுக்கு பயந்த,குடும்ப மானம் மரியாதை என்று பயப்பிடும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், இந்த காமுகர்களின் விருப்பத்தெரிவாக அமைந்துவிடுகின்றனர்.எப்படியோ தான் தப்பிவிடுவேன் என்று தெரிந்துகொண்டே காரியத்தில் இறங்குகிறான் அவன்.


       

பாலியல் குற்றம் புரிவோரை நாமே அங்கீகரிக்கின்றோம்!
கேவலமான விடயம் ஆனால் அதுதான் உண்மை..ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டால்,அவள் தன்னால் கெட்டவள்-தூய்மையற்றவள் என்கின்ற எண்ணம்,மனப்பாங்கு தான் இங்கு பெரும்பாலானோரிடம் காணப்படுகிறது.அவள் அனைவராலும் ஒதுக்கப்படுகிறாள்.சமூகத்தால்,உறவினர்களால்,கூட இருப்போரால் ஏன் பெற்றோரால் கூட தமது மகள் தப்பிழைத்தவள் என்ற ரீதியில் தான் அவள் நோக்கப்படுகிறாள்.எந்த மாப்பிள்ளை வீடுகளும் அப்படியான ஒரு பெண்ணை தமது மருமகளாகக ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

காம களியாட்டங்கள்   
பெரும்பாலான ஆண்களுக்கு பெண்கள் தொடர்பில் பல்வேறு "காம களியாட்ட"எண்ணங்கள் மனதில் உண்டு.இன்றைய இளைஞர்கள் சமந்தா மீது கிறுக்கு கொண்டிருப்பதும்,முன்னோர் குஷ்புக்கு கோயில் கட்டியதும் இந்த களியாட்டங்களில் ஒரு வகையே!இது ஆரோக்கியமானது தான் ஆனால்,ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தே அது அவருடன்,அவருக்கு சொந்தமானவருடன் முடிவடைகிறதாஅல்லது  மற்றைய பெண்களை வன்புணர்வு செய்யும் நிலை வரை கொண்டு சென்றுவிடுகிறதா என்பது அமைகிறது.

ஒருவன் பெண்கள் மீது எத்தகைய மதிப்பு கொண்டிருக்கிறான் என்பது அவனது அப்பா அவன் அம்மா மீது கொண்டிருக்கும் மதிப்பு,மற்றைய பெண்கள் மீது பொதுவாக கொண்டிருக்கும் மதிப்பு என்று பல காரணங்கள் தீர்மானிக்கின்றன.இன்றும் உலகில் பெண்கள் என்றாலே அவர்கள் ஆண்களின் காமத்தேவைக்கு பயனாகும் ஒரு "உபகரணம்" என்கின்ற மனப்பாங்கு பல ஆண்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அனைத்து இடங்களிலும் போலீஸ் நிற்கமுடியாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இத்தகைய பாலியல் வன்புணர்வு செய்வோராக திருந்தாவிட்டால் கற்பழிப்பை தடுக்க முடியாது என்பதே உண்மை. கற்பழிப்பை தடுக்க நாட்டின் ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் போலீஸ் பாதுகாப்பு வைக்க முடியாது.எமது நாட்டின் மக்களில் ஒரு குறித்த வீதமானோர் கற்பழிப்போராக இருக்கின்றனர்.பலருக்கு சில பயங்கள்,தடைகள் காரணமாக முயற்ச்சியில் இறங்காமல் இருக்க,சிலர் மட்டும் துணிந்து இறங்கிவிடுகின்றனர்.

நடத்தை கெட்ட பெண்களே கற்பழிக்கப்படுகின்றனர். 

இந்திய போலீசில் கூட கற்பழிப்பு புகார் கொடுக்க எந்த பெண்ணாவது சென்றால், "நீ நடத்தை கெட்டவள்,அதனால் தான் இப்படி நடந்தது" என்று தான் போலீசாரே கூறுமளவுக்கு இந்திய கலாச்சாரம்,மெண்டாலிடி அனைவரிடமும் ஊறிப்போய் இருக்கிறது.போலீசார் கூட அதே சமூகத்திலிருந்து, அதாவது வாய்ப்பு கிடைக்காத-வெறுப்படைந்த,கீழ்த்தரமான சிந்தனை கொண்ட சமூகத்திலிருந்தே வந்திருப்பதால் அவர்களையும் திருத்த முடியாது.அவர்களிடமிருந்து நல்ல சிந்தனைகளையோ, முற்போக்கான எண்ணங்களையோ எதிர்பார்க்க முடியாது அதே சமயம் அப்படி எண்ணம் கொண்டவர்களை போலீஸ் வேலைக்கு சேர்த்துக்கொள்வது என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராதது.


               

அம்மாக்களால் முடியும்!
சமூகத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர "அம்மாக்களால்"முடியும்.தனது மகள் எப்படி உடையணிகிறாள், ஜீன்ஸ் போடுகிறாளா,போடும் சட்டை உடலில் எங்கு தங்குகிறது எங்கு விலகுகிறது என்று பார்த்து திருத்தும் அம்மாக்கள் தமது ஆண் பிள்ளைகளையும் வளர்ப்பிலேயே திருத்த முடியும்,சீரிய எண்ணங்களை சிறுவயதிலிருந்தே அவர் மனங்களில் விதைக்க முடியும்.அத்தகைய ஆரம்பகால விதைப்பு தான் எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக காரணமாகிறது. ஒருத்தி விபசாரியாக இருந்தாலும் கூட அடிப்படையில் அவள் ஒரு பெண் தான் என்கின்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் மனதில் வரவேண்டும்;அதற்க்கு அம்மாக்கள் உதவவேண்டும்-இது எதிர்கால அம்மாக்களுக்கும் பொருந்தும்.

பாலியல் கல்வி 
இன்றைய பெரும்பாலான இளைஞர் யுவதிகள், பாடசாலையில் கற்றுத்தரும் மேலோட்டமான பாலியல் கல்வியில் தெரிந்துகொள்ளும் விடயங்களை விட(சிலருக்கே அந்த வாய்ப்பும்!) போர்னோ படங்கள் பார்ப்பதன் மூலம் அது சம்பந்தமாக தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டுள்ளனர்.ஆனால் பழமைவாத சிந்தனைகளோடு இருக்கும் சில ஊடகங்களும்,மக்களும் இத்தகைய பாலியல் கல்வி அவசியமற்றது என்று கூக்குரலிட்டு இந்த சமநிலையை குழப்பிவிடுகின்றனர்.சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வயது வந்தோருக்கும் இன்று பாலியல் கல்வி அவசியமாகிறது.ஆனால் பாலியல் என்ற வார்த்தையை கண்டாலே துடித்து ஒதுங்கும் பலர் எங்களை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கின்றனர்.

ஆங்கில-இந்தி சிந்தனை வேறுபாடு
ஆங்கில மொழியில் படித்தவர்கள் சமுதாயத்தில் செக்ஸ் என்பது எந்தளவு ஆரோக்கியமானது,எந்தளவு பொதுவானது என்பது பற்றிய புரிதல் தேவையான அளவு வந்துவிட்டது.ஆனால் மறுபக்கம் இந்தி பேசும் சமூகத்தில்(இது மற்றைய அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்) அத்தகைய புரிதல்கள் இன்னமும் வந்துவிடாமல் "செக்ஸ் என்பது ஒரு கெட்ட சமாசாரம்" என்கின்ற புரிதலுடன் தான் பெரும்பாலானோர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த இந்தி -ஆங்கில மொழி சமூகத்துக்கிடையிலான இடைவெளி வெகு சீக்கிரம் குறைக்கப்பட்டு பாலம் அமையப்பெறல் வேண்டும்.அல்லது தொடரும் காலங்களிலும் பெண்கள் மீது தான் முழுமையான குற்றச்சாட்டு இடம்பெற்றுக்கொண்டிருக்கப்போகிறது.

மனவுறுதி கொண்ட பெண்கள் வேண்டும் 
பெண்கள் என்றால் மென்மையானவர்கள், எதையுமே தீரமாக எதிர்கொள்ள தெரியாதவர்கள் என்கின்ற எண்ணத்தை மாற்றி,பெண்கள் எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும்.அவர்கள் மீது குடும்ப பொறுப்பு என்கின்ற பெரிய பாரத்தை மட்டும் செலுத்திவிடாது இது போன்ற விடயங்களில் ஒரு தெளிவான மனப்பாங்கை வளர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.எந்த சமூகத்திலும் கற்பழிப்பு இருக்கின்றது ஆனால் எங்கள் சமூகத்தில் தான் கற்பழிக்கப்பட்ட பெண் தப்பானவளாக,தூய்மையில்லாதவர்களாக கருதப்படும் மனப்பாங்கு இருக்கிறது..

மனதில் தூய்மையாக,எண்ணங்களில் சுத்தமான மனிதர்களை மதியுங்கள்-உடல் ரீதியாக பார்க்காமல்!

--------------------------------------மருத்துவ கல்லூரி மாணவி தான் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்.இரவு படம் பார்த்துவிட்டு பதினோரு மணிக்கு பஸ்ஸில் வரும்போது தான் இது நடந்திருக்கிறது என்கிறார்கள்.சாமம் பன்னிரண்டு மணிக்கு சுதந்திரமாய் பெண்கள் நகைகளோடு(!) நடமாடும் காலம் இன்னமும் வந்துவிடவில்லை என்பதை படித்த பெண்கள் அறியாதவர்களா என்ன! எத்தகைய கல்விமுறைகளும்,சட்டதிட்டங்களும் காமுக மிருகங்களை காமம் வெறிக்கேறிய தருணங்களில் கட்டுப்படுத்தி விடுவப்போவதில்லை.அதை உணர்ந்து தங்களுக்கேற்ற பாதுகாப்பில் பெண்களும் கொஞ்சம் அவதானமாய் இருப்பது அவசியம்.   
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தான் இந்த செய்தியை கேட்கும் எந்த மனமும் துடிக்கும்.ஆனால் பாலியல் வறட்சியை உருவாக்கி விடுவதும் இதே மனங்கள் தான் இதே சமூகம் தான்.திருமண வயதை பிந்திய இருபதுகளாகவும்,முப்பதுகள்,நாற்பதுகளாகவும் கொண்ட ஆண்களில் பெரும்பாலானோர் பாலியல் வறட்சியால் விரக்தியடையும் நிலைமை கானப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.தூக்கிலிடவேண்டும் என்று கூறும் மக்கள் தான் பாலியல் கல்வி வேண்டாம் என்கின்றனர் -விபசாரத்தை முற்றாக ஒழிப்போம் என்கின்றனர். பழமைவாத எண்ணங்களிலிருந்து எப்போது அனைவரும் வெளியேறுகின்றனரோ, அன்று தான் ஒரு விடிவு..! அதற்கு பின்னர் தூக்கிலிடுவோம் !!

குறிப்பு:கற்பழிப்புக்கு வன்புணர்வு என்றும் ஒரு நாகரிகமான பதம் உள்ளது.நான் கற்பழிப்பு என்பதை பாவித்த காரணம்,வன்புணர்வு எனும்போது பெரும்பாலானோர் மனதில் கற்பழிப்பு எனும் சொல் ஏற்படுத்தும் தாக்கத்தை இது ஏற்படுத்துவதில்லை.

இது பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி எழுதுமாறு நண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர்.ஆனால் இந்த பதிவு நீண்டு செல்வதை நான் விரும்பவில்லை.வாசிப்போரும் (ஒரு சிலரை தவிர)விரும்பமாட்டார்கள் என்று தெரியும்.
  

Post Comment

16 comments:

Yoga.S. said...

நல்ல சிந்தனையூட்டும்/சிந்திக்கத் தூண்டும் பகிர்வு!அம்மாக்களால் முடியும்!!!

சக்கர கட்டி said...

சரியாய் சொல்லி இருக்கீங்க

Thuvarakan said...

டிரைவர் அல்லது கண்டக்டர் கூடவா பார்க்கவில்லை.......கடைசி போலீஸ்க்கு கால் பண்ணக் கூட முடிந்திருக்காத என்ன......? உப்புச் சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் மணிக்கணக்கில் மொக்கை போடும் இந்த கேடு கேட்ட சமூகம்...... இதையும் கூட மறந்தே போகும்??????

Surenthirakumar Kanagalingam said...

இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான பதிவு... இங்குள்ள ஊடகங்கள் கற்பழிப்பு சம்பவங்களை செய்தியாக்கி காசாக்குவதில்தான் முன்னிற்கின்றன. இதைப்போன்ற பகிர்வுகளை தெளிவான் கண்ணோட்டத்தில் இங்கே ஒருவரும் தரவில்லை... நன்றி மைந்தனே...

K. Sethu | கா. சேது said...

Thuvarakan said...>>
//டிரைவர் அல்லது கண்டக்டர் கூடவா பார்க்கவில்லை.......கடைசி போலீஸ்க்கு கால் பண்ணக் கூட முடிந்திருக்காத என்ன......? உப்புச் சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் மணிக்கணக்கில் மொக்கை போடும் இந்த கேடு கேட்ட சமூகம்...... இதையும் கூட மறந்தே போகும்??????//

தாங்கள் என்ன நடந்தது என்பது பற்றி ஊடங்களில் வெளியாகிய தகவல்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

அந்த தாக்குதல் மற்றும் வன்புணர்வு நிகழ்வு நடந்த பேரூந்தில் இழிசெயலில் ஈடுபட்டோர் அறுவர். அவர்கள் அந்த பெண்ணும் நண்பனும் பேரூந்தில் ஏறிய போது இருந்த 4 பயனிகளும் அவர்களது கூட்டாளிகளான ஓட்டுனரும் நடத்துனரும். பேரூந்தை அதன்பின் நிறுத்தாமல் மொத்தம் 35 கி.மீ டெல்லி நகரில் சுற்றிச் சுற்றி 90 நிமிடங்கள் அந்தக் கொடூரங்களை அந்த அறுவரும் நிகழ்த்தியிருக்கின்றனர். இதுவரை பிடிபட்ட நால்வரில் அந்த ஓட்டுனரும் ஒருவராம். பேரூந்தும் தனியார் (chartered) வகை பகலில் பள்ளிக்குச் சேவையில் உள்ள ஒன்றாம். இரவில் அந்த ஓட்டுனரால் திருட்டத்தனமாக பணkf சம்பாதிக்க பொதுச்சேவையில் ஈடுபடுத்தப்படுத்தப்படு வந்ததாகவும் தகவல்கள் கண்டுள்ளேன்.

இதையும் வாசிக்கவும் : http://www.ndtv.com/article/cities/gang-rape-in-delhi-bus-police-arrest-two-prime-accused-recover-iron-rod-306533

K. Sethu | கா. சேது said...

Thuvarakan said...>>
//டிரைவர் அல்லது கண்டக்டர் கூடவா பார்க்கவில்லை.......கடைசி போலீஸ்க்கு கால் பண்ணக் கூட முடிந்திருக்காத என்ன......? உப்புச் சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் மணிக்கணக்கில் மொக்கை போடும் இந்த கேடு கேட்ட சமூகம்...... இதையும் கூட மறந்தே போகும்??????//

தாங்கள் என்ன நடந்தது என்பது பற்றி ஊடங்களில் வெளியாகிய தகவல்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

அந்த தாக்குதல் மற்றும் வன்புணர்வு நிகழ்வு நடந்த பேரூந்தில் இழிசெயலில் ஈடுபட்டோர் அறுவர். அவர்கள் அந்த பெண்ணும் நண்பனும் பேரூந்தில் ஏறிய போது இருந்த 4 பயனிகளும் அவர்களது கூட்டாளிகளான ஓட்டுனரும் நடத்துனரும். பேரூந்தை அதன்பின் நிறுத்தாமல் மொத்தம் 35 கி.மீ டெல்லி நகரில் சுற்றிச் சுற்றி 90 நிமிடங்கள் அந்தக் கொடூரங்களை அந்த அறுவரும் நிகழ்த்தியிருக்கின்றனர். இதுவரை பிடிபட்ட நால்வரில் அந்த ஓட்டுனரும் ஒருவராம். பேரூந்தும் தனியார் (chartered) வகை பகலில் பள்ளிக்குச் சேவையில் உள்ள ஒன்றாம். இரவில் அந்த ஓட்டுனரால் திருட்டத்தனமாக பணkf சம்பாதிக்க பொதுச்சேவையில் ஈடுபடுத்தப்படுத்தப்படு வந்ததாகவும் தகவல்கள் கண்டுள்ளேன்.

இதையும் வாசிக்கவும் : http://www.ndtv.com/article/cities/gang-rape-in-delhi-bus-police-arrest-two-prime-accused-recover-iron-rod-306533

வீடு சுரேஸ்குமார் said...

ஆழ்ந்த சிந்தனையுடைய கட்டுரை!
ஆனால் கற்பழிப்பு என்பதே பெண்ணுக்கு கற்பு எனும் ஒரு வலை பின்னப்பட்டிருப்பதாக பெரியார் கருதினார் அதனால் வன்புணர்வு என்று கூறுவதே சரி என்று அவர் வலியுருத்தினார்...!
(கற்பு இழப்பது என்பது முதல் உறவின் போது யோனி திரை கிழிவது என்பது பழமைவாதிகளின் கருத்து. சைக்கிள் ஓட்டும் பெண்களுக்கும், விளையாட்டு வீரங்கனைகளின் கடின பயிற்சிகளின் போதும் இயல்பாகவே இத்திரை கிழிகின்றது அப்பொழுது அவர்கள் கற்பிழந்தவர்களாக போகின்றார்கள் எனவே வன்புணர்ச்சியே சிறந்த வார்த்தை என நான் கருதுகின்றேன்)

Think Why Not said...

கற்பு என்ற வார்த்தை எல்லாராலும் தவறாக விளங்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. கற்பு என்பது யோனி திரை கிழிதல் (அல்லது உடல் சார்ந்த ஒன்றாக) கருதப்படுகிறது...

கற்பு என்பது என்பது அறிவு சார்ந்தது. ஒழுக்கம் சார்ந்ததே தவிர உடல் அல்லது உடலுறவு சார்ந்தது அல்ல.. மேலும் பெண்ணுக்கு மட்டும் என கற்பு கற்பிக்கபடுவதும் இன்னொரு முட்டாள்தனம்.. பாரதி சொன்னது போல்
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;"
இரு பாலாருக்கும் கற்பு பொதுவானது. அவரவர் தனிமனித ஒழுக்கம் சார்ந்தது... எனவே கற்பழிப்பு என்ற பதம் மிக பிழையானது...

Think Why Not said...

btw மிக அருமையான பதிவு.. அம்மாக்கள் மட்டுமல்ல, எல்லாரும் முயலவேண்டும். ஒரு தலைமுறை முற்றாக மாற்றினால் முடியும். :)

மைந்தன் சிவா said...

"கற்பழிப்பு"பதம் பற்றிய கருத்துகளுக்கு:

நீங்கள் கூறிய காரணங்கள் என்னால் புரிந்துகொள்ளப்பட்டவை தான்.
நடைமுறையில் "பாலியல் வன்புணர்வு"என்பதை விட கற்பழிப்பு என்னும் சொல் தான் அதிகமாக பாவிக்கப்பட்டு வருகிறது.அனைவருக்கும் தெரிந்த பதமும் இது தான்.இதை பாவித்தால் இந்த பதிவின் காரத்தன்மையை உணரவைக்க ஒரு பலமாக இருக்கும் என்பதாலே உபயோகித்தேன்.

வேறு நோக்கம் கிடையாது. இழிவுபடுத்தும் எண்ணமும் கிடையாது.

yarl Kumaran said...

ஐயோ பாஸ்,, அந்த தண்டனை மட்டும் தான் மனசில நிக்குது!! ஐயோ Super (y)

சார்வாகன் said...

சகோ சிவா,
நல்ல அலசல்.
//தூக்கிலிடவேண்டும் என்று கூறும் மக்கள் தான் பாலியல் கல்வி வேண்டாம் என்கின்றனர் -விபசாரத்தை முற்றாக ஒழிப்போம் என்கின்றனர். பழமைவாத எண்ணங்களிலிருந்து எப்போது அனைவரும் வெளியேறுகின்றனரோ, அன்று தான் ஒரு விடிவு..! அதற்கு பின்னர் தூக்கிலிடுவோம் !!//
100% உடன்படுகிறேன்.

நன்றி!!!

R.Puratchimani said...

சில கருத்துக்களோடு நான் வேறுபட்டாலும் உங்கள் முயற்சியை வரவேற்கிறேன்.......

Loshan ARV said...

மைந்தன்,
தேவையான அலசல்.. சரியான கருத்துக்களும் கூட (பெரும்பான்மையானவை)

ஆனால் பாருங்கள் இப்படியெல்லாம் மன வக்கிரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டிய 'ஆரோக்கிய' நிலையில் இந்த வளர்ந்த உலகம்...

மனிதரை நினைத்து மனம் நோந்துபோகிறது

Thava Kumaran said...

காலத்துக்கேற்ப சரியான தேவையான அலசல்..நல்ல சிந்தனைகளை பகிர்ந்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Related Posts Plugin for WordPress, Blogger...